உள்ளூர்க்காரனை நம்பாதே! – பாகிஸ்தானில் சீனாவின் அடாவடி

குவாதர் சர்வதேச விமானநிலையத்தின் உரிமையாளர் பாகிஸ்தான். பணம் கொடுத்தது சீனா. பயன்படுத்த யாருமில்லை. கடந்த வாரம் முழுக்க சொல்லிவைத்தாற்போல் எல்லா செய்தித்தளங்களும் பயணிகள் யாருமில்லாத விமான நிலையம் என கேலியான தொனியில் செய்தி வெளியிட்டிருந்தன. மற்றவர்களுக்கு எப்படியோ, இந்தியா அப்படிச் சிரிப்புடன் கடந்துபோக இயலாத சீரியஸ் செய்தி அது. சீன பிஆர்ஐ திட்ட முத்துமாலையில் இணைந்திருக்கும் முக்கியமான முத்து குவாதர். 

மீனவர் நிறைந்த வணிக நகரம் குவாதர். இந்நகருக்கு பிரிட்டிஷ் இந்தியாவிடம் அலுவல் ரீதியாக முதன்முதலில் உரிமை கோரப்பட்டது 1903ஆம் ஆண்டு. கேட்டது பலுசிஸ்தானின் அன்றைய கான் ஆஃப் கலத். அதற்கு முன்பும் அவர்களிடம்தாம் உரிமை இருந்தது. ஓமானில் தந்தைக்கு எதிராக அணி திரட்டிய மஸ்கட் இளவரசர் தோற்றுப்போய் புகலிடம் கேட்டு கான் ஆஃப் கலத்திடம் வந்தார். இந்தாப்பா, இந்த குவாதர் நகரைப் பரிபாலனம் செய்து கொண்டிரு என்று இவரும் கொடுத்தார். 1783ஆம் ஆண்டு கொடுத்ததை அடுத்த ஐந்தாண்டுகளில் பறித்துக்கொண்டார். ஆனால் 1791ல் ஓமானில் ஆட்சிக்கு வந்த சயது சுல்தான், குவாதர் தங்களுடையது எனச் சொன்னார். இது தொடர்பாக இவர்கள் அவ்வப்போது சண்டையிடும் போது தந்திக் கம்பங்களை நட்டு பிரிட்டிஷும் உள்ளே வந்துவிட்டது. 

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் சுதந்திரம் கொடுத்தபோது பலுசிஸ்தான் தனிநாடாக இருக்கத்தான் விரும்பியது. 1948, மார்ச் மாதம் பாகிஸ்தானுடன் பலுசிஸ்தான் இணைந்தது தனிக்கதையாகப் போகும் வரலாறு. அதன் பிறகு, பாகிஸ்தான் குவாதர் நகரைத் தன்னுடன் இணைத்துக்கொள்ள ஆர்வம் காட்டியது. இப்போதும் சரி, அப்போதும் சரி, கரகாட்டக்கார கோஷ்டி மாதிரி ஊர் ஊராக உலகம் முழுக்கப் போவதுதான் அமெரிக்காவின் வேலை. எங்கெல்லாம் வளங்களும் வாய்ப்புகளும் இருக்கிறது எனத் தேடுவதை பல அமெரிக்க வல்லுநர்கள் முழுநேரப்பணியாகவே வைத்துள்ளனர். 1954ஆம் ஆண்டில், அமெரிக்கப் புவியியல் வல்லுநர்கள், ஆழ்கடல் துறைமுக நகரமாக குவாதரை அடையாளங்கண்டனர். 

பல கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு குவாதர் உரிமையை பாகிஸ்தானிடம் ஒப்படைக்க ஓமான் அரசு ஒப்புக்கொண்டது. சுமார் மூன்று கோடி ரூபாய்க்கு மேல் செலவானது. (£3 million) இன்றைய மதிப்பில் ஆயிரம் கோடிக்குப் பக்கம் வரும். வாங்குதல் என்ற சொல்லைத் தவிர்த்து ஒப்பந்தம் தயாரானது. 1958ஆம் ஆண்டு, குவாதர் பாகிஸ்தான் வசம் வந்துவிட்டது. 

கூட்டாட்சித் தத்துவத்தில் இந்தியாவே பரவாயில்லை எனச் சொல்லும்படியல்லவா ஆட்சிபுரிந்தது பாகிஸ்தான். ஒரே மதத்தைச் சேர்ந்த அண்ணன், தம்பி மாதிரி என்று நினைத்து இணைந்த பங்களாதேஷ், போராடிப் பிரிந்த கதை நாம் அறிந்ததுதான். பலுசிஸ்தானைப் பொறுத்தவரைக்கும் இன்றும் போராட்டம் தொடர்கிறது. பாகிஸ்தானை ஏற்றுக் கொண்ட மக்களுக்கும் ஏற்றுக்கொள்ளாத மக்களுக்கும் பலுசிஸ்தானில் பெரிய வித்தியாசமெல்லாம் கிடையாது. எல்லாருமே கஷ்டப்படுகிறவர்கள்தாம். இன்றைக்கு வரைக்கும் பாகிஸ்தான் மின்சார சப்ளை கூட இன்றி, ஈரானின் சூரிய ஒளி மின்சாரத்தை நம்பித்தான் பலுசிஸ்தான் இருக்கிறது. அதுவும் ஏகப்பட்ட மின்வெட்டுகளுடன்தான். ஏதேனும் பிரச்சினை என்றால் அதையும் துண்டித்துவிடுவார்கள். 

2002ஆம் ஆண்டு முதல் துறைமுகம் கட்டும் பேச்சுகள் ஆரம்பித்துவிட்டாலும், 2007ஆம் ஆண்டு பர்வேஸ் முஷாரப் காலத்தில்தான் குவாதர் துறைமுகத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. சீன உதவி பெருமளவில் இந்தத் துறைமுகத்துக்கு இருந்தது. 2013ஆம் ஆண்டு முதல் சீனா ஓவர்சீஸ் போர்ட்ஸ் ஹோல்டிங் நிறுவனம் குவாதர் துறைமுகத்தை இயக்கிவருகிறது. 

அடுத்த ஆண்டில் இருந்தே விமான நிலையம் கட்டும் பேச்சு தொடங்கிவிட்டது. சீனா, பாகிஸ்தான் பொருளாதார மண்டலமான சிபெக் (CPEC – China-Pakistan Economic Corridor) உருக்கொண்டது. குவாதர் துறைமுகப் பகுதியில் சர்வதேச விமான நிலையம் கட்ட 2015ஆம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. 

தெற்கு, மத்திய, கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்ரிக்கா, ஐரோப்பா வரை எளிதில் சென்றடைய குவாதர் உதவும். இதனால் வணிகம் பெருகும். விமானநிலையத்தின் குளிரூட்டப்பட்ட சரக்கு அறைகள் உள்ளூரில் பிடிக்கும் மீன்களை உலகம் முழுக்க ஏற்றுமதி செய்ய உதவும். உள்ளூர்வாசிகளுக்கு வேலைவாய்ப்பை நல்கும். உலகளாவிய சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாகவும் மாறும். இவற்றின் மூலம் பாகிஸ்தான் பொருளாதாரம் இந்தியா விடும் ராக்கெட்டுக்கு இணையாக மேலே போகும். இப்படிப் பலப்பல காரணங்கள், கனவுகளைச் சொல்லி இத்திட்டம் வளர்ந்தது. சீனா சுமார், இரண்டாயிரம் கோடி ரூபாய்க்கு மேலே செலவு செய்துள்ளது. 

சிக்கல் என்னவென்றால் பலுசிஸ்தானின் ஆயுதமேந்திய போராட்டக் குழுக்கள் பாகிஸ்தானையே இன்னும் ஏற்கவில்லை. சீனாவைத் தங்கள் வளத்தைச் சுரண்டி ஆக்கிரமிக்க வந்தவர்களாகவே பார்ப்பதில் வியப்பில்லை. அமைதி வழியிலும் பலூச் மக்கள் போராட்டம் நடத்தினர். ஆயதப் போராட்டமும் நடந்தன. சீனாவை எதிர்த்து கடந்த ஆண்டுகூட பலுசிஸ்தானில் மிகப்பெரிய தாக்குதல் நடந்தது. ஏறக்குறைய நூறு சீனர்கள் இந்த ஏர்போர்ட் கட்டும் பணி நடந்த காலத்தில் இறந்துள்ளனர். 

ஆனாலும் பணியை நிறுத்தாமல் சீனா கொடுத்த சுமார் 240 மில்லியன் டாலர் பணத்தில் பாகிஸ்தானிலேயே மிகப்பெரிய சர்வதேச விமான நிலையமாக பிரம்மாண்டமாக எழுந்து நிற்கிறது குவாதர். மூன்று முறை திறப்பு விழாவுக்குத் தேதி குறிக்கப்பட்டு பாதுகாப்புக் காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டது. தாக்கப்படலாம் என அஞ்சியதால் சீனப் பிரீமியர் லி கியாங், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இருவருமே மெய்நிகர் திறப்பு விழாவாக முடித்துக்கொண்டனர். தொடங்கி வைத்த பிறகு பறந்த முதல் விமானத்திலும் கூட பத்திரிகையாளர்களோ பொதுமக்களோ பயணம் செய்ய அனுமதி இல்லை. 

கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் வசிக்கும் இந்த நகரத்துக்கு நாற்பது லட்சம் பேர் பயன்படுத்தக்கூடிய விமான நிலையம். ஆஹா ஓஹோ என்று ஓவர் சோல்ட் செய்யப்பட்டது இந்த திட்டம். சிபெக் மூலம் சிங்கப்பூராக இப்பகுதி மாறும் எனப்பட்டது. எதிர்பார்த்த மாதிரி நடக்காமல் போக பாகிஸ்தான் பலுசிஸ்தான் பகுதியை நடத்தும் விதமும் காரணம். சுத்தமான குடிநீர் கிடையாது. கழிவுநீர் மேலாண்மை, நிர்வாகம் எல்லாமே ஏனோதானோ என்றுதான் இருக்கும். குவாதர் செய்தியாளர்கள் என்ன எழுதுகிறார்கள் என்பது உளவுத்துறையால் கண்காணிக்கப்படுகிறது. மீன் மார்கெட் உள்ளிட்ட பல பகுதிகளுக்குள் நுழையக்கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. 

சீனா, உள்ளூர் பலூச் மக்களை பாவனையாகக் கூட நம்பவில்லை. வாட்ச்மேன் வேலைக்குக் கூட அவர்களை வேலைக்கு அமர்த்தவில்லை. இரண்டாயிரம் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்துள்ளதாகச் சொல்கிறார்கள். உள்ளூர் என்பது குவாதர் நகரில் இருக்கும் மக்கள் அல்ல, வெளியே இருந்து அழைத்துவரப்படும் பாகிஸ்தானியர்களையே உள்ளூர் மக்கள் எனக் குறிப்பிடுகிறார்கள். 

குவாதர் நகரத்தில் வசிக்கும் மக்களுக்கு எந்தவிதத்திலும் பயன்தராதது மட்டுமின்றி ஆங்காங்கே ஐடி காண்பிக்க வேண்டிய பாதுகாப்பு கெடுபிடித் தொந்தரவுகள் வேறு ஏற்பட்டுள்ளன. முழுநிலவு நாளில் மலை மீது ஏறியும் கடற்கரைக்குச் சென்றும் குடும்பத்தோடு பொழுதைக் கழித்ததெல்லாம் இனிமேல் இவர்களுக்குச் சாத்தியமே இல்லை. உள்ளூர் மக்கள் இதன் காரணமாக விமான நிலையத்துக்கு எதிரான மனநிலையில்தான் உள்ளனர். எனினும் வேலைவாய்ப்பு கிடைக்குமானால், எதற்கு இங்குள்ளவர்கள் ஆயுதமேந்தப் போகிறார்கள் எனவும் கருத்து தெரிவிக்கிறார்கள். 

விமான நிலையத்தின் மொத்த கட்டுப்பாடு சீனா வசமே. விமான நிலையப் பகுதியின் வலுவான பாதுகாப்பினால் அதன் உள்ளே நுழைந்து தாக்குவது சாத்தியமில்லை. ஆனால் சீனர்கள் குவாதருக்கு வெளியே வந்து எங்காவது பயணம் செய்யும்போது தாக்குதலுக்கு இலக்காகிறார்கள். இதைக் காரணமாக்கி சீனா தரப்பில் இருந்து இன்னும் பாதுகாப்பை உயர்த்த முயல்கிறார்கள். பலுசிஸ்தானில், சீன ராணுவ உடையுடன் அதிகாரிகள் சுற்றிக் கொண்டிருப்பது பாகிஸ்தானுக்கு எந்தவிதத்திலும் நன்மை செய்யாது. எனவே, பாகிஸ்தான் முடிந்தவரைக்கும் இதை தடுக்கப்பார்க்கிறது. இந்தியாவுக்கு நிச்சயம் அச்சுறுத்தல்தான். சிபெக் இணைப்பாகட்டும் இந்த விமான நிலையம் ஆகட்டும், இந்தியா பல்வேறு சந்தர்ப்பங்களில் தன் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. 

அண்மையில் நடந்த ஐநா மனித உரிமைகள் கமிஷன் கூட்டத்தில் வழக்கம்போல பாகிஸ்தான் காஷ்மீரில் மீறப்படும் மனித உரிமைகள் பற்றிக் குற்றஞ்சாட்ட, அதற்கு வெளியுறவுத் துறை அதிகாரி க்ஷிடிஜ் தியாகி (Kshitij Tyagi) அளித்த பதிலால் அவரை இந்தியர்கள் கட்அவுட் வைத்து பாலாபிஷேகம் செய்யாத குறையாகக் கொண்டாடினார்கள். தோற்றுப்போன நாடு, உலக நாடுகளிடம் கையேந்திப் பிழைக்கும் நாடு என்று தமிழ்ப்படக் கதாநாயகன் மாதிரி அவர் விளாசுவதால் இந்தியர்கள் அடையும் மகிழ்ச்சியைத் தவிரப் பலன் ஒன்றும் இல்லை. உலக அரங்கில் பாகிஸ்தானை வறுத்தெடுப்பதாலும் சீனாவின் பிஆர்ஐ திட்டத்தில் இணையாததாலும் எதையும் இந்தியாவால் நிறுத்தமுடியவில்லை. 

சுமார் இருபத்தைந்து ஆண்டுகளாக நான்காயிரம் கோடிக்கு மேலே செலவிட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக இப்பகுதியில் தன் பலத்தை அதிகரித்துள்ளது சீனா. பெல்ட் அன்ட் ரோட் இனிஷியேட்டிவ் எனச் சொல்லப்படும் பிஆர்ஐ திட்டத்தில் ஒவ்வொரு முத்தாகக் கோத்து நிறைவடையும்போது இதன் பலன் தெரியும். இந்த குவாதர் துறைமுகம் இப்போதைக்கு உடனடிப் பலனைத் தரவில்லை எனினும் நீண்ட கால நோக்கில் முக்கியமானது. 

ஈரானுக்கும் அரேபிய தீபகற்பத்திற்கும் இடையே ஓமானிய வளைகுடாவின் நீட்சியாக இருக்கிறது பெர்ஷிய வளைகுடா. இதன் முகத்துவாரப் பகுதியாக குவாதர் நகரைச் சொல்லலாம். இந்தியப்பகுதியில் இருந்து பார்த்தால் அரபிக் கடலின் உச்சியில் உட்கார்ந்து இருக்கிறது. வணிகம் செழித்தால் நிச்சயம் நல்ல லாபம் வரும். அது பொய்த்தாலும், ஏர்பஸ் ஏ380, போயிங் 747-8 போன்ற மிகப்பெரிய விமானங்கள் பயன்படுத்தும் அளவுக்குப் பெரிய ஓடுபாதை கொண்ட விமானநிலையம் யாருடன் போர் வந்தாலும் வெற்றியை ஈட்டித்தரும். 

இணையவழி வகுப்பில் மாணவர்கள் இல்லாமல் பாடம் நடத்தும் ஆசிரியர் போல பயணியில்லாத விமானநிலையத்தை திறந்துவிட்ட சீனா, தன் ஒரிஜினல் திட்டத்தின் அடுத்த நிலைக்கு முன்னேறியுள்ளது என்பதே உண்மை. 

*

04/03/2025  அன்று மெட்ராஸ் பேப்பரில் பதிப்பிக்கப்பட்ட கட்டுரை.