காஷ்மீர்: வாழ்வும் வன்முறையும்

பதினேழு வயது காஷ்மீரி சிறுமியான மும்தாஸாவின் கால் முறிந்திருந்தது. எனினும் சுற்றுலா வந்திருந்த பத்து வயதுச் சிறுவனைக் காப்பாற்ற, அவனை முதுகில் சுமந்து கொண்டு தன்னுடைய மண் குடிசையை நோக்கி ஓடினார். பஹல்காம், பைசரன் மைதானத்தில் இருந்து அவர்கள் வீடு ஒரு கிலோமீட்டர் தூரம்தான். அன்று வழக்கம்போலச் சுற்றுலாப் பயணிகளுடன் வழிகாட்டியாக மைதானத்துக்குச் சென்றிருந்தார். ஏப்ரல் 22ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மதியம் மூன்று மணியளவில், மேகி செய்து சாப்பிட்டுவிட்டு இயற்கையை ரசித்துக்கொண்டிருந்தனர். வெடிச்சத்தம் கேட்டதும் ஏதோ பட்டாசுச் சத்தம் என்றே அனைவரும் நினைத்துள்ளனர். துப்பாக்கிச் சத்தம் என்றறிந்ததும் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் நடக்கும் சண்டை என்றெண்ணி, கீழே படுத்துக் கொள்ளச் சொல்லி அறிவுறுத்தியுள்ளனர் சுற்றுலா வழிகாட்டிகள். பலர் மூலைக்கொருவராக ஓடினர். சிலர் தரையோடு தரையாகப் படுத்தனர். 

பயங்கரவாதிகள் சுட்டுக்கொண்டே நெருங்குவதை உணர்ந்து அங்கிருந்து பயணிகள் வெளியேற உதவத் தொடங்கினர் வழிகாட்டிகள். உடைந்த காலுடன் மும்தாஸா சிறுவனைத் தூக்கிக் கொண்டு தன்னுடன் பலரை அழைத்துக்கொண்டு தன் வீட்டை அடைந்தார். 

படிக்க ஆசையிருந்தாலும் வறுமையின் காரணமாக பள்ளி செல்வதை நிறுத்தியவர் மும்தாஸா. அவர்கள் வீட்டைக் கடந்து மேலேறும் சுற்றுலாப் பயணிகளுக்குத் தான் வளர்க்கும் முயல் குட்டியை வாடகைக்கு கொடுத்துப் படம் எடுத்துக்கொள்ள பத்து ரூபாய் வசூலிப்பார். கோவிட் நேரத்தில் இந்த வருமானம்தான் கைகொடுத்தது. ரேபிட் கேர்ள் எனப் பிரபலமானவர். டூரிஸ்ட் வழிகாட்டியாகத் தன் கடமை பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதே என நினைத்தவர் இருள் சூழும் நிலையில் மீண்டும் மலையேறிச் சென்று மேலும் சிலருக்கு உதவினார்.

குதிரை ஓட்டியான ஆதில் ஷாவும் அப்படித்தான் எண்ணினார். சுற்றுலாப் பயணியைக் காப்பாற்றப் போராடித் தன் உயிரைக் கொடுத்தார். அவருடைய உறவினரான நசகத் அஹமத் ஷா, துரிதமாகச் செயல்பட்டு வேலியை உடைத்துக்கொண்டு சுற்றுலாப் பயணிகளின் குழந்தைகளை அணைத்துப் பாதுகாத்து வெளியேறினார். டிரெக்கிங் செல்லும் காட்டுவழிப் பாதையின் வழியாகப் பதினோரு பேரை பத்திரமாக அழைத்துச் சென்று அவர்கள் ஊர் போய்ச் சேரும்வரை துணையிருந்தார். தன் உயிரைக் காப்பாற்றிய அஹமத்துக்கு, சட்டிஸ்கர் பிஜேபி இளைஞரணித் தலைவர் ஆனந்த் உட்படப் பலரும் மீடியாக்களின் வழியாக நன்றி தெரிவித்தனர்.

பைசரன் மைதானத்தில் இறந்துபோன 26 பேருக்கு இத்தகைய நல்வாய்ப்பு கிடைக்கவில்லை. காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ளது பஹல்காம் மலைவாசஸ்தலம். அங்குள்ள பைசரன் மைதானம், காடு, மலை சூழ்ந்த பகுதி. பெரும்பாலும் மலையேற்றப் பயணத்தின் மூலமோ குதிரை மூலமோ அங்கு செல்கின்றனர். பெரிய திறந்தவெளி மைதானம். அடர்ந்த மரங்களும் பனியும் இருப்பதால் மினி சுவிட்சர்லாந்து என்றழைக்கப்படுகிறது. சுற்றுலாப் பயணிகள் மலையேறி வந்த களைப்பு தீர ஓய்வாகப் பொழுதைக் கழித்துப் படம் பிடித்து மகிழ்வர். ஜிப்லைன் போன்ற சாகச விளையாட்டுகள் சுற்றுலா சீசனில் பயன்பாட்டுக்கு வரும்.

மைதானத்தைச் சுற்றியுள்ள மரங்களின் மறைவில் இருந்து வெவ்வேறு பகுதிகளில் தாக்குதல் ஆரம்பித்ததாகச் சொல்கிறார்கள் பயணிகள். மலைகளில் பட்டு எதிரொலித்ததால் குறிப்பாக எந்தப் பக்கத்தில் இருந்து துப்பாக்கிச் சத்தம் வருகிறது என்பதை அறிய இயலவில்லை. ஓடியவர்களை நோக்கித் தோரயமாகச் சுட்டுவிட்டுத் தரையோடு தரையாகப் படுத்திருந்தவர்களை நோக்கி வந்தனர் பயங்கரவாதிகள்.

சந்தோஷ் ஜகடேலை இஸ்லாமியப் பிரார்த்தனையான கல்மா சொல்லச் சொன்னார்கள். அவருக்குத் தெரியவில்லை. தாமதிக்காமல் அவரைச் சுட்டுக் கொன்றனர். அருகில் இருந்த மற்ற ஆண்களை விசாரணையின்றிச் சுட்டனர். பத்தே நிமிடத்தில் மைதானத்தில் ஆங்காங்கே தம் உற்றார் உறவினர் பலரைப் பறிகொடுத்தனர் அப்பாவி மக்கள். திருமணமாகி ஒரு வாரமே ஆகியிருந்த கப்பற்படை அதிகாரி வினய் நர்வால், உளவுத்துறை அதிகாரி ரஞ்சன், பிப்ரவரியில் திருமணம் செய்து தேனிலவு கொண்டாட வந்த தொழிலதிபர் ஷுபம், அப்பாவுடன் ஆன்மிகச் சுற்றுலா வந்திருந்த இளைஞர் சுமித், ஐபிஎம் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றும் பெங்களூரைச் சேர்ந்த மதுசூதன் ராவ் என இறந்துபோன ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்தின் கண்ணெதிரில் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.

சந்தோஷ் ஜகடேலின் மகளையும் மற்றவர்களையும் அங்கிருந்த குதிரையோட்டிகள், கம்பளி விற்பனை செய்யும் கடைக்காரர்கள், சுற்றுலா வழிகாட்டிகள் இணைந்து மீட்டு மருத்துவமனைக்கும் பாதுகாப்பான இடங்களுக்கும் அனுப்பினர்.

இவர்கள் போய்ச் சேர்ந்தபிறகே விஷயம் அறிந்த ராணுவம்  அங்கே போனது. முதலுதவி, ராணுவ முகாம் அனைத்தும் மைதானத்தில் இருந்து ஆறு கிலோ மீட்டர் தூரம். இவ்வளவு பேர் கூடியிருந்த மைதானத்தில் காவலுக்கு யாருமே இல்லை. வழக்கமாக ஜூன் மாதத்தில் தொடங்கும் அமர்நாத் யாத்திரையை ஒட்டியே பைசரன் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் வருவர். இவ்வாண்டு முன்னதாகவே சுற்றுலாப் பயணிகளை மேலே அழைத்துச் செல்லத் தொடங்கிவிட்டனர் வழிகாட்டிகள். இதுபற்றி உள்ளூர் நிர்வாகம் எங்களுக்குத் தகவல் தெரிவிக்காததால் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று சொல்லியிருக்கிறது மத்திய அரசு.

பாதுகாப்பு கொடுக்கவேண்டிய ராணுவம் மட்டுமின்றி உளவுத்துறையும் மத்திய உள்துறையின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. அமெரிக்கத் துணை அதிபர் ஜேடி வான்ஸ், இந்தியா வந்திருக்கும் நேரம் இது. இப்படியான சந்தர்ப்பங்களில் அதிகபட்ச எச்சரிக்கையுடன் இருப்பார்கள். எனினும் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான பயணிகள் அந்த வாரம் முழுக்க மலையேறியதை அரசு கவனிக்கவில்லை, ஆனால் பயங்கரவாதிகள் கவனித்திருக்கிறார்கள். 

இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது டிஆர்எஃப். (TRF – The Resistance Front – எதிர்ப்பு முன்னணி). ஆர்டிகிள் 370 நீக்கப்பட்ட அதே 2019ஆம் ஆண்டில் இருந்து செயல்படுகிறது இந்த இயக்கம். மிகப் பிரபலமான அமைப்பு என்று சொல்வதற்கில்லை. பாகிஸ்தானை அடிப்படையாகக் கொண்ட லஷ்கர் இ தொய்பாவின் சார்பு அமைப்பு. இரண்டு நாள் இடைவெளியில் இதற்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என அறிவித்தது. இந்திய சைபர் உளவுத்துறை ஊடுருவி இப்படி ஒரு தகவலை எங்கள் வலைத்தளத்தில் வெளியிட்டது என்றது. காஷ்மீரிகள் வன்முறைக்கெதிராகத் திரண்டெழுந்ததும், பாகிஸ்தான் அறிவுறுத்தலும் இப்படி மாற்றிச் சொல்லக் காரணம். 

காஷ்மீர் அமைதிப் பூங்கா ஆகிவிட்டது என்கிற பிம்பம் ஒரே நாளில் சுக்கலாகிவிட்டது. தொடர்ந்து காஷ்மீரில் வன்முறையும், படுகொலையும் நடந்துகொண்டிருப்பதைப் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. மீடியாக்கள் துணையிருக்கும் தைரியத்தில் மோடி அமைதியைக் கொண்டுவந்துவிட்டதாகப் பரப்புரை செய்வது உண்மையில்லை எனக் காஷ்மீரிகள் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தனர். வெறுப்பும், வெற்று சவால்களும், அரசியலும் இணைந்து களமாடத் தொடங்கிய அடுத்த நாள் காலையில் காஷ்மீரிகள் அன்பையும் ஒற்றுமையும் வலியுறுத்தி ஊர்வலம் சென்றனர். கடைகளை அடைத்து வன்முறைக்குத் தங்கள் எதிர்ப்பையும் இறந்தோர்க்கு அஞ்சலியையும் பதிவு செய்தனர்.

*

29/04/2025 அன்று மெட்ராஸ் பேப்பரில் பதிப்பிக்கப்பட்ட கட்டுரை.