நாற்பத்தி ஆறாவது சென்னை புத்தகக் காட்சி நடக்கும் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இந்த முறை சர்வதேசப் புத்தகச் சந்தையும் நடந்தது. இதை நடத்தியது தமிழ்நாடு அரசு. வழக்கமாக நடக்கும் புத்தகக்காட்சி, பதிப்பாளர்கள் கொண்டு வரும் புத்தகங்களை மக்கள் கண்டு, தேர்ந்தெடுத்து வாங்குவதற்கானது. தமிழ்நாடு அரசின் இந்த சர்வதேசப் புத்தகச் சந்தை தமிழ் பதிப்பாளர்களும் பன்னாட்டுப் பதிப்பாளர்களும் தங்கள் புத்தகங்களை மொழிமாற்றம் செய்யும் உரிமையை வாங்க விற்க களம் அமைத்துத் தருகிறது.
ஒரே இடத்தில்தான் என்றாலும் தனியாக அமைக்கப்பட்டுள்ள இந்த அரங்கம் உலகத்தரம். பிரம்மாண்ட அளவில் நிற்க வைக்கப்பட்ட புத்தகங்கள் போன்ற அரங்க முகப்பு. ஜெயகாந்தன், புதுமைப்பித்தன், பெரியார், ஸ்டீவ் ஜாப்ஸ் என அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை பல புத்தகங்களின் கட்அவுட்கள். உயர்ந்து நிற்கும் பல மொழிப் புத்தகங்களைப் பார்த்துக்கொண்டே உள்ளே நுழைந்தால் முழுவதும் குளிரூட்டப்பட்ட அரங்கம்.
உள்ளேயும் பெரிய அளவு புத்தக மாதிரிகளில் திருக்குறள். தலைக்கு மேலேயும் தொங்குகின்றன, பெரிய புத்தகங்கள். தமிழ் விளக்கம் மட்டுமின்றி இந்திய அல்லது உலக மொழி ஒன்றிலும் கூடுதலாக விளக்கம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஐந்தடி இருக்கும் இந்தப் புத்தகத்தின் பக்கங்களைத் திருப்பிப் பார்த்து இன்னும் சில குறள்களையும் படிக்கலாம். தடுக்கிவிழாத வகையில் பாதை விரிப்புகள். பன்னாட்டு விருந்தினர்களுக்கு ஐந்து நட்சத்திர உணவகத்தில் இருந்து உணவு. உள்ளூா் விருந்தினர்களுக்குத் தனியாக சைவம், அசைவம் என விதவிதமான உணவு உபசரிப்பு.
உள்நாட்டு, வெளிநாட்டு மாணவர்கள், அரசு ஊழியர்கள் என பல தரப்பில் இருந்தும் தன்னார்வலர்கள். ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனி ஸ்டால்கள். பன்னாட்டுப் பதிப்பகத்தார் தங்களைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொள்ளவும், தங்கள் எதிர்பார்ப்பைத் தெரிவிக்கவும் ஒரு சிறு அரங்கம். அருகிலேயே சற்று பெரிய விழா அரங்கம். டிஜிட்டல் திரையில் கன்னியாகுமரி திருவள்ளுவர், மேற்கு வங்க விக்டோரியா மகால், இத்தாலியில் கொலேசியம், ப்ரான்சின் ஈஃபில் டவர் என முக்கியமான இடங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சங்க இலக்கியங்கள் முதல் தற்காலம் வரை பல தமிழ்ப் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
ஆழி செந்தில்நாதன், பபாசி உறுப்பினர்கள் உள்ளிட்ட ஒரு குழு நம் அரசின் சார்பில் பன்னாட்டு புத்தக விழாவுக்கு முன்னதாக அனுப்பிவைக்கப்பட்டார்கள். நீண்ட வரலாறு கொண்ட ப்ராங்ஃபர்ட் புத்தகத் காட்சி உட்பட சில உலக புத்தகக்காட்சிகளில் கலந்து கொண்டு அங்கிருந்து கற்றுக்கொண்டவற்றை வைத்து இந்த சென்னை சர்வதேச புத்தகச் சந்தை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெளிநாடு மட்டுமல்ல வெளிமாநிலங்களில் இருந்தும் மற்ற மொழிப் பதிப்பாளர்கள் வந்திருக்கிறார்கள்.
டெல்லி, கொல்கத்தா, கேரளாவிலும் இத்தகைய புத்தகக் காட்சி நடக்கிறது. எனினும் வங்காள மொழி சார்ந்த, மலையாள மொழி சார்ந்த புத்தகங்கள் மொழிபெயர்ப்பு என்னும் வகையில் இருக்கும். நாம் தற்போது எல்லா மொழிகளும் கலந்து கொள்ளும் வகையில் இதைச் செய்திருக்கிறோம். ஜப்பான், ஜெர்மன், மலேசியா, தாய்லாந்து, கனடா, பிரான்சு என கிட்டத்தட்ட முப்பது நாடுகள். நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியப் பதிப்பாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
உணவு, தங்கும் வசதி மட்டுமல்ல. வெளிநாட்டுப் பதிப்பகங்கள் நம் தமிழ்ப் புத்தகங்களை மொழிபெயர்த்து வெளியிட முன்வந்தால் அதற்கு தமிழ்நாடு அரசு பணம் கொடுக்கிறது. என்னதான் நாம் இங்கே இருந்துகொண்டு கல் தோன்றும் முன்னே தமிழ் தோன்றியது என பெருமை பேசினாலும், உலக அரங்கில் தமிழ் எழுத்தாளர்கள் மிகப்பிரபலம் எனச் சொல்ல முடியாது. பல எழுத்தாளர்களின் பெயர்களையும் புத்தகங்களையும் இந்தப் புத்தகக்காட்சியின் மூலம்தான் அவர்கள் அறிகிறார்கள். வெளிநாட்டினர் இந்தப் புத்தகங்களின் காப்புரிமை வாங்கி மொழிமாற்றம் செய்து வெளியிடப் பல வருடங்கள், பல லட்சங்கள் செலவும் ஆகும். அப்படி வெளியிட்டால் என்ன வரவேற்பு கிடைக்கும் எனத் தயங்கக் கூடாது என்பதற்காகவே தமிழ்நாடு அரசு நிதி உதவியை அளிக்கிறது. இதன் மூலம் தமிழ்ப் புத்தகங்கள் உலகம் முழுவதும் சென்று சேர அரசு உதவுகிறது. ஐரோப்பிய நாடுகளின் இலக்கியம் உலகம் முழுக்கச் சென்றதும் இப்படித்தான்.
தமிழில் இருந்து மற்ற மொழிக்கு அல்லது மற்ற மொழியில் இருந்து தமிழுக்குப் புத்தகங்களை மொழிமாற்றம் செய்யக் காப்புரிமை வாங்குவது அவசியம். இதுவரை இருந்த வழி, மின்னஞ்சல் மூலம் வெளிநாட்டுப் பதிப்பகங்களை தொடர்பு கொள்வதுதான். கொஞ்சம் பெரிய பதிப்பகங்களாக இருந்தால், டெல்லி அல்லது ப்ராங்க்பர்ட் புத்தகக் காட்சிக்குச் சென்று இத்தகைய காப்புரிமைகளை வாங்குவர். இது எல்லா பதிப்பகத்துக்கும் சாத்தியமானதல்ல. இந்த சர்வதேசப் புத்தகச் சந்தை மூலம் தற்போது அனைவருக்கும் அந்த வாய்ப்பு கிடைக்கிறது. புத்தகங்களை மொழிமாற்றம் செய்ய விரும்பும் வெளிநாட்டுப் பதிப்பகங்களும் தமிழ்நாட்டுப் பதிப்பகங்களும் உரையாட, காப்புரிமை வாங்க விற்க இந்த சர்வதேசப் புத்தகச் சந்தை உதவும். இடைத்தரகர்கள் இன்றிச் செயல்பட முடியும்.
தமிழ்ப்புத்தகங்களை வேறு மொழிக்கு மொழிபெயர்க்க நம் பதிப்பகங்கள் தங்களிடம் உள்ள புத்தகங்களைப் பற்றிய சிறு அறிமுகக் குறிப்புகளை அட்டவணையிட்டுத தயாராக வைத்திருக்க வேண்டும். குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட காராணத்தாலும், பல தமிழ் பதிப்பகங்களுக்கு இதுவே முதன்முறை என்பதாலும் இதில் சிறு சுணக்கம் காணப்படுகிறது. இன்னும் சில ஆண்டுகள் இந்த சர்வதேச புத்தகச் சந்தை தொடர்ந்து நடைபெற்றால் பதிப்பகத் துறையிலும் மொழிபெயர்ப்புத் துறையிலும் மிகப்பெரிய முன்னேற்றத்தை நாம் பெற முடியும். பதிப்பகங்கள், எழுத்தாளர்கள், புத்தக விற்பனையாளர்கள், மொழிபெயர்ப்பு வல்லுநர்கள், மொழிபெயர்ப்பு சார்ந்த மென்பொருள் நிறுவனங்கள், கணிணி நிரல் எழுதுபவர்கள், காப்புரிமை வல்லுநர்கள் என ஒரு சங்கிலித் தொடர்போல பெரிய அளவில் பல துறைகளில் வாய்ப்புகளை உருவாக்கும்.
ஜார்ஜியா பதிப்பக அசோசியஷன் துணைத் தலைவர் க்வான்ட்ஸா ஜபாவா, பெண்ணியலாளர், எழுத்தாளர் ஊர்வசி புடாலியா, விருது பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் மேலிஸ் டி கெர்னகல், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் பாலகிருஷ்ணன், இத்தாலியின் அறிவியல் புனைகதை எழுத்தாளர் ஃப்ரான்செஸ்கோ வெர்ஸா என உள்ளூர் வெளியூர் பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு நிகழ்வை மாபெரும் வெற்றிபெறச் செய்துள்ளனர்.
காலச்சுவடு பதிப்பகம் கண்ணன், உலக சந்தைகளைப் பார்வையிட்டு கற்றுக் கொண்டு வந்ததை, குழுவினர் நன்றாகச் செயல்படுத்தி உள்ளார்கள் எனக் குறிப்பிட்டார். இவர் பல வருடங்களாக ப்ராங்க்ஃபர்ட் பன்னாட்டுப் புத்தகச் சந்தைக்கு சென்றுவருபவர். பூனேவில் இருந்து வந்திருந்த விதுலா டோக்கிகர் மிகக் குறுகிய காலத்தில் செய்யப்பட்டிருக்கும் சிறப்பான ஏற்பாடுகளை வெகுவாக பாராட்டினார். இவர் பதினைந்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை மொழிமாற்றம் செய்து பதிப்பித்துள்ளார்.
சிங்கப்பூரின் க்ரிம்ஸன் எர்த் சார்பாக வந்திருந்த விஜயானந்த், தங்கள் நாட்டுப் பின்புலம் உள்ள கதைகள் நிறைய எழுதப்பட்டால் மொழிபெயர்ப்புக்கு ஏற்றதாக இருக்கும் எனக் குறிப்பிட்டார். கஸ்ட்ரோ புக் ஷாப் லிமிடேட் சேர்மேன் அகஸ்ட்டின் லுசிபா ஒவ்வொரு மனிதனும் தங்களின் கதையைப் பதிவு செய்து புத்தகம் எழுதுவது அவசியம் என அவர் பேராசிரியர் சொல்லிக்கொடுத்ததாக உரையில் குறிப்பிட்டார். தமிழ்நாட்டு அரசின் முன்னெடுப்புக்கு நன்றி தெரிவித்த இவர் வந்திருந்தது உகாண்டாவில் இருந்து.
எத்தனை புத்தகங்கள் மொழிமாற்றம் செய்ய ஒப்பந்தம் கையெழுத்தானது, எத்தனை பதிப்பகங்கள் எவ்வளவு நிதி உதவியைப் பெற்றனர் என்பது போன்ற தகவல்கள் நிகழ்வின் கடைசி நாளில் (இன்று-புதன்கிழமை) அறிவிக்கப்படும்.
இந்த சர்வதேசப் புத்தகச் சந்தையால் பயனடைபவர்கள் பதிப்பகங்கள் மட்டுமல்ல. புத்தகங்களின் இறுதிப் பயனாளர்களான வாசகர்களும்தான். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் போன்ற மிகச் சில நாடுகளில் இருந்து மட்டும் மொழிபெயர்ப்புகளை வாசித்த நாம் பல நாட்டு புத்தகங்களை வாசிக்கப் போகிறோம். பல நாடுகளின் கலாசார வளம், தொழில்நுட்பம் சார்ந்த அறிவை விரிவாக்கிக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. இந்த சர்வதேசப் புத்தகச் சந்தையின் மூலம் உலகம் முழுக்க இருக்கும் அறிவு நம்மைச் சேர்கிறது. நம்முடைய இலக்கிய வளம் பலநாட்டு மக்களைச் சென்றடைகிறது. சென்னையை அறிவுத் தலைநகராக வளர்த்தெடுக்க முயலும் அரசின் முன்னெடுப்பு பாராட்டுக்குரியது.
17/01/2023 அன்று மெட்ராஸ் பேப்பரில் பதிப்பிக்கப்பட்ட கட்டுரை.
