About

Kokila கோகிலா

கோகிலா, ஒரு தமிழ் எழுத்தாளர். சென்னையில் வசிக்கிறார். இவருடைய கட்டுரைகள், கதைகள், இந்து தமிழ் திசை, ஆனந்த விகடன், விஞ்ஞானத் துளிர், சிறுகதை மஞ்சரி உள்ளிட்ட அச்சு இதழ்களில் பதிப்பிக்கப்பட்டுள்ளன.  மெட்ராஸ் பேப்பர், ஹெர்ஸ்டோரீஸ் போன்ற இணைய இதழ்களிலும் எழுதுகிறார். பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதிப் பதிப்பித்துள்ளார். அரசியல், சமூகம், பெண்ணியம், தொழில்நுட்பம், சிறுவர் இலக்கியம் சார்ந்த கருப்பொருள்களில் எழுதுகிறார். இவருடைய திருக்குறள் கதைகள் சிறுவர் நூல், கவிதை உறவு அமைப்பின் சிறந்த குழந்தைகள் நூல் விருதையும் பணப்பரிசையும் வென்றது. 

கோகிலா, வந்தவாசி ஶ்ரீ அகிலாண்டேஸ்வரி கலை அறிவியல் கல்லூரியில் கணினி அறிவியல் துறையில் பட்டம் பெற்றவர். முதல் வேலை அச்சகத்தில் டிசைனர். மேற்கொண்டு அனிமேஷன் & வெப்டிசைனிங் கற்று வெப்சைட் டிசைனராகப் பணியாற்றினார்.  அதன் பிறகு சுதேசிச் சமூகவலைத்தளம் உருவாக்க முனைந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒன்றில் சீனியர் யுஐ டிசைனர் வேலை. மூன்றாண்டுகள் வேலை அனுபவத்துக்குப் பிறகு சுயதொழில் முனைவர் ஆனார். நான்கு பேர் கொண்ட சிறிய குழுவுடன் வெப்சைட் டிசைனிங் நிறுவனம் தொடங்கி நடத்தினார். சிங்கப்பூரில் வெளியான விளம்பர வார இதழுக்கு உள்ளடக்கம் தயாரித்து, ஓர் ஆண்டுக்காலம் எடிட்டராக இருந்த அனுபவமும் உண்டு.

2022ஆம் ஆண்டு முதல் எழுத்துத் துறையில் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்தார். பல்வேறு இதழ்களில் இவர் எழுதிய கட்டுரைகள் வெளியாகின. 

2023ஆம் ஆண்டின் மத்தியில் அதுவரை எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு மூன்று கிண்டில் நூல்களாக வெளியானது. நாடும் நாட்டியப் பேரொளியும், காதலும் பூமர்களும், உரிமைத் தொகை என்ற தலைப்பில் இந்நூல்கள் வெளியாகின. சென்னை முதல் லடாக் வரை காரில் சென்ற பயண அனுபவம் நான்காவது கிண்டில் நூலாக வெளியானது.

அன்றாடம் பயன்படுத்தும் கணினிச் செயலிகள், வலைத்தளங்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களுடன் முதல் கட்டுரைத் தொடர் 2023ஆம் ஆண்டு ஹெர்ஸ்டோரிஸ் இணைய இதழில் பிரசுரமானது. 

2023ஆம் ஆண்டு இறுதியில், முதல் அச்சு நூல் பதிப்பிக்கப்பட்டது. ஒரு மனிதன் ஒரு நகரம். சென்னையின் வரலாற்றை ராபர்ட் கிளைவ் வாழ்க்கையுடன் இணைத்து எழுதப்பட்டது இந்நூல். 

பல ஆயிரம் ஆண்டுக்கால வரலாறு கொண்ட இஸ்ரேல் பாலஸ்தீனச் சிக்கலில் பல போர்கள் நடந்துள்ளன. அவற்றில் ஒன்றான, 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7 தேதி தொடங்கிய இஸ்ரேல் ஹமாஸ் யுத்தத்தை நெருங்கிப் பார்த்து அலசி ஆராய்ந்து ஆயிரக்கணக்கான மக்களின் வலியைப் பதிவு செய்யும் விதத்தில் உலரா உதிரம் நூலை எழுதியுள்ளார். 

இவ்விரண்டு நூல்களும் ஸீரோ டிகிரி பதிப்பகத்தில் மெட்ராஸ் பேப்பர் இம்பிரிண்டில் அச்சிடப்பட்டன.

ஹெர்ஸ்டோரிஸில் வந்து நல்ல வரவேற்பைப் பெற்ற கட்டுரைத்தொடர் இணையத் தொழில்நுட்பம் அறிவோம் என்ற பெயரில் நூலானது. தொழில்நுட்பச் செய்திகள் அடங்கிய எளிமையான கையேடாகவும் பெண்ணிய​ நோக்கில் தொழில்நுட்பத்தைப் பார்க்கும் நூலாகவும் இது அமைந்துள்ளது. 2024ஆம் ஆண்டு ஜனவரி மாத புத்தகக் காட்சியில் ஹெர்ஸ்டோரிஸ் பதிப்பகம் இந்நூலை வெளியிட்டது.

சென்னையின் தெருவோரம் வசிக்கும் குடும்பங்களைப் பற்றி ஆராய்ந்து எழுதப்பட்ட நூல் தடை அதை உதை. களத்தில் சென்று திரட்டப்பட்ட தகவல்கள்கொண்ட இந்நூல் 2024ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது. பல பத்திரிகைகளில் விரிவான மதிப்புரை வந்தது. தினமலர் செய்தித்தாள் இணைப்பிதழில் விரிவான நேர்காணலும் வெளியானது. ஹெர்ஸ்டோரிஸ் பதிப்பித்த இந்நூலை ஸ்பானிஷ் மொழிக்குக் கொண்டு செல்ல ஆர்வம் காட்டி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி தமிழ்நாடு அரசுக்கு விண்ணப்பம் அனுப்பியது ஸ்பானிஷ் பதிப்பகம். 

ருட்யார்ட் கிப்ளிங் தன் மகளுக்குச் சொன்ன கதைகளைத் தொகுத்து எழுதிய ஜஸ்ட் சோ ஸ்டோரிஸ் கதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு அடுத்த புத்தகம். தரையை ஓங்கி மிதித்த பட்டாம்பூச்சி என்ற இந்நூலில், கிப்ளிங் எழுதிய 10 கதைகளின் தமிழாக்கம் இடம்பெற்றன. பட்டர்ஃபிளை புக்ஸ் இந்நூலைப் பதிப்பித்தது.

2024ஆம் ஆண்டு இறுதியில் பங்களாதேஷில் நடந்த அரசியல் புரட்சியையும் அந்நாட்டின் வரலாற்றையும் விரிவாக எடுத்துக்கூறும் பழி, பகை, பஞ்சம், பங்களாதேஷ் நூலாக வந்தது. 2025ஆம் ஆண்டு சென்னை புத்தகக்காட்சில் ஸீரோ டிகிரி பதிப்பகத்தில் இந்நூல் வெளியானது.

இதே ஆண்டில், ருட்யார்ட் கிப்ளிங் ஜஸ்ட் ஸோ ஸ்டோரிஸ் கதைகளில் மேலும் இரண்டு கதைகளின் தமிழ் வடிவம், எழுத்து பிறந்த கதை என்ற பெயரில் பதிப்பிக்கப்பட்டது. கமலா ஹாரிஸ் பற்றிய கோகிலாவின் கட்டுரை விகடன் தீபாவளி மலரில் வெளியானது.

முற்போக்குக் கருத்துகளை பிரசாரத் தொனியில் எழுதாமல் கதைப்போக்கில் கதாபாத்திர வடிவங்களில் கட்டமைத்து சிறுவர்களுக்காக எழுதப்பட்ட இன்னொரு நூல் திருக்குறள் கதைகள். அதுவும் 2025ஆம் ஆண்டு வெளியானது. ஹெர்ஸ்டோரிஸ் பதிப்பித்த இந்நூல் கவிதை உறவு அமைப்பின் சிறந்த சிறுவர் நூல் விருதையும் பணப்பரிசையும் வென்றது.

கணினியியல் வல்லுநர் எழுத்துருப் பொறியாளர், செல்லினம், முரசு அஞ்சல் செயலிகளின் நிறுவனர் முத்து நெடுமாறனின் வாழ்க்கைக் கதையை, தொடராக எழுதினார் கோகிலா. மெட்ராஸ் பேப்பரில் உரு என்ற பெயரில் இத்தொடர் வெளியாகி உலகளாவிய அளவில் தமிழர்களிடம் வரவேற்புப் பெற்றது. 2025ஆம் ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் மலேசியா, சிங்கப்பூர், சென்னை ஆகிய மூன்று நாடுகளில் உரு வெளியீடு கண்டது. காலச்சுவடு பதிப்பகம் பதிப்பித்த இந்நூல் தமிழ் எழுத்துரு பற்றிய புதிய அலையை உருவாக்கியது என்றால் மிகையல்ல.

கோகிலா, 2024ஆம் ஆண்டின் மத்தியில் இருந்து ஓர் ஆண்டுக்காலம் மெட்ராஸ் பேப்பர் இணைய இதழின் துணை ஆசிரியராகப் பொறுப்பு வகித்துள்ளார். 

பெண்களை மையமாகக் கொண்டு உருவான உண்மைக் கதைகளைக் கொண்ட திரைப்படங்கள், ஆவணப்படங்கள் பற்றி ஒரு தொடரை ஹெர்ஸ்டோரிஸில் எழுதினார். கதையல்ல நிஜம் என்ற பெயரில் 2025ஆம் ஆண்டில் இத்தொடர் வெளியானது. 2026ஆம் ஆண்டு அரிதானதொரு வாழ்க்கை என்ற பெயரில் இக்கட்டுரைத் தொடர் நூலாக பதிப்பிக்கப்பட்டது. இதே ஆண்டில் வெளியான சொல்வளம் எனும் தமிழ்ச்சொல் விளையாட்டுச் செயலியின் உள்ளடக்க உருவாக்கத்தில் பங்களித்துள்ளார்.