காஷ்மீர், பஹல்காம் தாக்குதல் நடந்தவுடன் இந்தியப் பிரதமர் மோடியின் சவூதி சுற்றுப் பயணம் ரத்து செய்யப்பட்டது. 23ஆம் தேதி காலையில் டெல்லியில் அமைச்சர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பாதுகாப்புக் கேபினட் கமிட்டி (Cabinet Committee on Security – CCS) விரைவாக முடிவுகளை எடுத்து அறிவித்தது.
வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி, சிந்து நதி நீர்ப் பங்கீட்டு ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவித்தார். எல்லை தாண்டிய தீவிரவாதத்துக்கு, பாகிஸ்தான் தன்னுடைய உதவிகளை நிறுத்தும் வரைக்கும் இது நிறுத்திவைக்கப்படும் என்றார். மேலும் சிலவற்றையும் அறிவித்தார்.
அட்டாரி எல்லை மூடப்படும். அவ்வழியாக இந்தியா உள்ளே வந்துள்ள பாகிஸ்தானிகள் வெளியேற மே 1ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்படும்.
சார்க் விசா நீட்டிப்பு மூலம் பாகிஸ்தானிகளுக்கு வழங்கப்படும் சிறப்பு விசா உடனே நிறுத்தப்படும். வழங்கப்பட்டுள்ள விசா அனுமதி அனைத்தும் உடனடியாக ரத்து செய்யப்படும். இந்த விசா மூலம் ஏற்கெனவே இந்தியா வந்துள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற 48 மணிநேரம் அவகாசம் வழங்கப்படும். ( SVEC – SAARC Visa Exemption Scheme – என்பது 1988ல் இஸ்லாமாபாத்தில் நடந்த சார்க் மாநாட்டுக்குப் பிறகு 1992ல் அறிமுகமானது. பாகிஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொழிலதிபர்கள், செய்தியாளர்கள் உள்ளிட்ட 24 வகையினர் சிறப்பு விசா அந்தஸ்துடன் தடையின்றி இந்தியாவுக்குள் அனுமதிக்கப்படுவர்.)
இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் ஹைகமிஷனில் இருக்கும் கடற்படை, விமானப்படை அதிகாரிகள் பாகிஸ்தானுக்குத் திரும்ப அழைத்துக் கொள்ளப்பட வேண்டும். (persona non grata PNG). இந்தியாவும் தன்னுடைய அதிகாரிகளை இஸ்லாமாபாத் ஹைகமிஷனில் இருந்து திரும்ப அழைத்துக்கொள்ளும். இப்பதவிகள் அனைத்துமே ரத்து செய்யப்படுகின்றன. இவர்களுடைய உதவி அதிகாரிகளும் அவரவர் நாட்டுக்குத் திரும்ப அழைத்துக்கொள்ளப்படுவர்.
ஹை கமிஷனில் உள்ள 55 அலுவலர்களின் எண்ணிக்கை 30 ஆகக் குறைக்கப்படும். தொடர்ந்து மே 1ஆம் தேதி முதல் அது குறையும்.
இந்த ஐந்து அறிவிப்புகளை வெளியிட்டார் வெளியுறவுத்துறைச் செயலர் விக்ரம் மிஸ்ரி. பஹல்காம் தாக்குதல் விசாரணையில் எல்லைதாண்டிய பயங்கரவாதத் தொடர்புகள் இருப்பதாகத் தெரியவந்துள்ளதால் இந்நடவடிக்கை என்றார்.
மற்ற நடவடிக்கைகள் அவ்வப்போது இது போன்ற தாக்குதலின்போது எடுக்கப்படுவதும் பின்னர் பேச்சுவார்த்தைகள் மூலம் கைவிடுவதும் உண்டு. ஆனால் 1960ஆம் ஏற்படுத்தப்பட்ட சிந்து நதிநீர் ஒப்பந்தம், 1965, 1971, கார்கில் போர் உள்ளிட்ட பல இந்திய பாகிஸ்தான் போர்களைக் கடந்து வந்திருக்கிறது. 26 அப்பாவி இந்தியர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கான கடுமையான எதிர்வினையாக இந்தியா இந்த ஒப்பந்தத்தை முறித்துள்ளது. ஒப்பந்தம் செய்துகொண்ட நாடுகளில் ஒன்று வெளியேறினால், தான் செய்வதற்கு ஏதும் இல்லை என்று உலக வங்கி தெரிவித்தது. உள்துறை அமைச்சர் அமித் ஷா, பஹல்காம் சென்று நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தினார். பிகார் மாநிலத் தேர்தல் பரப்புரையில் கலந்துகொண்ட மோடி, அங்கே பேசும்போது, பூமியின் எல்லைவரைக்கும் விரட்டிச் செல்வோம், கடுமையான தண்டனை கொடுப்போம் என்றார்.
உடனடியாக மாநிலம் தழுவிய தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியது இந்திய ராணுவம். காஷ்மீரில், ஏப்ரல் 24, வியாழன் இரவில் ஆதில் ஹுசைன் தோக்கரின் உறவினர் வீட்டை வெடிவைத்துத் தகர்த்தது. இவர் இதற்கு முன்னர் நடந்த பாதுகாப்புப் படை மீதான தாக்குதலில் தொடர்புள்ளவராக சந்தேகிக்கப்படுபவர். பஹல்காம் தாக்குதலிலும் இவருக்குத் தொடர்புள்ளது என்றும் அலி பாய், ஹாஸிம் முசா ஆகிய பாகிஸ்தானிகளும் தாக்குதலில் ஈடுபட்டார்கள் என்றும் அடையாளம் கண்டுள்ளார்கள். ஆஷிப் ஷேக் என்பவரையும் தேடிவருகிறார்கள். இப்பெயர்களோடு தொடர்புடைய உறவினர்களின் பத்துக்கும் மேற்பட்ட வீடுகளை வெடி வைத்துத் தகர்த்தது இந்திய ராணுவம். தகவல் தருவோர்க்கு இருபது லட்ச ரூபாய் சன்மானமும் அறிவித்தது. தேடுதலின்போது தீவிரவாதிகளின் எதிர்த்தாக்குதலில் லெப்டினட் கமான்டர் அல்தாப் லல்லி சுட்டுக்கொல்லப்பட்டார்.
மோடியைத் தீவிரமாக எதிர்க்கும் தமிழ்நாடு மாநில முதலமைச்சரும் சரி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுலும் சரி, உடனடியாக அறிக்கைவிட்டு இந்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்குத் துணையிருப்போம் என்றனர். மாநில முதலமைச்சர்கள், பாகிஸ்தானிகள் நாட்டைவிட்டு வெளியேறுவதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொண்டார் அமித்ஷா. ஒரு மாதம் முன்பு கூட நாடாளுமன்றத்தில் தீவிரவாதிகளை நெற்றிப்பொட்டில் சுட்டு வீழ்த்துகிறது மோடி அரசு, எனவே காஷ்மீரில் தீவிரவாதமே இல்லை என்று பேசியிருந்தார். 2019ஆம் ஆண்டு புல்வாமாவில் பாதுகாப்புப் படையினர் சென்ற வாகனம் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது. 40 சிபிஆர்எப் வீரர்கள் கொல்லப்பட்டனர். 2016ஆம் ஆண்டு உறி முகாமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். 16 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். நாட்டையே உலுக்கிய இத்தாக்குதல்கள் பிஜேபி ஆட்சியில்தான் நடந்தன.
பிஜேபி ஆட்சிக்கு வருவதற்கு முன்பும் வந்தபிறகும் தொடர்ந்து வன்முறை நடப்பதை புள்ளிவிவரங்கள் உறுதி செய்கின்றன. 2020லிருந்து 2022 வரையிலான காலகட்டத்தில் மட்டும் பலியானோர் எண்ணிக்கை பத்துக்குள் இருக்கிறது. கோவிட் பெருந்தொற்று காரணமாக இருக்கலாம். மற்றபடி எல்லா ஆண்டுகளிலும் நான்கைந்து தாக்குதல்களேனும் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. 2024ஆம் ஆண்டில் மட்டும் 26 பேர் வெவ்வேறு தாக்குதல்களில் கொல்லப்பட்டனர். 2023ஆம் ஆண்டு 19 பேர்.
2002 ஆம் ஆண்டுக்கு பிறகு, சுற்றுலாப் பயணிகள், இந்துக்களைக் குறிவைத்துக் கொல்லும் போக்கு மாறி பாதுகாப்புப்படை வீரர்களை மட்டுமே இலக்காகக் கொண்டிருந்தனர் பயங்கரவாதிகள். பிஜேபி பதவிக்கு வந்தபிறகு மாற்றம் ஏற்பட்டதென்றால் இதில் மட்டும்தான். 2017ல் அமர்நாத் யாத்திரிகர்கள் 8 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 2024ஆம் ஆண்டு ஆன்மிகப் பயணம் வந்த இந்து மதப் பயணிகள் பஸ் மீது தாக்குதல் நடத்தியதில் 9 பேர் கொல்லப்பட்டனர். பஹல்காம் தாக்குதலும் அப்பாவி இந்துக்கள் மீதே நடத்தப்பட்டுள்ளது. வெறுப்பரசியலால் அரசியல்வாதிகளுக்கு லாபம் கிடைக்கிறது, பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள்தாம்.
முந்தைய பெரிய தாக்குதல்களுக்குப் பிறகு சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தி தீவிரவாதிகளை அழித்தோம் என்றனர் மோடியும் அமித் ஷாவும். இப்போதும் ஏதோ ராணுவ நடவடிக்கை இருப்பதாகவே யூகிக்கலாம். இந்தியாவின் அதிருப்தியை வெளிப்படுத்த அது அவசியமும் கூட. ஆனால் பலன் ஏதும் கிடையாது என்பதே நிதர்சனம்.
சிந்து நதியை இன்றைக்கே தடுத்து நிறுத்த முடியாது. பல கோடிகள் முதலீடு செய்து, பல ஆண்டுகள் செலவிட்டு அணை கட்டி நீரைத் தடுப்பது என்றாலும் கூட சீனாவில் இருந்தும் நதிநீர் வருவதைக் கணக்கில் கொள்ளவேண்டும். சீனா நதிநீர் பற்றிய தரவுகளையோ தகவல்களையோ பகிர்வதில்லை என்பதில் தீர்மானமாக இருக்கிறது. எதன் அடிப்படையில் அணையைக் கட்டமுடியும். கட்டிய அணைக்குத் தண்ணீர் வராமல் நிறுத்தவும் சீனாவால் முடியும் என்கிறபோது நாம் பாகிஸ்தானுக்குச் செல்லும் நீரை நிறுத்தி தண்டனை அளிப்போம் என்பது எந்தளவுக்குச் சாத்தியம்?
தீவிரவாதிகளுக்குப் பாகிஸ்தான் செய்யும் நிதி உதவியானது தங்கள் வளமான தேசத்தின் வருமானத்தில் இருந்து செய்யப்படுவதல்ல. அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளில் பெறப்படும் நிதியே அது. அவர்களை நிறுத்தாமல் பாகிஸ்தானை மட்டும் வில்லன் ஆக்குவதால் ஒன்றும் நடக்கப்போவதில்லை. பாகிஸ்தானுக்கு இழக்க ஏதுமில்லை. இந்தியா அப்படி யோசிக்கமுடியாது. இந்திய அரசு, தாக்குதலுடன் பாகிஸ்தானைத் தொடர்புப்படுத்தும் ஆதாரங்கள் எதையும் இன்னும் பொதுவில் வெளியிடவில்லை. சர்வதேச அரங்கில் இந்தியத் தரப்பு நியாயத்தைச் சொல்ல, ஆதராங்களின் அடிப்படையிலான விரிவான அறிக்கை அவசியமாகிறது.
பாஜக ஆதரவு மீடியா, உணர்ச்சியைத் தூண்டும் விதத்தில் இதைக் கையாள்வது வருந்தத்தக்கது. ஆபத்தானது. அவசரமாக வெளியேற வேண்டிய கட்டாயத்தில் குழந்தைகளின் மருத்துவத்துக்காகக் கடன் வாங்கி லட்சங்களில் செலவு செய்து இந்தியா வந்த பாகிஸ்தான் பெற்றோரும் உள்ளனர். மனிதாபிமானத்தைத் தொலைத்து எதை வெல்லப்போகிறோம்? ரசிக மனோபாவத்துடன் கையாளவேண்டிய விஷயமல்ல இது. அயலகவாழ் இந்திய பாகிஸ்தான் மக்கள் யூகேவில் கூடி எதிரெதிரே நின்று போராடினர். தண்ணீர் பாட்டிலைக் கையில் வைத்துக்கொண்டு அருவருப்பான சைகைகளைக் காட்டி வெறுப்பேற்றினர் இந்தியர்கள். பதிலுக்கு கழுத்தைச் சீவும் சைகையைக் காட்டினர் பாகிஸ்தானிகள். யூட்யூப் வீடியோக்கள், செய்திகள் என கருத்து தெரிவிக்கும் வாய்ப்புள்ள இடங்களிலெல்லாம் வெறுப்புப் பேச்சுகள் பரவின. பாகிஸ்தான் தொலைக்காட்சி சேனல், செய்தித் தளங்கள் சிலவற்றை இந்தியா தடைசெய்தது. இந்தியாவில் ஆங்காங்கே சிலர் வெறுப்பு, அச்சுறுத்தும் பேச்சுகளுக்காகக் கைதானார்கள்.
அண்டை நாட்டுடன் சண்டைக்குப் போவதைவிடத் தலையாய விஷயம் உள்நாட்டில் சச்சரவை ஏற்படுத்தாமல் இருப்பது. தாக்குதல் நடந்தவுடன் காஷ்மீரிகள் ஒன்றிணைந்து பயங்கரவாதத்துக்கு எதிராகத் திரண்டது முக்கியமானது. வளர்ச்சி, நிம்மதியான வாழ்க்கைதான் எங்கள் எதிர்பார்ப்பு என்பதை வலுவாகச் சொல்லியிருக்கின்றனர். அவர்களுடைய அன்றாட வாழ்வைப் பாதிக்கும், அச்சுறுத்தும் விதத்திலான பாதுகாப்புக் கெடுபிடிகள், தீவிரவாதிகளுக்கு எதிரான மனநிலையை அரசுக்கு எதிரான மனநிலையாக மாற்றிவிடாமல் கையாளவேண்டும். காஷ்மீர் மக்களுடன் இணைந்து அரசு எடுக்கும் நடவடிக்கைகளே நீண்டகால நோக்கில் பலன் தரும். இந்தியாவின் பக்கம் எவ்வளவு நியாயம் இருந்தாலும் பாகிஸ்தானுக்கு எதிராக அடையாள எதிர்ப்புகளைத் தவிர நாம் செய்வதற்கு ஒன்றும் பெரிதாக இல்லை. உள்நாட்டில் கவனம் குவித்து ஒற்றுமையை வளர்ப்பதே ஆக்கப்பூர்வமான நடவடிக்கை.
வளர்ச்சியில் கவனம் இன்றி மதவாதத்தைக் கையில் எடுத்தது. வெறுப்பரசியலை வளர்த்தது. ஒரு மொழிக் கொள்கையைத் திணித்தது. மாநில உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க மறுத்தது. ராணுவத்துக்கு அதிகம் செலவிட்டது. வாய்ச்சவடால்களால் மக்களை வஞ்சித்தது. இல்லாத மாபெரும் எதிரி பிம்பத்தை உருவாக்கிச் சில்லறைச் சண்டைகளைப் பெரிதுபடுத்தியது. ராஜாங்க ரீதியிலான பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கை வைக்காதது. பாகிஸ்தான் வரலாற்றில் இவையெல்லாம்தான் அந்நாட்டின் தோல்விகளுக்குக் காரணமாக இருக்கின்றன. இந்தியாவும் இந்தப் பாதையை நோக்கிச் சென்றுவிடக்கூடாது.
*
29/04/2025 அன்று மெட்ராஸ் பேப்பரில் பதிப்பிக்கப்பட்ட கட்டுரை.
