நீளமான நிபந்தனைப் பட்டியலைப் படித்துவிட்டேன் என ஒப்புக்கொள்வதுதான் தற்கால மனிதர்கள் சொல்லும் பொய்களில் முதன்மையானது. முன்னொரு காலத்தில் தேர்தல் அறிக்கைகளும் நிபந்தனைப் பட்டியல் போன்று யாரும் படிக்காத ஒன்றாகவே இருந்தன. கலர் டிவியை இலவசமாக அறிவித்த தேர்தலுக்குப் பிறகு வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் காரணியாகிவிட்டன தேர்தல் வாக்குறுதி அறிக்கைகள். 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலும் அதற்கு விதிவிலக்கல்ல. இவற்றில் இருக்கும் முக்கியமான ஒற்றுமை பெண்கள் முன்னேற்றம்.
வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டி தேர்தல் வாக்குறுதியாக வழங்கப்பட்டது ஊழல் என வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் வாக்குறுதிகளுக்கான நெறிமுறைகளை வகுத்தாலும் இதை ஊழல் இல்லை என்றே தீர்ப்பளித்தது. அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு, நிதி ஆதாரங்களுக்கான விளக்கங்களுடன் தேர்தல் வாக்குறுதிகள் இருக்கலாம் என்றது. எதிர்க்கட்சிகள் இலவச அறிவிப்புகளைத் தங்களால் இயன்றவரை இழிவுபடுத்தினார்கள். ஆனால் அடுத்த தேர்தலில் அவர்களும் முந்தைய அரசைவிட அதிகமாக வாக்குறுதி வழங்கினார்கள்.
தொடக்கத்தில் அதிக வாக்காளர்களை வாக்களிக்க வைக்கும் உத்தியாக இது இருந்தது. ஆனால் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நமக்கு இலவசம் உண்டு என்கிற நிலையில் இந்த வாக்குறுதிகள் வாக்கு எண்ணிக்கையில் எந்த மாறுதலையும் ஏற்படுத்தவில்லை.
நிறையக் கொடுப்பதாக வாக்குறுதி தருபவருக்கே மக்கள் ஓட்டுப்போடுவார்கள் என்பதும் உறுதியாகச் சொல்வதற்கில்லை. 2019ஆம் ஆண்டு நடந்த இந்திய நாடாளுமன்றப் பொதுத்தேர்தலையே எடுத்துக்கொள்வோம். பாஜக, ஆறாயிரம் ரூபாய் விவசாயிகளுக்கு அளிப்பதாகச் சொன்னது. காங்கிரஸ் முன்வைத்த திட்டமோ கிட்டத்தட்ட எழுபத்திரண்டாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றது. குறைவான தொகையைக் குறிப்பிட்டிருந்த பாஜகதான் வென்றது. எனவே, முறையற்ற போட்டியை உருவாக்குகிறது என்கிற குற்றச்சாட்டுக்கும் வலுவில்லை.
வழங்கப்படும் வாக்குறுதிகளில் எது நீண்டகால நோக்கில் நன்மையளிப்பது எனச் சீர்தூக்கிப் பார்த்து வாக்களிக்கும் பொறுப்பு மக்களிடமே உள்ளது. வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி சமூகத்தில் நேர்மறை மாற்றங்களை உருவாக்கியுள்ளது. பிகார், கோவா, ஹரியானா, கேரளா, தமிழ்நாடு ஆகிய ஐந்து மாநிலங்களில் நடத்தப்பட்ட ஆய்வொன்று பெண்கள் முன்னேற்றத்தில் தொலைக்காட்சி முக்கியமான காரணி என்கிறது. குடும்ப வன்முறை குறையவும் பெண்கள் உயர்கல்வி பயில்வது அதிகரிக்கவும் தொலைக்காட்சிப்பெட்டி உதவியதாகச் சொல்கிறது இந்த யேல் பல்கலைக்கழக ஆய்வறிக்கை.
தமிழ்நாட்டில் கல்விக்குக் கொடுக்கப்பட்ட சலுகைகள் ஏற்படுத்திய மாற்றம் உலகளவில் கவனம் ஈர்த்துள்ளது. மதிய உணவு, காலை உணவு, மடிக்கணினி, கல்வி உதவித் தொகை முதலிய பல்வேறு திட்டங்கள் மற்ற இந்திய மாநிலங்களில் அப்படியே நகலெடுக்கப்படுகின்றன. கல்விக்கான செலவு முதலீடுதான். பொறியியல் படிக்க அரசு உதவி பெறும் மாணவர் ஐந்தே ஆண்டுகளில் நிறைய சம்பாதித்து வரியின் வழியாக அரசுக்கு அதிகப் பலன் தருகிறார். நிறைய பொறியாளர்கள் உருவாக்குவதன் வழியாக பன்னாட்டு நிறுவனங்களை ஈர்த்து அதன் வழியாகவும் மாநிலம் வளர்ச்சியடைகிறது. கடந்த சில பத்தாண்டுகளில் தமிழ்நாட்டில் இதைக் கண்கூடாகப் பார்க்கிறோம்.
மகளிருக்கு விலையில்லாப் பேருந்துப் பயணம் ஏற்படுத்திய மாற்றங்கள் பற்றிப் பொதுவாக நல்ல கருத்தே உள்ளது. ஆனாலும் விரிவாக ஆய்வு செய்யப்படவேண்டும். தற்போதைய தேர்தல் வாக்குறுதிகளில் உரிமைத் தொகை எனப் பெயரிடப்பட்டு மகளிருக்கு வழங்கப்பட்ட தொகை உயர்த்தப்பட்டுள்ளது. பெண்களின் உழைப்பு பணமாக மதிப்பிடப்படுவதன் அவசியத்தை உணர்தவே இந்தப் பெயர். ஆனால் அந்தப் புரிதல் நிகழ்ந்ததா என்பது பற்றிய ஆய்வுகள் நடத்தபடவில்லை.
தொடங்கும்போது சரியான வழியில்தான் போகிறோம். ஆனால் நாளடைவில் நோக்கத்தில் இருந்து விலகி குறுகிய அரசியல் லாபங்களுக்கு இரையாகிவிடுகிறோம். இலவச மிக்சி, கிரைண்டர், இருசக்கர வாகனம் முதல் தற்போதைய எட்டாயிரம் ரூபாய் கூப்பன் அறிவிப்பு வரை எந்த ஆய்வின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன என்பதில் தெளிவு வேண்டும்.
தேர்தல் வாக்குறுதிகளில் பெண்களுக்குத் தனிக் கவனம் கொடுக்கப்படுகிறது. வீட்டு உபயோகப் பொருள்கள் எல்லாமே பெண்களுக்கானதாகவே கருதப்படுகின்றன. என்னமோ பெண்கள் மட்டுமே சட்னி அரைத்து ஒரு வாரம் குளிர்பதனப் பெட்டியில் வைத்துத் தனியாக உண்பதுபோல, இவற்றை யாரும் குடும்பத்துக்கு வழங்கியதெனக் கருதுவதில்லை. பத்திரிகைச் செய்தி ஒன்று மலட்டுத்தன்மை நீக்கும் சிகிச்சைக்கு வழங்கும் உதவி பெண்களுக்குப் பலன் தரும் என எழுதியிருந்தது. தவெக அறிவித்துள்ள அண்ணன் சீர் திட்டமெல்லாம் பிற்போக்குச் சிந்தனையின் வெளிப்பாடே. இதில் மாற்றம் உண்டாகப் பலன் பெறுபவர்களாக இருக்கும் பெண்கள் பலன்களை நிர்ணயிக்கும் அதிகாரத்திற்கு வரவேண்டும்.
தமிழ்நாட்டில் அரசியல் அதிகாரத்துக்குப் பெண்கள் பெருமளவில் வருவதற்கு இன்னும் காலம் கனியவில்லை என முதன்மைக் கட்சிகள் நினைக்கின்றன. 2026 தேர்தலில் திமுக 18, அதிமுக 20 என்கிற எண்ணிக்கையில் பெண் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர். வாரிசு அரசியல் முக்கியமான பேசுபொருளாக இருக்கும் தமிழ்நாட்டில் அரசியல்வாதிகளின் பெண் வாரிசுகள் களம் கண்டால்கூட இந்நிலை மாறும். வளர்ச்சி என்பது மெதுவாகவேனும் மேலே போகவேண்டியது. ஆமையைவிட மெதுவாகத் தமிழ்நாட்டில் பெண்களின் வளர்ச்சி இருக்கும் துறை என்றால் அது அரசியல்தான். போட்டி போட்டுக்கொண்டு பெண்கள் நலத்திட்டங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர் பட்டியலைப் பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. இவற்றில் நாம் தமிழர் கட்சி மட்டும் எப்போதும் சம அளவில் பெண் வேட்பாளர்களைக் களமிறக்கி வழிகாட்டுகிறது.
நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்த தன் நண்பனிடம் நீ நிறைய சம்பாதித்து ஐந்து கார் வாங்கினால் எனக்கு ஒன்று தருவாயா? ஐந்து பங்களா கட்டினால் எனக்கு ஒன்று தருவாயா? என்று பலவிதமாகக் கேட்கும் ஏழை நண்பன் பற்றிய கதை ஒன்று இருக்கிறது. அனைத்துக்கும், தருவேன் என பதிலளிப்பான் அந்த நண்பன். உன்னிடம் இருக்கும் ஐந்து சட்டைகளில் ஒன்றைத் தருவாயா என்றால் அவசரமாக முடியாது என்பான். மற்றவை அந்த நண்பனிடம் இப்போது இல்லை, வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லிவைத்தான். ஆனால் சட்டைகள் அவனிடம் இருப்பவை அல்லது விரைவில் வாங்கக்கூடியவை. நாம் தமிழர் கட்சி, பெண் வேட்பாளருக்கு ஒதுக்கும் இடங்களைப் பார்க்கையில் இந்தக் கதைதான் நினைவுக்கு வருகிறது.
நேராக முதல்வர் நாற்காலிதான் எனப் பேசும் தவெக, அதைக்கூடச் செய்யவில்லை என்பதைப் பார்க்கையில் நாம் தமிழர் கட்சியின் செயல்பாடு பாராட்டத்தக்கதே. அன்பான சர்வாதிகாரம் என்று நாதக பயன்படுத்தும் சொல் அந்தப் பாராட்டைத் திரும்ப எடுத்துக்கொள்ள வைக்கிறது. எப்படியானாலும், அதிகாரத்துக்கு வர வாய்ப்பிருக்கும் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் போன்ற கட்சிகளின் வேட்பாளர்களில் கணிசமான அளவு பெண் வேட்பாளர்கள் வரும்போதுதான் உண்மையான மாற்றம் நிகழும்.
அமெரிக்காவில் கடந்த தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளர்களில் சுமார் பதினாறு விழுக்காடு மட்டுமே பெண்கள். ஜனநாயகக் கட்சியில், கிட்டத்தட்ட நாற்பத்தாறு விழுக்காடு பெண் வேட்பாளர்கள். மொத்தமாகப் பார்க்கையில் சற்றொப்ப முப்பது விழுக்காடு பெண்கள் காங்கிரஸ் சபைக்குள் நுழைய முடிந்தது. வாய்ப்புகள் தரப்படாத நிலையில் பெண்களுக்கும் ஜனநாயகத்துக்கும் எதிரான கட்சிகளில் தங்களை இணைத்துக்கொள்ளவும் சில பெண்கள் தயங்குவதில்லை. உலக அளவிலும் தமிழ்நாட்டிலும் இந்த அவலநிலை இருக்கத்தான் செய்கிறது.
பெண்கள் அதிகாரத்தில் இருந்து வழிநடத்திய நியூசிலாந்து, ஐஸ்லாந்து போன்ற நாடுகள் பெருந்தொற்றுக் கால நெருக்கடியைத் திறமையாகக் கையாண்டதை நாம் அறிவோம். பாலினச் சமத்துவம் உள்ள நாடுகளில் பொருளாதார வளர்ச்சி சீராக இருப்பதை ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. இந்தியாவிலும்கூட பெண்கள் தலைவர்களாக இருக்கும் பஞ்சாயத்துகளில் குடிநீர்த் திட்டங்கள் அதிகமாகச் செயல்படுத்தப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆட்சியதிகாரத்தின் உயர்நிலையை அடைய மற்றொரு வாய்ப்பு நிர்வாகப் பணிகள். இந்தியப் பெண்கள் அதை நோக்கி வேகமாக முன்னேறுவதைப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. 2023ஆம் ஆண்டு ஐஏஎஸ் பேட்சில் 180 பேரில் 74 பேர் பெண்கள். குடிமைப்பணிகள் வரலாற்றில் நாற்பத்தொரு விழுக்காடு பெண்கள் தேர்வானது ஒரு வரலாற்றுச் சாதனை. தமிழ்நாட்டில் இந்த ஆண்டு தேர்வானவர்கள் பட்டியலில் முதலிடங்களைப் பிடித்தோரிலும் பெண்கள் பெயர்களே அதிகம் இருந்தன. 2022ஆம் ஆண்டு வெளியான தமிழ்நாடு குரூப் 1 தேர்வின் வெற்றியாளர் பட்டியலில் 66 பேரில் 57 பேர் பெண்கள். சில ஆண்டுகள் பணி அனுபவத்திற்குப் பிறகு இவர்கள் அனைவருமே ஐஏஎஸ் ஆகிவிடுவார்கள். அரசுத் துறை மட்டுமல்ல, ஒட்டுமொத்தமாகவே எல்லாத் துறைகளிலும் பெண்கள் பணிவாழ்க்கைக்குத் தேவையான தகுதிகளை வளர்த்துக்கொள்கிறார்கள் என்கிறது இந்தியா ஸ்கில்ஸ் 2026 அறிக்கை. இந்திய வரலாற்றில் முதன்முறையாக, வேலைக்குத் தயாரான தகுதியுடன் இருக்கும் ஆண்களைவிடப் பெண்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்கிறது இந்தக் கணக்கெடுப்பு.
வேறெந்தத் துறையில் முன்னேறினாலும் பெண்கள் அரசியல் அதிகாரத்தை அடைய முடியாதபடி சமூகக் காரணங்கள் தடுக்கின்றன. எத்தனை உயரம் போனாலும் கண்ணுக்குத் தெரியாத கண்ணாடிக்கூரையில் முட்டிக்கொண்டு நிற்கிறார்கள் பெண்கள். இதை உடைக்கும் பொறுப்பு நம் சமூகத்துக்கு இருக்கிறது. பெண்கள் முன்னேற்றம் பற்றிப் பேசும் கட்சிகளுக்கு இந்தப் பொறுப்பு அதிகமாக இருக்கிறது.
- 19/04/2026 அன்று இந்து தமிழ்திசை நாளிதழில் வெளியான கட்டுரை.
References
வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டி வழக்கு
இலவசம் கொடுப்பது ஊழலா என்பதில் தேர்தல் ஆணையம் கருத்து
சுப்ரமணியம்பாலாஜி வழக்கின் தீர்ப்பு
இலவசம் கொடுப்பதின் சாதக பாதகங்கள்
வாழ்வை மாற்றும் நலத்திட்டங்கள்
விலையில்லாப் பொருள்கள் ஏற்படுத்திய மாற்றம் ஆய்வு
விலையில்லாப் பொருள்கள் பற்றி கெஜ்ரிவால்
வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டிகள் உண்டாக்கிய மாற்றம் ஆய்வு
வண்ணத்தொலைக்காட்சியும் கேபிள்டிவியும் இந்தியாவில் ஏற்படுத்திய மாற்றம் ஆய்வு
குரூப்1 தேர்வில் அதிகளவில் பெண்கள் வெற்றி
குடிமைப்பணியியல் தேர்வில் சாதித்த தமிழ்நாட்டுப் பெண்கள்
தேர்தல் வேட்பாளர்களில் பெண்கள் எண்ணிக்கை
2026ல் பெண்வேட்பாளர்கள் எண்ணிக்கை .
இந்திய நாடாளுமன்றத்தில் பெண்கள்
அதிகாரத்தில் பெண்கள் – ஓர் ஆய்வு
வேலைக்குத் தயார் நிலையில் அதிக பெண்கள்.
