புதன்கிழமை இரவு. மும்பை தாஜ் ஹோட்டல். அதானி வழக்கமாகச் செல்லும் வெதர் க்ராப்ட் ஐந்து நட்சத்திர உணவகம். துபாய்த் துறைமுகத் தலைமை அதிகாரியுடன் வேலை தொடர்பான சந்திப்பு இருந்தது அதானிக்கு. இரவு உணவும், அலுவல் சந்திப்பும் முடிந்தவுடன் பணம் செலுத்திவிட்டுக் கிளம்பினார் அதானி. நண்பர்கள் சற்று நேரம் இருக்கலாம் எனச் சொன்னார்கள். அவர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். கீழே தரைத்தளத்தில் துப்பாக்கிச் சத்தம். 26/11 தீவிரவாதத் தாக்குதல் அது. இரவு உணவுக்குப் பின் தாமதிக்காமல் கீழே சென்றிருந்தால் அதானியும் அந்தத் துப்பாக்கிச் சூட்டில் சிக்கியிருப்பார்.
பின்னர் ஓட்டல் பணியாளர்கள் அங்கிருந்த நூற்றுக்கும் மேற்பட்டோரைப் பாதுகாப்பாக மறைத்து வைத்தனர். மறுநாள் காலை காவல் துறையினரால் அனைவரும் மீட்கப்பட்டனர். இதற்குப் பத்தாண்டுகளுக்கு முன்பு பணத்துக்காக கடத்தப்பட்டு மீண்டு வந்தார். 2023 ஜனவரியில், ஹின்டன்பர்க் அறிக்கை வந்த போது இந்தக் கண்டத்திலிருந்தும் அதானி மீள்வார் என நம்பினார்கள் தேசபக்தர்கள். அந்த நம்பிக்கைக்கு முகாந்திரம் இருக்கிறது. இப்படி அதானி குழுமத்திற்கு எதிராகச் செய்திகள் வருவது இது முதன்முறை அல்ல. எல்லாவற்றையும் ஊதித்தள்ளிவிட்டு முன்னேறியதுதான் அதானியின் கடந்தகால ஹிஸ்டரி.
டெல்லி போலீஸில் இருபதாண்டுகளுக்கு முன் கொடுக்கப்பட்ட புகார் கைது வரை சென்று பிறகு சமரசமானது. பங்கு வாங்கி விற்றதில் நடைபெற்ற முறைகேடு காரணமாக சீரியஸ் ஃப்ராட் இன்வெஸ்ட்டிகேஷன் ஆபிஸ் மூலம் சார்ஜ் ஷீட் பதிவானது. பசுமை விதிகளை மீறிய குற்றத்துக்காக காங்கிரஸ் அரசால் இருநூறு கோடி அபராதம் விதிக்கப்பட்டு பின்னர் மோடி அரசால் தள்ளுபடி செய்யப்பட்டது.
அதானியின் ஆஸ்திரேலியா நிலக்கரிச் சுரங்கத்தின் சுற்றுச்சூழல் ஆபத்துகளால் பெரியளவில் அந்நாட்டில் எதிர்ப்பு எழுந்தது. ஸ்டாப் அதானி எனும் ஹாஷ்டேக் ட்ரெண்டானது. போராட்டங்கள் வெடித்தன. அதானி பின்வாங்கவில்லை. இப்போதும் அங்கிருந்து இந்தியாவுக்கு நிலக்கரி வருகிறது. அண்டை நாடான இலங்கையில்கூட மோடி அதானிக்காகச் சட்டத்தை மாற்றச் சொன்னார் என செய்தி வெளியாகி அங்கும் ஸ்டாப் அதானி ட்ரெண்டானது. அவரை நிறுத்தத்தான் முடியவில்லை.
பொருளாதாரப் புலனாய்வுப் பத்திரிகைகளும், ஆய்வு நிறுவனங்களும் இந்த செங்குத்தான முன்னேற்றத்தைப் பற்றிச் செய்திகள் வெளியிட்டுக் கொண்டுதான் இருந்தன. 2022 ஆகஸ்ட்டில் வெளியான கிரெடிட்சைட்ஸ் ஆய்வறிக்கை அதானி நிறுவனம் ஆழமாக மிகைப்படுத்தப் பட்டிருப்பதாக எச்சரித்தது. பெரிய கடன்பொறிக்குள் மாட்டிக் கொள்ளக்கூடும் எனச் சுட்டிக்காட்டியது. இவற்றில் இருந்தெல்லாம் தப்பித்தார் அதானி. எல்லாவற்றுக்கும் ‘நண்பேன்டா’ எனத் துணை நின்றார் மோடி.
இப்படிச் செய்திகள் வரும்போது பங்குகள் விலை சற்றே குறையும். ‘வீழ்வது போல் வீழ்வேன் நானும் என் எதிரிகள் சுகம் காண’ எனும் பாடலைப் போல. சில வாரங்களில் ‘கலக்கப்போவது யாரு’ எனப் பங்குகள் விலை திரும்பப் பலமடங்கு உயரும்.
ஆய்வு நிறுவனங்கள் மட்டுமல்ல, சந்தையைக் கவனிக்கும் சாமானியர்கள்கூடத் தாறுமாறான பிஈ ரேஷியோ உடைய அதானி குழுமப் பங்குகளின் ஆபத்தைப் பற்றி எச்சரிக்கை செய்து கொண்டேதான் இருந்தனர். பிரைஸ் எர்னிங் ரேஷியோ என்பது எவ்வளவு முதலீட்டுக்கு எவ்வளவு வருமானம் எனும் விகிதக் கணக்கு. வங்கி முதலீடுகளில் நூறு ரூபாய் முதலீடு செய்தால் எட்டு ரூபாய் வட்டிதான் கிடைக்கும். நூறை எட்டால் வகுத்தால் வரும் 13 வங்கி முதலீட்டின் பிஈ ரேஷியோ. பங்கு சந்தை என்பது கொஞ்சம் அபாயம் உள்ள ஆனால் அதிகம் வருவாய் தரக்கூடிய இடம். எனவே இங்கே பிஈ ரேஷியோ சற்று அதிகம் இருப்பது சகஜம்தான். விப்ரோ 19, டிசிஎஸ் 31, ரிலையன்ஸ் 23 என இந்த பிஈ ரேஷியோ, நிறுவனத்தைப் பொறுத்து மாறும். முப்பதைத் தாண்டினாலே கொஞ்சம் ஆபத்தான முதலீடுதான். அதானி குழுமங்களின் ரேஷியோ இருநூறு முந்நூறு என மிகப் பெரிதாக இருந்தன. அதானி கிரீன் எனர்ஜி நானூறைத் தாண்டியும் அதானி கேஸ், அறுநூறைத் தாண்டியும் இருந்தன. மிக அபாயமான பங்கு முதலீடுகள் என்பதன் அறிகுறிகள்தான் அவை.
இது எப்படிச் சாத்தியமானது? செபி அதிகபட்சம் 75 சதவீதம் வரை குடும்ப உறுப்பினர்கள் பங்குகளை வைத்திருக்கலாம் எனச் சொன்னால் அந்த விதியை பயன்படுத்தி 74.5 சதவீதம் வரை தங்கள் குடும்பத்தினர் பெயரில் நிறுவனப் பங்களுகளை வைத்திருந்தனர் எனவும் சிலவற்றில் இது சற்றே அதிகம் இருந்தது எனவும் சொல்கிறது ஹின்டன்பர்க் அறிக்கை. துப்பாக்கி படத்தில் பன்னிரண்டு பேரும் ஒரே நேரத்தில் சுடுவது போல ஒரே தேதியில் ஒரே கணினியில் பல போலி நிறுவனங்களை உருவாக்கியுள்ளனர். துபாய் குறுக்கு சந்து மாதிரி எல்லாமே கிட்டத்தட்ட ஒரே ஏரியா முகவரி. சட்டதிட்டங்கள் ஏதுவாக இருக்கும் மொரிஷியஸ் நாட்டு முகவரிதான் பல நிறுவனங்களுக்கு. இங்கு அதானி குழுமங்கள் மூலம் பணத்தை டிரஸ்ட் வழியாக மொரிஷியஸ் அனுப்பி அங்கு போலிக் கம்பெனிகளை ஆரம்பித்து அதை தங்கள் குடும்ப உறுப்பினர்களே நிர்வாகம் செய்து, திரும்ப இந்தியாவில் அதானி கம்பெனிகளில் முதலீடு செய்து பங்கு விலைகளை உயர்த்தி இருக்கிறார்கள் என்கிறது ஹின்டன்பர்க்.
கடன் வாங்கிய பணத்தைக் கொண்டு தொழில் செய்திருந்தாலே லாபம் கிடைத்திருக்கும். எதற்குப் பணத்தை இப்படி இங்கிருந்து அங்கே, அங்கிருந்து இங்கே என மாற்றி மாற்றி அனுப்ப வேண்டும். பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்தால் உலகப் பணக்காரர் ஆவது எப்படி? உலகப் பணக்காரர் ஆனால்தான் இன்னும் நிறையக் கடன் வாங்கலாம். இன்னும் நிறைய நிறுவனங்களை வாங்கி உலகின் நம்பர் ஒன் ஆகலாம். இங்கே மக்கள் பெட்ரோல் போடக் காசு இல்லாமல் திண்டாடினாலும் அதானியின் புகழை வைத்து இந்தியா வல்லரசாகிவிட்டது எனக் கோஷம் போடலாம். இந்தியா ஒளிர்கிறது என நம்பவைக்க எல்லாரும் முன்னேற வேண்டாம், ஒற்றை மனிதர் முன்னேறினாலே போதும் என முடிவு செய்துவிட்டார்கள் போல. யாராவது ஒப்புக்கொள்ளவில்லை எனில் இருக்கவே இருக்கிறது தேசவிரோதிப் பட்டம். இதெல்லாம் யூகங்கள்தான். குற்றச்சாட்டுகள்தான். விசாரணை நடைபெற்று விடைகள் கிடைக்கும் நாளை எதிர்பார்த்துக் காத்திருப்பது ஒன்றுதான் பொதுஜனம் செய்யக்கூடியது.
இரண்டாண்டுகள் உழைப்பில் ஆதாரங்களைத் திரட்டி, ஹின்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை அதானியின் கோட்டையை அசைத்துவிட்டது உண்மை. அதானி அசரவில்லை. ஃபாலோ அப் பப்ளிக் ஆஃபரிங் மூலம் மேலும் பல்லாயிரம் கோடியைத் திரட்ட முனைந்த நேரம். அறிக்கைக்கு பயந்து அதானி, ஃஎப்பிஓ விலையைக் குறைப்பார்கள் என்றார்கள். அவர் பின்வாங்கவில்லை. வழக்கம் போல வரவேண்டிய இடத்தில் இருந்து உதவி வந்தது. எல்ஐசி மேலும் முந்நூறு கோடிகளை முதலீடு செய்யப்போவதாகத் தகவல் வந்தது. சில்லறை முதலீட்டாளர்கள் எல்லாம் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தனர். ஜேஎஸ்டபிள்யூ சஜ்ஜன் ஜின்டாலும், பாரதி ஏர்டெல் சுனில் மிட்டலும் கடைசி நேரத்தில் தங்கள் சொந்தப் பணத்தில் இருந்து முதலீடு செய்தனர். FPO நிதிதிரட்டல் வெற்றி என்றார்கள். எல்லாக் குழும நிறுவனங்களையும் சரிவில் இருந்து நிறுத்த முடியாவிட்டாலும் சிலவற்றில் மட்டும், பணத்தைக் கொட்டி சரிவைத் தடுக்கப் பார்த்தார்கள்.
செத்துப்போனவனுக்குக் குளுக்கோஸ் ஏற்றுவது போல எல்லாம் வீணானது. இந்த பணம் திரட்டல் வெற்றிகரமாக முடிந்த தோற்றம் காண்பித்தாலும் பயன் இல்லை என்பதால் அதானி, ஃஎப்பிஓவை ரத்து செய்தார். இந்தியாவின் முதல் மெகா ஃஎப்பிஓ எனச் சொல்லப்பட்டு பிறகு இந்தியாவின் முதல் திரும்பப் பெறப்பட்ட ஃஎப்பிஓ எனவும் வரலாற்றில் பதிவானது.
மூன்று ட்ரேடிங் நாள்கள்தான். உலகப் பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருந்த அதானி, போக வழியில்லாத முட்டுச் சந்தில் மாட்டிக்கொண்டார். அவர் நண்பரின் அதிகாரத்தைத் தாண்டியும் சனிப்பெயர்ச்சி பலன், அதானிக்குச் சிறப்பாக வேலை செய்தது.
தளபதி படத்தின் தேவா, சூர்யா நட்புக்குப் பிறகு அதிகம் மேற்கோள் காட்டப்பட்டது மோடி, அதானி நட்புதான். இது மோடி குஜராத் முதல்வரான காலத்தில் தொடங்கியது. கெளதம் சாந்திலால் அதானியின் பூர்வீகம் வடக்கு குஜராத்தின் தராட் பகுதி. வியாபாரத்துக்காகக் குடும்பம் அகமதாபாத்துக்குக் குடிபெயர்ந்தது. தந்தை சிறிய அளவில் துணி வியாபாரம் செய்தார். கெளதம், கல்லூரியில் வணிகவியல் படிப்பைப் பாதியிலேயே கைவிட்டார். வியாபாரம் செய்வதில் ஆர்வம் இருந்தது. மும்பை சென்று வைரத்தொழிலில் ஈடுபட்டதுதான் முதல் வியாபாரம்.
அதானியின் அண்ணன் குஜராத்தில் பிவிசி பைப் தொடர்பான தொழிலைத் தொடங்கினார். அதன் நிர்வாகத்தைக் கவனிக்க மும்பையில் இருந்து குஜராத் திரும்பினார் அதானி. ப்ளாஸ்டிக் மூலப்பொருள்கள் வெளிநாட்டில் இருந்து வந்தன. இதன் அடுத்த நிலையாக ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தை ஆரம்பித்தார் 1988-ல். ராஜீவ் காந்தி தராளமயமாக்கல் கொள்கைகளை அறிமுகப்படுத்திய காலக்கட்டம் அது. பிறகு வந்த பிரதமர் பிவி நரசிம்மராவ், நிதியமைச்சர் மன்மோகன் சிங் எடுத்த கொள்கை முடிவுகளும் அதானியின் ஆரம்பகால வளர்ச்சிக்குத் துணை புரிந்தன.
மோடிக்கு முன்பாக குஜராத் முதல்வராக இருந்த கேஷுபாய் பட்டேல் அதானியின் சீரான தொழில் முன்னேற்றத்திற்கு முக்கியமான காரணியாகிறார். குஜராத்தின் கடலோரப் பகுதியின் வளர்ச்சியில் கவனம் செலுத்தியவர் இவர். நிலக்கரி வியாபாரம், முந்த்ரா தனியார் துறைமுகம் என அதானியின் தொழில்கள் வளர்ந்தன. இரண்டாயிரமாவது ஆண்டில் சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்ட பன்னாட்டு நிறுவனமான வில்மருடன் கைகோர்த்தது.
கேஷுபாய்க்குப் பிறகு முதல்வரான மோடி, அதானியைத் தன்னுடன் உடனே சேர்த்துக் கொள்ளவில்லை. கேஷுபாய்க்கும் அதானிக்கும் இருந்த நெருக்கம்தான் தயக்கத்துக்குக் காரணம் என்கிறார்கள். உலக அரங்கில் இந்தியாவைத் தலைகுனிய வைத்த குஜராத் கலவரம் நடந்த காலக்கட்டம் அது. சிஐஐ எனப்படும் இந்தியத் தொழில் கூட்டமைப்பு சார்பாக நடந்த அமர்வில் இது குறித்து விவாதிக்கபட்டது. பஜாஜ், கோத்ரஜ் போன்றோர் நிச்சயமற்ற கலவரச் சூழல் குறித்து கவலை தெரிவித்தார்கள்.
இந்தச் சந்தர்ப்பத்தில் நிர்மா, கடிலா, ஆஷிமா போன்ற சில தொழிலதிபர்களும் அதானியும் இணைந்து போட்டித் தொழில் கூட்டமைப்பை தொடங்கி குஜராத்தைப் பற்றி தவறாகப் பேசுவதைக் கண்டித்தார்கள். பிறகு சிஐஐ மோடியிடம் மன்னிப்புக் கேட்டுச் சமாதானம் செய்து கொண்டது. அதன் பிறகு நடந்த வைப்ரண்ட் குஜராத் தொழில் முனைவு மாநாடு வெற்றிக்கும் துணைநின்றார் அதானி.
மோடி, அதானி கூட்டணி வளர்ச்சிக் கூட்டணியாக மாறியது. அதானியின் வளர்ச்சி குஜராத்தின் வளர்ச்சியாகவும், குஜராத்தின் வளர்ச்சி மோடியின் நிர்வாகத் திறமையாகவும் கட்டமைக்கப்பட்டது. சிஏஜி எனப்படும் இந்தியாவின் தலைமைக்கணக்காய்வு அமைப்பு பல விதி மீறல்களைச் சுட்டிக் காட்டியது. இதே நேரத்தில் ஃபிலடெல்பியாவில் வார்ட்டன் எகனாமிக் பாரம் ஆண்டுவிழாவில் எதிர்ப்பின் காரணமாக மோடியின் பேச்சு ரத்து செய்யப்பட்டது. இதுதான் காரணம் என வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் அந்நிகழ்வை ஸ்பான்ஸர் செய்வதில் இருந்து உடனடியாக விலகியது அதானி குழுமம். நண்பேன்டா என இறுகியது மோடி, அதானி உறவு.
மோடியின் அமோக ஆதரவுடன் பல புதிய தொழில்களில் கால்பதித்தது அதானி குழுமம். ஒரு திரைப்படத்தில் லாட்டரியில் ஜெயிக்கும் கவுண்டமணி அந்த வீடு, இந்தத் தெரு என எல்லாவற்றையும் விலை பேசுவார். கிட்டத்தட்ட அதுமாதிரி கதைதான். நிலக்கரி வியாபாரத்தில் இருந்து, அப்படியே ஓர் அனல் மின் நிலையம் ஆரம்பித்தார்கள். சுரங்கம், எண்ணெய்ச் சுத்திகரிப்புத் தொழிற்சாலை, உள்கட்டமைப்பு எனத் தொடர்புடைய தொழில்களில் எல்லாம் புதுப்புது நிறுவனங்களை உருவாக்கினார்கள். வருமானத்துக்கு ஏற்ற கடன் என்ற நிலை மாறி, பல மடங்கு அதிகளவு கடன்களை வாங்க ஆரம்பித்தது அதானி குழுமம். கேட்டவுன் கடன் கிடைக்கும், தொழில் அனுமதிக்காக விதிகள்கூடத் திருத்தப்படும் என்றால் யார்தான் சும்மா இருப்பார்கள்?
அடுத்து வந்த பிரதமர் தேர்தலிலும் இந்தக் கூட்டணி சேர்ந்தே வேலை செய்தது. பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மோடி, அதானியின் தனியார் விமானத்தை பயன்படுத்தியது குறித்துச் சர்ச்சையானது. மோடி 2014-ல் பிரதமரான பின் அதானியின் வளர்ச்சி ஜெட் வேகத்தைத் தாண்டியது. எட்டு ஆண்டுகளில் அதானி எட்டிய உயரம் மிக அதிகம். அதிலும் 2021, 2022, இந்த ஈராண்டுகளில் இவர்கள் கால்பதிக்காத துறையே இல்லை என்றானது. லயன்கிங் படத்தில் முஃபாஸா தன் மகன் சிம்பாவிடம் கண்ணுக்கெட்டிய வரை எல்லாம் நம்முடையதுதான் என்பதுபோல, பசுமை ஆற்றல், உணவுத்துறை, உள்கட்டமைப்பு, செய்தித்துறை என தொடர்புடைய, தொடர்பில்லாத எல்லா இடங்களிலும் அதானியின் சாம்ராஜ்யம் விரிந்தது. புதிதாகத் தொடங்குவது அல்லது பழையதை வாங்கிப் போடுவது என வேலைகள் வேகமாக நடந்தன.
கோவிட் பெருந்தொற்று காரணமாக நாட்டு மக்கள் வேலையும் பணமும் இன்றி முடங்கினார்கள். அதானிகளும் அம்பானிகளும் இந்த நேரத்தில் நல்ல லாபம் பார்த்துத் தங்கள் சொத்து மதிப்பை உயர்த்திக் கொண்டிருந்தார்கள். அதிலும், அதானியின் சொத்து மதிப்பு கோவிட் இறப்புக் கணக்கைவிட வேகமாக உயர்ந்தது. ஆயிரமாயிரம் கோடிகள் உயர்வதாகச் செய்திகள் வந்தன. பிறகு ஐந்து லட்சம் கோடிகள், பத்து லட்சம் கோடிகள் என்றார்கள். பூஜ்ஜியங்களை மக்கள் எண்ணிக் கொண்டிருக்கையில் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார் அதானி. இதோ இரண்டாவது இடத்தை நோக்கிச் செல்கிறார், முதலிடம் பிடித்த முதல் இந்தியர் ஆவார் என்றெல்லாம் கனவு கண்டார்கள் தேசபக்தர்கள். அந்தக் கனவில் 88 கேள்விகளை அள்ளிப் போட்டு காலி செய்தது ஹின்டன்பர்க் அறிக்கை.
இதோடு அதானியின் கதை முடிந்தது என்றொல்லாம் சொல்ல முடியாது. மதிப்பு சரிந்து நட்டமானாலும் அதானிக்குப் பெரிய பாதிப்பிருக்காது என்கிறார்கள் வல்லுநர்கள். சிஸ்டமேட்டிக் முறைகேடுகள் நடந்ததா என்பதை மட்டும்தான் செபி விசாரிக்கும் என சொல்லப்பட்டுள்ளது. 85 சதவீதம் அதிகம் உயர்த்தப்பட்ட பங்குகள் இயல்பு விலைக்கு வரும். அறிக்கைக்குப் பிறகான திங்கட்கிழமை நிலவரப்படி, அதானி போர்ட் சரிவு நின்றுவிட்டது. இந்தியாவைப் பொறுத்தவரை ஷார்ட் செல்லிங்குக்குக் கட்டுப்பாடுகள் இருக்கிறது. நேக்கட் செல்லிங் எனப்படும் கையில் பங்கு இல்லாமலே விற்பதும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் இந்த நிலைப்பாடுகள் அதானிக்குச் சாதகமானதுதான்.
அதானி பங்குகள் மட்டுமின்றி இதன் காரணமாக, மொத்த இந்தியப் பங்கு சந்தையும் குறிப்பிடத்தக்க அளவு சரிந்தது. இத்தனைக்கும் ஐடி பங்குகள் நன்றாகச் செயலாற்றி சந்தையைத் தூக்கி நிறுத்த முயன்றன. Too big to fail என்றொரு கோட்பாடு உண்டு. அதானி போன்ற நாடு முழுக்கப் பல துறைகளில் செயல்படும் பெரிய நிறுவனங்களின் வீழ்ச்சி இந்தியாவின் கடைக்கோடி மனிதனுக்கும் கேடாக முடியலாம். எனவே அதைத் தடுக்க அனைவருமே முயல்வார்கள். இன்னும் அந்த நிலையை எட்டவில்லை என அரசுத் தரப்பில் சொல்லப்படுகிறது. அதானியில் முதலீடு செய்திருந்தால் பரவாயில்லை. முதலீடு செய்யாத நான் ஏன் நடுராத்திரியில் சுடுகாட்டுக்குச் செல்ல வேண்டும் என்றெல்லாம் கேட்க முடியாது. யாரோ சேர்த்த கருப்புப் பணத்தை ஒழிக்க, பணமதிப்பிழப்பின் போது, வரிசையில் நின்று உயிரை விட்டவர்களை நினைவுகூரும் தருணம் இது.
அதானி கம்பெனி கணக்கில் இருக்கும் கடன்கள் வாராக்கடன் பட்டியலில் சேரும். அரசு கடன் தள்ளுபடி செய்தாலும் ஆச்சர்யம் இல்லை. இவர்களுக்குக் கடன் கொடுத்த வங்கிகள், முதலீடு செய்த பொதுத்துறை நிறுவனங்கள், அதானி குடும்ப உறுப்பினர்கள் வைத்திருந்த 75 சதவீதம் போக மீதம் பங்குளை வைத்திருந்தவர்கள், அதானி குழுமங்களில் பணியில் இருந்தவர்கள் எனப் பலர் பாதிக்கப்படுவார்கள். இதெல்லாம் மறைமுகப் பாதிப்புக் கணக்கில்தான் வரும். நேரிடையாகப் பாதித்தாலே மக்கள் மறந்துவிடுவார்கள். இதெல்லாம் அதானியால் ஏற்பட்ட பாதிப்புக் கணக்கிலேயே வராமல் போகும். ‘வட போச்சே’ என உலகப் பணக்காரர் பட்டியலின் முதலிடக் கனவு போய்விட்டது. எனினும், இந்தியக் கோடீஸ்வரராகத் தொடர்வார் அதானி. ‘பாரத் மாதா கி ஜெ’ சொல்லிக் கொண்டு அடுத்த பரபரப்பு செய்திக்குத் தாவி விடுவார்கள் மக்கள்.
ஹர்ஷத் மேத்தாவின் முறைகேடுகள் வெளியான போது செபி அமைப்பு பங்குச் சந்தை முதலீட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் என்றார்கள். இனி இப்படி நடக்க வாய்ப்பே கிடையாது என்றார்கள். ஹின்டன்பர்க், அதானி முறைகேடுகளை கார்ப்பரேட் உலகின் ஆகப்பெரிய முறைகேடு என வர்ணிக்கிறது. ஆம் இதற்கு எண்ட் கார்டே கிடையாது. நீங்கள் நம்பவில்லை என்றாலும் அதுதான் நிஜம்.
09/02/2023 அன்று மெட்ராஸ் பேப்பரில் பதிப்பிக்கப்பட்ட கட்டுரை.
