கிரிப்டோ ராணியின் மோசடி சாம்ராஜ்யம்

அமெரிக்க எஃப்.பி.ஐ.யின்  தேடப்படுபவர்கள் பட்டியலில் முதல் பத்து இடங்களில் இருப்பவர் ருஜா இக்னடாவா. இந்தப் பட்டியலில் தற்போது இருக்கும் ஒரே பெண் இவர் மட்டும்தான். இவரைப் பற்றிய தகவல் தெரிவித்தால் கிடைக்கும் பரிசுத் தொகை எண்பது லட்சத்துக்கு மேல். அப்படி என்ன செய்தார் ருஜா? நான்கு பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீட்டாளர்களிடம் இருந்து ஏமாற்றியிருக்கிறார். இந்திய மதிப்பில் சுமார் முப்பத்தாராயிரம் கோடி ரூபாய். இருபத்தோராம் நூற்றாண்டின் மிகப் பெரிய பண மோசடியாக இருக்கக்கூடும் இது. 

1980-ல் பல்கோியாவில் பிறந்தவர் ருஜா இக்னடாவா. இளம் வயதில் இருந்தே பணக்காரர் ஆக வேண்டும் என்ற கனவுடன் இருந்தவர். சிறுமியாக இருக்கும்போதே குடும்பத்துடன் ஜெர்மனிக்குக் குடிபெயர்ந்தார். ஜெர்மனியில், பன்னாட்டுச் சட்டம் தொடர்பாகப் படித்து முனைவர் பட்டம் வாங்கினார். 2012இல் தந்தையின் நிறுவனத்தில் நடந்த பண மோசடி தொடர்பான வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டுத் தண்டனை பெற்றார் எனவும் உள்ளூர்ப் பத்திரிகைகள் தெரிவிக்கின்றன. என்றாலும்கூட அவருடைய கல்விப் பின்புலமும் கவர்ந்திழுக்கும் பேச்சும் மக்களை அவர் மீது நம்பிக்கை கொள்ள வைத்தன. ஆங்கிலம், ஜெர்மன், பல்கேரியன் உள்ளிட்ட பல மொழிகளைச் சரளமாகப் பேசும் திறன் உடையவர். 

2013இல் பிக் காயின் எனும் மல்டி லெவல் மார்க்கெட்டிங் திட்டத்தை தொடங்கினார். ஒருவர் பத்து பேரைச் சேர்க்க வேண்டும். அந்த பத்து பேர் தலைக்கு இன்னொரு பத்து நபர்களைச் சேர்க்கவேண்டும். இரண்டாவது கட்டத்தில் உள்ள இந்த நூறு பேரும் தலைக்குப் பத்து பேர் என சேர்த்துக்கொண்டே போக வேண்டும். பணம் கட்டித்தான் திட்டத்தில் சேர வேண்டும். அடுத்தடுத்த நபர்கள் சேரச்சேர இணைப்புச் சங்கிலியில் மேலே உள்ளவர்களுக்கு கமிஷன் கிடைக்கும். இதுதான் பிரமிட் திட்டம் அல்லது எம்எல்எம் எனப்படும் மல்டி லெவல் மார்க்கெட்டிங். இந்த பிக் காயின் மோசடித் திட்டம் வெற்றி பெறவில்லை. 

அடுத்ததாக 2014-ல் ஒன்காயின் எனும் கிரிப்டோ கரன்சியை ருஜா அறிமுகப்படுத்தினார். கூடவே இந்த ஒன்காயினை விற்க ஒன் நெட்வொர்க் எனும் மல்டி லெவல் மார்க்கெட்டிங். தோசையின் மேல் சீஸைப் போட்டு பீட்சா எனச் சொல்வதைப்போல, பழைய ஏமாற்றுத் திட்டம். புதிய பெயர். கிரிப்டோ கரன்சி குறித்த தகவல்கள் முழுமையாக மக்களை சென்றடையாத ஆரம்பக் காலக்கட்டத்தை ருஜா நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார். 

வங்கி அல்லது அரசாங்கத்தின் மூலமாக இல்லாமல் பரவலாக்கப்பட்ட கணினிகள் மூலம் நிர்வாகம் செய்யப்படும் டிஜிட்டல் சொத்துதான் கிரிப்டோகரன்சி. பிட்காயின் என்பது பிரபலமான கிரிப்டோகரன்சி. ஈதெரியம், டெத்தர், பினான்ஸ் காயின் எனப் பல உள்ளன. இவை அரசாங்கத்தால் முறையாக அங்கீகாரம் செய்யப்பட்டவை அல்ல. எனவே ஆபத்தான முதலீடாகவே கருதப்படுகின்றன. என்றாலும் இவை பொன்சி திட்டம் கிடையாது. 

பொன்சி முறைகேடு என்பது, ஆரம்பத்தில் இணையும் முதலீட்டாளர்களுக்கு, பின்னர் இணையும் முதலீட்டர்களின் பணத்தை லாபம் எனக் கொடுப்பது. எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க முதல் நிலையில் உள்ள தனிநபருக்கோ அல்லது நிறுவனத்துக்கோ பணப்பலன் கிடைக்கும். கடைசியாகச் சேர்ந்தவர்கள் நட்டமடைவார்கள். 

அரசாங்க சட்ட திட்டங்களுக்கு உட்படவில்லை என்றாலும் ப்ளாக்செயின் தொழில்நுட்பம் மூலம் கிரிப்டோ கரன்சிகள் பாதுகாப்பாக பதிவு செய்யப்படுகின்றன. தங்கம், வைரம் போன்ற உலோகங்கள் எப்படிக் குறிப்பிட்ட அளவுதான் இருக்கிறதோ அப்படி இதற்கும் ஒரு வரையறை இருக்கிறது. அதனால்தான் கணிதப் புதிர்களுக்குத் தீர்வு கண்டு காயின்களை வெல்லும் இந்த முறையை மைனிங் எனக் குறிப்பிடுகிறார்கள். சப்ளை அண்ட் டிமாண்ட் விதியின்படி, குறிப்பிட்ட அளவே உள்ளதால்தான் விலை ஏறிக்கொண்டே போகிறது. 

பல வலைத்தளங்களிலும், சில ரீடெய்ல் கடைகளிலும் இவற்றைப் பணம் போலப் பயன்படுத்த முடியும். சந்தைகளில் பட்டியலிடப்பட்டு விலை ஏற்றமும் இறக்கமும் வெளிப்படையாக தெரியும்படி இருக்கிறது. எனவேதான் இந்த கிரிப்டோ கரன்சிகள் பொன்சி முறைகேடுகள் அல்ல; அபாயகரமான நிச்சயமற்ற முதலீடு எனும் வரையறைக்குள் இருக்கிறது. டிஜிட்டல் மட்டுமின்றி தற்போது டெபிட், கிரெடிட் கார்டுகள் வடிவத்தில் நிஜ உலகிலும் இவை கால் பதிக்கின்றன. இந்த டிஜிட்டல் பணம்தான் எதிர்காலம் என்றும், தவறாகக் கையாளப்படலாம் என்பதால் தடை செய்ய வேண்டும் என்றும் இருவேறு நிலைப்பாடுகள் உள்ளன. எலான் மஸ்க் கூட கிரிப்டோ கரன்சிக்கு எதிர்காலம் இருப்பதாகக் கூறி பெரியளவில் முதலீடுகள் செய்துள்ளார். பிரபலம், விலை ஏற்றம், அதிக பயன்பாடு காரணமாக பல நாடுகள் இதை முறைப்படுத்தும் விதிகளைப் பரிசீலனை செய்து கொண்டிருக்கின்றன. 

இந்த கிரிப்டோகரன்சிக்கும் ருஜா இக்னடாவாவின் ஒன்காயினுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் அப்படியே நேர் எதிர். ஒன் காயினை அதன் அங்கீகரிக்கபட்ட ஒன்காயின் தளத்தில் மட்டுமே வாங்க விற்க முடியும். அதன் விலையேற்றம் வெளிப்படையானது அல்ல. காலையில் எழுந்து தனக்குப் பிடித்த எண்ணைத் தட்டச்சு செய்து அவரே விலையை ஏற்றிக்கொள்ளலாம். தொடர்ந்து இப்படித்தான் அவர் விலையை ஏற்றிக்கொண்டே போய் முதலீட்டாளர்களை நம்ப வைத்தார். ப்ளாக்செயின், பித்தளைச் செயின் தொழில்நுட்பம் எல்லாம் என்ன என்றுகூட அவர்களுக்குத் தெரியாது. எல்லாத் தரவுத் தளங்களிலும் இருக்கும் சாதாரண எஸ்க்யூஎல் (SQL) தொழில்நுட்பம்தான் பயன்படுத்தப்பட்டது. அதுதான் வேண்டிய நேரத்தில் உடனே விலை மாற்றம் செய்வதற்கு ஏற்ற தொழில்நுட்பம். 

ஒன்காயின் நிறுவனம் ஒன்காயின்களை நேரடியாக விற்பனை செய்யவில்லை. மைனிங் எல்லாம் கிடையாது. ஒன்காயினில் முதலீடு செய்வது எப்படி? கிரிப்டோகரன்சி என்றால் என்ன? ஒன்நெட்வொர்க் எனும் மல்டி லெவல் மார்க்கெட்டிங் என்றால் என்ன? எப்படி நிறைய பேரை சேர்த்துக் கோடீஸ்வரர் ஆவது? என்பது போன்ற தகவல்கள் அடங்கிய பாடப் புத்தகங்களைத்தான் விற்றார்கள். இந்த எஜுகேஷன் மெட்டீரியல் பெரும்பாலும் இணையத்திலோ அல்லது விக்கிபீடியாவில் இருந்தோ எடுத்த தகவல்கள் அடங்கிய பிடிஎஃப் கோப்பு. 

ஸ்டார்டர், ட்ரேடர், ப்ரோ ட்ரேடர், எக்ஸிகியூட்டிவ், டைகூன், ஃப்ரீடம், இன்பினிட்டி என விதவிதமான எஜுகேஷன் பேக்கேஜ்கள். ஒவ்வொரு பேக்கேஜிலும் சில ஒன்காயின்களும் கிடைக்கும். நூறு முதல் இரண்டு லட்சம் வரை மதிப்புடையவை. எல்லாமே டாலர்கள் மற்றும் யூரோக்களில். மக்கள் பல லட்சங்களையும் கோடிகளையும் கொடுத்து இந்த பிடிஎஃப் கோப்பு பேக்கேஜ்களை வாங்கினார்கள். உடன் கிடைக்கும் பயனர் எண்ணைக் கொண்டு, ஒன்காயின் வலைத்தளத்தில் பயனராக உள்நுழைந்து தங்களிடம் இருக்கும் ஒன்காயின்கள் மதிப்பை பார்த்துக்கொள்ளலாம். சில ஆயிரம் டாலர்கள் மில்லியன்களாக மதிப்பு உயர்வதைப் பார்த்ததும் இன்னும் அதிகம் முதலீடு செய்தனர் மக்கள். தனக்குத் தெரிந்தவர்களையும் சேர்த்துவிட்டனர். 

ஒன்காயினை மற்ற கிரிப்டோகரன்சிகள் போல நிஜ உலகில் பயன்படுத்த முடியாது. டிஜிட்டல் உலகிலும் மற்றத் தளங்களில் இதற்கு மதிப்பு ஏதும் கிடையாது. ஒன்காயின் தளத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும். அந்தத் தளத்தில் இருக்கும் அதன் மதிப்பும் தன்னிச்சையாக மிகைப்படுத்தப்பட்ட ஒன்றே. ஒன் காயின் தொடங்கப்பட்ட அடுத்த மாதம் முதலே இது ஒரு மோசடித் திட்டம் என்ற எச்சரிக்கைகள் வரத் தொடங்கிவிட்டன. மக்கள்தான் நம்பத் தயாராக இல்லை. 

ஏனெனில் பிட்காயின் பாேன்ற மற்ற கிரிப்டோ கரன்சிகள் குறித்தும் இப்படி மோசடிச் செய்திகள் வந்து கொண்டுதான் இருந்தன. சில காலத்துக்குப் பிறகு பிட்காயினில் முதலீடு செய்தவர்கள் பில்லியனர் ஆகிவிட்டதாகவும் செய்திகள் வந்தன. இதைச் சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஒன்காயின் நிறுவனம் இதெல்லாம் நம் வளர்ச்சியின் மீது பொறாமை கொண்டவர்கள் செய்யும் வெறுப்பு பிரச்சாரம் என அறிக்கைகள் வெளியிட்டது. நாமும் பிட்காயின் மாதிரி பெரிய அளவில் பிரபலமாவோம் என்றது. சமூக வலைத்தளங்களிலும் தங்களைக் கேள்வி கேட்பவர்களை கேலி செய்து மீம்ஸ், வீடியோ கன்டென்ட்களை பரப்பினார்கள். 

இன்னும் சில மாதங்களில் சந்தையில் பட்டியலிட்டதும் நம்மை உலகமே திரும்பிப் பார்க்கும். சாதாரண மக்கள் பணம் சம்பாதிப்பதை விரும்பாத கெட்டவர்கள் நிறைந்த உலகம் இது என்றெல்லாம் சொல்லி மூளைச் சலவை செய்யப்பட்டார்கள் முதலீட்டாளர்கள். ருஜாவின் தோற்றமும், படிப்பும், பேச்சும் இவற்றுக்குத் துணை நின்றன. மேடைகளில் மட்டுமல்ல, அலுவலகத்துக்கு வரும்போது கூட பளபள டிசைனர் உடைகளில், வைரக்கற்கள் மின்னும் ஆபரணங்கள் அணிந்துதான் வருவார் என்கிறார் ஒன்காயின் பணியாளர் ஒருவர். 

லண்டனில் 2016-ல் நடைபெற்ற ஒன்ஃபேமிலி நிகழ்வில் ‘திஸ் கேர்ள் இஸ் ஆன் ஃபயர்’ எனும் பாடல் ஒலிக்க மேடையில் தோன்றிய ருஜா தங்கள் நிறுவனத்தின் வெற்றிகளைப் பட்டியலிட்டார். பிட்காயினுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும், விரைவில் முதலிடத்தை பிடித்துவிடுவோம் என்றும் கூறினார். பத்திரிகைகள் தன்னை பிட்காயின் கில்லர் எனக் குறிப்பிடுவதாகப் பெருமை பேசினார். இன்னும் இரண்டு வருடங்களில் பிட்காயின் இல்லாமல் போய்விடும், ஒன்காயின்தான் கிரிப்டோகரன்சியின் எதிர்காலம் என்றும் அறைகூவல் விடுத்தார். 

இந்தக் காலக்கட்டத்தில்தான் ப்ளாக்செயின் தொழில்நுட்பத்தை ஒன்காயினில் பயன்படுத்துவது பற்றி பிஜார்ன் பெர்கியிடம் ஒன்காயின் நிறுவனம் தரப்பில் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்தது. அந்த தலைமைத் தொழில்நுட்ப அதிகாரி பதவியை மறுத்த பிஜார்ன் தொடர்ந்து ஒன்காயின் குறித்துத் தேடி அது மோசடி நிறுவனம் என தகவல் வெளியிட்டார். சட்டப்படியும் சட்டவிரோதமாகவும் அவரைப் பேசவிடாமல் தடுக்கும் நடவடிக்கைகளில் இறங்கியது ஒன்காயின் நிறுவனம். இதன் பின்னணியில் பல்கேரியாவின் போதை மருந்துக் கடத்தல் மன்னனின் பெயர் பத்திரிகைகளில் அடிபடுகிறது. 

டிமோர்த்தி கர்ரி எனும் கிரிப்டோகரன்சி ஆக்டிவிஸ்ட், முதலீட்டாளர் ஜென் மெக்ஆடம் உடன் பேசி அவர் ஒரு மோசடி திட்டத்தில் சிக்கியிருப்பதைப் புரிய வைத்தார். ஜென் தொடர் கேள்விகளை ஒன்காயின் நிறுவனத்தாரிடம் கேட்டு இது ப்ளாக்செயின் அல்ல எஸ்கியூஎல் டேடாபேஸில் செயல்படுகிறது எனும் விளக்கத்தையும் பெற்றார். அதற்குள் காலம் கடந்திருந்தது. ஜென் மெக்ஆடம் எட்டாயிரம் யூரோக்களும், அவர் சொல்லி, நண்பர்களும், உறவினர்களும் இரண்டு லட்சம் யூரோக்களும் ஏற்கனவே முதலீடு செய்திருந்தனர். டெய்லி மிரர் எனும் பிரிட்டிஷ் பத்திரிகையும், நார்வே, இத்தாலியில் செயல்படும் அமைப்புகள் சிலவும் இந்த ஒன்காயின் குறித்து எச்சரிக்கை செய்தன. 

இதெல்லாம் நடக்கும் போதே, 127 நாடுகளில் முப்பது லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஒன்காயினில் முதலீடு செய்து கொண்டே இருந்தனர். விவரங்கள் வெளியே வரவர இதன் பிரம்மாண்டம் பலருக்குப் புரிய ஆரம்பித்தது. 

எல்லா குற்றச்சாட்டுகளுக்கும், இதெல்லாம் வெறுப்புப் பிரசாரம் என்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தது ஒன்காயின். எனினும், விசாரணை வேகமெடுப்பதை உணர்ந்த ஒன்காயின் நிர்வாகிகள் பணத்தைச் சுருட்டிக்கொண்டு தலைமறைவாகினர். ருஜா இக்னடாவாவை கடைசியாக மக்கள் பார்த்தது 2017-ல். எஃப்பிஐ வசம் உள்ள தகவலின்படி பல்கேரியாவில் இருந்து கிரேக்க நாட்டுக்கு சென்று பிறகு அங்கிருந்து தலைமறைவாகிவிட்டார். ஆயுதம் தாங்கிய அடியாட்களுடன் பயணம் செய்யும் இவர் முகமாற்று அறுவை சிகிச்சை மூலம் தன் முக அமைப்பை மாற்றி இருக்கலாம் என நம்புகிறது ஃஎப்பிஐ. 

இந்தத் தலைமறைவு செய்திகளுக்குப் பிறகும் நிறுவனம் தொடர்ந்து நடத்தப்பட்டது. ருஜாவின் சகோதரர் தலைமைப் பொறுப்புக்கு வந்தார். முதலீடுகளும் தொடர்ந்து கொண்டுதான் இருந்தன. ருஜாவின் கதையை பிபிசி பாட்காஸ்ட்டில் வெளியிட்ட ஜேமி பேர்லெட், ஒன் காயின் கிரிப்டோ கரன்சி முதலீட்டு நிறுவனம் என்ற நிலையில் இருந்து நம்பிக்கை சார்ந்த வழிபாடு நிலையை அடைந்துவிட்டது என குறிப்பிடுகிறார். சில ஆயிரங்கள் கொடுத்தால், தான் பில்லினியர் ஆகிவிடுவோம் எனும் பொய்யை நம்பவே மக்கள் விரும்பினார்கள். 

தாய்லாந்தில் தலைமறைவாக இருந்த, இந்த மோசடி நிறுவனத்தைத் தொடங்கிய சக பங்குதாரரான செபாஸ்டியன் க்ரீன்வுட் 2018-ல் கைது செய்யப்பட்டு அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டார். அதன் பிறகு கைது செய்யப்பட்ட ருஜாவின் சகோதரர் கான்ஸ்டைன் இக்னடோவா 2019-ல் தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். பல ஆண்டு கால சிறைத் தண்டனையை இருவரும் எதிர் நோக்கி உள்ளனர். 

சைனாவில் கிட்டத்தட்ட 98 பேர் கைது செய்யப்பட்டு தோராயமாக இருநூற்றம்பது கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலும்கூட 2017-ல் மும்பையில் பதினெட்டு பேர் கைது செய்யப்பட்டு சுமார் ஐம்பது கோடி பறிமுதல் செய்யப்பட்டது. ஜெர்மன், சைனா, அமெரிக்கா, பல்கேரியா, பிரிட்டன் என உலகம் முழுக்க வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நிறுவனத்தில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்ட நிலையிலும் ருஜா எங்கிருக்கிறார் என்ற தகவல் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை. யூரோபோல் கூட தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து தகவல் அளிப்பவருக்கு ஐந்தாயிரம் யூரோ பரிசுத்தொகை தரப்படும் எனத் தெரிவித்துள்ளது. 

2022ல் ஜெர்மனி அரசுத்தரப்பு வழக்கறிஞர்கள் அவருடைய லண்டன் வீட்டை விற்க எடுத்த நடவடிக்கைகளில் மீண்டும் ருஜாவின் பெயர் பத்திரிகைகளில் அடிபட்டது. தன்னை நம்பிய முதலீட்டாளர்கள் பற்றி ருஜா என்ன நினைத்தார் தெரியுமா? நிறுவனம் ஆரம்பிக்கும் போது செபாஸ்ட்டியன் கிரீன்வுட்டுக்கும், ருஜா இக்னடோவாவுக்கும் நடந்த இமெயில் உரையாடலில் அந்த தகவல்கள் இருக்கின்றன. இவை நீதிமன்றத்தில் ஆதாரங்களாகத் தாக்கல் செய்யப்பட்டன. 

இந்த இமெயில்களில், இது கிரிப்டோகரன்சி மைனிங் எல்லாம் இல்லை மக்களுக்கு அப்படித்தான் சொல்லப் போகிறோம்; பணத்தை எடுத்துக்கொண்டு யார் மேல் பழியைப் போடுவது என்பதற்கும் ஒரு திட்டத்தை தயாராக வைத்திருக்கவேண்டும், என்றெல்லாம் தெளிவாகத் திட்டம் தீட்டுகிறார்கள். ஒன் காயினை குப்பைக் காயின் எனவும், முதலீட்டாளர்களை பைத்தியக்காரர்கள், முட்டாள்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்கள். கிரிப்டோ ராணியும், போதைப்பொருள் கடத்தல் ராஜாவும் சேர்ந்து நடத்திய மோசடி சாம்ராஜ்யத்தில் பலியானது பேராசை கொண்ட அப்பாவி மக்கள்தான்.

01/02/2023 அன்று மெட்ராஸ் பேப்பரில் பதிப்பிக்கப்பட்ட கட்டுரை.