ஆசாத் காஷ்மீர், பாகிஸ்தான் எல்லையில் இருந்தாலும் அந்நாட்டு அரசியலின் மையப்புள்ளி அதுவே. கில்கிட் பல்டிஸ்தானுக்குக் கீழே, தெற்கிலும் மேற்கிலும் பாகிஸ்தானின் பஞ்சாப்பும், கைபர் பக்துன்வாவும் இருக்க, கிழக்கில் இந்தியாவின் ஜம்மு காஷ்மீரின் லைன் ஆஃப் கன்ட்ரோலை ஒட்டியிருக்கும் நிலத்துண்டு ஆசாத் காஷ்மீர் எனப்படும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீர். குத்துமதிப்பாகக் கேரளா மாநிலத்தின் அளவில் மூன்றில் ஒரு பங்கிருக்கும். பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள இந்த 13000 சதுர கிலோமீட்டருக்குச் சற்றே அதிகமான நிலத்தில் நாற்பது லட்சம்பேருக்கு மேல் வசிக்கிறார்கள்.
முசபராபாத் தலைநகரம். பிரதமர், ஜனாதிபதி, உச்சநீதி மன்றம், உயர்நீதிமன்றம் எல்லாம் தனியாக இருக்கின்றன. பாகிஸ்தானின் மாகாணம் மாதிரிதான், ஆனால் மற்ற பாகிஸ்தான் மாகாணம் போல இப்பகுதி கிடையாது. சொந்தமாக இடைக்கால அரசியலமைப்பும் சட்டமன்றமும் கொண்ட தன்னாட்சிப் பகுதியென (de facto autonomous region) வரையறுக்கப்படுகிறது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இப்பகுதிக்கென பிரதிநிதி கிடையாது. அதற்கு மாற்றாக காஷ்மீர் விவகாரம் மற்றும் கில்கிட் பல்டிஸ்தான் துறை என்று ஒன்றை அமைச்சரவையில் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். இத்துறையே இப்பகுதிக்கும் பாகிஸ்தானுக்கும் இருக்கும் தொடர்ப்புப்புள்ளி. பிரிட்டிஷ் காலனியாதிக்கக் காலத்து வெஸ்ட்மினிஸ்டர் சிஸ்டம் போன்றது இது.
ஒரு காலக்கட்டம் வரைக்கும் எப்படியாவது இந்தியப் பகுதி காஷ்மீருடன் இணைந்து தனி நாடு ஆகிடலாம் என்ற எண்ணம் இருந்தது. இப்போது அவையெல்லாம் மங்கிவிட்டன. பாகிஸ்தானுடன் இணைவது அல்லது அதிக அரசியல் உரிமைகளுடன் தன்னாட்சியை வலியுறுத்துவது என்கிற இரண்டு வாய்ப்புகளைத்தான் இம்மக்கள் தற்போது பரிசீலிக்கிறார்கள். சுயாட்சி பேசுபவர்களை ஆதரிப்பதும் அதே கருத்தை இன்னும் தீவிரமாக நம்பி அரசியல் செய்தால் கைது செய்வதும், தேர்தலில் பங்கு பெற வாய்ப்பு மறுப்பதுமாகக் கடுமை காட்டுகிறது பாகிஸ்தான். சரி, தங்களோடு சேர்த்துக் கொள்ள ஆர்வமாக இருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை.
பன்னெடுங்காலமாக காஷ்மீர் சிக்கலைக் காட்டியே பாகிஸ்தானில் அரசியல் செய்கிறார்கள். காஷ்மீரின் தனிநாடு உரிமையைக் காக்க இந்தியாவை எதிர்ப்பது என்கிற வாதத்தைத் தன்னோடு காஷ்மீரை இணைத்த பிறகு வைக்கமுடியாது. இப்படியோர் இடியாப்பச் சிக்கலில் தானும் சிக்கி, இந்தியாவையும் சிக்க வைத்து முக்கால் நூற்றாண்டை ஓட்டிவிட்டது பாகிஸ்தான்.
கில்கிட் போலன்றி ஆசாத் காஷ்மீரில் திரளான மக்கள் வசிக்கிறார்கள். இந்தியாவில் இருக்கும் காஷ்மீரிகளைப் போலவே கல்வியில் ஆர்வம் கொண்ட மக்கள். பாகிஸ்தான் சராசரியைவிட இங்குள்ள மக்கள் அதிக சதவிகிதம் கல்வியறிவு கொண்டவர்கள்.
இந்திய காஷ்மீரில் இருக்கும் மத ரீதியிலான மோதல் அச்சுறுத்தல் இங்கே கிடையாது. அன்றாட வாழ்வில் ராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியில் வாழவில்லை. கர்ஃயூ எனப்படும் ஊரடங்கு விதிகள் கிடையாது. இந்தியாவிடம் இருந்து தங்களைப் பாதுகாக்கும் கவசம் என்றே பாகிஸ்தான் ராணுவத்தைப் பற்றி இவர்கள் நினைக்கிறார்கள். எப்போதாவது ஓரிரண்டு பாகிஸ்தான் அரசியல்வாதிகள் மரியாதைக் குறைவாகப் பேசி சலசலப்பை உண்டு செய்வார்களேயன்றி பொதுவாக மரியாதையாகவே நடத்தப்படுகிறார்கள். பாகிஸ்தான் கல்லூரிகளில் இப்பகுதி மாணவர்களுக்கு என்று தனியே இடங்கள்கூட ஒதுக்கப்படுகின்றன.
இவையெல்லாம் நேர்மறை விஷயங்கள். மற்றபடி பெயரில் மட்டும்தான் ஆசாத் என்று சுதந்திரம் இருக்கிறதே ஒழிய அது உண்மை நிலவரம் கிடையாது. பாகிஸ்தான் அரசு தனக்குத் தோன்றும் நேரத்தில் வேண்டிய சட்டத்தைப் போட்டு எதையும் செய்யலாம். செய்கிறது. கைது செய்வதோ, அரசியல் உரிமைகளை மட்டுப்படுத்துவதோ, மொத்தமாகப் பிடுங்குவதோ எல்லாமே நடக்கிறது. தேர்தலில் பங்கு கொள்ள ஆசாத் – விடுதலை என்கிற கோஷத்தை விடுத்து பாகிஸ்தானுக்குக் கட்டுப்படுவதாக ஒப்புக்கொண்டு சத்தியப்பிரமாணம் எடுக்க வேண்டும் என்ற விதி கூட அறிமுகப்படுத்தப்பட்டது.
கல்வியும் ஆர்வமும் இருப்பதால் பாகிஸ்தான் முழுக்கப் பரவி இம்மக்களால் வியாபாரம் செய்ய முடிகிறது. வியாபாரம் தவிர, சுற்றுலாவும் இந்த பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதியில் பிரபலமான வருவாய் வாய்ப்பு. இயற்கை எழிலோடு, வளமும் இருக்கிறது. விவசாயம் நல்லபடியாய் நடக்கிறது. மொத்த பாகிஸ்தானுக்குத் தேவையான மின்சார உற்பத்தியில் பெருமளவு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்தான் உற்பத்தியாகிறது. ஆனால், அங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தைப் பயன்படுத்த அம்மக்கள் நாட்டின் மற்ற பகுதியைவிட அதிகளவு கட்டணம் செலுத்தவேண்டும். பலுசிஸ்தான், கில்கிட் பகுதிகளோடு ஒப்பிடுகையில் குடிநீர், பள்ளி, கல்லூரிகள், கழிப்பறை உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பட்டு இருந்தாலும் பாகிஸ்தான் முழுக்க இருக்கும் வசதிக் குறைபாடுகளை இவர்களும் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். அதிவேக இணையவசதி, வேலை, தொழில் செய்வதற்கான பெரிய வாய்ப்புகள் போன்றவை போராடினாலும் கிடைப்பது சிரமம்தான். இவை இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பகுதியில், ஒப்பீட்டளவில் சிறப்பாக இருக்கின்றன.
சரி, இந்தியா பக்கம் சென்று வியாபாரம் பார்க்கலாம் என்றாலும் அவ்வப்போது தீவிரவாதிகளை அனுப்பி உறவைக் கெடுத்து வைக்கிறது பாகிஸ்தான். அந்தக் கடுப்பில் நல்லெண்ண நடவடிக்கையாகத் தரப்பட்ட சலுகைகளை இந்தியா நிறுத்திவிடுகிறது. புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு இருநூறு சதவிகித வரிவிதிப்பை அமல்படுத்தியது நினைவுகூரத்தக்கது. கடந்தாண்டு இதே மாதத்தில், இம்மக்கள் நடத்திய போராட்டத்தில் இந்திய தேசியக் கொடியை அசைத்து, பாகிஸ்தானுக்கு எதிரான தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
இதன் பொருள் அவர்கள் இந்தியாவுடன் இணைய விரும்புகிறார்கள் என்பதல்ல. ஐநா தலையிட்டு தங்கள் உரிமைகளை நிலைநாட்டவும் அனைத்துலக கவனத்தை ஈர்க்கும் விதமாகவும் இப்படிச் செய்கிறார்கள். இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால் இந்தியாவுக்கு எதிரான சண்டைக்கு எங்கள் சிக்கலைப் பயன்படுத்தவேண்டாம் என்பதை வலியுறுத்துகிறார்கள். மிகக் கவனமாக இப்போராட்டங்களில் பாகிஸ்தான் கொடி பறப்பதைத் தவிர்த்தனர்.
மற்றபடி போர் அச்சுறுத்தல் வரும்போதெல்லாம் எந்தக் குழப்பமும் இன்றி இந்தியா பக்கம் தவறென்றே நினைக்கிறார்கள். பஹல்காமில் நடந்த அண்மைத் தாக்குதலுக்கு இந்தியா வேகமாக பதிலடி கொடுத்தது. ஆனால், தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்டது இவர்கள்தான் என ஆதாரம் எதையும் இந்தியா இன்னும் கொடுக்கவில்லை. அப்படி ஆதாரம் கொடுத்தாலே அதை நம்பத் தயங்கும் நிலைப்பாடே பொதுவாக இம்மக்களிடம் உள்ளது.
26 இந்தியர்களைக் கொன்றதற்காக இந்தியா நடத்திய பதிலடித் தாக்குதலில் முசாபர்பாத் நகருக்கு அருகில் உள்ள மசூதி ஒன்று தகர்க்கப்பட்டது. ஜெய்ஷ் இ முஹமத் அமைப்பின் பயிற்சிப் பகுதி இது என்கிறது இந்தியா. ஒரு சிறுமிக்கு மட்டும் காயமேற்பட்டதைத் தவிர உயிரிழப்பு ஏதும் இல்லை. உடைந்த மசூதியில் வழக்கம்போல தொழுகையை நடத்தினர் மக்கள்.
இங்கிருந்து சுமார் முந்நூறு கிலோ மீட்டர்கள் தொலைவில் இருக்கும் கோல்டி, பிம்பர் நகரங்களும் தாக்குதலுக்குள்ளாகின. கோல்டியில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பினர் பயிற்சி பெறுவதாகச் சொல்லப்படுகிறது. பிம்பர் காட்டுப்பகுதியில் முகாம் அமைத்துப் பதுங்கவும், ஆயுதங்கள், மேம்படுத்தப்பட்ட வெடிபொருள்களை (IEDs) பயன்படுத்தவும் பயிற்சி எடுத்துள்ளதாகச் சொல்கின்றனர்.
இந்த மூன்று இடங்கள் தவிர மற்ற இடங்கள் மட்டுமே பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீர் உள்ளே தாக்குதலுக்கு ஆளாகின. இந்தியா தாக்கிய மற்ற பகுதிகள், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இருந்தவை. இங்கெல்லாம் கணிசமான உயிர்கள் பலியாகின. தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்தியாவும், அப்பாவிகளைக் கொன்றுவிட்டதாக பாகிஸ்தானும் செய்தி வெளியிட்டன.
இப்போது இருப்பதைவிடத் தங்கள் தகுதிக்கேற்ப இன்னும் வாய்ப்பும் வளர்ச்சிகளும் வேண்டும் என்பதாகவே காஷ்மீரிகளின் நோக்கம் இருக்கிறது. போர் நிறுத்தம் என்ற செய்தியை வெளியிட்ட இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் விக்ரம் மிஸ்ரியும் அவர் மகளும் இந்திய இணையவெளியில் ட்ரோல் தாக்குதலுக்கு ஆளானார்கள். அப்படியொரு மனநிலையில் இல்லாத, போரை வரவேற்காத மக்களாகவே எல்லைக்கோட்டின் இருபக்கமும் இருக்கும் தற்போதைய காஷ்மீரிகள் இருக்கிறார்கள். ஒரு விதத்தில் அது இந்தியாவுக்குச் சாதகமானதுதான். பயன்படுத்திக் கொள்வது இந்தியத் தலைமையின் கையில் இருக்கிறது.
*
13/05/2025 அன்று மெட்ராஸ் பேப்பரில் பதிப்பிக்கப்பட்ட கட்டுரை.
