எட்டுவதற்கியலா சமத்துவம்

சம வாய்ப்பு மறுக்கப்படுவோரைக் கைதூக்கிவிட உதவுவது அரசாங்கத்தின் கடமை. இதைப் புரியவைக்கக் காலந்தோறும் போராட்டங்கள் நடக்கின்றன. ஒடுக்கப்பட்டவர்களில் ஒருவர் தலைமைக்கு வரும்போதோ, நியாயத்தை உணர்ந்து கொள்ளும் தலைமை கிடைக்கும்போதோ, அரசியல் லாபம் கருதியோ இப்போராட்டங்கள் சட்டவடிவம் பெறும். ஜூம் மீட்டிங்கில் இடுப்புக்கு கீழேயும் ஃபார்மல் உடை அணிவது போல, அது அரிதான நிகழ்வு. ஆனால் நெடுங்காலம் போராடி வாங்கிய உரிமையை, சட்டப்பாதுகாப்பை மீறி அழிப்பது மட்டும், பேஸ்புக் நாம் பேசுவதை ஒட்டுக்கேட்டு விளம்பரம் காண்பிப்பது போல அடிக்கடி நடக்கும். சமீபத்திய எடுத்துக்காட்டு டிரம்ப் போட்டிருக்கும் டிஇஐ கையெழுத்து.

சொன்னதைச் செய்யும் டிரம்ப் அடுத்தடுத்து கையெழுத்துகளைப் போட்டுக்கொண்டேயிருக்கிறார். ஒன்றை அலசி ஆராய்ந்து நல்லது கெட்டதுகளைப் பேசுவதற்குள் அடுத்தது வந்துவிடுகிறது. இல்லையெனில் போட்ட உத்தரவைத் திரும்பப்பெறுவதோ நீதிமன்றத்தால் தடைசெய்யப்படுவோ நடக்கிறது. டிரம்ப் பேசுவதற்கெல்லாம் பொழிப்புரை எழுதும் வெள்ளைமாளிகைப் பணியாளர்களை நினைத்தால் கொஞ்சம் பாவமாகத்தான் இருக்கிறது.

வெள்ளைமாளிகை மட்டுமின்றி பொதுவாக பணிநியமனம் சார்ந்து ஒரு கையெழுத்திட்டுள்ளார். டிஇஐ (Diversity, equity, and Inclusion – DEI) எனப்படும் பன்முகத்தன்மை விதிகள் இனிமேல் கணக்கில் கொள்ளத்தேவையில்லையாம். டிஇஐ, சட்டவிரோதம் என்கிற நிலைப்பாட்டை முன்வைக்கிறார். 

டிஇஐயில், டைவர்சிட்டி என்பது பன்மைத்துவ அடையாளங்களைக் குறிக்கிறது. இனம், மொழி, கலாசாராம், பாலினம், பாலியல் தேர்வு, உடல், மனக் குறைபாடுகள், வயது, மதம் போன்ற அடையாளங்கள். ஈக்விட்டி என்பது வரலாற்றுச் சமூகக் கராணங்களால் பின்தங்கியவர்களுக்கு சமவாய்ப்பை வழங்குவது. இன்குளூஷன் என்பது அனைவரையும் உள்ளடக்கிய, எல்லாருடைய குரலையும் கேட்கக்கூடிய கட்டமைப்பை உருவாக்குவது. 

இதில் நமக்கான இடம், நீதி, அணுகல் தன்மை (belonging, justice, and accessibility) போன்ற சொற்களைச் சேர்த்துக்கொள்வதும் உண்டு. நாடு அல்லது நிறுவனங்களுக்குத் தக்கபடி DEIB, JEDI, EDIJ, IDEA, DEIA , DEAI, EDI என்றும் இன்னும் சாத்தியமாகக்கூடிய எல்லா காம்பினேஷனிலும் விளிப்பார்கள். சுருக்கமாகச் சொல்வதென்றால் ஒரு குறிப்பிட்ட குழுவே பலனை அனுபவிக்காமல் அனைவருக்கும் வாய்ப்புகளை வழங்குவது. பெரும்பாலான நாடுகளில், கடைநிலையில் இருப்போர் முன்னுக்கு வர ஏதோ ஒரு பெயரில் இந்தக் கொள்கைகள் சட்டமாகவோ, கருத்தாக்கமாகவோ இருக்கும். இந்தியா போன்ற நாடுகளில் இருக்கும் இடஒதுக்கீட்டின் வேறு வடிவம் இவை.

நியாயமான இந்தக் கொள்கையை ஏன் சட்டவிரோத டிஇஐ என டிரம்ப் சொல்லவேண்டும்? வாய்ப்பு கொடுப்பதில் சிலருக்கு முன்னுரிமை கொடுத்தால் எல்லாரும் சமம் என்ற கொள்கைக்கு விரோதமாக இருக்கிறதல்லவா, எனவே இது சட்டவிரோதம் என்கிற குதர்க்கமான லாஜிக்கைப் பேசுகிறார்கள் டிரம்ப், எலான் மஸ்க் வகையறாக்கள். மேடும் பள்ளமுமாக இருக்கிறதைச் சமமாக்க மேட்டிலிருந்து மண் அள்ளிப் போடுவதைப் பெரும்பாலும் அரசுகள் செய்வதில்லை. பல நூற்றாண்டுகளாகச் சுரண்டிச் சேர்த்த செல்வ மேடு இன்னும் உயர்வதின் வேகத்தை டிஇஐ, இடஒதுக்கீடு போன்றவை மட்டுப்படுத்துகின்றன. அவ்வளவுதான். அதெல்லாம் முடியாது, எங்கள் பாட்டன் பூட்டன் சேர்த்துவைத்ததும் எங்களுக்கே, மேற்கொண்டு மற்றவர்களுக்கு என்ன கொடுத்தாலும் எங்களுக்கும் வேண்டும் என்கிறார்கள். 

கடின உழைப்பு, தனிப்பட்ட சாதனைகளின் மதிப்பைக் குறைக்கிறது டிஇஐ என்பது இவர்கள் குற்றச்சாட்டு. மெரிட் அடிப்படையில்தான் வாய்ப்பு இருக்கவேண்டும் என்கிறார்கள். டிஇஐ முறையில் தேர்வு செய்யப்படுவோரும் கடினமாக உழைக்கும் திறமையான நபர்கள்தாம் என்பதை எத்தனை தரவுகள் காண்பித்தாலும் இவர்கள் ஏற்பதில்லை. டிரம்ப் தரப்பு வைக்கும் அடிப்படை ஆதாரமற்ற வாதங்கள் அனைத்துமே நாம் இந்தியாவிலும் கேட்டிருக்கிறோம். 

நம்மாளுதான் யாரோ எழுதிக் கொடுக்கிறார்களோ எனச் சந்தேகிக்க வேண்டாம். உலகம் முழுக்கவே வலதுசாரிகள் ஒரே தொணியில்தான் பேசுகிறார்கள். இவர்களை எதிர்த்து நிற்போர்தான் ஒற்றுமையின்றி வெவ்வேறாகப் பேசித் தோற்றுப்போகிறார்கள். ஆன்லைன் ஸ்கேம் செய்பவருக்கு ஓடிபியை நாமே கொடுப்பதுபோல இவர்கள் அதிகாரத்துக்கு வர இவர்களால் பாதிக்கப்படுபவர்களே வலிந்து உதவுவதும் உலகம் முழுக்கவே நடக்கிறது. யாருடைய கருத்துகளோடு அதிகம் ஒத்துப்போகிறோமோ அவர்களிடம் முழுநேரச் சண்டையிடுவதும் எதிர்க்கருத்துள்ளோரை எப்போதுமே எதிர்த்துப் பேசாமல் இருப்பதும்தான் புதிய உலக ஒழுங்கு.

அமெரிக்காவில், சிவில் உரிமைப் போராட்டங்கள் தொடங்கி பிளாக் லைவ்ஸ் மேட்டர் போராட்டங்கள் வரைக்கும் பன்முகத்தன்மைக்கான விதிகள் படிப்படியாக முன்னேறின. குறிப்பாக 2020ஆம் ஆண்டு ஜார்ஜ் பிளாய்டு மரணம் இதில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கியது. மூச்சுவிட முடியவில்லை எனப் பலமுறை சொல்லியும் மதிக்காத காவலர், ஒன்பது நிமிடங்கள் பிளாய்டின் கழுத்தின் மீது தன் கால் முட்டியை வைத்து அழுத்தியதால் பிளாய்ட் இறந்துபோன வீடியோவை நாம் பார்த்திருப்போம். யாரும் எளிதில் மறக்க முடியாத நிகழ்வு அது. 

அதன்பிறகு போராட்டங்களின் தீவிரம் கூடி, அரசுத்துறையிலும் தனியார் துறையிலும் பன்முகத்தன்மையைக் கருத்தில் கொண்டு வேலைக்கு அமர்த்துவதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. சட்டங்கள் இயற்றப்படுவதோடு நின்றுவிடாமல் அதை நடைமுறைப்படுத்துதிலும் கொஞ்சம் அக்கறை காட்ட ஆரம்பித்தனர். ஆனால் ஒடுக்கப்படும் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிருக்கும் தேசம் ஓரிரண்டு சதவிகிதம் இருக்கும் பெரும்பணக்காரர்களுக்கு ஆதரவான அரசை ஜனநாயக முறைப்படி வாக்களித்துத் தேர்ந்தெடுப்பது புதிதொன்றும் இல்லையே. அப்படித்தான் டிரம்ப்பையும் அமெரிக்கர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.

தனக்குக் கீழே இருப்பவர்கள் தமக்குச் சமமாக வருவதை அவ்வளவு எளிதாக யாரும் ஒப்புக்கொள்வதில்லை. எலான் மஸ்க், மார்க் ஜக்கர்பெர்க் போன்றோர் வேறு வழியின்றித்தான் எல்லாருக்கும் வாய்ப்பளிக்கும் டிஇஐ விதியைப் பின்பற்றினர். தனிப்பட்ட முறையில் மனிதர்கள் அனைவரும் சமம் என்பதை அவர்கள் நம்புவதில்லை. தங்கள் தலைக்கு மேலே எப்போதும் புளூடிக் முத்திரை இருப்பது போலவேதான் பேசுவார்கள். மென்-மஸ்குலினிட்டி வரப்போகிறது, வந்து கொண்டிருக்கிறது, வந்தேவிட்டது என்று பேஸ்புக் முதலாளி குஷியாக நேர்காணல் அளிப்பதெல்லாம் அதனால்தான். ஆனால், கூகுளும் இவர்களுடன் இணைந்தது கொஞ்சம் அதிர்ச்சிதான்.

அரசின் சலுகைகள், ஒப்பந்தங்கள் கிடைக்கவேண்டும், அரசைப் பகைத்துக்கொள்ளக்கூடாது என்பதற்காக பல தனியார் பெருநிறுவனங்களும் உடனே டிஇஐ கொள்கையைக் கைவிடுவதாகத் தெரிவித்துள்ளன. எப்போது டிரம்ப் ஆட்சிக்கு வந்து இப்படிக் கையெழுத்திடுவார் எனக் காத்திருந்த நிறுவனங்களும் உண்டு. மெட்டா, அமேசான், போயிங், மெக்டொனால்டு, ஃபோர்டு நிறுவனங்கள் டிஇஐக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும் போது வராத அதிர்ச்சி கூகுள் எடுக்கும்போது வருகிறது. நல்லவன் மாதிரியே சுத்திட்டிருந்தானே என்பதுதான் காரணம். கூகுள், சிலகாலம் முன்புவரை தங்கள் அலுவலகங்களில் பலதரப்பட்ட பின்னணி உடையவர்கள் பணியாற்றுவதை பெருமையாகவே முன்வைத்தது. இப்போது, டிரம்ப்பு சொல்லிட்டாரு எனத் தடாலடியாக கட்சிமாறிவிட்டார்கள். 

ஆப்பிள், ஜேபி மார்கன், கோல்ட்மன் சாச், காஸ்ட்கோ, யுனைடட் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட சில நிறுவனங்கள் மட்டும் தங்கள் நிலைப்பாட்டை மாற்றவில்லை. சமமாக வாய்ப்பளிக்கும் டிஇஐ நடைமுறையே தொடரும் எனத் துணிச்சலாகச் சொல்லியிருக்கின்றன. டிரம்ப் அரசு அதற்காக தண்டனையளிக்கும் விதத்தில் இந்த நிறுவனங்களை நடத்தினால் இவர்கள் நீதிமன்றம் செல்லவேண்டியிருக்கும். ஆனாலும் பரவாயில்லை என உறுதியாக இருப்பது பாராட்டவேண்டியதுதான். 

நம்முடைய நிலைக்குக் காரணம் திறமைக் குறைபாடா, வாய்ப்புக் குறைபாடா என்பதை ஆராய்ந்து புரிந்துகொள்ளாத பெரும்பான்மை மக்கள் இருக்கும்வரை பெரிதாக எதுவும் மாறாது. கூகுள் மேப்பில் டெஸ்டினேஷனை நெருங்கச் சில கிலோமீட்டர்கள் இருக்கும்போது ஜிபிஎஸ் கட் ஆவது போல, நாம் தற்போது அடைந்துள்ள எந்த முன்னேற்றமும் ஒற்றைக் கையெழுத்தில் ஓராயிரம் ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிடும் அபாயமுள்ளது.