ஓயாத மீ டூ அலைகள்

எழுத்தாளர் கோணங்கி தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் என்று கார்த்திக் என்பவர் தெரிவித்ததில் இருந்து தமிழகத்தில் மீ டூ இயக்கத்தின் அடுத்த அலை ஆரம்பமானது. 

அமெரிக்காவில், டாரனாபர்க் 2006-ல் மீடூ என்ற வார்த்தையைப் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவது பற்றிய விழிப்புணர்வுக்காகப் பயன்படுத்தினார். பாலினச் சமத்துவச் செயற்பாட்டாளர் இவர். 2017-ல் இந்த வார்த்தை பாலியல் முறைகேடுகளுக்கான குறியீடாக ஹாஷ்டேக் வடிவில் மறு அவதாரம் எடுத்தது. 

தயாரிப்பாளர் ஹார்வி வின்ஸ்டைனால் திரைத்துறையில் 30 ஆண்டுகளில் வன்புணர்வு, பாலியல் முறைகேடுகள், அத்துமீறல், பாலியல் தொல்லை எனப் பல விதங்களில் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் செய்திகளாக வெளியாகின. 

பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் மீடூ எனப் பதிவிட்டால் இவ்விவகாரம் எவ்வளவு பெரியது எனப் புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் என்று திரைத்துறையைச் சேர்ந்த அலிஸா மிலானோ ட்விட்டரில் அழைப்பு விடுத்தார். ஹாஷ்டேக் மீடூ இயக்கமாக மாறியது. பல்வேறு நாடுகளில் உள்ளவர்களும் வெளிப்படையாகத் தாங்கள் பாதிக்கப்பட்டதைத் தெரிவித்தார்கள். முழுக் கதையைத் தெரிவிக்க விரும்பாதவர்கள் மீடூ என்ற வார்த்தைகளை மட்டும் பதிவிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு அளித்தார்கள். பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய 200க்கும் மேற்பட்டவர்களின் பதவி பறிக்கப்பட்டது. வின்ஸ்டைன் செய்த வன்புணர்வுக் குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறைத் தண்டனையும் பெற்றார். இந்த இயக்கம் ஏற்படுத்திய விளைவு வின்ஸ்டைன் எஃபெக்ட் என்றே அழைக்கப்படுகிறது. 

இந்தியாவிலும் இந்த இயக்கம் பரபரப்பாக பேசப்பட்டது. பாலிவுட்டில் நாநா படேகர், அலோக்நாத், சுஷேல் சேத், எம்.ஜே.அக்பர் எனப் பல பெயர்கள் குற்றச்சாட்டுகளில் சிக்கின. இந்தியாவின் கல்விக் கூடங்களில் பாலியல் தொல்லை கொடுப்பவர்கள் பெயர்கள் கொண்ட லோஷா (LoSHA – List of Sexual Harassers in Academia) பட்டியலும் ஊடகங்களில் புயலைக் கிளப்பியது. ராயா சர்க்கார், சமூக வலைத்தளத்தில் பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் பெயரை வெளியிட்டு அதில் தங்களுக்குத் தெரிந்த பெயர்களைச் சேர்க்கச் சொன்னார். 30 கல்லூரிகளின் 75 கல்வியாளர்கள் பெயர்கள் அந்தப் பட்டியலில் இருந்தன. யாரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற தகவல் இன்னும் பலர் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் என்பதே அவர் பட்டியலைச் சமூக வலைத் தளத்தில் வெளியிடக் காரணம். பட்டியலில் இருந்த பலர் வெளிப்படையாகத் தங்களைப் பெண்ணியவாதிகளாக, முற்போக்குவாதிகளாக காட்டிக் கொண்டவர்கள். 

பட்டியலை உருவாக்கிய ராயா சர்க்கார் பக்கம் நின்று பாதிக்கபட்டவர்களுக்கு உதவியிருக்கவேண்டிய சமூகம் அவரைப் பலவிதங்களில் துன்புறுத்தியது. சம்பவங்கள் இல்லாமல் வெறும் பெயரை மட்டும் குறிப்பிடக்கூடாது எனப் பெண்ணியவாதிகளே சண்டைக்கு வந்தார்கள். கொலை, வன்புணர்வு உள்ளிட்ட பல மிரட்டல்களைச் சந்தித்தார். எனினும் முன்பின் அறியாத பல இளம் மாணவர்கள் நம்பிக்கையுடன் ராயாவிடம் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்கள். இளையோர் பலர் அவர் பக்கம் நின்றார்கள். கல்வி பயிலும் இடங்களில் ஆசிரியர்கள் அதிகாரம் மிக்க இடத்தில் இருக்கிறார்கள். அத்துமீறல்களைத் தடுக்கும் வயதோ அறிவோ மனத்திடமோ இல்லாத நிலையில் இருப்பவர்கள் மாணவர்கள். இதன் தீவிரத்தைக் கல்லூரிகள் உணர்ந்ததாகவே தெரியவில்லை. ஒரு வருடத்திற்கு பிறகு ஏதேனும் விசாரணை நடத்தப்பட்டதா எனப் பத்திரிகைகள் ஆய்வு செய்த போது பெரும்பாலும் இல்லை என்பதே பதில். சில கல்லூரிகளில் மட்டும் விசாரணைகள் நடந்தன, எதுவும் நிரூபிக்கப்படவில்லை என்று பதிலளித்தன.  ராயா சர்க்கார், 20 கிலோ எடை கூடி வாழ்க்கை சிக்கலாகி மனஅழுத்தச் சிகிச்சை பெற்றார். 

ராயா சர்க்காரின் பட்டியலில் தமிழ்நாட்டின் மியூசிக் அகாடமியின் செயலர் பப்பு வேணுகோபால்ராவ் பெயரும் இருந்தது. அவர் பதவி விலகினார். சமூக வலைத்தளங்களில் பெரும்பாலும் அடையாளத்தை மறைத்துக் கொண்டும், ஒரு சிலர் வெளிப்படையாகவும் மூத்த இசைக் கலைஞர்கள் மீது குற்றம் சுமத்தினர். புகார்களுக்குள்ளான ரவி கிரண், ஓ.எஸ்.தியாகராஜன், மன்னார்குடி ஈஸ்வரன், ஸ்ரீ முஷ்ணம் வி ராஜாராவ், வயலின் கலைஞரான நாகை ஸ்ரீராம், ஆர். ரமேஷ், திருவாரூர் வைத்தியநாதன் ஆகியோர் அந்த வருடம் மியூசிக் அகாடமி நிகழ்ச்சி நிரலில் இருந்து நீக்கப்பட்டனர். மற்ற எல்லாச் சபாக்களும் இத்தகைய முடிவை எடுத்தார்கள் எனச் சொல்ல முடியாது. கமிட்டி அமைக்கலாம், விசாரிக்கலாம் என்பதே பலரின் நிலைப்பாடாக இருந்தது. அடுத்தடுத்த வருடங்களில் அது பழைய கதையாகிப் போனது. 

நடனக் கலைஞர் சொர்ணமால்யா உள்ளிட்ட பலர் இது குறித்துத் தொடர்ந்து எழுதியும் பேசியும் வந்தனர். செயற்பாட்டாளர்களைக் கூட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். பாலியல் அத்துமீறல் தவறு என எல்லாரும் ஒப்புக்கொண்டு கலைந்து சென்றதோடு அம்முயற்சிகள் முடிந்துபோயின. மிகச் சிறிய எண்ணிக்கையை கொண்ட கர்நாடக இசைச் சமூகத்தில்  இத்தனை நபர்கள் பெயர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாவதன் பரிமாணத்தை யாரும் சட்டை செய்யவில்லை. 

“கிளாசிகல் உலகின் ஒடுக்குமுறையுள்ள கலாசாரக் கோட்பாடுகள் கேள்வி கேட்பதை தடுக்கின்றன. மரியாதையாக இருப்பது, பணிவுடன் இருப்பது, குறிப்பிட்ட வகையில் ஆடை அணிவது என ஆழ்மனத்திலும் வெளிப்படையாகவும் கீழ்ப்படிந்திருக்க வழி நடத்தப்படுகிறார்கள். இதைத்தான் குருக்களும் இசைக் கலைஞர்களும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்” என டி.எம்.கிருஷ்ணா குறிப்பிட்டார். புகார் கொடுக்க யாரும் முன்வரவில்லை என்ற ஒற்றைப் பதிலை வைத்துக்கொண்டே பல சபாக்கள் இவ்விஷயத்தைக் கடந்து சென்றன. 

தாம்பிராஸ் அசோசியேஷன் தலைவர் என்.நாராயணன், பி.எம்.சுந்தரம், டி.என்.சேஷகோபாலன், சசிகிரண் எனப் பலரின் குற்றச்செயல்கள் விவரம் தனக்கு இன்பாக்ஸில் அனுப்பப்படுவதாக சமூக வலைத்தளத்தில் தெரிவித்தார் பாடகர் சின்மயி ஸ்ரீபதா. தமிழ்நாட்டில் மீடூ இயக்கம் பரவலாக அறியப்படக் காரணமானவர் இவர். நடிகர் அர்ஜூன், இயக்குநர் சுசி கணேசன் ஆகியோர் மீதும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. நாடகக் கலைஞர் பார்த்திபராஜா, பாடகர் கார்த்திக் ஆகியோர் மீது பலர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்கள். 

பாடலாசிரியர் வைரமுத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன் தன்னிடம் அத்துமீற முயன்றதை சின்மயி சொன்ன போது அவர் குற்றச்சாட்டு உள்நோக்கம் உடையது என்றார்கள். எந்திரன் ரஜினி மேக்னட் மோடை ஆன் செய்ததும் கத்தி, அரிவாள், பெல்ட் என எல்லா இரும்பும் அவரிடம் வந்து ஒட்டிக்கொள்ளும். அப்படி ஒன்றிணைந்து விஸ்வரூபம் எடுத்து கேள்விக் கணைகளை தொடுத்தனர் பலர். எங்கே நடந்தது? எப்படி நடந்தது? ஆதாரம் எங்கே? ஏன் இவ்வளவு நாள்கள் சொல்லவில்லை? புகார் ஏன் கொடுக்கவில்லை? கோர்ட்டுக்கு ஏன் செல்லவில்லை? சங்கத்தில் ஏன் தெரிவிக்கவில்லை? என வரிசை கட்டின கேள்விகள்.  பல பிரபல  ஊடகவியலாளர்களை சின்மயி தனியாளாக எதிர்கொண்டார். அவர்களின் கேள்விக்கேற்ப காவல்நிலையம், கோர்ட், பாஸ்போர்ட் அலுவலகம், காவல்துறை உயர் அதிகாரிகள் எனப் பல இடங்களில் உதவியை நாடினார். திரைத்துறையில் பல வாய்ப்புகளையும் இழந்தார். குற்றம் சாட்டப்பட்ட வைரமுத்து, “ஒரு வாரம் வழக்கறிஞர்களுடன் விவாதித்தேன். எல்லாம் பொய், நீதிமன்றத்தில் சந்திக்கிறேன்” என்று சொன்னார்.  எந்த ஊடகவியலாளரும் அவரிடம் அடுக்கடுக்காக எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. 

சின்மயி, தன்னிடம் தனிப்பட்ட முறையில் தெரிவித்தவர்களைச் சேர்த்து இதுவரை 18 பேர் வைரமுத்துவால் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார். அத்தனை பேருக்கும் சேர்த்துக் கேட்கப்பட்ட கேள்விகளை எதிர்கொண்டு தனியாகக் களமாடினார். அவருடைய துணிவான முயற்சியின் விளைவாக புவனா சேஷன், சிந்துஜா போன்ற சிலர் தாங்களும் பாதிக்கப்பட்டதை வெளிப்படையாகப் பேசினர். ஏ.ஆர்.ரஹ்மான் தங்கை ரெஹானா, தான் சின்மயி சொல்வதை நம்புவதாகவும் தன்னிடமும் சிலர் இப்படிச் சொல்லி இருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார். திரையுலகம் அமைதி காத்தது. விழாக்கள், விருதுகள், அரசு சார்ந்த நிகழ்வுகள் என முதல்வர் உள்ளிட்ட அதிகாரம் மிக்கவர்களுடன் வைரமுத்து இருக்கும் புகைப்படங்கள் தொடர்ந்து செய்திகளில் இடம்பிடிக்கின்றன. 

பத்மா சேஷாத்ரி பாலபவன் பள்ளி ஆசிரியர் ராஜகோபால் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டைத் தொடர்ந்து மீடூவின் அடுத்த அலை ஒன்று வந்தது. மகரிஷி வித்யா மந்திர், செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி, சிஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளி, செட்டிநாடு வித்யாஷ்ரமம் பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளி ஆசிரியர்கள் பற்றிப் பொதுவெளியில் பேசினர். அடுத்த தலைமுறைக் குழந்தைகள் இன்ஸ்டாவைக் களமாகக் கொண்டு தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை வெளியுலகுக்குச் சொல்லினர். இந்நாள் மாணவர்களுடன் முன்னாள் மாணவர்களும் கைகோத்தனர். சில ஆசிரியர்கள் கைதும் செய்யப்பட்டார்கள். 

கோணங்கியைப் பற்றிய கார்த்திக் ராமச்சந்திரனின் புகாரைத் தொடர்ந்து ஷியாம்சுந்தரும் வெளிப்படையாக பேசினார். “இன்னும் இதைக் கண்டும் காணாததுபோல இருப்பவர்களின் மௌனம் அருவருப்பாக இருக்கிறது” எனப் பதிவு செய்தார். கவிஞர் இளங்கோ கிருஷ்ணன், “என்னிடமும் ஒரு சீனியர் அத்துமீற முயன்றார். நான் உதறிவிட்டு வந்துவிட்டேன்” எனக் குறிப்பிட்டார். சில எழுத்தாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். தமஎச அமைப்பும் கண்டனம் தெரிவித்தது. 

எனினும் பாதிக்கப்பட்டவர் மனநிலையைவிடக் குற்றம் சாட்டப்பட்ட கலைஞனின் நுண்ணுணர்வு அதிகம் விவாதிக்கப்பட்டது. அரசியல், கலாசாரம், ஜாதி என்ற வரிசையில் இம்முறை கலைஞன் என்பது முன்னிறுத்தப்பட்டது. “இலக்கியவாதியிடம் மிக அரிதாக அதீதப் பிறழ்வுகளும் இருக்கலாம். அதுவும் புரிந்து கொள்ளப்பட வேண்டும். ஒரு பாமரனிடம் அது இருந்தால் அது மிகக் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டியதும் தண்டிக்கப்பட வேண்டியதும்தான். ஏனென்றால் அவன் எதையும் உருவாக்குபவன் அல்ல” என்றார் எழுத்தாளர் ஜெயமோகன். ‘எல்லா விலங்குகளும் சமம் ஆனால் சில விலங்குகள் சமத்துக்கும் மேலே’ எனச் சொல்லும் அனிமல் ஃபார்ம் பன்றிகள் நினைவுக்கு வருகின்றன. 

அதிகாரத்தில் இருக்கும் நபர், தன் அதிகாரத்துக்கு உட்பட்ட எளியவரைப் பாலியல் தொல்லைக்கு உட்படுத்துகிறார். பாதிக்கப்பட்டவர் தன் இயலாமையால் மனச்சிதைவுக்கு ஆளாகிறார். வெகுசிலர் இதிலிருந்து வெளிவந்து தான் பாதிக்கப்பட்டதை வெளிப்படையாகச் சொல்கிறார்கள். தன்னைப் போல் மேலும் பலர் பாதிக்கப்படுவதைத் தடுக்க முனைகிறார்கள். அதிகபட்சம், தான் தனியாக இல்லை என்ற ஆறுதலை மீடூ தருகிறது. அவமானமும் கண்டனமுமே தண்டனை என்று தீர்ப்பெழுதும் உரிமை, வேடிக்கை பார்ப்பவருக்குக் கிடையாது. விதவிதமான காரணங்களைக் கண்டுபிடித்து முட்டுக்  கொடுக்காமல், பால் பேதம், அரசியல் அதிகார மிரட்டல், கலையைக் காப்பற்றும் கெஞ்சல் ஏதுமின்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் இந்த சமூகம். அடுத்த தலைமுறை நம்மை கவனித்துக் கொண்டிருக்கிறது என்பதை நினைவில் வையுங்கள். 

08/03/2023 அன்று மெட்ராஸ் பேப்பரில் பதிப்பிக்கப்பட்ட கட்டுரை.