அது வேறு வர்க்கம்

அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்றுள்ளார் டொனால்ட் டிரம்ப். அவர் அந்தப் பதவிக்கு வந்தது அமெரிக்காவுக்கு மட்டுமல்ல தங்கள் நாட்டுக்கும் நல்லது எனப் பல நாட்டு மக்கள் நினைக்கின்றனர். முக்கியமாக, பெரும்பான்மை இந்திய மக்களின் கருத்து அதுதானாம். சவுதி அரேபிய, ரஷ்ய நாட்டுப் பிரஜைகளும் இப்படியொரு நம்பிக்கையிலிருக்கிறார்கள் என்கிறது கருத்துக் கணிப்பு. 

பாம்பு பால் குடிப்பதாகக் கூடத்தான் மக்கள் நம்புகிறார்கள். அதுவல்ல விஷயம். டிரம்ப், அமெரிக்க நாட்டுக்கு மட்டும்தான் அதிபர் என்றாலும் அவர் எடுக்கும் முடிவுகள் உலக நாடுகள் அனைத்திலும் எதிரொலிக்கும். நல்லதோ கெட்டதோ ஏதோ ஒரு பாதிப்பை உண்டாக்கும். அதை ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்.

உக்ரைன், பாலஸ்தீன், சிரியா, ஆப்கனிஸ்தான் எனப் பல நாடுகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் அதிபரின் முடிவு ஆதிக்கம் செலுத்தும். போர்கள் தொடர்வதும் முடிவுக்கு வருவதும் எப்போதும் போல அமெரிக்க அதிபரின் ஆர்வத்தையொட்டித்தான். ஆனால், காலநிலை மாற்றங்களைச் சமாளிக்க மேற்கொள்ளும் ஆய்வுகளுக்கு நிதி கொடுப்பதில் டிரம்புக்கு ஆர்வம் இல்லை. உலகின் மொத்த எரிபொருள் பயன்பாட்டில் கிட்டத்தட்ட கால்பங்கு அமெரிக்காவினுடையது. வேறெந்த குப்பைகளைக் கணக்கிலெடுத்தாலும் அமெரிக்காதான் முதலிடத்தில். ஆனால் விளைவுகளுக்குப் பொறுப்பேற்க முடியாது என்கிற நிலைப்பாட்டினால் அதிக பாதிப்பை எதிர்கொள்ளப்போவது ஏழை நாடுகள்தான்.

உலகச் சுகாதார அமைப்பில் இருந்து விலகும் முடிவும் அமெரிக்கக் குடியுரிமைச் சட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வருவதும்கூட பல்வேறு நாடுகளில் மாற்றம் ஏற்படுத்தவல்லவை. ஆண், பெண் தவிர வேறு பாலினம் இல்லை என்றும் சொல்லியிருக்கிறார் டிரம்ப். பொதுவாகப் பாகுபாடுகளற்ற சமூகம் தேவை என்பதிலேயே எதிர்க்கருத்து கொண்டவர் டிரம்ப்.

சக மனிதரின் உரிமைகளை மதித்து வாழும் நவீன சிந்தனைக்கு உலகம் முழுவதிலுமே எதிர்ப்பு வலுக்கிறது. அதிகாரத்தில் இருப்பவர் பெண்ணாகவே இருந்தாலும் சம உரிமைகளுக்கு எதிராகப் பேசினால் பெரும்பான்மை ஆதரவு கிடைக்கிறது. கமலா ஹாரிஸ் தீவிர இடதுசாரிக் கொள்கையுடையவர் என்கிற பிரசாரம் அவர் தோற்றுப் போனதற்கான காரணங்களில் முதன்மையானது. முதலாளித்துவ நலன் காக்கும் அரசாங்கங்கள் அமைவதையே தொழிலதிபர்கள் விரும்புகிறார்கள். அதைப் பெரும்பான்மை மக்கள் விரும்பும்படி செய்யும் பொருளாதார வலுவும் அவர்களிடம் உள்ளது. அடிப்படைவாதக் கொள்கையுடையோர் அதிகாரத்தைக் கைப்பற்றுவதன் காரணம் அதுதான். 

அதிபர் பதவியேற்பு வைபவத்தில் அமெரிக்கத் தொழிலதிபர்கள் எலான் மஸ்க், பெஸோஸ் தொடங்கி இந்தியத் தொழிலதிபர்களான அம்பானிகள் வரைக்கும் கலந்துகொண்டனர். இவர்கள் வரிசையில் நின்று டிரம்பை வாழ்த்துவதும் கொண்டாடுவதும் சொல்லும் செய்தி ஒன்றுதான். டிரம்ப் வெற்றியும் எங்கள் வெற்றியும் வெவ்வேறல்ல என்பதுவே அது. மார்க் சக்கர்பெர்க் இன்னும் ஒரு படி மேலே சென்று ஆண்மை ஆற்றல் கோலோச்சும் உலகத்தை வரவேற்பதாகச் சொல்லியிருக்கிறார். 

பாலினச் சுதந்திரத்தையும் பெண்கள் முன்னேற்றத்தையும்விட அதிகமாக இவர்களைத் தொந்தரவு செய்வது, தமக்குக் கீழே வேலை செய்பவர்கள் கேட்கும் உரிமைகள்தான். பணம் வைத்திருக்கும் முதலாளி இடும் கட்டளைகளை நிறைவேற்றுவதே பணியாளரின் கடமை. சட்டம், நியாயம், உரிமை என்று குறுக்கே அரசாங்கங்கள் வரக்கூடாது. அதுதான் எதிர்பார்ப்பு. 

இவற்றால் பலனடைவது மிகச்சிறிய கும்பல். பாதிக்கப்படும் பெரும்பான்மை மக்கள் கவனம் எப்போதும் வேறெங்கோ இருக்கும். ஆணும் பெண்ணும் சமமா என்று சண்டையிட்டுக் கொண்டிருப்பார்கள். என் மதம் பெரிதா உன் மதம் பெரிதா எனப் போட்டியிடுவார்கள். ஆளப்பிறந்த சாதி என முட்டி மோதுவார்கள். அதிபர்கள் வெற்றி பெற ஸ்பெஷல் பூஜை செய்து பிரசாதத்தைத் தபாலில் அனுப்புவார்கள். எதிர்பார்ப்பது போலவே எதிர்வினையாற்றாமல் காரண காரியங்களை ஆராய்ந்து செயலாற்றப் பழகுவோம்.

22/01/2025 அன்று மெட்ராஸ் பேப்பரில் பதிப்பிக்கப்பட்ட கட்டுரை.