சிக்கிக்கொண்டது யார்?

ஜூலை மாதம் ஐந்தாம் தேதி விண்வெளிக்குப் போனார் சுனிதா வில்லியம்ஸ். சக விண்வெளி வீரர் புட்ச் வில்மர் உடன் அவர் கிளம்பியபோது ஒன்பதாவது நாள் பூமி திரும்புவதுதான் திட்டம். ஒன்பது மாதங்கள் இருக்கப்போகிறோம் என்பதை இருவரும் எதிர்பார்க்கவில்லை.

சுமார் முப்பதாண்டுகள் விண்வெளி வீரர்களை ஏற்றிச் சென்ற அமெரிக்க விண்வெளி ஓடத்துக்கு 2011ஆம் ஆண்டு ஓய்வு கொடுக்கவேண்டி வந்தது. அதன் பிறகு, ரஷ்யாவின் சோயஸ் விண்கலத்தை நம்பித்தான் விண்வெளிப் பயணங்கள் திட்டமிடப்பட்டன. நமக்கு நாமே தயாரிப்போம் என்று போயிங், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களைப் பணித்தது அமெரிக்க அரசு. போயிங் உருவாக்கிய ஸ்டார்லைனரை ஓட்டிப்பார்த்து சோதனை செய்யத்தான் சுனிதாவும் வில்மரும் போனார்கள்.

போகும்போதே தட்டுத்தடுமாறிப் போய் ஒரு வழியாக டாக்கிங் நடந்து விண்வெளி நிலையத்தை அடைந்தனர். ஹீலியம் வாயுக் கசிவு கண்டறியப்பட்டதால் திட்டமிட்டபடி திரும்பிவராமல், அங்கேயே இருந்து சரி செய்ய முயன்றனர். (முன்னதாக இப்படி விண்ணில் இருந்து பூமி திரும்பும்போதுதான் கல்பனா சாவ்லாவைப் பறிகொடுத்தோம்.) பதினெட்டாம் தேதி திரும்ப வேண்டியவர்களை இருபத்தெட்டாம் தேதி வரை தாமதிக்க வைத்தது நாசா. பின்னர், தங்கள் வீரர்களின் உயிருக்கு மதிப்பு கொடுத்து, வேறு ஏதாவது வழி பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவெடுத்தது. ஆளில்லாமல் ஸ்டார்லைனரை மட்டும் திரும்ப அழைத்துக்கொண்டது.

அடுத்து அனுப்பப்போகும் ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் க்ரூவில் திரும்பி வரட்டும் என்று சுனிதாவுடன் பேசி முடிவெடுத்தது நாசா. அதுவரையில் விண்வெளியில் இருக்கும்படியானது. அந்த முடிவெடுக்கவே ஒரு மாதம் ஆகிவிட்டது.

சுனிதாவும் வில்மரும் விண்வெளி நிலையத்தில் தனியாக இல்லை. அங்கே எப்போதும் சில விண்வெளி வீரர்கள் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொள்கின்றனர். குறைந்தபட்சம் மூவரேனும் இருப்பர். குறிப்பிட்ட கால இடைவெளியில் அடுத்த குழு வந்து பொறுப்பேற்றுக் கொண்டு, இவர்களை பூமிக்கு அனுப்பிவைக்கும். இதுவரை எழுபது குழுக்கள் இப்படிப் பணியாற்றியுள்ளன. 71வது குழுவாக அங்கே இருந்த எழுவருடன் சுனிதாவும் வில்மரும் இணைந்து ஒன்பது பேர் ஆயினர்.

முன்னரே திட்டமிட்டபடி அடுத்த குழு வந்து இவர்களை மாற்றவேண்டும். போயிங் நிறுவனத்துக்குப் பதில் எலான் மஸ்கின் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸின் வண்டியை அனுப்ப முடிவானது. செப்டம்பர் மாதம் விண்வெளிக்குச் சென்றது ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ-9. அந்த வண்டியில் சுனிதாவும் வில்மரும் திரும்பி வர ஏதுவாக இரண்டு வீரர்கள் இருக்கையை காலியாக வைத்தே விண்வெளி நிலையத்துக்கு அனுப்பினார்கள்.

ஆய்வாளர் எனினும் சுனிதாவின் தனித்திறன் அவர் விமானி என்பதே. எனவே, க்ரூ-9ல் வந்த அந்த 72வது குழுவுக்குத் தலைமையேற்று அடுத்த ஆறு மாதங்கள் பணியாற்றினர் சுனிதா. இதற்கும் அடுத்த தவணையில் மார்ச் மாதத்தில் க்ரூ-10 வண்டி கிளம்பிப்போய் சுனிதாவையும் குழுவினரையும் பணியில் இருந்து விடுவித்து பூமிக்கு வழியனுப்புவதே திட்டம். அதுதான் இப்போது நடந்திருக்கிறது.

நாநூறு நாள்கள், ஆயிரம் நாள்களுக்கு மேல் விண்வெளியில் தங்கியிருந்த ரஷ்ய வீரர்கள் உண்டு. தொடர்ந்து 371 நாள்கள் தங்கியிருந்த அமெரிக்க வீரரும் உண்டு. ஒன்பது மாதம் என்கிற காலக் கணக்கு சாதனையல்ல. திட்டமிடாமல் சென்று மாற்றுத்திட்டத்தின்படி விண்வெளியில் நீண்டகாலம் இருந்த வகையில் இது முதன்முறை. அவ்வளவுதான்.

விண்வெளி நிலையம் என்பது மூன்று படுக்கை அறைகள் கொண்ட பெரிய விசாலமான அமைப்பு. சமைக்கவோ துவைக்கவோ முடியாதென்பதால் பூமியிலிருந்து அவ்வப்போது ஆடைகளும் உணவும் அனுப்பி வைக்கப்படும். காற்றுகூட இங்கிருந்துதான் அனுப்பப்படும். மற்றபடி எட்டு மணி நேரம் வேலை. தூக்கம் வந்தாலும் வராவிட்டாலும் தூங்கும் பைக்குள் நுழைந்து எட்டு மணி நேரம் ஓய்வு. மீதமிருக்கும் நேரத்தில் விரும்பியபடி உறவினர்களிடம் பேசியோ, திரைப்படம் பார்த்தோ, புத்தகம் படித்தோ பொழுதைக் கழிக்கலாம். இணைய வசதியும் உண்டு.

அப்படி என்றால் சொகுசு வாழ்க்கை என்று பொருளல்ல. என்னதான் பயிற்சி கொடுத்து அனுப்பினாலும் புவியீர்ப்பு விசை இல்லாத இடத்தில் வாழ்வது எளிதல்ல. பாக்கெட்டில் இருப்பதை உறிஞ்சித் தின்பதில் தொடங்கி, மூச்சுக் காற்றுகூட மறுசுழற்சியாகும் ஆபத்தான இடத்தில் வாழ மனத்திண்மை வேண்டும். பூமி திரும்பிய பிறகும் இயல்பு நிலைக்கு வர காலம் எடுக்கும். இதயம் துடிக்கும் விதம்கூட மாறிவிடும். முதுகுத்தண்டு நீண்டு சில சென்டிமீட்டர் உயரம் கூடிவிடும். பத்து நிமிடங்கள் இருட்டில் இருந்தாலே வெளிச்சத்தைப் பார்த்தால் கண்கள் கூசி இயல்பாகப் பார்க்கத் திணறுவோம். ஒன்பதுமாத விண்வெளி வாழ்க்கை முடிந்து வரும்போது நிற்கவும் நடக்கவும் சிரமப்பட்டு படிப்படியாகத்தான் சரியாகும். சரியாகாத சிக்கல்களும் எழக்கூடும் என்று அறிந்தே இவர்கள் பயணம் மேற்கொள்கிறார்கள்.

இப்போது போயிருக்கும் க்ரூ-10 மீட்புக்குழுவும் அல்ல; சுனிதா விண்வெளியில் சிக்கித் தவிக்கவும் இல்லை. ஆறு மாதம் முன்பு சென்ற க்ரூ-9 மூலம்தான் அவர் திரும்ப வரப்போகிறார். அதற்குத்தானே இரண்டு இருக்கைகளை காலியாக வைத்து அனுப்பினார்கள்? வேலைக்குப் போன இடத்தில் பார்க் செய்த வண்டியிலேயே ஏறி வீடு திரும்புவது போலத்தான் இது.

தகவல்களில் பரபரப்பு சேர்த்து யூட்யூப் சேனல்கள் வியூஸ் கூட்டி காசு பார்க்க முயல்வது போதாதென்று எலான் மஸ்க்கும் அரசியல் லாபம் பார்க்க எதையாவது பேசுகிறார். அமெரிக்க அதிபர் எனும் உயர்பதவியில் இருந்துகொண்டு தரம்தாழ்ந்து சுனிதாவைப் பற்றிப் பேசியிருக்கிறார் டிரம்ப். இம்மாதிரி அற்ப மனிதர்களின் நலனையும் கருத்தில்கொண்டே விண்வெளியில் சிரமத்துடன் பணியாற்றுகிறார்கள் இவ்வீரர்கள். இனம், மதம், பாலினம், நாடு என எந்த வரையறைகளும் வகுக்காமல் தன் திறனும் அறிவும் பூமிக்குப் பயன்பட உயிரைப் பணயம் வைக்கிறார்கள்.

அப்படிப்பட்ட குழுவில் இந்திய வம்சாவழிப் பெண் ஒருவர் இருக்கிறார். விண்ணில் ஆய்வு மேற்கொள்ளும் அறிவாளிகள் குழுவை அவர் தலைமையேற்று வழிநடத்துகிறார் என்பது ஊக்கமளிக்கும் விஷயம். சுனிதா போன்றவர்கள் அறிவியலை நம்பி உயரே உயரே போகும் அதே நேரத்தில், இங்கே இன்னும் யார் யாருக்குக் கோயில் கட்டலாம், யார் யார் சமாதிகளை இடிக்கலாம் என்று சிந்தித்துச் செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்போது நாமும் சிந்திக்கலாம். சிக்கிக்கொண்டிருப்பதும் மீட்கப்படவேண்டியதும் யார்?

*

19/03/2025 அன்று மெட்ராஸ் பேப்பரில் பதிப்பிக்கப்பட்ட கட்டுரை.