மாறிக்கொண்டே இருக்கும் உலக அரசியல் அரங்கில் மாறாத ஒன்று இந்திய ரஷ்ய நட்பு. இதைச் சொன்னது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர். 2023 டிசம்பர் மாதத்தில் மாஸ்கோவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இப்படிப் பேசினார். டிரம்ப் போட்ட சமூகவலைத்தளப் பதிவு அந்த உறவை அசைத்துவிடுமா என்ன?
15ஆம் நூற்றாண்டு, 19ஆம் நூற்றாண்டு கதைகளுக்குப் போகவேண்டாம். இந்தியா சுதந்திரம் பெற்றதில் இருந்து பார்த்தாலும் இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்குமான உறவு வலுவாக இருக்கிறது என்பது உண்மைதான். இந்தியா, பாகிஸ்தான் விடுதலைக்குப் பிறகு காஷ்மீர் சிக்கலை ஐநா மன்றத்தின் முன்பு எடுத்துச் சென்றது இந்தியா. அப்போது சோவியத் யூனியனாக இருந்த ரஷ்யா இந்தியாவுக்கு ஆதரவாக இருந்தது. 1957, 1962, 1971ஆம் ஆண்டுகளில் தன் வீட்டோ அதிகாரத்தை இந்தியாவுக்கு ஆதரவாகப் பயன்படுத்தியது.
அதிலும் 1971ஆம் ஆண்டு பங்களாதேஷ்க்காக இந்தியா நடத்திய போரில் தன் போர்க்கப்பல்களை அனுப்பி உறுதியாகத் தன் நிலைப்பாட்டைத் தெரிவித்தது. நட்புறவு ஒப்பந்தமும் செய்துகொண்டது. அண்மைக்காலம் வரைக்கும் கூட தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை. ஆர்டிகிள் 370 நீக்கம் செய்யப்பட்டது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று ஐநாவில் இந்தியாவுக்கு வக்காலத்து வாங்கியது.
உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த, தடைகள் போட்ட, இந்தியாவின் 1974ஆம் ஆண்டு அணு ஆயுதச் சோதனையின் போதும் அதன்பிறகு நடந்த அணு ஆயதச் சோதனையின் போதும் தடையேதும் விதிக்காமல் இருந்தது. பாதுகாப்பு ஒப்பந்தகளையும் ரத்து செய்யவில்லை. அணு சக்தித் துறையில் ரஷ்யாவின் நட்பால் பல தொழில்நுட்ப உதவிகளை இந்தியா பெற்றது.
சோவியத் யூனியன் உடைந்து ரஷ்யா ஆன பிறகு தொண்ணூறுகளில் இந்தியா தாராளமயமாக்கல் கொள்கைகளை ஏற்றுக்கொண்டது. பாதுகாப்பு, வர்த்தகத் துறையில் உறவு இன்னும் பலம் பெற்றது.
2000ஆவது ஆண்டுக்குப் பிறகு ரஷ்ய ஏவுகணைகள், ஆயுதங்கள் இந்தியாவால் அதிகளவு வாங்கப்பட்டன. ரஷ்யப் கப்பலை மேம்படுத்தி ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவாக இந்தியக் கடற்படைக்கு வழங்கினார்கள். பிரம்மோஸ் ஏவுகணை, டி-90 டாக்கிகள் போன்றவை இந்தியாவில் தயாரிக்க கூட்டு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் தயாரிக்கவும் கூட்டு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. ரஷ்யத் தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் இந்தியாவுக்கு இதில் நல்ல பலன் இருந்தது. எனினும் அண்மைக் காலமாக அமெரிக்கா, இஸ்ரேல், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் பக்கம் இந்தியாவின் ஆயுத வர்த்தகத்தின் பார்வை திரும்பியுள்ளது. அப்போதும் கூட கணிசமான அளவு ரஷ்யாவிடம் இருந்து இந்தியா ஆயுதங்களை வாங்குகிறது.
1995ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்தின் அளவு 1.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள். தற்போது அது 68.7 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. இதில் சுமார் ஐந்து பில்லியனுக்கு இந்தியா ஏற்றுமதி செய்கிறது.
மீன், இறால், அரிசி, புகைப்பட்டை, தேநீர், காபி, திராட்சை போன்ற விவசாய உற்பத்திப் பொருள்கள், மருந்துகள், அறுவை சிகிச்சைக் கருவிகள், இரும்பு, செராமிக், கண்ணாடிப் பொருள்கள், விமான உதிரிப்பாகங்கள், இயந்திரங்கள், நெசவுப் பொருள்கள், பின்னலாடைகள், தோல், ரப்பர் தயாரிப்புகள் முதலியன இவற்றில் அடங்கும்.
மிச்சமிருக்கும் 63.84 பில்லியன் டாலர் தொகைக்கு ரஷ்யாவில் இருந்து பொருள்கள் இந்தியாவுக்கு இறக்குமதியாகின்றன. எரிபொருளும் உரமும் இதில் முதன்மையானவை. மினரல் எரிபொருள்கள், மினரல் வேக்ஸ், இயந்திரங்கள், விலையுயர்ந்த ரத்தினங்கள், உலோகங்கள், மரம், தாவர எண்ணெய் முதலியனவும் இந்தியா இறக்குமதி செய்கிறது.
ரஷ்யாவின் எரிவாயு, மருத்துப் பொருள்கள், ஐடி துறையில் இந்திய நிறுவனங்கள் முதலீடு செய்கின்றன. இந்திய மின் ஆற்றல் துறை, கட்டுமானம், உற்பத்தித் துறைகளில் ரஷ்யா முதலீடு செய்கிறது. கடந்தாண்டுகளில் சேவை வர்த்தகத் துறையில் 1.021 பில்லியன் டாலர்கள் மதிப்புக்கு வர்த்தகம் நடந்துள்ளது. இந்திய ஐடி நிறுவனம் ரஷ்யா வங்கிக்கு மொபைல் ஆப் உருவாக்கிக் கொடுப்பது, ரஷ்ய நிறுவனம் இந்திய விமானங்களைப் பழுதுபார்த்துத் தருவது போன்றவை சேவை வர்த்தகத்தில் வரும். இதில் அதிகப் பயன் கிடைத்தது ரஷ்யாவுக்குத்தான்.
கல்விக்காக இந்தியாவில் இருந்து ரஷ்யாவுக்குச் செல்வோர் அதிகம். அதுவும் ரஷ்யா அளிக்கும் சேவை வர்த்தகம்தான். பெரும்பாலும் மருத்துவம் அது சார்ந்த துறைகளான மருந்துப்பொருள், பயோடெக்னாலஜி முதலிய துறைகளில் இந்திய மாணவர்கள் கல்வி கற்கிறார்கள். வேலை வாய்ப்பு அதிகம் எனச் சொல்ல இயலாது. ரஷ்யா, இந்தியர்களை கட்டாயப்படுத்தி போரில் ஈடுபடுத்தியதாக வரும் செய்திகள் மிகைப்படுத்தப்பட்டவை. முறையான விசா இன்றி உள்ளே நுழைந்தவர்கள், ஏமாற்றி அழைத்து வரப்பட்டவர்கள் இப்படி மாட்டிக்கொள்கிறார்கள். தகவல் தெரிந்தவுடன் ரஷ்ய ஒத்துழைப்புடன் இந்தியா இவர்களை மீட்டுவிடுகிறது.
2030ஆம் ஆண்டு 100 பில்லியன் அமெரிக்க டாலர் வர்த்தக மதிப்பை இலக்காக வைத்து இரு நாடுகளும் முன்னேறுகின்றன. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத் தளத்தில் இந்த வர்த்தக முன்னேற்றம் எல்லாம் கொரானாவுக்குப் பிறகு என்று எழுதியிருக்கும். ரஷ்யா, உக்ரைன் போருக்குப் பிறகு என்பதுதான் அதற்கான பொழிப்புரை.
உக்ரைன் மீதான படையெடுப்புக்கு நிதி செல்லாமல் தடுக்க 2022ல் ஜி7 நாடுகள் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் இறக்குமதிக்குத் தங்கள் நாடுகளில் தடை விதித்தன. விலை வரம்பையும் அறிமுகப்படுத்தின. ஆனால் வேறு ஏதாவது நாடு கச்சா எண்ணெயை வாங்கிச் சுத்திகரித்து அதை இந்நாடுகளுக்கு அனுப்பினால் அதை இறக்குமதி செய்ய எந்தத் தடையும் இல்லை. இதை இந்தியா சாதகாமாகப் பயன்படுத்திக்கொண்டது.
அவர்கள் போட்ட சட்டத்தில் இருந்த ஓட்டையின் வழியாக ஒரு நாளுக்குச் சுமார் மூன்று லட்சம் டீசல் பேரல்கள் நுழைந்தன. விலை வரம்பு விதித்திருந்த ஜி7 நாடுகள் 2022 டிசம்பர் முதல் 2023 டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் 8.5 பில்லியன் அளவுக்கு ரஷ்யாவின் கச்சா எண்ணெயை நேரடியாக வாங்காது சுற்றி வளைத்துச் சுத்திகரித்த எண்ணெய்யாக வாங்கியுள்ளன. CREA அறிக்கையொன்று இதைத் தெரிவிக்கிறது.
உக்ரைன் போருக்கு முன்பு ஒரு சதவிகிதத்துக்கும் குறைவாக ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கிக் கொண்டிருந்தது இந்தியா. அதாவது 0.2%. அது இப்போது 40 சதவிகிதமாகிவிட்டது. ஒருவேளை டிரம்ப் செய்யும் கெடுபிடிகளுக்காக மாற்றலாம் என்று யோசித்தாலும் அது எளிதல்ல. ரஷ்ய கச்சா எண்ணெயில் சல்போரஸ் கூடுதலாகவும் அடர்த்தி கூடியும் இருக்கும். அதைச் சுத்திகரிக்கத் தேவையான கட்டமைப்பு இந்திய தொழிற்சாலைகளில் நிறுவப்பட்டுள்ளது. மற்ற பல நாடுகளின் கச்சா எண்ணெய் இதிலிருந்து வேறுபட்டது.
இந்திய அதிகாரிகள் தரப்பில், இதை வரி தொடர்பான பேச்சுவார்த்தைகளில் பேரம் பேசுவதற்காக டிரம்ப் பயன்படுத்தும் உத்தி இது என்றே சொல்லப்படுகிறது. ஆனாலும் எச்சரிக்கை நடவடிக்கையாக இறக்குமதிச் சாத்தியம் உள்ள நாடுகள் என்னென்ன, மாற்றுத் திட்டங்கள் என்ன என்ற ஆய்வுகள் நடக்கின்றன. ஆனால் ராய்டர்ஸ் செய்தி நிறுவனமும் மாஸ்கோடைம்ஸ் இதழும் இந்திய நிறுவனங்கள் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குதற்கு இடைவெளி கொடுத்துள்ளன, கப்பல் கரைக்குப்போகமல் நிற்கிறது எனச் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நிறுவனங்களில் ரிலையன்ஸும் நயாரா எனெர்ஜியும் முதன்மையானவை. நயாரா நிறுவனத்தில் ரஷ்யா நிறுவனத்துக்கும் பங்குள்ளது. இது தவிர அரசு நிர்வகிக்கும் எண்ணெய் நிறுவனங்களும் உள்ளன. ரஷ்யா ஏற்றுமதி செய்யும் மொத்த எண்ணெய்யில் 60 சதவிகிதத்தை இவை மட்டுமே வாங்கிவிடுகின்றன.
சில வாரங்களுக்கு முன்பு வரைக்கும் ரஷ்யாவோ எண்ணெய்யோ டிரம்புக்கு ஒரு சிக்கலாகவே இல்லை. அமெரிக்க உணவு உற்பத்தி நிறுவனங்கள் சிலவற்றுக்கு சலுகை மறுக்கப்பட்டதே அடிப்படைக் காரணம் என்கிறார்கள். டிரம்பின் ட்ரூத் சோஷியல் பதிவில் Non-monetary Trade Barriers பற்றிக் குறிப்பிட்டுள்ளார். பணமற்ற வர்த்தகத் தடைகள் மூலம் அமெரிக்க நிறுவனங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்பது டிரம்ப்பின் குற்றச்சாட்டு.
உள்நாட்டுப் பொருள்களுக்கு முன்னுரிமை கொடுத்தல். தேவைப்படும்போது மட்டுமே இறக்குமதியை அனுமதித்தல். இறக்குமதியாகும் அளவில் கட்டுப்பாடு விதித்தல். இந்திய விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க இம்மாதிரி விதிகள் அவசியமாகின்றன. மோடிக்கு உள்நாட்டில் விவசாயிகளின் சிக்கல்கள் ஏற்கெனவே பெரிய தலைவலியாக இருக்கிறது. இந்த விதிகளில் கை வைத்துத் திருத்துவது எனும் பேச்சுக்கே தற்போது இடமில்லை.
இந்தத் தொகுப்பில் உள்ள மற்ற சில விதிகளுக்குக் கட்டுப்பட்டு வியாபாரம் செய்வதும் இந்தியாவில் சிரமம் என்கிறார்கள். இந்தியாவில் இறக்குமதியாகும் உணவுப் பொருளுக்கு அமெரிக்கத் தரச் சான்றிதழ் இருந்தாலும் இந்தியத் தரச் சான்றிதழ் அவசியம். நெய் மணல் மணலாக இருந்தால் இறக்குமதிக்கு அனுமதி கிடைக்கும் என்ற விதியை நம்பி ஓர் அமெரிக்க நிறுவனம் தன் நிறுவனத்தில் மாறுதல் ஏற்படுத்தி உற்பத்தி செய்கிறது என்று வைத்துக்கொள்வோம். திடீரென இந்தியா, மணல் மணலாக இருந்தால் இறக்குமதி செய்யக்கூடாதென புதிய விதியை அறிமுகப்படுத்தலாம். சீரரற்ற நிச்சயமற்ற விதிகள், பகுப்பாய்வு சோதனைகள், அனுமதிக்கான காத்திருப்பு காலம் உள்ளிட்ட பல சிக்கல்களும் இந்த பணமற்ற வர்த்தகத் தடைகளின் கூறுகளாக இருக்கின்றன. இது அமெரிக்க நிறுவனங்கள் விவசாயப் பொருள்கள் துறையில் இந்தியாவில் நுழைய பெரும் தடையாக இருக்கிறது.
இதற்கான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாததால்தான் ரஷ்யா – இந்தியா உறவு திடீரென டிரம்ப் கண்ணுக்குத் தெரிகிறது. 25 சதவிகித டாரிஃப் உடன் அபராதமும் விதிக்கப்போவதாக டிரம்ப் அலப்பறை செய்வது வர்த்தக பேரத்தில் அமெரிக்காவுக்குச் சாதகமான முடிவுகளை எட்ட உதவலாம். அதை இந்திய அரசு அதிகாரிகள் கவனித்துக் கொள்வார்கள்.
டிரம்ப் செய்தியில் மற்றொரு முக்கியமான சொற்பிரயோகம் டெட் எகானமி. இந்தியப் பொருளாதரம் தத்தளிப்பது உண்மைதான். வரிச்சுமையை ஏற்றிக்கொண்டே போகிறது அரசு. சிறு, குறு தொழில் செய்வோர் நிலை பரிதாபமாக இருக்கிறது. வேலைவாய்ப்புச் சிக்கல் இதில் முதன்மையானது. ஆனால், பல்வேறு குளறுபடிகளுக்குப் பிறகும் இந்தியப் பொருளாதாரம் ஏறுமுகத்தில்தான் இருக்கிறது.
2026ஆம் ஆண்டு இந்தியப் பொருளாதாரம் 6.5 சதவிகிதம் வளர்ச்சி இருக்கும் எனக் கணித்துள்ளது ரிசர்வ் வங்கி. 2030ல் 6.8 டிரில்லியன் அமெரிக்க டாலர் ஜிடிபி இருக்கும் என்கிறார்கள். இந்திய மக்கள் தொகை, தொல்லை மட்டுமேயல்ல, பெரிய சந்தையும்கூட. அதோடு அடுத்த 20 ஆண்டுகளுக்கு வேலை செய்யும் வயதில் இருக்கும் இளைஞர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயரும் நிலை இந்தியாவின் பலம். அவர்களுக்கான வேலை வாய்ப்பை ஏற்படுத்தினாலே இந்த எண்கள் நிச்சயம் சாத்தியம் ஆகும். ரிசர்வ் வங்கியின் கணிப்பு இந்த ஆண்டு வளர்ச்சியை வைத்துதான் என்பதும் கவனிக்கத்தக்கது.
டிரம்ப் சொல்வதுபோல அப்படி ஒன்றும் கவலைக்கிடமான நிலையில் இந்தியா இல்லை. டிரம்ப், நெதன்யாகுவுடன் கட்டிப்பிடித்து படம்பிடித்துக் கொள்வதும் பங்காளி போல காட்டிக்கொள்வதும் இந்திய அரசியலுக்கு வேண்டுமானால் உதவாலாம், இந்திய அரசாங்கத்துக்கு அல்ல. ஆண்டாண்டு காலமாக யார் வம்பு தும்புக்கும் போகாத, நடுநிலை காத்த இந்திய வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்றி ராஜாங்கப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டாலே போதும். விரைவில் இந்தியா உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக மாறுவதை மோடி – நிர்மலா கூட்டணி நினைத்தாலும் தடுக்க இயலாது.
*
05/08/2025 அன்று மெட்ராஸ் பேப்பரில் பதிப்பிக்கப்பட்ட கட்டுரை.
