அகரம் விதைத் திட்டம் தொடங்கி பதினைந்து ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் விழா கடந்த சில வாரங்களாக தமிழ்நாட்டின் ஹாட் டாபிக். நடிகர் சூர்யா ஒருநாள் காரில் போய்க்கொண்டிருந்தபோது படிக்காமல் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த சிறுவர்களைப் பார்த்து, வகையறா பதிவுகள் பேஸ்புக்கில் வலம் வருகின்றன. அகரம் பவுன்டேஷன் வழியாக கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றி மும்பை, லண்டன், சென்னை ஈசிஆர் எனப் பல இடங்களில் சொத்து வாங்கும் சூர்யா வகைப் பதிவுகள் வாட்சாப்பில் சுற்றுகின்றன. இந்த இரு எல்லைக்கும் நடுவே, அரசாங்கம் செய்ய வேண்டிய வேலையை அமைப்புகள் செய்தால் அப்புறம் அரசு என்னதான் செய்யும் எனக் கேட்கும் அதிகம் கவனிக்கப்படாத சீரியஸ் விவாதங்களும் உண்டு.
சூர்யா அரசியலுக்கு வருவாரா என்கிற எதிர்காலக் கேள்விக்குச் செல்லும் முன்பு அகரம் என்ன செய்தது? என்ன செய்து கொண்டிருக்கிறது? போன்ற கேள்விகளுக்கு விடை காண்பது அவசியம்.
அகரத்தின் தொடக்கமாக சூர்யா, அவர் தந்தை சிவகுமார் செய்து வந்த கல்விப் பணியை மேடையில் குறிப்பிடுகிறார். சூர்யாவுக்கும் இயக்குநர் த.செ.ஞானவேலுக்கும் இடையே உருவான நட்பு இன்னும் துல்லியமான தொடக்கப்புள்ளி. ஞானவேல் சமூகப் பணிகளில் ஆர்வம் கொண்டவர். தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். பத்திரிகையாளர். விகடனுக்காக நீதிபதி சந்துருவை அவர் எடுத்த பேட்டியின் போது கிடைத்த கதைக் கருவே பின்னாளில் அவர் இயக்கத்தில் ஜெய்பீம் திரைப்படமாக வந்தது. இப்படிக்கு சூர்யா தொடர்கூட விகடனில்தான் வந்தது.
ஞானவேல், சூர்யா இருவருக்கும் பொதுப்புள்ளியாக கல்விக்கு உதவி செய்யும் நோக்கம் இருந்தது. குறிப்பாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு. “ஒருவர் ஐயாயிரம், பத்தாயிரம் சம்பாதிப்பவராக இருந்தாலும்கூட கடன் வாங்கியாவது தன் பிள்ளையை தனியார் பள்ளியில் சேர்த்துவிடுகிறார். எதற்குமே வழியில்லாதவர்கள்தான் அரசுப்பள்ளியில் சேர்கிறார்கள். இருப்பதிலேயே கடைநிலையில் இருக்கும் அவர்களுக்குத்தான் நம் உதவி போய்ச்சேரவேண்டும்.” என்கிற எண்ணம் இருபதாண்டுகளுக்கு முன்பு அகரம் அமைப்பைத் தொடங்கக் காரணம் என ஞானவேல் குறிப்பிடுகிறார்.
ஆதி திராவிட நலப் பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து சுண்ணாம்பு அடிப்பது, பெஞ்சு, நாற்காலி வாங்கிப்போடுவது. கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் திறன் வளர்ப்புப் பயிற்சிகள் கொடுப்பது. வழிகாட்டிகள் திட்டம் மூலம் அரசுப் பள்ளி ஒன்றைத் தத்தெடுத்து மாணவர்களுக்கு மென்ட்டாரிங் செய்வது. இப்படிப் போய்க்கொண்டிருந்த அகரம் அமைப்பு, அதுவரை பெற்ற ஐந்தாண்டு அனுபவங்களின் அடிப்படையில் 2010ஆம் ஆண்டு விதைத் திட்டத்தைத் தொடங்கியது.
சூர்யா கொடுக்கும் பணம் மட்டுமேயன்றி மற்றவர்களிடம் இருந்தும் உதவி பெற்று அரசுப்பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளியில் இருக்கும் மாணவர்கள் கல்லூரிக் கல்வி பயில வழி செய்வது விதை திட்டம். வந்து குவியும் விண்ணப்பங்களில் உதவி தேவைப்படும் மாணவர்களை வரிசைப்படுத்த கல்வியாளர் பிரபா கல்விமணி போன்றோர் ஆலோசனையுடன் ஒரு சிஸ்டம் தயாரானது.
காலையில் நான்கு மணிக்கு எழுந்து வீடு வாசல் பெருக்கி, சாணி தெளித்துக் கோலமிட்டு, சோறு பொங்கி, பாத்திரம் கழுவி வைத்து, தம்பி தங்கைகளைக் குளிப்பாட்டி உணவளித்து அருகில் இருக்கும் ஆரம்பப் பள்ளியில் விட்டு, பள்ளி முடிந்ததும் பாட்டியுடன் இருக்குமாறு அறிவுறுத்திவிட்டு, ஐந்தாறு கிலோமீட்டர்கள் நடந்துபோய், அறிவியலுக்கும், ஆங்கிலத்துக்கும் ஆசிரியர் இல்லாத, ஆய்வுக்கூடம் இல்லாத பள்ளியில் பாடம் படித்து, இரவில் ஒற்றை குண்டு பல்பு வெளிச்சத்தில் வீட்டுப்பாடம் செய்து கல்வி கற்கும் சிறுமி பன்னிரண்டாம் வகுப்பில் வாங்கும் 70 மதிப்பெண்ணையும் வசதி வாய்ப்புள்ள மாணவர் பெறும் 95 மதிப்பெண்ணையும் ஒரே மாதிரி தட்டில் வைத்து எடைபோடாத சிஸ்டம் அது.
சவாலான பின்னணி கொண்ட மாணவர்களின் சிக்கல்களைப் பட்டியலிட்டு அதற்குத் தனியாக மதிப்பெண் கொடுக்கிறது அகரம். அப்பாவோ அம்மாவோ இல்லையா? இருவருமே கிடையாதா? குடிநோயால் குடும்பத்தில் பாதிப்பு இருக்கிறதா? சாதிக்கலப்புத் திருமணம் செய்து கொண்ட பெற்றோரா? முதல் தலைமுறைப் பட்டதாரியா? உடல் குறைபாடு முதல் எய்ட்ஸ் வரை வேறு என்னென்ன இடர்கள் உள்ளன? பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் தினமும் வருவாரா? இந்த மாணவர் படித்து முன்னேறி கரைசேர்ப்பார் என்ற நம்பிக்கையுடன் எத்தனை சகோதரர்கள் காத்திருக்கிறார்கள்? அகரம் உதவி செய்யாவிட்டால் கல்யாணம் செய்து வைத்துவிடுவார்களா? என்பது வரைக்கும் நுட்பமாக ஆய்வு செய்து உதவி தேவைப்படுபவர்களை வரிசைப்டுத்தி இருக்கும் நிதியை வைத்து எத்தனை பேருக்கு உதவ முடியுமோ அத்தனை பேருக்கு உதவுகிறார்கள்.
இப்படித் தேர்ந்தெடுப்பதால் கிராமத்துப் பின்னணியைக் கொண்ட மாணவர் சென்னையின் புகழ்பெற்ற கல்லூரியில் சேர்ந்து சூழலுடன் ஒத்துப்போக முடியாமல் ஒரே மாதத்தில் ஓடிப்போய்விடுவார். அவர்கள் தன்னம்பிக்கையுடன் கல்லூரிச் சூழலை எதிர்கொள்ள பயிற்சிகள் கொடுக்கிறார்கள்.
இப்பயிற்சிகளை வடிவமைத்ததில் காலஞ்சென்ற பத்திரிகையாளர் ஞாநிக்கு பங்குண்டு. லயோலா கல்லூரி பேராசிரியர் காளீஸ்வரன், அகரம் பயிற்சி வகுப்புகளின் முக்கியமான முகம். தமிழ்நாட்டில் தொண்ணூறுகளில் பெரும் கவனம் ஈர்த்த அறிவொளி இயக்கம், புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா கேம்ப்பெய்ன் எல்லாம் இந்தத் தலைமுறையினர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவற்றில் எல்லாம் காளீஸ்வரன் பங்களிப்பு முதன்மையாக இருந்தது. நகைச்சுவைக் கலைஞராக தொலைக்காட்சிகளில் வரும் ஜெயச்சந்திரன் சமூகக் கல்வியைப் பயின்றவர். வாழை அமைப்பின் மூலம் அரசுப்பள்ளி மாணவர்களுக்காகப் பயிற்சியளித்ததில் அனுபவம் கொண்ட இவரும் பயிற்சிப் பட்டறைகள் குழுவில் முதன்மையானவர். காலஞ்சென்ற மனநல ஆலோசகர் பிருந்தா ஜெயராமன், அண்மையில் மறைந்த கல்வியாளர் வசந்திதேவி உட்பட பலரை அகரம் அமைப்பு தன் சிஸ்டத்துக்குள் கொண்டுவந்தது.
இவர்கள் அளிக்கும் பயிற்சி, மாணவர்களுக்கு மட்டுமின்றி தன்னார்வலர்களுக்கும் சேர்த்துத்தான். உதவி கேட்போரிடம் பணிவுடன் நடந்துகொள்வது, சமூகப் புரிதலுடன் அணுகுவது என அது தனி ஏரியா. தனிப்பட்ட முறையில் புகழ், அங்கீகாரம் எதுவும் எதிர்பாராது கூட்டுமுயற்சியின் ஒரு கூறாக நம் செயலும் இருக்கும் என்கிற புரிதலுடன் தன்னார்வலர்கள் தயார் செய்யப்படுகிறார்கள்.
இருக்கும் இடத்தில் இருந்தே மாணவர்களுடன் தினமும் பேசி வழிகாட்டும் மென்ட்டார் பணி. நெடுந்தூரம் பயணம் செய்து மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று ஆய்வு செய்வும் ஹவுஸ் விசிட் பணி. மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்றுத் தருவது, நேர்காணலுக்குத் தயார் செய்வது. அகரம் கணக்கு வழக்குகளை பார்க்கும் அலுவலக வேலையில் உதவுவது. விண்ணப்பங்களில் இருக்கும் தரவுகளை கணினியில் புகுத்துவது. தனியார் பெருநிறுவனங்களிடமிருந்து நிதியைப் பெற அறிக்கை தயாரிப்பது. இப்படி ஆயிரம் வேலைகள் உள்ளன. அவரவர் வசதிக்கேற்றவாறு ஒரு வேலையைத் தேர்ந்தெடுத்து உதவுகின்றனர் தன்னார்வலர்கள்.
உதவி கிடைத்த மாணவர்கள் படித்து நல்ல வேலையில் சேர்ந்து தங்கள் பொருளாதாரத் தேவைகளை அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்துகொள்ளவே சில ஆண்டுகள் ஆயின. தனக்கு அருகில் இருப்போருக்குத் தன்னால் இயன்ற உதவியைச் செய்வதை இம்மாணவர்கள் தொடர்ந்தார்கள். எதிர்வீட்டுப் பையனுக்கு கல்விக்கட்டணம் கட்டுவது, தனக்குக் கீழே வேலை செய்யும் கிராமத்து மாணவி அலுவலகச் சூழலைக் கையாள மென்ட்டாராக உதவி செய்வது, அலுவலகத்தின் சிஎஸ்ஆர் வேலைகளை ஆர்வத்துடன் செய்வது. இப்படி ஏதோ ஒன்று. வேலையில் மதிப்புக்குரிய இடத்தை அடைந்து அங்கே அவர் செயல்பாடுகள் செய்தி ஆவதற்கு இன்னும் சில ஆண்டுகள் தேவைப்பட்டன.
இந்திய ராணுவத்தில் காஷ்மீரில் பணிபுரியும் கேப்டன் டாக்டர் கிருஷ்ணவேணி ஓர் உதாரணம். பெருந்தொற்றுக் கால லாக்டவுனில் காஷ்மீரில் மாட்டிக்கொண்ட பதினைந்து தமிழ்நாட்டு லாரி டிரைவர்கள் உணவின்றி பனியில் அவதியுறும் செய்தியைக் கண்டார் வேணி. உடனே சென்று அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்தார். வைரல் ஆனது அந்தச் செய்தி. அவருடைய கிராமத்திலும் பள்ளியிலும் அக்கம்பக்கத்திலும் அதுவரை அவர் செய்த உதவிகள் எல்லாம் வெளிச்சத்துக்கு வந்து யூட்யூப் சேனல்களின் செல்லப்பிள்ளையாக ஏகப்பட்ட நேர்காணல்கள் கொடுத்துக்கொண்டிருந்தார். இப்படிப் பலர் பல நாடுகளில் ஸ்லீப்பர் செல்களாக இருந்து திடீரென அகரம் மாணவர் என்ற அடையாளத்துடன் வைரல் ஆவது அவ்வப்போது நடப்பதுதான்.
நாம் இந்தச் சமூகத்துக்குத் திருப்பிக் கொடுக்கவேண்டும் என்ற சிந்தனையை விதைக்கும் நோக்கில் தொடங்கப்பட்டதுதான் விதைத் திட்டம். அது வெற்றி பெறுகிறதா என்பதை அறியப் பல ஆண்டுகள் ஆனாலும் தொடர்ந்து அகரம் அந்த சிஸ்டத்தை நம்பி வேலை பார்த்துக்கொண்டிருந்தது. தங்கள் பிறந்தநாளில் ஆண்டுகொருமுறை தையல் மிஷின் வழங்குவது, புத்தகப்பை, நோட்டு, பேனா வழங்குவது போன்று நடிகர்கள் செய்யும் வழக்கமான சமூகப் பணியைத் தாண்டிய பெருநோக்கத்துடன் அகரம் இயங்குவதை நடிகர் சூர்யா தெளிவாகப் புரிந்துவைத்திருக்கிறார். அதன் அடிப்படையில்தான் அவருடைய நீட் எதிர்ப்புப் பேச்சும், ஒன்றிய அரசின் கல்விக் கொள்கையை பற்றி விவாதங்களை எழுப்ப மேடை அமைக்கும் செயலும் இருந்தன.
கருத்தைத் தனிப்பட்ட தாக்குதலாக மாற்றினர் மத்தியில் ஆளுங்கட்சிக்கு ஆதரவானவர்கள். ட்ரோல் செய்வது. பொய்த் தகவல்ளைப் பரப்புவது. சூர்யா, ஜோதிகா திரைப்படத்தைப் புறக்கணிக்க ஹாஷ்டாக் உருவாக்குவது. ஆபாச படங்களை உருவாக்கி அவமானப்படுத்த முயல்வது. இப்படிப் பலவித முயற்சிகள். இதற்கு எதிராக, திராவிடக்கட்சிகள், இடதுசாரிகள் தரப்பில் இருந்து சூர்யாவுக்கு ஆதரவும் வந்தது.
திட்டமிட்டோ, திட்டமிடாமலோ இந்த அரசியல் சண்டையில் சூர்யா உள்ளே வந்துவிட்டார். அரசியல் கட்சிகளின் எதிர்ப்பும் ஆதரவும் நிரந்தரம் இல்லை. சூர்யாவுக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இருக்கிறது என்ற சந்தேகம் வந்தால்கூட மாநிலத்தில் ஆளும் கட்சிகள் சூர்யாவை நடத்தும் விதம் மாறிவிடும். திரைப்படத்தில் நடிப்பதும் அது திரைக்கு வருவதையுமேகூட சாத்தியமில்லாமல் செய்யும் ஆற்றல் உண்டு. கடந்தகாலங்களில் பல நடிகர்களுக்கு இவை நடந்ததை தமிழ்நாடு அறியும். போலவே, இன்று ட்ரோல் செய்யும் பிஜேபியும், ஏனுங் நம்ம கட்சி சார்பில் நீங்கதான் போட்டியிடனும் என்றோ முதல்வர் வேட்பாளரே சூர்யாதான் என்றோ அறிவித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
அரசியல், நடிப்பு இரண்டும் தாண்டி ஒரு ரசிகர் வட்டம் சூர்யாவுக்கு இன்று உருவாகியுள்ளது. காரணம் கல்வி மேல் தமிழர்களுக்கு இருக்கும் காதல். ரஜினியோ, கமலோ அல்ல, தமிழ்நாட்டின் உண்மையான சூப்பர் ஸ்டார் கல்விதான். தமிழ்நாட்டு மக்களில் பெரும்பாலானோர் உணர்ச்சிவயப்பட்ட ரசிக மனப்பான்மையுடன்தான் கல்வியை அணுகுகின்றனர். சமூகத்தில் பல நல்லவித மாற்றங்களை அந்தளவுக்கு கல்வி நிகழ்த்தியிருக்கிறது. பலரை உயர்த்தியிருக்கிறது. உயிர்களையும் எடுத்திருக்கிறது.
கூகுள் எக்கோசிஸ்டம், அமேசான் எக்கோசிஸ்டம் மாதிரி தமிழ்நாட்டு எக்கோசிஸ்டம் ஒன்று இருக்கிறது. கல்வியும் கல்வி சார்ந்தும் என்பதுதான் அது. இந்தியாவின் மற்ற மாநிலங்களில் கஷ்டப்பட்டு படித்தால்மட்டும் முன்னேறிவிட முடியுமா என்று உறுதியாகச் சொல்லமுடியாது. ஆனால் தமிழ்நாட்டில் கல்வி ஒன்றே போதும். படிப்பதற்கு நிறைய நல்ல கல்வி நிலையங்கள் உள்ளன. படித்து முடித்தால் வேலை செய்ய பல்வேறு வாய்ப்புகளும் உள்ளன. சட்டப்பூர்வமான வழியில் வெளிநாடுகளுக்கு சென்று வேலை செய்யவும் முடியும். அட எதுவுமே சரிவரவில்லை என்றாலும், உள்ளூர் கல்விச்சந்தையேகூட போதும். டியூஷன் டீச்சர் முதல் கல்வித் தந்தை வரை எவ்வளளோ இருக்கிறது. நேரடியாகவும் மறைமுகமாவும் பணம் செய்யும் வாய்ப்பை தமிழ்நாட்டுக் கல்விச்சந்தை வழங்குகிறது. புகழ், பதவி எல்லாம்கூட சாத்தியம். குறைந்தபட்ச எதிர்பார்ப்பான மாண்புடைய வாழ்க்கையைக் கல்வி கொடுப்பது நிச்சயம்.
அகரம் அமைப்பின் வெற்றியில் இந்தச் சூழல் முக்கியமான கூறு. அவர்களுடைய வலைத்தளத்தில் பார்த்தால் விதைத் திட்டம் மட்டுமல்லாமல் இன்னும் பல திட்டங்களில் அவர்கள் செயலாற்றுவதைக் காணலாம். பள்ளிப்படிப்பைக் கைவிடும் மாணவர்களுக்கு தை திட்டம். பெண்களுக்காக 36 வயதினிலே. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு யாதும் ஊரே. மலைக்கிராமப் பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமிக்கும் ஃபெல்லோஷிப். இப்படி ஏகப்பட்டது இருக்கிறது. இதெல்லாம் விதைத் திட்டம் அளவுக்குப் பேசப்படுவதில்லை. விதைத் திட்டம் தோல்வி காண இயலாத சூத்திரம் உடையது.
முறையான வழிகாட்டலுடன் கல்வி பயிலும் மாணவர்கள் வேலையில் சேர்ந்து பொருளாதாரத் தன்னிறைவு பெறுவது தமிழ்நாட்டுச் சூழலில் முற்றிலும் சாத்தியமானது. சூப்பராகப் படிக்கும் மாணவர்கள், சுமாராகப் படிக்கும் மாணவர்கள் என கலந்துகட்டி இருந்தாலும் குறிப்பிட்ட சதவிகித மாணவர்களின் வெற்றி மற்றவர்களை உந்தித் தள்ள ஊக்கம் கொடுக்கிறது. நம்மைப் போன்ற ஒருவர் பெறும் வெற்றியை நாமும் பெற இயலும் என்கிற உத்வேகம் கொடுக்கிறது. நம்மைப் போன்றவர் என்பதே பொதுச்சமூகம் அதைத் தங்கள் வெற்றியாக பாவித்துக் கொண்டாடவும் வழி கோலுகிறது.
இந்தக் கொண்டாட்டத்தில் ஏதோ விதத்தில் தங்களை இணைத்துக்கொள்ள முயல்கின்றனர் மக்கள். அகரம் அலுவலகத்திற்கு உதவி கேட்டு கிராமத்தில் இருந்து வரும் மாணவர்களையும் பெற்றோர்களையும் அழைத்துவரும் சில ஆட்டோக்காரர்கள் அவர்களிடம் பணம் வாங்குவதில்லை. அகரம் ஆண்டு விழா மேடையில் கார்த்தி ஒரு நிகழ்வைக் குறிப்பிட்டார். குக்கிராமங்களில் உள்ள மாணவர்களின் வீடுகளுக்குச் செல்லும் தன்னார்வலர்கள் அங்கிருக்கும் சமூக ஆர்வமுடையவர்களிடம் உதவி கேட்டு இரு சக்கர வாகனங்களை கடன் வாங்கிச் செல்வது வழக்கம். பேருந்து வசதி குறைவாக இருக்கும் பகுதிகளுக்கே அவர்கள் செல்வார்கள் என்பதால் இந்த ஏற்பாடு. அப்படி வருடாவருடம் வாகனம் கடன் கொடுக்கும் ஒருவர் தனக்குக் கல்யாணம் நடக்கும் நாளிலும் கிளம்பி வந்து வண்டியைக் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார். சில ஆண்டுகள் கழித்து கார்த்தி தன்னை மேடையில் குறிப்பிட்டுப் பேசுவார் என்பதற்காக அவர் அதைச் செய்யவில்லை. இந்த உதவியால் யாரோ ஓர் ஏழை கல்வி பெறப்போகிறார் என்பதற்காகவே அதைச் செய்கிறார்.
தமிழ்நாட்டு மக்களின் இயல்பு, உணர்ச்சிவசப்படுதல் மட்டுமல்ல, இந்த அறவுணர்வும்தான். அகரம் மாணவர்கள் பேசிய காணொளித் துணுக்குகள் வைரல் ஆனது அதனால்தான்.
தன்னார்வலர்கள், கல்லூரி நிறுவனங்கள், பயிற்றுநர்கள், ஆலோசகர்கள், பஞ்சாயத்துத் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், ஆசிரியர்கள் என ஊர் கூடி இழுத்த தேர் இது. அகரம் அமைப்பை நிர்வகிக்கும் ஜெயஸ்ரீ, இயக்குநர் ஞானவேல், சூர்யா, கார்த்தி ஆகியோர் இதைத் தங்கள் நேர்காணல்களில் வலியுறுத்தினாலும் தமிழ்நாட்டுக் குலவழக்கப்படி இதைத் தனிமனித சாதனையாகவே பார்க்கிறார்கள் பலர். மாறாக சமூகப் புரிதலுடன் வழிநடத்தப்படும் இயக்கம் கொண்டுவரும் மாற்றம் ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டும். அகரத்தில் உதவி பெறும் பெண்களில் பலர் கல்யாணம், குழந்தை என்று வேலையைக் கைவிட்டுப்போகிறார்கள் எனத் தெரிந்தும் பிடிவாதமாக அதிகளவில் பெண்களுக்கு வாய்ப்பளிக்கிறது அகரம். அதன் பலன் என்ன என்பதை இருபத்தைந்தாவது ஆண்டுவிழாவில் ஒருவேளை நாம் அறியலாம்.
அரசு இயந்திரம் எத்தனை பெரியதாக இருந்தாலும் கடைக்கோடி குடிமக்கள் அனைவரையும் எட்டுவது அவ்வளவு எளிதல்ல. அரசு சாரா அமைப்புகளின் தேவை எப்போதும் இருக்கத்தான் செய்யும். அரசு இயந்திரத்தின் நீட்சியாக அரசு, தொண்டு நிறுவனங்களைப் பல நேரங்களில் பயன்படுத்துகிறது. தெருவோரச் சிறுவர்களுக்கு உதவும் அமைப்பு காப்பகம் நடத்த அரசு இடம் கொடுக்கும். எய்ட்ஸ் விழிப்புணர்வை மேற்கொள்ளும் தொண்டு நிறுவனத்துக்கு தேவையான மருந்துபொருள்களை அரசு இலவசமாக அளிக்கும். மலை மேலே ஐந்து பேர் படிக்கும் கிராமப்பள்ளிக்கு ஒரு தொண்டு நிறுவனம் ஆசிரியர்களை அனுப்ப முடியும் என்றால் பாதி சம்பளம் கொடுக்கிறோம் என அரசு முன்வரும். இந்த முயற்சிகளை முன்மாதிரியாகக் கொண்டு முழு மாநிலத்துக்குமான திட்டமாக, கொள்கையாக வேறு வடிவத்திலும் அரசாங்கங்கள் செயல்படுத்தும்.
அகரம் அமைப்பின் வெற்றி அதன் மாணவர்கள் நன்றாகச் சம்பாதித்து வீடு கட்டுவது மட்டுமல்ல, மீண்டும் அகரம் அமைப்போடு இணைந்தோ வேறு வகையிலோ இந்தச் சமூகத்துக்குத் தன்னாலானதைச் செய்வதும்தான். சமூகநீதி, அறவுணர்வு, சரியான வழிகாட்டல் கிடைக்கும் மாணவர்களால் விளையும் ஆக்கப்பூர்வமான மாற்றங்கள், மாணவர்களைத் தேர்ந்தெடுக்கவென அகரம் பின்பற்றும் சிஸ்டம், இவ்விரண்டும் அரசாங்கம் கவனம் கொடுத்து சிந்திக்கவேண்டியவை. லைக், ஷேர் உடன் நிறுத்திவிடாது, அறிவார்ந்த சமூகம் செய்வதற்கு எவ்வளவோ இருக்கிறது.
*
26/08/2025 அன்று மெட்ராஸ் பேப்பரில் பதிப்பிக்கப்பட்ட கட்டுரை.
