மக்களுக்குக் குறைந்த விலையில் ஜெனிரிக் மருந்துகளை விற்பனை செய்யும் முதல்வர் மருந்தகங்களைத் திறந்துள்ளது தமிழ்நாடு அரசு. இதன் மூலம் மக்களின் மாதாந்திர செலவில் கணிசமாக மிச்சமாகும்.
உலகளாவிய மருந்துச் சந்தையில் இந்தியா பதிமூன்று சதவிகிதத்தைக் கொண்டுள்ளது. இதன் தொடக்கம் 1970ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி கொண்டுவந்த காப்புரிமைச் சட்டம். இதன்படி மருந்துப் பொருள்களுக்குக் காப்புரிமை வாங்க முடியாது. அதை உருவாக்கும் செய்முறை மட்டுமே காப்புரிமை விதியின் கீழ் வரும். எனவே செய்முறையில் சிறிய மாறுதலைச் செய்து புதிய காப்புரிமையுடன் ஏராளமான நிறுவனங்கள் மருந்துகளைத் தயாரிக்க ஆரம்பித்தன.
போட்டியின் காரணமாக விலையையும் குறைத்தே வைக்கவேண்டியிருந்தது. மருந்து நிறுவனம் மருந்துக்குக் காப்புரிமை பெற்று குறிப்பிட்ட சில ஆண்டுகள் கடந்த பிறகு அதை யார் வேண்டுமானாலும் தயாரிக்கலாம் என எண்பதுகளில் அமெரிக்கா சட்டம் கொண்டுவந்தது. எனினும் உலகளவில் யார் முதலில் கண்டுபிடித்தது எனும் காப்புரிமையே செல்லுபடியாகும் என்பதைப் போன்ற பல உலகளாவிய விதிகளை தொண்ணூறுகளின் தாராளமயமாக்கல் கொள்கையால் இந்தியாவும் ஏற்கவேண்டி வந்தது. இதனால் உண்டான பின்னடைவை நிறைய மருத்துவ ஆய்வுகளை ஊக்குவித்தும் பல சட்டத்திருத்தங்கள் மூலமும் சரிசெய்தது இந்தியா. இத்தொடர் முயற்சிகளின் காரணமாக மருந்துச் சந்தை வளர்ச்சி பெற்றாலும் ஏழை மக்கள் அனைவருக்கும் மருத்துவம் போய்ச் சேர்வதில் சிக்கல் இருக்கத்தான் செய்கிறது.
2006 – 2011 காலகட்டத்தில் தமிழ்நாட்டில் கூட்டுறவுத் துறையின் கீழ் குறைந்த விலையில் மருந்துகள் விற்பனை செய்ய முயற்சி எடுக்கப்பட்டது. 2008ஆம் ஆண்டு மத்திய அரசும் கிட்டத்தட்ட இருநூறு மக்கள் மருந்தகங்களைத் திறந்தது. 2014ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் திறக்கப்பட்ட அம்மா மருந்தகங்களும் இதே நோக்கம் கொண்டதே. நூறுகளில் திறக்கப்பட்ட கடைகள் பெரிய மாற்றம் எதையும் உண்டாக்காத நிலையில் பிரதமர் மோடி அரசில் 2016க்குப் பிறகு இதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. தற்போது சுமார் பத்தாயிரம் மக்கள் மருந்தகங்கள் நாடு முழுக்க உள்ளன.
ஜெனிரிக் மருந்து என்பது காப்புரிமை வைத்திருக்கும் நிறுவனங்கள் தயாரிக்கும் அதே மருந்துதான். அந்த மருந்தின் சேர்மானங்களில் நிறுவனத்தைப் பொறுத்து சுவைக்கும் நிறத்துக்கும்கூட கூடுதலாகச் சிலது இருக்கும். அவற்றைத் தவிர்த்து நோய் தீர்க்க அத்தியாவசியமான மருந்து சேர்மானங்களை மட்டுமே வைத்து ஜெனிரிக் மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. ஏற்கெனவே இருப்பதைத் தயாரிப்பதால், காப்புரிமை பெறுவதற்காக நிறுவனங்கள் மேற்கொண்ட ஆய்வுகள் கிடையாது. பிரான்ட் பெயருக்காகச் செய்யவேண்டிய செலவுகள் கிடையாது. அதன் காரணமாகவே குறைந்த விலையில் கிடைக்கின்றன.
அரசின் முயற்சிகள் மட்டுமே மக்கள் பயனடையப் போதுமானதல்ல. மருத்துவர்கள் தங்கள் நோயாளிகளுக்கு இதைப் பரிந்துரைத்தால் மட்டுமே இத்திட்டம் முழு வெற்றிபெறும். தனியார் நிறுவனங்களால் தங்களுக்குக் கிடைக்கும் பலன்களுக்காக ஜெனிரிக் மருந்துகளைப் பரிந்துரைப்பதைச் சிலர் தவிர்ப்பர். பிரபலமில்லாத, விலை குறைவான மருந்தின் நம்பகத்தன்மை மீது எழும் சந்தேகத்தால் தங்கள் நோயாளிகளின் நலன் கருதியும் சில மருத்துவர்கள் ஜெனிரிக் மருந்துகளைப் பரிந்துரைக்கத் தயங்குவர்.
மக்கள் மருந்தகத்தை பிரபலமாக்கும் பொருட்டு மத்திய அரசு, மருத்துவர்கள் ஜெனிரிக் மருந்துகளை நோயாளிகளுக்கு எழுதிக் கொடுக்க வலியுறுத்துகிறது. இந்திய மருத்துவச் சங்கம், அப்புறம் எதற்குக் காப்புரிமை என்று ஒன்றைக் கொடுக்கிறீர்கள் என இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. அரசு மருத்துவர்களின் பரிந்துரையினால் மட்டுமே பெருவாரியான மக்கள் பலன் பெறுவர்.
தற்போது தமிழ்நாட்டில் திறக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகம் முந்தைய மற்ற திட்டங்களில் இருந்து வேறுபட்டது. மேம்பட்டது. மருந்துகளுடன் சர்ஜிகல் பொருள்கள், தைலம், சோப்பு, குழந்தை உணவு உள்ளிட்ட துறை சார்ந்த பொருள்களும் விற்பனை செய்யப்போகிறார்கள். விலையும், மத்திய மருந்தகங்களை விடக் குறைவு. மத்திய அரசின் மருந்தகங்களைப் போல வெளியில் இருந்து வாங்க அனுமதிக்காமல் மருத்துவப் பணிகள் கழகத்தின் மூலமாகவே மொத்தமாகக் கொள்முதல் செய்யப்படவுள்ளது. ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யவும் மாவட்டம்தோறும் கிடங்குகள் அமைக்கவும் வாய்ப்புள்ளது.
இப்போதைக்கு ஆயிரம் கடைகளைத் திறந்துள்ளார்கள். மருந்தியல் படித்தவர்களிடமிருந்து இரண்டாயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. தனிநபர்களுக்கும், கூட்டுறவு சங்கங்களுக்கு கடை திறக்க கடன் உதவி செய்கிறது அரசு. நேரடியாக வேலைவாய்ப்பு பெறும் இந்த இளைஞர்களோடு மறைமுகமாக கோடிக்கணக்கான மக்கள் பயன்பெறக்கூடும். இம்மாதிரி திட்டங்களில் வெளிப்படைத் தன்மையைப் பின்பற்றி முறைகேடுகளைத் தவிர்ப்பது முதன்மையானது. ஐஎம்ஏ கூறுவது போல மத்திய, மாநில அரசுகள் தரத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கவேண்டும்.
அரசியல் கட்சிகள் மக்களைச் சுரண்டுவதில் காட்டும் போட்டிப் பிணிக்கு மருந்தாகத் திட்டங்கள் தீட்டுவதில் காட்டும்போது உள்ளபடியே மகிழ்ச்சிதான்.
*
26/12/2025 அன்று மெட்ராஸ் பேப்பரில் பதிப்பிக்கப்பட்ட கட்டுரை.
