இனிமே இப்படித்தான்

அதிமுக தன்னுடைய தேர்தல் வியூகத்துக்கு உதவ ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரமன்யா கன்சல்டன்சியை நியமித்துள்ளது. கட்சிக்கூட்டணிக்கு முன்பு தேர்தல் வியூகம் வகுக்கும் நிறுவனங்களுடன் கூட்டு வைப்பதுதான் முதல்படி என்றாகிவிட்ட காலம் இது. திமுக, ஒன்றுக்கு மேற்பட்ட தேர்தல் வியூக நிறுவனங்களுடன் கைகோத்துள்ளது. கேட்டவுடன் பிடித்துப்போகும் கேட்ச்சியான வாசகங்களுடன் தமிழ்நாட்டின் எல்லா அரசியல் கட்சிகளும் தேர்தல் பரப்புரையைத் தொடங்கிவிட்டன. அனைத்தின் பின்னணியிலும் ஒரு நிறுவனம் இருக்கிறது. 

இந்திய அரசியலின் அண்மைக்கால வரவு இந்தத் தேர்தல் வியூக வடிவமைப்பு நிறுவனங்கள். கால் நூற்றாண்டு காலம் எனலாம். முதன் முதலாகத் தோன்றிய தேர்தல் வியூக நிறுவனம் எனத் தோராயமாக விப்லக் கம்யூனிகேஷனைச் சுட்டலாம். ஐஐடி கான்பூரில் படித்து அமெரிக்காவில் பல்லாண்டுகாலம் வேலை பார்த்துத் திரும்பியவரால் ஆரம்பிக்கப்பட்டது. தேர்தல் பரப்புரைக்குத் தரவுகளையும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தலாம் என்பதைக் கணித்து நிறுவனத்தைத் தொடங்கினார் பாண்டே. 

2003ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் 2004 இந்தியப் பொதுத் தேர்தல் முதலே தன் சேவையைத் தரத் தொடங்கியது. அப்போது இணையத்தைவிட தொலைப்பேசி மூலம் வாக்களார்களை அடைவதே சிறந்த வழியாக இருந்தது. அரசியல்வாதிகளின் பதிவு செய்யப்பட்ட செய்தி பல லட்சம் வாக்காளர்களைச் சென்றடைய விப்லக் நிறுவனம் உதவியது. அப்போது இதையெல்லாம் புரிய வைப்பதே கடினம்தான். காங்கிரஸின் ஜோதித்ராவ் சிந்தியா, பிஜேபியின் நவ்ஜோத் சிந்து போன்ற செல்வாக்கான அரசியல்வாதிகள்தான் முதலில் இப்புதிய யோசனைகளை முயன்று பார்த்தனர். அவர்கள் பெற்ற வெற்றி இந்நிறுவனத்தின் முகவரிச்சீட்டானது. 2009 தேர்தலில் ஒரிஸாவில் நவீன் பட்நாயக்கின் வெற்றிக்கு இவர்களே சொந்தம் கொண்டாடினார்கள்.

மக்களையும் அரசியல்வாதிகளையும் அரசாங்கத்தையும் இணைக்கும் பாலமாக விப்லக் இருக்கும் என்ற அறிவிப்புடன் பல திட்டங்களை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது. ஒரே வாக்காளர் பெயர் பலமுறை இருந்தால் அதைச் சுட்டிக்காட்டும் மென்பொருளை உருவாக்கினர். உத்திரப் பிரதேசத்தில் மதிய உணவுத்திட்டம் சீராகச் செயல்பட ஒரு மென்பொருள் தயாரித்தனர். சமூக மாற்றத்தை முன்னிறுத்திச் செயல்பட்டது எந்தளவு உண்மையோ தெரியாது இன்று இந்த நிறுவனம் இந்தத் துறையில் இருந்து காணாமல் போய்விட்டது. 

கருத்தியல், சமூக நோக்கம் எல்லாம் தேவையில்லை என அடுத்துக் களத்தில் தோன்றிய ஐபேக் நிறுவனம் இந்தியா முழுக்கப் புகழ்பெற்றது. பிரசாந்த் கிஷோர் வழிகாட்டுதலில் இயங்கிய ஐபேக் – இந்தியன் பொலிடிகல் ஆக்ஷன் கமிட்டி – நிறுவனம் குஜராத்தின் மோடியை கூமாப்பட்டி வரைக்கும் அறியவைத்தது. டீ விற்றவர் பிரதமரா எனக் காங்கிரஸ் கேலி பேசியதையே சாய் பே சார்ச்சா என்று பெயரிட்டு ஒரு பரப்புரை ஆயுதமாக்கினர். 2014 தேர்தலில் மோடி பெற்ற அமோக வெற்றியால் அதிகப் பலனடைந்தவர்களில் பிரசாந்த் கிஷோரும் ஒருவர். 

பிகாரின் நிதிஷ் குமார் முதல் ஆந்திராவின் ஜெகன் மோகன் ரெட்டி வரை பல மாநிலங்களில் ஐபேக் தேர்தல் வெற்றிகளைத் தீர்மானித்தது. இந்நிறுவனம் முன்னெடுத்தது எல்லாமே பல கோடி மதிப்புள்ள மகா பரப்புரைகள்தாம். கருத்தியல் பற்றியெல்லாம் கவலை கிடையாது. பணம் கொடுத்தால் யாருக்கு வேண்டுமானாலும் வேலை பார்ப்பார்கள். என்னென்ன வேலை என்பதிலும் வெளிப்படைத்தன்மை கிடையாது. இவை விமரிசனத்துக்கள்ளானாலும் பணம் கொழிக்கும் முதன்மை நிறுவனமாக இத்துறையில் ஐபேக் இருக்கிறது. பிரஷாந்த் நிறுவனத்தில் இருந்து வெளியேறி அரசியல்வாதியாகிவிட்டார்.

இவர்கள் வந்த காலக்கட்டத்தில் இன்னும் பல நிறுவனங்களும் இத்துறையில் நுழைந்தன. 2008ல் தொடங்கப்பட்ட லீட்டெக் நிறுவனம் வாக்காளர்கள் பற்றிய தரவுகளை அலசி ஆராய்வதில் கில்லாடி. அதனடிப்படையில் பரப்புரை யோசனைகளை இவர்கள் வழங்குவார்கள். டிசைன்பாக்ஸ்டு நிறுவனம் தொடங்கப்பட்ட ஆண்டு 2011. இவர்கள் இளைஞர்கள் வாக்குகளைக் குறிவைத்து இயங்குபவர்கள். காங்கிரஸ் 2017 பஞ்சாப் தேர்தலில் இவர்களைப் பயன்படுத்தியது. பொலிடிகல் எட்ஜ், வராஹி அனாலிடிக்ஸ், ஐஎப்எஸ்எஸ்எஸ் என இன்னும் பல நிறுவனங்கள் உள்ளன.

தமிழகத்தைப் பொறுத்தவரை, மொத்தமாக ஒரே நிறுவனத்திடம் எல்லாப் பொறுப்பையும் ஒப்படைக்கும் வழக்கம் பரவலாக இன்னும் காலம் எடுக்கும். ஒரு குறிப்பிட்ட யோசனையை பிரபலமாக்கும் சேவையை மட்டும் நிறுவனத்திடம் பெற்றுக்கொள்வதே அதிகம் நடைமுறையில் இருக்கிறது. திமுக இந்தத் தேர்தலுக்கு மட்டுமே பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது. பிராஷாந்த் கிஷோரின் ஐபேக், 2021 தேர்தலிலேயே திமுகவுடன் கைகோத்தது. ஸ்டாலினின் 7 உறுதிமொழிகள் பரப்புரை இந்நிறுவனம் கட்டமைத்ததுதான்.

உதயநிதிக்கென்றே தனியாக சுனில் கனுகலு என்ற ஆலோசர் உண்டு. 2023 தெலுங்கானா தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரக் காரணமாக இருந்தவர். திமுகவின் உட்கட்சி உரசலால் தற்போது இவரை அனுப்பிவிட்டதாகச் சொல்கிறார்கள். ராபின் ஷர்மாவின் ஷோடைம் கன்சல்டன்ஸி நிறுவனத்தோடும் திமுக ஒப்பந்தம் செய்துள்ளது. ஆந்திராவில் 2019ல் சந்திரபாபு நாயுடு மீண்டும் பதவிக்கு வந்ததில் இந்நிறுவனம் முக்கியமான பங்காற்றியுள்ளது. ஒரு விதத்தில் அதிமுக இந்நிறுவனத்தை ஒப்பந்தம் செய்துவிடக் கூடாது என்றே திமுக இழுத்துப் போட்டதாகவும் ஒரு பேச்சிருக்கிறது.

பாமகவுக்கு ஆலோசகராக இருந்த ஜான் ஆரோக்கியசாமி விஜய் கட்சிக்கும் ஆலோசனை வழங்குவதாகச் சொல்லப்பட்டது. பிரசாந்த் கிஷோர் தமிழக வெற்றிக் கழகத்தின் மேடையேறி விஜய் தலைமையை புகழ்ந்து பேசியபோது ஐபேக் இக்கட்சிக்காக வேலை பார்த்துக்கொண்டிருந்தது. பின்னர் தன்னுடைய 30 பேர் கொண்ட அணியை அழைத்துக் கொண்டு கிளம்பிவிட்டார் பிரசாந்த். டிவிகேவில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா ஒரு நிறுவனம் நடத்துகிறார். இவரே ஆலோகசராகவும் இருக்கிறார். ஐடி விங் இருக்கிறது. அவர்களும் தங்கள் பங்குக்கு தாங்களே வியூகம் அமைத்துச் செயல்படுகிறார்கள்.

பிஜேபி, திமுக கட்சிகளின் ஐடி விங் அமைப்புகள் மற்றெல்லா கட்சிகளை விடவும் பலம் பொருந்தியவை. மக்களிடம் சேர வேண்டிய செய்திகளுக்குத் திட்டம் வகுப்பதும் சமூகவலைத்தளத்தில் ஆதிக்கம் செலுத்தும் செய்தியை முடிவு செய்வதும் இவர்களின் வேலைகளில் முக்கியமானவை. கட்சியே நடத்தும் ஐடி விங், கட்சிக்கு வெளியே இருந்து சேவை தரும் பரப்புரை வியூக நிறுவனங்கள் அல்லாது இன்னொரு வகையும் உண்டு.

பாப்புலஸ் எம்பவர்மென்ட் நெட்வொர்க். பென் என்றழைக்கப்டும் இந்த நிறுவனம் தேர்தல் ஆய்வுகளை மேற்கொள்கிறது. கணக்கெடுப்புகள், கருத்துக்கணிப்புகளை நடத்துகிறது. மக்களின் மனவோட்டத்தை அறிந்து அரசியல் கட்சிக்கு அறிவித்து அவர்கள் திட்டம் வகுப்பதில் பங்காற்றுகிறது. கருத்துகள், மீம்கள், வைரல் ரீல்கள் என மக்கள் மனநிலையில் செல்வாக்கு செலுத்தும் உள்ளடக்கங்களைத் தயாரிக்கிறது. இதெல்லாம் பல பணியாளர்களை வைத்து சட்டப்படியாக கட்சியிடம் பணம்பெற்று செய்யப்படுபவை. ஆனால் மற்ற நிறுவனங்களிடமிருந்து ஒரு முக்கியமான விதத்தில் வித்தியாசப்படுகிறது. இடதுசாரித் தத்துவம் அல்லது வலதுசாரிக்கு எதிரான தத்துவம் கொண்ட உள்ளடக்கங்களை மட்டுமே தயாரிக்கும் கொள்கையுடன் இருக்கும் நிறுவனம் இது. யார் பணம் கொடுத்தாலும் வேலை செய்வதில்லை. இது விரிவான விளக்கம். சுருக்கமாக திமுக ஆதரவுக் கம்பெனி என்றும் சொல்லலாம். 

இதே போல இன்னும் வெளிப்படையாக நேஷன் வித் நமோ என்று பிஜேபி ஆதரவு நிறுவனமும் இருக்கிறது. எம் பணி மோடி ஆதரவின்றி வேறில்லை என்பதை நிறுவனத்தின் பேரே தெரிவிக்கிறது. இப்படி வெளியிலிருந்து ஆதரவு தரும் நிறுவனங்களும் பல கட்சிகளுக்கு இருக்கின்றன. தேர்தல், ஆட்சி பற்றியெல்லாம் கவலையின்றி மக்களைக் குழப்பவும், குறிப்பிட்ட கட்சிகளுக்கு மட்டும் சேதாரத்தை உண்டு செய்யவும் சில கட்சிகளே நிறுவனங்கள் போல பணம் பெற்றுக்கொண்டு செயல்படுவதெல்லாம் தனி வகையறா.

தேர்தல் பரப்புரை நிறுவனங்களை, எல்லாம் தெரிந்த யாஷிகா எனச் சொல்வதற்கில்லை. ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை பதாகைகளைப் பாருங்கள். கை முஷ்டியை தூக்கிக் காட்டும் ஸ்டாலின், பதாகைக்கு வெளியே பார்க்கும் படம் ஓரமாக இருக்கும். அவர் பார்வை படாத இடத்தில் சம்பந்தமே இல்லாமல் ஓரணியில் தமிழ்நாடு வாசகம் இருக்கும். ஓரணி என்பதைக் குறிக்கப் பலதரப்பட்ட மக்களை அரவணைத்துச் செல்லும்படியான விரிந்த கைகளோ ஒரு விரலைக் காட்டும் படமோ இருந்திருக்கலாம். குறைந்தபட்சம் வாசகத்தையோ மக்களையோ ஸ்டாலின் பார்க்கும்படியாக பதாகையை வடிவமைத்திருக்கலாம். மக்களுடன் அணியாக நடந்து செல்லும் படங்களும் பரப்பரை வாசகத்தை எளிதில் மக்கள் மனத்தில் ஏற்ற உதவுக்கூடியதே.

இவை எதுவும் இன்றி, கிட்ட வந்தா மூக்குல குத்துவேன் என்பதுபோல நின்றுகொண்டு முதுகுக்குப் பின்னால் ஓரணியில் திரள அறைகூவல் விடுக்கும் வாசகத்தை வடிவமைக்கப் பலகோடிகள் செலவாகியிருக்கும். அந்தப் பலகோடி ரூபாய்ப் பணம் தன் வேலையைச் செவ்வனே செய்யும். மீண்டும் மீண்டும் பார்வையில் படும் இந்தப் பதாகையை ஒரு கட்டத்தில் மக்கள் மனம் ஏற்றுக்கொள்கிறது. நம்பலனா பிஜேபி வந்துடும் எனச் பூச்சாண்டி மாதிரி சுட்டிக்காட்டவொரு பிம்பமும் தயாராக இருக்கிறது. இந்துக்களை அழித்துவிடும் என வடக்கில் திமுக பூச்சாண்டியாகத் திரிகிறது. இவையும் இன்ன பலதும் சேர்ந்து ஒரு பரப்புரையின் வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்கின்றன.

மக்களின் எண்ணிக்கை அல்ல, எண்ணங்களே பரப்பரை வெற்றிபெற முதன்மைக் காரணம். தேர்தல் வெற்றிக்கும் அதுவே காரணம். சில நேரங்களில் அந்த எண்ணத்தோடு ஒத்துப்போகும்படியான பரப்புரையை இந்நிறுவனங்கள் கையிலெடுக்கின்றன. பல நேரங்களில் அப்படி அமைவதில்லை. வெற்றி பெற்றால் வியூகத்தைச் செயல்படுத்திய நிறுவனத்தின் வெற்றியாகப் பதிவாகிறது. தோல்வி பெறும் பரப்பரையும் இத்தனை கோடி மக்களைச் சென்றடைந்தாக நிறுவனத்தின் சேவைப் பட்டியலில் சேர்ந்துவிடும். 

மக்கள் மனத்தில் இருக்கும் எண்ணங்கள் இந்நிறுவனங்களின் யூகங்களுக்கு அப்பாற்பட்டவை என்பதற்கு சிறந்த உதாரணம் பிரஷாந் கிஷோரின் அரசியல் தோல்வி. மோடியைப் பிரதமாக்கினார், ஸ்டாலினை ஆட்சியைப் பிடிக்கவைத்தார் என்றெல்லாம் என்னென்னவோ பெருமைகளைச் சுமக்கமுடியாமல் சுமந்துகொண்டிருந்தார். யார் யாரையோ பெரிய ஆளாக்குவதை நிறுத்திவிட்டு தாமே தேர்தல் அரசியலில் இறங்கி பதவியில் அமரும் ஆசை வந்தது. சொல்லுதல் யார்க்கும் எளியவாம். செய்தல் வேறு டிபார்ட்மென்ட். களத்தில் இறங்கிய வேகத்தில் நிமிர்ந்து பார்க்கக்கூட நேரமின்றி உள்ளே அழுத்தி மேலே கொடிமேடை அமைக்கும் தீவிரம் கொண்ட இந்திய அரசியலை பிரஷாந்தால் எதிர்கொள்ளமுடியவில்லை. தோல்வியே மிஞ்சியது. அதுதான் நிதர்சனம்.

*

29/07/2025  அன்று மெட்ராஸ் பேப்பரில் பதிப்பிக்கப்பட்ட கட்டுரை.