ஷாரன் சதுரங்க விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்று கனவு காண்கிறார். திறமையும் இருக்கிறது. தேசிய அளவில் விளையாடத் தேர்வாகி இருக்கிறார். போட்டிகளுக்கு அவரால் உடனே கிளம்பிவிட முடியாது. முதலில் ஷாரனின் அப்பா கிளம்பிப் போவார். தன் மகளின் சக்கர நாற்காலி உள்ளே வருவதற்கான சாத்தியம் இருக்கிறதா என்பதைப் பார்ப்பார். ஓரிரண்டு படிகள் என்றால்கூடப் பரவாயில்லை. இரண்டு மூன்று மாடிகள் என்றால் மிகவும் சிரமம். போட்டி நடக்கும் பெரிய ஹாலின் கதவு சிறியதாக இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். கழிவறைகள், அதன் கதவின் அளவு, அங்கே செல்வதற்கான வழி, லிஃப்ட் என எல்லாவற்றையும் சரிபார்த்த பிறகுதான் அவர் மகள் அந்தப் போட்டியில் கலந்து கொள்ள முடியும்.
தங்கும் அவசியம் இருக்கும் வெளியூர்ப் போட்டிகளுக்கும் இதேமாதிரி சக்கர நாற்காலி பயன்படுத்தும் சாத்தியம் உள்ள தங்கும் அறைகளைக் கண்டுபிடிக்க வேண்டும். தேசிய அளவில் மாற்றுத்திறனாளி பிரிவில் அவர் தேர்வாகியுள்ளார். மாற்றுத் திறனாளிகளுக்கான போட்டி நடக்கும் இடங்கள் ஓரளவு இவ்விஷயங்களை கருத்தில் கொண்டே தயார் செய்யப்படுகின்றன. பத்துச் சங்கடங்களில் எட்டேனும் எளிதாகச் சமாளிக்கும்படி இருக்கும். ஆனால் பொதுவாக நடக்கும் போட்டிகளில் மாற்றுத்திறனாளிகளை எந்த நிர்வாகமும் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. ஷாரன் கலந்து கொள்ளும் போட்டியை மட்டும் தரைத்தளத்தில் நடத்த வேண்டும் என்ற சிறிய கோரிக்கையைக்கூட ஒப்புக்காெள்ளாத போட்டி நிர்வாகிகள் இருக்கிறார்கள். அச்சமயங்களில் போட்டியில் கலந்து கொள்ளாமல் திரும்பி விடுகிறார்கள்.
பொதுச்சமூகம், லட்சக்கணக்கான மாற்றுத் திறனாளிகளைக் கணக்கில் கொள்ளாமல் கட்டடங்களைக் கட்டுகிறார்கள். இதனால் பொதுச்சமூகத்தில் கலக்க முடியாமல் சிறைக்குள் இருப்பது போல வீட்டிலேயே இருக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் மாற்றுத் திறனாளிகள். வன்முறையில் ஈடுபடுபவர்கள்கூட சிலகாலம் சிறைத் தண்டனைக்குப் பிறகு பொதுச்சமூகத்தில் கலந்து விடுகிறார்கள். குற்றவாளிகளுக்கும் வாழ வாய்ப்பளிக்கும் நாடு இது. எனில் ஒதுங்கியிருக்க நிர்பந்திக்கப்படும் ஷாரன் செய்த குற்றம் என்ன?
மாற்றுத்திறனாளிகள் முழுநேரமும் மற்றவர்களைச் சார்ந்திருக்காமல் தற்சார்புடன் வாழும் வழிகளைப் பல முன்னேறிய நாடுகள் சாத்தியமாக்கி உள்ளன. இதெல்லாம் செய்யலாம் என்கிற விழிப்புணர்வுகூட நம் நாட்டில் இல்லை. சமயங்களில் மாற்றுத்திறனாளிகள் குடும்பத்திடமேகூட விழிப்புணர்வு இருப்பதில்லை. என்னென்ன சாத்தியங்கள் இருக்கின்றன என்பதைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டதுதான் “மியூசியம் ஆஃப் பாஸிபிலிட்டீஸ்” அருங்காட்சியகம்.
சென்னை காமராஜ் சாலையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையக் கட்டிடத்தில் இந்த அருங்காட்சியம் உள்ளது. இந்த அருங்காட்சியகத்தை நமக்குச் சுற்றிக்காட்டும் இதன் மேலாளர் பிரபாகரனும் ஒரு மாற்றுத்திறனாளிதான். சக்கர நாற்காலியில் உட்கார்ந்து நம்முடன் பயணம் செய்து, உள்ளே இருக்கும் ஒவ்வொன்றைப் பற்றியும் விளக்கம் சொல்கிறார். கூட்டம் அதிகமானால் அலெக்ஸாவைத் துணைக்கு அழைக்கிறார். ஆம். இந்த அருங்காட்சியகம் பற்றிய தகவல்கள் முழுவதும் அலெக்ஸாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மெய்நிகர் உதவியாளர் சாதனம் அருங்காட்சியத்தில் என்னென்ன இருக்கிறது என்பதை விளக்கிச் சொல்கிறது. நம் கேள்விகள், சந்தேகங்களுக்குப் பதில்களும் கொடுக்கிறது. விழித்திறன் சவால் உடைய நபருக்கு இது மிக உபயோகமானது. பொதுச் சமூகத்தில் தானியங்கித் திரைகள் உள்ள இடங்களில் எல்லாம் இத்தகைய வசதியைக் கொண்டுவரலாம். அருங்காட்சியகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் பற்றிய தகவல்கள் கொண்ட பதாகைகளால் நிறைந்திருக்கின்றன.
இந்த அருங்காட்சியகத்தின் எல்லா இடங்களிலும் ப்ரெய்லி எழுத்துகளால் விளக்கம் இருக்கிறது. சீட்டுக்கட்டு, சதுரங்கம், பல்லாங்குழி, பரமபதம் எனப் பலவிதமான கல்வி மற்றும் விளையாட்டுப் பொருள்கள் ப்ரெய்லி எழுத்துகளுடன் விழிச்சவால் உடையாேர் உபயோகிக்க ஏதுவாக உள்ளன. உட்கார்ந்து பயன்படுத்தும் சக்கர நாற்காலி மட்டுமின்றி நின்றவாறே பயன்படுத்தும் சக்கர நாற்காலி, படுக்கையில் இருப்பவர் அல்லது தலை நிற்காத நபர் படிக்கப் பயன்படும் கண்ணாடி, கற்றல் குறைபாடு உள்ளவர்கள் பயன்படுத்தும் பொருள்கள் என சாத்தியங்களால் நிறைந்திருக்கிறது இந்த அருங்காட்சியகம். மாற்றுத் திறனாளிகள் தயாரித்த கலைப் பொருள்களும் விற்பனைக்கு உள்ளன. ஒவ்வொரு மாதமும் ஒரு தொண்டு நிறுவனம் இப்படித் தங்கள் அமைப்பில் உள்ளவர்கள் செய்த பொருள்களைக் காட்சிப்படுத்த வாய்ப்பளிக்கிறார்கள்.
வீட்டிலுள்ள ஒவ்வொரு அறையின் மாதிரியையும் வடிவமைத்திருக்கிறார்கள். உடல் குறைபாடு உள்ளவர்கள் அணுக எளிமையாக இந்த அமைப்புகள் இருக்கின்றன. பிரத்யேகமான கத்திகள், சமையலறைக் கருவிகள், சக்கர நாற்காலி நுழையும் சமையல் மேடை, உயரத்தில் உள்ள பொருட்கள் பட்டனைத் தட்டியதும் கைக்கெட்டும் உயரத்திற்கு வரும் வசதி என அனைத்தும் இருக்கிறது இந்த வீட்டில்.
நம் வீட்டில் மாற்றுத்திறனாளிகள் பிறக்கவே மாட்டார்கள் எனும் அபார நம்பிக்கையில் கட்டப்படுகின்றன நம் வீடுகள். எல்லாருக்கும் வயதாகும். உடல் இயக்கம் குறையும் போது அடுத்தவர் துணையின்றித் தன் வேலைகளை பார்க்க ஏதுவாக வீடுகள் இருக்கவேண்டும் என்றுகூட நாம் நினைப்பதில்லை. வயதாகும் போது மாற்றிக் கொள்ளலாம் எனும் எண்ணம் ஒரு காரணம். வயதான பின் லிஃப்டோ சாய்வுதளமோ இல்லாத வீட்டை யாரும் மாற்றுவதில்லை. வயதானவர்கள் வெளியே சென்று என்ன செய்யப் போகிறார்கள் என்ற நினைப்பில் வீட்டை விட்டு வெளியில் செல்வது குறைகிறது. பின்னர் வீடு சுருங்கி அறையாகி அதுவும் சுருங்கி படுக்கையாகிறது. உட்கார்ந்தால் எழுவதற்கு எளிதான சோபாக்கள், படுக்கையில் இருந்து தானே எழ உதவும் கருவிகள், தனியாகப் பயன்படுத்த உதவும்படியான கழிவறை வசதிகள் என சரியானதொரு வீட்டின் மாதிரி காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது இந்த அருங்காட்சியத்தில்.
மாற்றுத்திறனாளிகள் அனைவரும் பயன்படுத்தும் வகையில் உள்ளது இந்த இடம். என்னென்ன வகையிலான மாற்றங்களை வீட்டிலும், அலுவலகங்களிலும், பொதுஇடங்களிலும் ஏற்படுத்தலாம் என்ற விழிப்புணர்வை அனைவரும் பெறலாம் இங்கே. இந்த கட்டடத்தின் மாடியில் உணவகம் ஒன்றும் செயல்படுகிறது. பயிற்சி பெற்ற செஃப், துணை செஃப் மேற்பார்வையில் இயங்கும் இந்த உணவகத்தில் சில மாற்றுத்திறனாளிகளும் பணியாற்றுகிறார்கள். பொதுச்சமூகமும் மாற்றுத்திறனாளிகளும் கலந்து பழக ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது இந்த உணவகம். பால்கனிக் கதவைத் திறந்தால் செடிகள் நிறைந்த தோட்டத்துக்கு மத்தியில் நின்று எதிரே தெரியும் மெரினா பீச்சையும் கடலையும் ரசிக்கலாம். அலுவலகச் சந்திப்பு, பிறந்தநாள் என்று குறைந்த அளவு நபர்கள் கூடுவதற்குச் சிறந்த இடம். இந்த மியூசியம், கஃபேவில் வரும் வருமானம் இதை நடத்தும் அரசுசாரா மாற்றுத் திறனாளிகள் தொண்டு நிறுவனத்துக்குச் செல்கிறது.
செல்ப் சர்வீஸ் என்று பதாகை இருந்தாலும் புன்னகையுடன் டேபிளுக்கே கொண்டுவந்து உணவைத் தருகிறார்கள். சமயங்களில் உணவு வரத் தாமாதமாகலாம். அல்லது வேறு டேபிளின் உணவை உங்களுக்குக் கொடுத்துவிடலாம். அதைக் குற்றமாக எண்ணாத மனநிலை வேண்டும். இந்த வேலை தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகச் சொல்கிறாள் இவ்வுணவகத்தில் பணிபுரியம் காயத்ரி. “பேரு காய்ட்ரி” என மழலை பேசும் இவள், பத்தாவது வரை படித்திருக்கிறாள். சில மாதங்கள் பயிற்சிக்குப் பிறகு இப்போது இங்கே வேலை செய்கிறாள். வெளியில் வேலை செய்யும் தன்னம்பிக்கையைப் பெற்றவுடன் வேறு ஏதேனும் உணவகத்தில் அவளுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரலாம் என எண்ணுகிறது தொண்டு நிறுவனம்.
சக்கர நாற்காலி மூலம் உணவகத்தை ஆர்வமாக சுற்றிப் பார்க்கிறாள் ஷாரன். வெளியே செல்வதென்றால் மகிழ்ச்சியில் பூரிக்கும் தன் மகளை உணவகம், பூங்கா, வழிபாட்டு தலங்கள் என பல இடங்களுக்கு அழைத்துச் செல்ல தயாராக இருக்கிறார் ஷாரனின் அம்மா. மால்களைத் தவிர பெரும்பாலான இடங்கள் சக்கர நாற்காலிகள் நுழைய சாத்தியம் இல்லாமல் இருப்பதைப் பற்றி கவலை தெரிவிக்கிறார்.
பொதுஇடங்கள் மட்டுமின்றி வீடுகள் கூட இன்க்ளூசிவ் நோக்கத்துடன் கட்டப்பட வேண்டும் என்கிறார் அருங்காட்சியக மேலாளர் பிரபாகரன். உங்கள் வீட்டில் ஒரு மாற்றுத் திறனாளி இல்லையென்றாலும் உங்கள் வீட்டுக்கு மாற்றுத்திறனாளி நண்பரோ, உறவினரோ வரவே கூடாதா? எனும் அவர் கேள்வி மிக முக்கியமானது. சதுரங்கப் போட்டியில் கலந்து கொண்டதைப் பற்றி கதை பேச, ஒரு காஃபி குடித்துக் கொண்டே நம்முடன் உரையாட ஷாரன் நினைத்தால் அவளை வரவேற்கத் தயாராக இருக்கிறதா நம் வீடுகள்? லட்சக்கணக்கான மக்கள் படும் சங்கடங்களை கவனிக்கத் தவறுகிறோம் என்றால் உண்மையான குறைபாடு யாரிடம் இருக்கிறது?
*
மெட்ராஸ் பேப்பர் இதழில் வெளியான கட்டுரை இது. மார்ச் 1, அனைத்துலக சக்கரநாற்காலிகள் தினத்தை முன்னிட்டு என்னுடைய இணையதளத்தில் பதிவிட்டுள்ளேன்.
மியுசியம் ஆஃப் பாஸிபிலிட்டிஸ் அருங்காட்சியத்தின் மேல் தளத்தில் செயல்பட்ட மியுசியம் கஃபே ஒப்பந்த முறையிலான சோதனை முயற்சி. இன்ஸ்ட்டா பக்கமும், கூகுள் ரிவ்யூக்களும் 2024ஆம் ஆண்டுவரை உணவகம் நடத்தப்பட்டதை உறுதிசெய்கின்றன. அவர்களைத் தொடர்புகொள்ளத் தேவையான லிங்க்குளை இங்கே கொடுத்துள்ளேன்.
கூகுள் மேப் : https://g.co/kgs/khbVKfw
இன்ஸ்டா பக்கம் : https://www.instagram.com/museumcafemop/
