காதல் உன்மத்தம் கொள்ளவைக்கும் என்பார்கள். உற்சாகம், சுறுசுறுப்பு, மயக்கம், பரபரப்பு, பசியின்மை, தூக்கமின்மை என்று பலவித உணர்வுகளைக் கொடுக்கிறது காதல். ஆனால், காதல் உணர்வு அல்ல; பசி தாகம் போன்று உடலியல் உந்துதல் என்கிறார்கள் உயிரியலாளர்கள். சிக்கலான உணர்ச்சி என வரையறை செய்கிறார்கள் உளவியலாளர்கள். மனித மூளையில் காதல் நிகழ்த்தும் விந்தைகள் பற்றிப் பல ஆய்வுகள் நடக்கின்றன.
டோபமைன், ஆக்சிடோசின், வேசப்ரோசின், அட்ரினலின், என்டோர்பைன், நோர்பைன்ஃரைன் என ஹார்மோன்களையும் வேதிப் பொருள்களையும் வைத்து மூளையில் ஒரு கொண்டாட்டக் கச்சேரியை நடத்துகிறது காதல். ஒரு தேர்ந்த டிஜேவைப் போல. அதிலும் ஹார்மோன், நரம்பியல் கடத்தி என இரண்டு வேலை பார்க்கிறது இந்த டோபமைன். பசியடங்கியதும் கிடைக்கும் நிம்மதியில் இருந்து சாதனையில் கிடைக்கும் பெருமிதம் வரை நம்மை உணரவைப்பது இந்த டோபமைன்தான். மூளையின் வெற்றிக்கோப்பை மாதிரி. இந்த மகிழ்ச்சி இன்னும் கொஞ்சம் வேண்டும் என அடிமை நிலைக்குக் கொண்டு செல்வதிலும் இதன் பங்கு இருக்கிறது. போதையைப் போல. காதல் முறிவில் வலியை உணர்வது இதனால்தான்.
காதல் ஆய்வுகளைப் போலக் காதல் எதிர்ப்பாளர்கள் பற்றி ஆராய்வதென்றால் ஆசிய நாடுகள்தான் சரியான இடம். ஒரு சில சிறு இனக்குழுக்களைத் தவிர பெரும்பாலான உலக நாடுகளில் மனிதர்கள் தன் இணையைத் தானேதான் தேடுகிறார்கள். ஆசிய நாடுகளிலோ, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு இணையைத் தேடித் தருகிறார்கள். காதல் எதிர்ப்பாளர்கள் இங்கேதான் அதிகம்.
இந்தியா, பாகிஸ்தான், சீனா, இந்தோனேசியா, ஈரான், ஈராக், கொரியா, பங்ளாதேஷ் எனப் பல நாடுகளில் காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு இருக்கிறது. மதம், இனம், பணம், பண்பாடு ஆகியவை முதன்மைக் காரணிகளாக உள்ளன. சீனாவில் திருமணங்களில் பெற்றோரின் தலையீட்டைத் தடை செய்யச் சட்டமே இருக்கிறது. இருந்தாலும் கூட இப்போதும் பெற்றோர் பங்களிப்புடன்தான் திருமணங்கள் நடக்கின்றன. குழந்தைத் திருமணம், வலுக்கட்டாயத் திருமணம் எல்லாம் இந்நாடுகளில் சர்வசாதாரணம். இவை பாலியல் வன்முறைக் கணக்கில் வருவதில்லை.
கல்வியும், நாகரீக வளர்ச்சியும் இதில் ஓரளவு மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. தற்போது வரன் தேடும் பெற்றோர், பிள்ளைகளின் எதிர்பார்ப்பையும் கவனத்தில் கொள்கின்றனர். சம்மதம் கேட்கின்றனர். மறுக்கவும் பிள்ளைகளுக்கு உரிமையளிக்கின்றனர். தன் இணையைத் தான் தேர்வு செய்வது என்பது எல்லா உயிரினத்தின் அடிப்படைக் குணம். எனவே பிள்ளைகள் எப்போதும் இந்த கட்டுப்பாடுகளில் இருந்து தங்களை விடுவிக்கப் போராடிக்கொண்டே இருக்கிறார்கள்.
திருமணம் எனும் நிறுவனமும் குடும்பம் எனும் அமைப்பும் முறையற்ற உழைப்புச் சுரண்டலுக்குத் துணை நிற்கின்றன என்பது எங்கெல்ஸின் வாதம். இந்த அமைப்பில் பயன் பெறுபவர்கள் எல்லாருமே காதலை எதிர்க்கத்தான் செய்கிறார்கள். பெற்றோர்களுடன், ஜாதி சங்கத் தலைவர்கள், மதவாதிகள், அரசியல்வாதிகள் எனப் பலர் கை கோர்க்கிறார்கள்.
பெற்றோர்களின் எதிர்ப்புக்கு முதல் காரணம் பிள்ளைகளைத் தன்னுடைய பொருள் போல பாவிப்பது. உங்கள் குழந்தைகள் உங்களுடையவர்கள் அல்ல எனும் புகழ்பெற்ற கலீல் ஜிப்ரான் கவிதை ஒன்றுள்ளது. குழந்தைகள் உங்கள் வழியாக இந்தப் பூமிக்கு வருகிறார்கள், உங்களால் அல்ல. உங்களுடன் இருப்பதால் அவர்கள் உங்களுடையவர்கள் அல்ல. உங்கள் அன்பைத் தரலாம், சிந்தனையை அல்ல. அவர்களுக்கென்று தனித்த சிந்தனை இருக்கிறது எனச் சொல்லும் அந்தக் கவிதை. பெற்றோர்கள் இந்த உரிமையாளர் மனநிலையில் இருந்து வெளியில் வருவது காலத்தின் கட்டாயம்.
தாத்தா, பாட்டி போன்ற முந்தையைத் தலைமுறையும், மாமன், மச்சான், பங்காளி போன்ற நெருங்கிய உறவினர்கள் எதிர்ப்பும் ஒரு காரணம். பெற்றோர்கள் சம்மதித்தாலும் பிள்ளைகளோடு சேர்த்து ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்படும் அவலங்களும் நடக்கின்றன. இந்த அவமானத்துக்குப் பயந்தும் எதிர்ப்பவர்கள் உண்டு. தனிமனித சுதந்திரத்தில் தலையிடப் பெற்றோருக்கே உரிமை இல்லாத போது மற்றவர்களின் தலையீடு சட்ட விரோதம்.
பழக்க வழக்கம், கலாசாரம் போன்ற காரணங்கள் சொல்லி காதலை எதிர்ப்போர் உண்டு. வெவ்வேறு கலாசாரப் பின்ணணியில் இருந்து வருபவர்கள் ஒன்று சேர்ந்து வாழ்வதில் கருத்து வேறுபாடுகள் வரும், விரைவில் பிரிந்து விடுவார்கள் என்பது கொஞ்சம் மொக்கையான காரணம்தான்.
சைவம் என்றால் புலால் உண்ணாதவர்கள் என்பது தட்டையான புரிதல். முட்டை மட்டும் உண்ணும் சைவம், செவ்வாய் வெள்ளி மட்டும் சைவம், பீஸ் இல்லா பிரியாணி சாப்பிடும் சைவம், உணவகத்தில் சாப்பிடுவேன் வீட்டில் சமைக்க மாட்டோம் வகை சைவம் எனக் குறைந்தது பத்து வகை சைவத்தை பட்டியலிடலாம். ஒரே மாதிரிப் பழக்கம் உடைய நபர்கள்தான் காதலிக்க வேண்டும் என்றால் சாத்தியமே இல்லை. பல வகை சைவத்தைப் போல ஜாதியிலும் பலவகை உட்பிரிவுகள் உள்ளன. ஆனால் பெற்றோர் பார்க்கும் வரன்களிலேயே இவற்றையெல்லாம் கண்டுகொள்வதில்லை. பத்துக்குப் பத்து பொருத்தம் இல்லையென்றால் பரவாயில்லை, ஐந்து இருந்தால் பாஸ் மார்க்தான் என்று கல்யாணம் செய்து வைத்து விடுகிறார்கள். இந்தியாவுக்கும் அமெரிக்காவும் பறந்து பறந்து மேட்ச் மேக்கிங் செய்யும் நெட்பிளிக்ஸ் சீமா ஆன்ட்டி கூட அட்ஜஸ்ட் செய்ய முடியாதென்றால் திருமணமே நடக்காது என்கிறார்.
குஜராத்தில் ஒரு பெண் தன்னையே மணந்து கொண்டார். கருத்து வேறுபாடு இல்லாத திருமணத்திற்கு, அது ஒன்றுதான் ஒரே வழி. வேறு நபர் என்றால் கருத்து வேறுபாடு வந்தே தீரும். வரவில்லை என்றால் ஒருவர் அடிமையாக நடத்தப்படுகிறார் என்றுதான் பொருள்.
பெற்றோர் நிச்சயிக்கும் திருமணம் தாங்கள் சேர்த்து வைத்த பணம், சொத்து, அதிகாரம் குறிப்பிட்ட வட்டத்துக்குள் இருப்பதை உறுதி செய்கிறது. வேற்று நபர் ஒருவர் காதல் திருமணம் மூலம் உள்ளே நுழைந்து பயன் பெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாதது எதிர்ப்புக்கான அடுத்த காரணம். அதிலும் ஆசியப் பெற்றோர் தங்கள் உழைப்பைச் செலவிட்டு சேர்க்கும் செல்வத்தைத் தான் அனுபவிக்காமல் பிள்ளைகளுக்கே சேர்த்து வைக்கிறார்கள். எனவே அதை யாரோ ஒருவர் அனுபவிப்பதில் அவர்களுக்குக் கோபம் வருகிறது. சட்டப்படி பூர்வீகச் சொத்தில் மட்டுமே உரிமை கோர முடியும். பெற்றோர் சுயமாகச் சம்பாதித்த சொத்தில் பிள்ளைகள் உரிமை கோர முடியாது. கொடுக்க வேண்டாம் என முடிவு செய்துவிட்டால் பூர்வீகச் சொத்தின் பேரில் கூட கடனை உண்டாக்கியோ, சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தியோ தாராளமாகச் சாதிக்க முடியும். எனவே இந்தக் காரணமும் அவ்வளவு வலுவானதில்லை.
பெற்றோர் பார்க்கும் வரனும் வேறு யாரோதான். எனினும் அவர் சுயஜாதிக்குள் இருக்கிறார். எனவே தங்கள் இரத்தமாக கருதப்படுகிறது. அல்லது அப்படி ஓர் அழுத்தம் ஜாதி சங்கத் தலைவர்கள் மூலம் கொடுக்கப்படுகிறது. பெற்றோரே ஒப்புக்கொண்டாலும் ஜாதி சங்கங்கள், ஊர்ப் பஞ்சாயத்துகள் இதில் தலையிடுகின்றன. இவர்கள் வேறு ஜாதி ஆள்கள் கலப்பதைத் தடுப்பதன் நோக்கம் ஓட்டு அரசியல். ஆணவக் கொலைகளைத் தூண்டிவிட்டோ, ஆதரித்தோ துணை நிற்கிறார்கள். ஒருவித அச்சுறுத்தும் சூழலை உண்டாக்கி, ஒற்றுமை வசனம் பேசி, தேர்தலில் பயனடைகிறார்கள். நாடகக் காதலால் பெண்களின் வாழ்க்கை நாசமாவதாக நீலிக் கண்ணீர் வடிக்கிறார்கள்.
பெண்களின் கல்வி வாய்ப்பை மறுக்க இதையே ஆயுதமாக்குகிறார்கள். பல பின்தங்கிய மாவட்டங்களில் படிக்க வெளியில் அனுப்பினால் காதலிப்பார்கள் என இளவயதுத் திருமணங்கள் நடக்கின்றன. தமிழகத்தில் நடக்கும் திருமணங்களில் கிட்டத்தட்ட பதிமூன்று சதவீதம் குழந்தைத் திருமணங்கள். இந்தியச் சராசரியான இருபத்து மூன்றரை சதவீதத்துடன் ஒப்பிடுகையில் இது குறைவுதான். எனினும் கல்வியில் முன்னேறிய தமிழ்நாடு குழந்தைத் திருமணங்கள் நடப்பதை இன்னும் தீவிரமாகத் தடுக்க வேண்டும்.
நாடகக் காதல் உண்மை என வைத்துக்கொண்டாலும் கூட அதற்கான தீர்வு இளவயதுத் திருமணம் அல்ல. குடும்பம் படிக்க அனுமதிக்காது அல்லது படிப்பு வராது என்ற நிலையில் இருக்கும் இளம்பெண்ணுக்குக் கண் எதிரில் இருக்கும் வாய்ப்பு இரண்டுதான். பெற்றோர் பார்க்கும் நபரை மணந்து, பிள்ளை பெற்று, வீட்டு வேலைகள் செய்து, மரியாதை இல்லாத, கையில் காசு இல்லாத வாழ்க்கை ஒருபுறம். காதலித்து, வீட்டை விட்டு வெளியேறி, வேறு விதமான வாழ்க்கையை வாழ முயல்வது இரண்டாவது. இந்தக் காதல் வாழ்வில் தவறான கணவன், நிலையற்ற பொருளாதாரம் என ரிஸ்க் அதிகம் இருந்தாலும் பெண்கள் அதைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். பெண்களுக்கான கல்வியும் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பும்தான் இதைத் தடுக்கும். கல்வி எல்லாருக்கும் சாத்தியம் அல்ல. கற்றல் குறைபாடு உடைய பெண்கள் தன் காலில் நிற்பதற்கும் சம்பாதிப்பதற்கும் ஏற்ற வழிகளை உருவாக்க வேண்டும். இந்த நாடகக் காதலில் பெண்கள் மட்டும் ஏன் பலியாகிறார்கள், ஆண்கள் எப்படி நாடகக் காதலில் இருந்து தப்புகிறார்கள் என்பதும் விவாதத்துக்கு உரியதே. இந்தத் தரப்பு தவறு என்றால் எதிர்த் தரப்பு சரி என ஆகிவிடாது. பெண்கள் உங்கள் வீட்டுப் படி தாண்ட எங்கள் ஆண்களின் சரக்குதான் காரணம் என பெருமை பேசும் அளவுக்குதான் எதிர்த் தரப்பின் புரிதல் இருக்கிறது. பெண்ணை முன்வைத்து நடக்கும் இந்த அரசியலில் பெண்களுக்காக யாரும் சிந்திக்கவில்லை.
இந்த ஜாதி, சமூகம் வகையறாவின் அடுத்த நிலை மதம். கல்யாணம் செல்லுபடியாக மதம் மாறச் சொல்கிறது ஒரு தரப்பு. மற்ற எல்லா மதத்தினரையும், நாட்டை விட்டுத்துரத்த அதனைப் பயன்படுத்திக் கொள்கிறது எதிர்த் தரப்பு. இந்தியாவில் நடைபெறும் திருமணங்களில் தொண்ணூற்று ஐந்து சதவீதம் பெற்றோர் செய்து வைக்கும் திருமணங்கள்தான். இரண்டு சதவீதம் பெற்றோர் ஏற்பாடும், காதலும் இணைந்த திருமணங்கள். வெறும் மூன்று சதவீதம் மட்டுமே காதல் திருமணங்கள். புரளி கிளப்புபவர்களுக்குப் புள்ளிவிவரங்கள் தேவையில்லை. பெரும்பான்மை மதத்தினர் காதல் திருமணத்தால் ஆபத்தில் இருப்பதாக நம்ப வைக்கப்படுகிறார்கள். ஜாதி சங்கங்களைப் போலவே மதவாதிகளின் காதல் எதிர்ப்பின் நோக்கமும் ஓட்டு அரசியல்தான்.
எதிர்ப்பில் நியாயமான காரணங்களும் உண்டு. தவறான நபரைத் தேர்ந்தெடுத்தால் பிள்ளைகளின் வாழ்க்கை வீணாகும் என்ற கவலை அதில் முதன்மையானது. காதலிக்க ஆரம்பித்த பிறகு இந்த நபர் சரியானவர் இல்லை என உணர்ந்தால் அந்தக் காதலை விட்டு வெளியேற முடிவதில்லை. பெண்கள், இந்த ஆண் தன்னை ஏமாற்றி விட்டார் என அந்த ஆணின் வீடு முன்பு அமர்ந்து போராட்டம் செய்வதும், காவல் நிலையத்தில் புகாரளிப்பதும் தினசரிகளில் பார்க்கும் செய்திகள். ஆண்கள் அடுத்த நிலைக்குச் சென்று ஆசிட் வீசுவது, அரிவாளால் துண்டு துண்டாக வெட்டுவது, வீடு புகுந்து பெட்ரோல் ஊற்றி எரிப்பது, ஓடும் இரயிலின் முன் தள்ளுவது என்று கொலை வெறி கொள்கிறார்கள். குழந்தை வளர்ப்பில் சொதப்பிய பெற்றோர்களே இங்கு முதல் குற்றவாளி. பிரச்சனை அங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது.
மாடு கன்று போட்டால் சிறிது நேரத்தில் தானே எழுந்து துள்ளிக் குதித்து ஓடும். பால் குடிப்பது, உணவு தேடித் தின்பது என விரைவில் தன் தேவைகளை நிறைவேற்றக் கற்றுக்கொள்ளும். பறவைகளுக்கும், விலங்குளுக்கும் ஆரம்பகாலப் பராமரிப்பு மட்டும் போதும். ஆனால் மனிதக் குழந்தை அப்படியல்ல. நீண்ட காலம் பெற்றோர் பராமரிப்பில்தான் மனிதக் குழந்தைகள் வளர்கிறார்கள். ஆளை வளர்ப்பதில் காட்டும் ஆர்வத்தை அறிவை வளர்ப்பதில் நாம் காட்டுவதில்லை.
அதிலும் பேராசை கொண்ட மனிதர்கள் குழந்தை வளர்ப்பைச் சிக்கலாக்கிக் கொண்டே செல்கிறார்கள். பிள்ளைகளைச் சிறப்பாக வளர்க்க பணத்தையும் பொருளையும் அள்ளிக் கொட்டுவார்கள். படிப்பில் மார்க் குறைந்தால் பிள்ளைகளின் மண்டையிலேயே கொட்டுவார்கள். குழந்தைகள் மீதான வன்முறை என்பது இங்கே இயல்பானது. சமீபத்தில் தங்கள் குழந்தையை மழலையர் பள்ளியில் சேர்க்கும்போது ஆசிரியருக்கு பிரம்பைக் கொடுத்தனர் ஒரு பெற்றோர். நான்கு வயது நிரம்பாத குழந்தையை அடிக்க நான்கடி பிரம்பைக் கொடுக்கிறார்கள்.
மேற்குலக நாடுகள் சிலவற்றில் வளர்ந்த குழந்தைக்குச் சோறு ஊட்டினாலே தண்டனை உண்டு. நம் நாட்டில் பள்ளி இறுதியாண்டு செல்லும் பிள்ளைக்குக் கூட காலையில், அம்மா இட்லி ஊட்ட, அப்பா ஷூ மாட்டும் காட்சிகளைப் பார்க்க முடியும். மகன்கள் வீட்டு வேலை செய்ய மாட்டார்கள் என்பது பழங்காலம். என் மகள் வீட்டுவேலை செய்யமாட்டாள் என பெருமை கொள்வது இந்தக் காலம்.
பாலின பேதமின்றி இளம் வயதிலேயே வீட்டு வேலைகளைச் செய்யப் பழக்க வேண்டும். தனி நபராகக் கருதித் தயார் செய்ய வேண்டும். பண நிர்வாகத்தைச் சொல்லித்தர வேண்டும். ஆண் அழக்கூடாது, வீரமாக இருக்கணும், பெண் சத்தமாகச் சிரிக்கக் கூடாது, அடக்கமாக இருக்கணும் மாதிரியான ஸ்டீரியோடைப் கருத்துகளைத் திணிக்கக்கூடாது. வாசிக்கவும், கருத்துகளைச் சிந்திக்கவும், சிந்திப்பதை வாய் திறந்து சொல்லவும் சாதகமான சூழலை ஏற்படுத்த வேண்டும். சரியான துணையைத் தேர்ந்தெடுக்க துணை நிற்காமல் பிள்ளைகளின் உரிமையில் பெற்றோர் தலையிடுவது அத்துமீறல். இளம் பிள்ளைகள் தவறான முடிவுகளை எடுப்பதில் பெற்றோரின் பங்கே பிரதானமானது.
அப்படியே தப்பித் தவறி சரியான நபரைக் காதலித்தாலும் திருமணங்கள் நிலைக்க சப்போர்ட் சிஸ்டம் அவசியம். பேபி சிட்டர், மேரேஜ் கவுன்சிலர் என சில நாடுகள் தொழில்முறை ஆதரவைக் கைக்கொள்கின்றன. இந்தியா போன்ற நாடுகளில் பெரும்பாலும் நெருங்கிய உறவினர், அக்கம் பக்கத்தினரே இதற்கு இருக்கும் வாய்ப்பு. காதல் திருமணம் செய்தவர்கள் பொருளாதார பலம், நண்பர்கள் வட்டம் அல்லது தன்னார்வ அமைப்புகள் ஆதரவு கிடைக்கப் பெற்றால் வாழ்க்கையை ஓட்டமுடியும். இல்லையெனில் மனமுறிவும், மணமுறிவும் விரைவாக நடக்கும். காதல் திருமணங்கள் அதிகம் விவாகரத்தில் முடிவதைக் காரணம் சொல்லியும் பலர் காதலை எதிர்க்கிறார்கள்.
பெற்றோர் பார்த்துச் செய்து வைக்கும் திருமணத்திலும் விவாகரத்துகள் தற்போது அதிகரித்துள்ளன. அன்பாலே அழகான வீடு எல்லாம் சினிமாவில்தான் சாத்தியம். வீட்டையும் குழந்தையையும் பார்த்துக் கொள்ள மனைவி, சம்பாதித்துத்தர கணவன் என்பதுதான் அடிப்படை. அவரவர் வேலையை அவரவர் பார்ப்பது எனப் பல நூறு ஆண்டுகள் இது நன்றாகத்தான் போனது. பெண்கள் கல்வியை நிறுத்தித்தான் இதைச் சாதிக்க முடிந்தது. மீண்டும் பெண்கள் கல்வி கற்க ஆரம்பித்ததும் தங்கள் உரிமைகளை நிலைநாட்ட முயல்கிறார்கள். பெண்களும் பொருளீட்டுவார்கள், ஆண்களும் வீட்டு வேலை செய்வார்கள் என்ற மாற்றத்தை எதிர்கொள்ள முடியாத திருமணங்கள் முறிவது அதிகமாகிறது.
உங்களைவிடக் குறைவாகப் படித்த பெண்ணையே திருமணம் செய்யுங்கள் ஆண்களே எனும் அறிவுரைகளும் சமூக வலைத்தளங்களில் பரவுகிறது. குறைவாகப் படித்த பெண்களைச் செவ்வாய்க் கிரகத்தில்தான் இனித் தேட வேண்டும். எனினும் விவாகரத்து கடைசித் தேர்வாகவே இருக்கிறது. இந்தியாவில் நூறில் ஒரு திருமணம்தான் விவாகரத்து வரை செல்கிறது எனச் சொல்கிறது புள்ளிவிவரம். அதற்கே ‘ஆண்கள் பாவம்’ என கூச்சல் எழுகிறது.
இதைப் பெண்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். கல்யாணம் என்பதை ஆண்கள் தங்கள் வாழ்வின் சாபமாகப் பகடி செய்வதுண்டு. திருமணப் புகைப்படத்தில் சிரிப்பதுதான் கடைசி, வாழ்வின் சுதந்திரம் போனது என அலப்பறைகள் செய்து திருமணம் எனும் பொறுப்புக்குள் நுழைவார்கள். தற்காலத்தில் பெண்கள் இதைச் செய்கிறார்கள். இந்தியாவின் பிரபல டேட்டிங் தளம் நடத்திய கருத்துக் கணிப்பில் எண்பத்தொரு சதவீதம் பெண்கள் சிங்கிளாக இருப்பதே சிறந்தது என தெரிவித்திருக்கிறார்கள். காதலையும் கல்யாணத்தையும் எதிர்ப்பவர்கள் பட்டியலில் பெண்கள் இணைவது மனித குலத்துக்கே ஆபத்தாக முடியலாம்.
தாய் வழிச் சமூகமாக இருந்தே மனித குலம் இன்றைய குடும்ப அமைப்புக்கு மாறியுள்ளது. இதில் பல காலம் ஆணின் கை ஓங்கி விட்டது. இப்போது சீட்டுகளை கலைத்துப் போட்டு பெண்கள் புதிய விதிகளை வகுக்கிறார்கள். காதல், மரியாதை, வீட்டு நிர்வாகத்திலும் குழந்தை வளர்ப்பிலும் சமபங்கு எனப் போகின்றன அந்த விதிகள். சரி என்றால் ஆட்டத்திற்கு வருகிறோம். இல்லையென்றால் சிங்கிள் சிங்கங்களாகவே இருப்போம் என்கிறார்கள். படித்த, பொருளாதார பலம் உடைய நகரப் பெண்கள்தான் இதைச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். விரைவில் எல்லாரும் பின்பற்றுவார்கள். குடும்ப அமைப்பை உடைப்பது அதிக சிக்கல்களையே உருவாக்கும். குடும்பம் எனும் அமைப்பின் அவசியத்தை மேற்குலக நாடுகளும் உணரும் காலமிது. ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்கள் படங்களில் கூட, குழந்தை, குடும்பம்தான் முக்கியம் என சென்ட்டிமெண்ட பேசுகிறார்கள். குடும்ப அமைப்பில் பாலின பேதமின்றி சம வாய்ப்பைப் பேணுதல் தவிர்க்க முடியாத ஒன்றாக விரைவில் மாறும்.
தமிழ்நாட்டில், இப்போதே கூட காதலை எதிர்க்கிறோம் என வெளிப்படையாகச் சொல்லத் தயங்குகிறார்கள் பெரும்பாலானோர். பெற்றோர்களும் கூட சரியான வயதில், தகுதியான நபராக இருந்தால் சம்மதிக்கவே விரும்புகிறார்கள். ஆண் பெண் காதல் என்பதைத் தாண்டி பால்புதுமையினர் காதல் சட்டப்பூர்வமாக அங்கீகாரம் பெறும் உலகில் இருக்கிறோம் நாம். மாற்றங்களுக்கு உடன்படாதவர்கள் பூமர்களாக வாழ்ந்து மடிகிறார்கள். காலத்துக்கு ஏற்பத் தங்களை மாற்றிக் கொள்பவர்கள் காதல், கல்யாணம், குழந்தைகள் என மகிழ்ச்சியாக வாழ்ந்து மனித இனத்தைத் தழைக்கச் செய்கிறார்கள்.
*
2023ஆம் ஆண்டு மெட்ராஸ்பேப்பர் காதலர் தினச் சிறப்பிதழில் வெளியான கட்டுரை. காதலுக்கு யாரிடமிருந்து என்ன காரணத்தினால் எதிர்ப்புகள் எழுகின்றன என்பதைப் பேசும் கட்டுரை.
இவற்றோடு இந்த காலகட்டத்தில் எழுதப்பட்ட இன்னும் சில கட்டுரைகள் காதலும் பூமர்களும் என்ற தலைப்பில் கின்டில் நூலாக வந்துள்ளன.
