இந்திய வரைபடத்தின் தலைப்பகுதி பிராந்தியத்தை நாம் மொத்தமாக காஷ்மீர் என்று அழைக்கிறோம். உண்மையில் அது மூன்றாகப் பிரிந்திருக்கிறது. பக்கவாட்டுக் கோடெடுத்துத் தூக்கிவாரிய தலைப்பகுதி போலிருக்கும் உச்சிப் பகுதியில், இடது பக்கம் இருக்கும் லடாக்கில் ஒரு பகுதியை 1962 முதல் ஆக்கிரமித்து அக்சை சின் என்றழைக்கிறது சீனா. வலது பக்கம் இருக்கும் கில்கிட், அதற்குக்கீழே காது போன்ற தோற்றத்தில் இருக்கும் ஆசாத் காஷ்மீர் இரண்டுமே பாகிஸ்தான் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. நடுவில் முகம் மாதிரி இருக்கும் பகுதி மட்டுமே ஜம்மு, காஷ்மீர், லடாக் பகுதிகளாக இந்தியா கட்டுப்பாட்டில் இருக்கிறது.
கில்கிட், அக்சை சின், லடாக் பகுதிகள் மூன்றும் சந்திக்கும் இடத்தில் உள்ள முக்கோணப் பகுதியான சியாச்சின் இப்போதைக்கு இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. முக்கியத்துவம் வாய்ந்த உயரமான பகுதி என்பதால் இதைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க இந்தியா ஏகப்பட்ட செலவுகளைச் செய்ய வேண்டியதிருக்கிறது.
பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருக்கும் கில்கிட், ஆசாத் காஷ்மீர் இரண்டையும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று வரையறுக்கிறது இந்தியா. (POK – Pakistan Occupied Kashmir.) சர்வதேசச் சமூகம் பாக் (Pakistan Administered Kashmir PAK) என்கிறது. பேரு முக்கியமல்ல, சோறுதான் முக்கியம். வாழ்வதற்கு வழியிருக்கிறதா என்பது முக்கியம். கில்கிட், ஆசாத் காஷ்மீர் இரண்டுமே பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருந்தாலும் நிர்வாகம் செய்யும் முறை முற்றிலும் வெவ்வேறானது. இப்பகுதியில் பிரிட்டிஷ் காலத்தில் அரசியல் நடவடிக்கைகளைத் தடுக்க இருந்த கறுப்புச் சட்டம் நெடுங்காலம் நடைமுறையில் இருந்தது. ஜுல்பிகர் அலி புட்டோ காலத்தில் இச்சட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டாலும் குறைந்தளவு அரசியல் உரிமைகளே உள்ளன.
2009ஆம் ஆண்டு வரைக்கும் வடக்குப் பகுதி என்று பொதுவாக அழைக்கப்பட்டு, அதன் பின்னர் கில்கிட் பல்டிஸ்தான் ஆனது. இது, எழுபதாயிரம் சதுர கிலோமீட்டருக்கும் மேலான பரப்பளவு கொண்டது. இந்தியாவின் உத்ராகண்ட் மாநிலத்தின் அளவோடு தோராயமாக ஒப்பிடலாம். கேரளாவைப் போல ஏறத்தாழ இருமடங்கு எனலாம். இந்த ஒப்பீடு நிலத்தின் அளவுக்கு மட்டுமே. இவ்வளவு பெரிய நிலத்தில் வசிப்பது சுமார் பதினேழு லட்சம் மக்கள்தாம். பெரும்பாலும் மக்கள் அடர்த்தியாக வாழ இயலாத மலைகள் சூழ்ந்த பிரதேசம்.
மேற்கிலும் வடக்கிலும் ஆப்கனிஸ்தான், சீனாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. இந்தப்பக்கம் ஜம்மு, காஷ்மீர், லடாக்குடன் ஒட்டியிருக்கிறது. எவெரெஸ்ட் சிகரத்துக்கு அடுத்த நிலையில் இருக்கும் மிக உயரமான மலைச்சிகரங்களான கே2, கே3, கில்கிட்டில்தான் இருக்கின்றன. சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். நிர்வாகம், பிரதமர் எல்லாம் பெயருக்குத்தான். அதிகாரம் பாகிஸ்தானிடம்தான் இருக்கிறது.
கில்கிட் பகுதியைக் கொஞ்சம் கொஞ்சமாக சீனாவிடம் கொடுக்கிறது பாகிஸ்தான். ஒப்பந்தம் போட்டு ஷக்ஸம் பள்ளத்தாக்குப் பகுதியை (காராகொரம் ட்ராக்ட்) சீனாவுக்கு தாரைவார்த்துள்ளது. சீனாவின் பெல்ட் ரோட் இனிஷிடியேவ் திட்டத்தினால் கில்கிட்டில் சாலை, ரயில் வழித்தடங்கள் மெல்ல மெல்ல முன்னேறுகின்றன. ஒரு பக்கம் வளர்ச்சியை வரவேற்கும் மக்களும் மறுபக்கம் எங்களை ஆள நினைக்காதே என சண்டைக்கு நிற்கிறவர்களுமாகக் கலந்து கட்டிய கருத்துகளே உள்ளன.
இன்றைய கில்கிட் பால்டிஸ்தான் பலவிதமான மாறுதல்களுக்குப் பிறகே தற்போதைய நிலையில் இருக்கிறது. டார்டிஸ்தான், பால்டிஸ்தான், சிறிய திபெத் எனவும் முன்னர் அழைக்கப்பட்டுள்ளது இப்பகுதி. ஜம்மு, லடாக் பகுதிகளுடன் நெருக்கமாக இருந்ததே தவிர ஒன்றாக இல்லை. ஷாஜஹான் காலத்தில் இப்பகுதிகள் அனைத்தும் கைப்பற்றப்பட்டு காஷ்மீர் உடன் இணைந்தன. முகலாயப் பேரரசு வலுவிழந்தபோது ஆப்கன் ஆட்சியின் கீழ் வந்தது. சுமார் அறுபதாண்டுகள் மிகக் கொடுமையான ஆட்சியாக அது இருந்தது. இதிலிருந்து விடுபட முயற்சிகள் நடந்தன.
பின்னர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில், மகாராஜா ரஞ்சித் சிங் ஆட்சியின் கீழ் வந்தது. இந்தியத் துணைக்கண்டம் முழுக்க பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் வந்தபிறகும் பிரிட்டிஷ் இப்பகுதியில் தங்கள் ஆட்சியை நிறுவுவதைப் பற்றி அதிகம் சிந்திக்கவில்லை. ரஞ்சித் சிங்கின் சேனாதிபதியான குலாப் சிங் உடன் ஓர் ஒப்பந்தம் ஏற்படுத்தி சுமார் 75 லட்சம் ரூபாய்க்கு ஜம்மு காஷ்மீரை விற்பனை செய்தனர் (1846). டோக்ரா பேரரசு விரிவானது. லடாக், பால்டிஸ்தான், கில்கிட் அனைத்தும் இணைந்த ஜம்மு காஷ்மீர் பகுதிக்கு ராஜா ஆனார் குலாப் சிங்.
பிரிட்டிஷ், ரஷ்யா இடையே ஏற்பட்ட போட்டியின் காரணமாக 1877ல், பிரிட்டிஷ் “கில்கிட் ஏஜென்சி”யை நிறுவினர். இது மூன்று பகுதிகளை உள்ளடக்கியது:
ஹுன்ஸா, நாகர், சிலாஸ் (இன்றைய டயமர்), கோ கிசர் ஆகிய, சுதந்திர அரசர்களால் ஆட்சி செய்யப்பட்ட பிரின்ஸ்லி மாநிலங்கள்.
கில்கிட் நகரம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள் அடங்கிய “கில்கிட் வாசரத்”, இது டோக்ரா வசீர் தலைமையில் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்துக்குள் வந்தன.
டாரெல், டங்கிர், ஜல்கோட் போன்ற நிர்வாகமற்ற பகுதிகள்.
இப்படியாக, “கில்கிட் ஏஜென்சி”யை, குலாப் சிங்கின் காஷ்மீர் நிர்வாகத்திற்கு இணையாக உருவாக்கியது பிரிட்டிஷ். இதை 60 ஆண்டு குத்தகைக்குக் கொடுத்தார் ராஜா ஹரிசிங் (1935). இந்தியா, பாகிஸ்தான் என இரண்டாகப் பிரித்து வெளியேறும் வரைக்கும் கில்கிட்டும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் பிரிட்டிஷ் அதிகாரத்தின் கீழ் இருந்தன. இந்திய, பாகிஸ்தான் பிரிவினையின்போது தனித்திருப்பதே முதல் தேர்வு. ஆனால், அது முடியாது என்கிற நிலையில் மக்கள் மனப்பாங்கைக் கருதாமல் இந்தியாவுடன் சேர்வது என்கிற ராஜாவின் முடிவில் தொடங்கியது இப்போதைய சிக்கல். பிரிட்டிஷ் தொடங்கி அமெரிக்கா வரைக்கும் மறைமுகமாக ஆதரவு கொடுக்க பாகிஸ்தான் மனமுவந்து பங்கேற்று உதவ, இப்பிராந்தியமே தீவிரவாத உற்பத்தித் தொழிற்சாலைபோல மாறிவிட்டது. தெற்காசிய பயங்கரவாத போர்டல் அறிக்கைகள் வெளியிட்டுள்ள பட்டியலில் உள்ள பல தீவிரவாத அமைப்புகள் இப்பகுதியைத் தங்கள் தளமாகக் கொண்டு செயல்படுகின்றன.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ஆசாத் காஷ்மீர் என அறியப்படும் பகுதியில் உள்ள மக்கள் கில்கிட் பகுதியோடு தங்களை இணைத்துக்கொள்ள விரும்பவில்லை. கில்கிட் மக்களுமே ஆசாத் காஷ்மீர் போல தங்களுக்கும் இன்னும் கொஞ்சம் அதிக உரிமைகள் கொண்ட சுயாட்சி தேவை என எண்ணுகிறார்களேயன்றி, ஒன்றிணைவோம் எனக் கேட்கவில்லை. தற்போது பாகிஸ்தான் ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் பிரதமர் கில்கிட்டை நிர்வகிக்கிறார். இவருடைய விசுவாசம் அங்குள்ள மக்களைவிட ஒன்றிய பாகிஸ்தான் அரசுக்கே என்பதால் மக்களின் நிலை கஷ்டம்தான்.
இவர்களும் கல்வி கற்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்துவதில் குறை வைப்பதில்லை. இயற்கை எழில் சூழ்ந்த பிரதேசம் என்பதால் சுற்றுலா வருமான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் நில அமைப்பும் அரசின் அலட்சியமும் குறைவான கட்டமைப்பு வசதிகளையே உருவாக்கி வைத்துள்ளன. சீனா உள்ளே வந்து சாலை அமைப்பதைச் சிலர் வரவேற்பது இதன் பொருட்டே. செய்வதற்கு வேலையும் மாண்புடன் வாழ வருமானமும் இருந்தால் பயங்கரவாதம் குறையும் என்பது பல இடங்களில் நிரூபிக்கப்பட்ட உண்மை. அதைச் செய்ய பாகிஸ்தான் அரசு தயாராகும் வரைக்கும் இந்தியாவுக்கு நிம்மதியில்லை.
*
13/05/2025 அன்று மெட்ராஸ் பேப்பரில் பதிப்பிக்கப்பட்ட கட்டுரை.
