நாடும் ஒரு நாட்டியப் பேரொளியும்

கடந்த வாரம் வந்து சென்ற சிவராத்திரிக்குப் பத்து நாள் முன்னும் பின்னுமாக நாம் யாரைக் குறித்து அதிகம் பேசினோம் என்று சிந்தித்துப் பார்த்தால், விடை ஜக்கி வாசுதேவாக இருக்கும். நம்மால் மாற்ற இயலாத, ஏற்கவும் முடியாதவற்றை நகைத்துக் கடக்க இந்நாள்களில் பழகிக்கொண்டிருக்கிறோம். உண்மையில் நமது நகைப்போ, நிராகரிப்போ நெருங்கவே முடியாத உயரத்தில் அவர் தமது சமஸ்தானத்தை அமைத்துக்கொண்டிருக்கிறார். 

எப்படி முடிந்தது? 

வெறும் பேச்சு. என்ன சொல்கிறோம் என்பது முக்கியமில்லை. எப்படிச் சொல்கிறோம் என்பதுதான் முக்கியம். இதுதான் அவர்களின் தாரக மந்திரம். அப்படி நன்றாகப் பேசத் தெரிந்த ஒருவர்தான் ஜக்கி வாசுதேவ். மெத்தப் படித்தவர்கள் நிறைந்த டெல்லி ஐஐடி அரங்கில் தன்னம்பிக்கை நிறைந்த தீர்க்கமான குரலில், இரட்டைக் குழந்தைகளைப் பெற்ற பெண்ணின் மார்பில் ஒரு பக்கம் சுரக்கும் பாலும், மறுபக்கம் சுரக்கும் பாலும் வெவ்வேறானது எனச் சொன்னவர். இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு என அங்கிருந்தவர்கள் யாரும் கேள்வி எழுப்பவில்லை. 

உண்மை கலந்த பொய்யைச் சொல்வது நம்பகத் தன்மையைக் கூட்டும். ஆண், பெண் குழந்தைகள் பெற்ற தாய்மார்களின் பாலில் வித்தியாசம் இருந்ததாக சில ஆய்வு முடிவுகள் உண்டு. இந்தத் தகவலுடன் தன் பொய்யையும் சேர்த்து போலி அறிவியல் கருத்தொன்றைப் படித்தவர்கள் மத்தியில் பதிவு செய்துவிட்டார் ஜக்கி. 

தண்ணீருக்கு நினைவுத்திறன் இருக்கிறது, சிவராத்திரியில் ஆற்றல் எழுச்சி நடக்கிறது, டார்வின் தியரியை ஆயிரம் ஆண்டு முன்பே ஆதியோகி சொல்லிவிட்டார் என எல்லை தாண்டி இவர் அவிழ்த்துவிட்டவை ஏராளம். சில ஆண்டுகளில் வாட்ஸ்அப் அறிஞர்கள் உதவியுடன் ‘சனீஸ்வரன் கோயில் மேல் செயற்கைக்கோள் வேலை செய்யாது’ என்பது போல இவரின் போலி அறிவியில் பாடப் புத்தகங்களிலும் வரலாம். தனக்குத் தெரியுமோ இல்லையோ எல்லாவற்றைப் பற்றியும் கூசாமல் இவரால் பொய் சொல்ல முடியும். அறிவியலே இப்படி என்றால் அறுதியிட்டுக் கூற முடியாத உணர வேண்டிய மெய்யியல் இன்னும் வசதி. எதை வேண்டுமானாலும் சொல்லிவிட்டு அதைப் புரிந்துகொள்ள உங்களுக்குப் பக்குவம் போதாது எனச் சொல்லிவிடலாம். இப்படியான நபர்களுக்கு, இந்து மதம் ஆகப்பெரிய வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் களம். 

அனைவருக்குமே பற்றிக்கொள்ள ஏதோ ஒரு நம்பிக்கை அவசியமாகிறது. அறிவியலோ, ஆண்டவரோ. கல்வி, நல்ல வேலை, பணம் என மில்லேனியம் ஐடி தலைமுறை வளர்ச்சியில் மனஅழுத்தம் பக்கவிளைவான போது தீர்வுகளுக்கான ஒரு தேடுதல் இருந்தது. இதைப் பயன்படுத்தியவர்களில் ஜக்கி மாபெரும் வெற்றி கண்டிருக்கிறார். 

கடவுள், மதம் எல்லாம் ஈஷாவில் இல்லை என்கிறார் ஜக்கி. ஆனால் லிங்கமும் சிவனும் அங்கே இருக்கிறது. தமிழ்நாட்டின் சைவம் சொல்லும் சிவன் அல்ல அவர். வழிபாடு முறை, பெயர்கள் எல்லாம் வடஇந்தியாவை ஒத்திருக்கிறது. சிவனை ஆதியோகி என்கிறார். எந்தச் சிவன் கோயிலிலாவது யோகா கற்றுக் கொடுக்கிறார்களா? யோகத்தில் உருவ வழிபாடு எப்படி வந்தது? பல ஆண்டுகள் வரலாறு கொண்ட சைவ மரபும், யோக மரபும் சிதைந்து, பொய் வரலாறு ஒன்று கண் முன்னே எழுதப்படுவதை கண்டிக்கிறார்கள் அடியார்களும், பக்தர்களும். 

புதுமைகளுக்கான நெகிழ்வுத் தன்மையோடே இந்து மதம் இருந்திருக்கிறது. புதுமைகளைப் புகுத்துபவர்களின் அடிப்படை நோக்கம் மனிதமாக இருப்பின் பிழையொன்றும் இல்லை. பணமும், அதிகாரமும், வியாபாரமும் முதன்மை நோக்கமாக இருப்பது ஆபத்தான போக்கு. காதல் மனைவியின் மர்ம மரணத்தில் இருந்து தொடங்குகிறது இவரின் ஆபத்தான இன்னொரு முகம். ஆன்மீக நண்பரான சுவாமி நிர்மலானந்தாவுக்கு மகாசமாதி அடையும் வழிகளை ஜக்கி சொல்லிக் கொடுத்ததைப் பார்த்து தானும் அப்படி மகா சமாதி அடைந்து உயிர் விடப் போவதாகச் சொன்னாராம் மனைவி விஜி. 11 ஆண்டுகள் மவுனமாக இருந்து, உணவைக் குறைத்து, வயோதிக நிலையில் 73 வயதில் நிர்மலானந்தா அந்த முடிவை எடுத்தார். அதற்கே தற்கொலை முயற்சி என வாசலில் போலீஸ் வந்து உட்கார்ந்து கொண்டது. எனினும் உண்ணாமல் மரணத்தைத் தழுவி சமாதியடைந்தார். 7 வயதுப் பெண் குழந்தை உடைய ஜக்கியின் மனைவி 33 வயதில் இந்த முடிவை எடுத்த போது காவல்துறை இதைத் தடுத்ததாக தகவல் ஏதும் இல்லை. காதல் மற்றும் பக்தியின் கதை என்று ஈஷா தளத்தில் விஜியின் கதை படமாக ஓடுகிறது. நிர்மலானந்தாவை சந்தித்துத் திரும்பும் வழியில், விஜி தானும் அப்படிச் சாக விரும்புவதாக தன் காலில் விழுந்து கேட்டுக் கொண்டதாகச் சொல்கிறார் ஜக்கி. விஜி கேட்டது என்ன குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியுமா? 

விஜி தன் முடிவில் உறுதியாக இருந்ததாகவும் சாதனாக்களை மிகத் தீவிரமாக செய்ததாகவும் சொல்கிறார். கடைசியாக விஜி பேசிய ஆடியோ ஒன்றும் காணொளியில் வருகிறது. தியானலிங்க கர்மயாத்திரையின் முடிவில் பேசியது. ஜனவரி 7-ம் தேதி. அதிகப்படியான ஆற்றலை உணர்ந்தேன். என் முன்னேற்றத்தில் ஒன்றிரண்டு படிகளை எடுத்து வைத்துள்ளேன். அனைவருக்கும் உதவியாய் இருப்பேன் என நம்புகிறேன் எனப் பேசுகிறார். உயிருடன் இருக்கும் போது எடுத்த வீடியோக்கள் சிலவும் அந்தக் காணொளியில் இருக்கின்றன. கடைசி நாளில் எடுக்கப்பட்ட வீடியோ எதுவும் இல்லை. புகைப்படமும் ஆடியோவும் மட்டுமே. 1997 ஜனவரி 23-ம் தேதி சில ஆசிரமவாசிகள் முன் அவர் உயிர் பிரிகிறது. ஆறேழு நிமிடங்களுக்குள் சம்போ சம்போ சம்போ என்று சொல்லிவிட்டு போய்விட்டார் என ஜக்கி குறிப்பிடுகிறார். என் துணையின்றியே விஜி இதைச் சாதித்தார் என கவனமாகப் பதிவு செய்யத் தவறவில்லை. 

தியானலிங்கம் நிறுவும் மிக முக்கியப் பணி கடைசிக் கட்டத்தில் இருக்கும் போது விஜி இறந்தார். அதற்கு நிறைய ஆற்றல் தேவை எனவும், விஜி அந்த ஆற்றலை உருவாக்கும் நபரில் ஒருவராக இருந்து, அவர் இறப்பினால் தியானலிங்கப் பணி சில ஆண்டுகள் தாமதம் ஆனதாகவும் சொல்கிறார் ஜக்கி. மூன்று பவுர்ணமி எல்லாருக்கும் சமைத்துப் போட்டு, பிறகு போக எண்ணியவர் அதைக் கூட முடிக்கவில்லை. இறந்தபிறகு விஜியின் தந்தை வருவதற்குள், அவர்கள் வழக்கப்படி புதைக்காமல் அவர் உடல் எரிக்கப்பட்டது. 

தன் மகள் கொலை செய்யப்பட்டதாக விஜியின் தந்தை கர்நாடகாவில் கொடுத்த புகார் தமிழ்நாடு காவல்துறைக்கு மாற்றப்பட்டது. ஏழு மாதங்களுக்குப் பிறகு அங்கு என்ன ஆதாரம் இருக்கும்? விசாரிக்கப்போன காவலர்களுக்கு கிடைத்தது எரிக்கப்பட்ட விஜியின் சாம்பலும் சில எலும்புத்துண்டுகளும். அதைத் தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தினால் விஜி இறக்கும்போது அவர் உடலுக்குள் இருந்தது என்ன என்பது பற்றி எந்தத் தடயமும் கிடைக்க வாய்ப்பே இல்லை. உடலில் காயத்துடன் போராடி இறந்தால் அது தற்கொலை. போராட்டமோ காயமோ இன்றி ஒருவர் அறையை விட்டுச் செல்வது போல தன் உடலை விட்டுச் சென்றால் அது மகாசமாதி என்று விளக்கம் சொல்லி காவல்துறைக்கு விபூதி பூசப்பட்டது. ஆதாரம் இல்லாத காரணத்தால் வழக்கு பின்னர் தள்ளுபடி செய்யப்பட்து. 

மனைவி மட்டுமின்றி வெள்ளியங்கிரி அருகில் இருந்த விவசாய சங்கத் தலைவர் மரணம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைச்ச் சந்தித்து புகார் கொடுத்த செயற்பாட்டாளர் ராஜேஷ்குமார் மரணம் என பல மர்ம மரணங்களுக்கும் ஐக்கிக்கும் தொடர்புண்டு என்கிறார் ஓய்வுபெற்ற பேராசிரியர் காமராஜ். சமீபத்தில் நிகழ்ந்த சுபஸ்ரீ மரணம் கூடக் கொலையாக இருக்கலாம் என்கிறார் இவர். ஜக்கியின் மகள் திருமணம் செய்து குடும்ப வாழ்வு வாழும் போது என் மகள்களை மொட்டையடித்து துறவியாக்குவது என்ன நியாயம் எனப் பல ஆண்டுகளாக ஈஷா மையத்துடன் சட்டப் போராட்டம் நடத்திக் கொண்டிருப்பவர் இவர். படித்த, சொத்துப் பின்னணி உடைய நடுத்தர, உயர் நடுத்தரப் பிரிவு மக்களே இவர்களின் இலக்கு என்கிறார் காமராஜ். 

கல்லூரிகள், ஐடி அலுவலகங்களில் இருக்கும் ஈஷா பக்தர்கள் ஏழை மக்களுக்கு உதவி செய்தல் என்ற பெயரில் நண்பர்களை உள்ளே அழைத்து வருகிறார்கள். சிலர் பணிச்சுமை, குடும்பப் பிரச்சனை தொடர்பான மன அழுத்தம் காரணமாக தாமாகவே இங்கே யோகா பயில வருகிறார்கள். இந்த பயிற்சிகளுக்கான கட்டணம் எல்லாமே நன்கொடை ரசீதுதான் கிடைக்கும். ஆற்றலேற்றப்பட்ட லிங்கம் என்ற பெயரில் பல லட்சங்களிலும் பொருள்கள் விற்பனைக்கு உள்ளன. வேலை செய்பவர்கள் பெரும்பாலும் ஊதியமில்லாத் தன்னார்வலர்கள். சிலருக்கு மட்டும் ஊதியம் உண்டு. உள்ளே சென்றதுமே செல்ஃபோனைக் கொடுத்துவிட வேண்டும். சைவ உணவு மட்டுமே பரிமாறப்படும். எளிமையான வாழ்க்கையை அறிவுறுத்தும் குரு செல்வதென்னவோ கோடி ரூபாய் மதிப்புள்ள கார்களில். 

கர்நாடகாவில் தெலுங்குக் குடும்பத்தில் பிறந்த ஜக்கி 1989இல் கோவையில் சஹஜ ஸ்திதி யோக வகுப்புகளை எடுத்தார். ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு எனப் பயணம் செய்து வகுப்புகளை எடுத்தவர் 1994இல் கோவை, வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் ஈஷா அமைப்பை நிறுவினார். மனைவி இறப்புக்குப் பிறகு 1999இல் தியானலிங்கத்தை நிறுவினார். 13 அடி 9 அங்குலம் உள்ள இந்த மெகா லிங்கம் பாதரச அடிப்படையில் அமைந்த உலகிலேயே மிகப் பெரிய லிங்கம் எனப்படுகிறது. 13 ஏக்கர் நிலப்பரப்பில் பதிவு செய்து ஆரம்பிக்கப்பட்டது ஈஷா. தற்போது நூற்றைம்பது ஏக்கரில் விரிந்திருக்கிறது. கடந்த இருபதாண்டுகளில் ஈஷாவின் வளர்ச்சிக்கு அரசியல்வாதிகள், அரசு, மீடியா என அனைவரும் காரணம். ஆரம்பக் காலத்தில் இவரைப் பிரபலப்படுத்தியதில் பத்திரிகைகளுக்கு மிகப் பெரிய பங்குண்டு. 

சுற்றுச்சூழல் பாதிப்பு, யானை வழித்தடம் மறிப்பு, பழங்குடி மக்களிடம் இருந்து நிலம் பறிப்பு, காடுகள் அழிப்பு, பெரிய கட்டுமானங்கள் என இந்த அமைப்பின் மீது பல குற்றச்சாட்டுகள். பூவுலகின் நண்பர்கள் அமைப்பு, இடதுசாரிகள், விவசாயிகள், பழங்குடி சங்கங்கள் எனப் பலர் ஈஷா மீது வழக்கு தொடுத்துள்ளனர். அதையே காரணம் காட்டி வழக்கு நிலுவையில் உள்ளது என்ற பதிலின் பின் ஒளிந்து கொள்வது இவர்கள் வழக்கம். பஞ்சாயத்து அனுமதியுடன் வனத்துறை அனுமதி இன்றி கட்டடங்களை கட்டினார்கள். சில அதிகாரிகள் அனுமதி மறுத்தாலோ, கட்டிடப் பணியை நிறுத்தச் சொல்லி நோட்டீஸ் கொடுத்தாலோ உயரதிகாரிக்கு சீராய்வு மனு போட்டார்கள். அனுமதி விண்ணப்பம் நிலுவையில் இருக்கும்போது கட்டடத்தை ஏன் கட்டினீர்கள் எனக் கேட்டால் நாங்கள் கட்டியபிறகுதான் வனத்துறை சட்டங்கள் வந்தது என்றார்கள். 1990-ல் வந்தது HACA எனப்படும் மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையம். இன்னும் சில ஆண்டுகளில் நாங்கள் சிவலிங்கத்தை நிறுவி ஆசிரமம் அமைத்தபிறகு சுற்றிலும் வனம் உருவாகி பின் வனத்துறை உருவானது என்று சொன்னாலும் கூட வியப்பில்லை. 

அரசு இங்கே யானை வழித்தடமே இல்லை என்று ஒப்புக்கொண்டது. கட்டப்பட்ட கட்டிடங்கள் அனைத்துக்கும் ஒப்புதலும் கிடைத்துவிட்டது. மறுத்தால் அதற்கு மேலே இருக்கும் உயரதிகாரியை நாடுவார்கள். நாட்டின் உயர் பதவியில் இருக்கும் பிரதமர் சிலை திறப்புக்கு வருகிறார். நாட்டின் முதல் பெண்மணியான குடியரசுத்தலைவர் சிவராத்திரி விழாவில் கலந்து கொள்கிறார். சீரியல் நடிகர் முதல் சினிமா நடிகர் வரை அனைவரும் கலந்து கொள்கிறார்கள். அடுத்த வருடம் ஹாலிவுட் நடிகர், அமெரிக்க அதிபர் கூட வந்து ஆட்டம் போடலாம். இந்த நிலையில் யாரோ ஓர் உயரதிகாரி ஒப்புதலைக் கொடுத்துதானே தீரவேண்டும். 

இந்துத்துவ ஆர்வம் கொண்ட கட்சிகள் மட்டுமின்றி தமிழ்நாட்டில் இருக்கும் திராவிடக் கட்சிகளும் அனுசரனையாகவே நடந்துகொண்டன. ஜக்கியும் தீவிர இந்து அடையாளத்தை முன்னிறுத்தாமல் முன்னாள் முதல்வர் கருணாநிதி முதல் தொல். திருமாவளவன் வரை அனைவரிடமும் நட்பு பாராட்டினார். பக்தர்களும் பணமும் சேர்ந்தபின் அரசியலிலும் தலையிட ஆரம்பித்தார். கோவில் அடிமை நிறுத்து, நதிநீர் இணைப்பு, மண்ணைக் காப்பாற்று என புதுப்புது கோஷங்களுடன் பயணம் சென்றார். ஈஷாவை எதிர்ப்பது இந்து மதத்தை எதிர்ப்பதாக திரிக்கப்படுவதால் அரசியல் கட்சிகள் அடக்கியே வாசிக்கிறார்கள். 

இளைஞர்களே இவர்கள் முதல் இலக்கு. பெண்கள் மாதவிடாய் நேரத்தில் கோயில் செல்லலாம் என புரட்சி பேசுவார். சில நாள்களில் பெண்ணியவாதிகள் பேசிப் பேசிப் பேசிப் பேசி வெற்று வாழ்க்கையை வாழ்கிறார்கள் எனவும் சொல்வார். அவ்வப்போது தன் கதைகளை மேம்படுத்திக் கொள்வதில் வல்லவர். சிலர் முன்னிலையில் மகாசமாதி அடைந்த தன் மனைவி கதையை வேறொரு சமயம் சொல்லும் போது இரண்டாயிரம் பேர் கலந்து கொண்டார்கள் என்றார். பின்னர் மூன்று கிரகங்கள் இணைந்து ஆற்றல் பெருகிய உன்னதமான நாளில் விஜி உடல் நீங்கியதாகச் சொன்னார். லட்சங்கள், கோடிகளில் மரம் நட்டதாகச் சொன்னார். சேலத்தில் 9 லட்சம் மரங்கள் நட்டதாகச் சொல்கிறீர்களே, சிலவற்றைக் காட்டினால் நான் தண்ணீர் ஊற்றி பராமரிக்கிறேன் என இயற்கை ஆர்வலர் பியூஷ் மனுஷ் கேட்டபோது மிரட்டல் பதிலாக வந்தது. பின்னர் நதிநீர் இணைப்பு பற்றிய அறிக்கையில் மரம் நட்டதை விதை தூவியதாக மாற்றிவிட்டார்கள். 

இதுநாள் வரையிலான இவரது செயல்பாட்டை அறிவுபூர்வமாக நோக்கினால் ஆன்மிகத்துக்கோ அறத்துக்கோ அதில் பங்கில்லை என்பது புரியும். கல்வி, மருத்துவம் போல சமயத்தை ஒரு சம்பாதிக்கும் துறையாக்கியதே அவரது சாதனை. 

***

2023ஆம் ஆண்டு மெட்ராஸ்பேப்பர் இதழில் வெளியான கட்டுரை.

மெட்ராஸ் பேப்பரில் எழுத ஆரம்பித்த இரண்டு மாதங்களில் ஜக்கி வாசுதேவ் பற்றிய இக்கட்டுரையை எழுதினேன். இக்கட்டுரையை அனுப்பிவைத்த நாளில், ஆசிரியரிடம் இருந்து முதல் பாராட்டு கிடைத்தது. பாராட்டியவரின் மகிழ்ச்சி என்னைவிடக் கூடுதலாக இருந்தது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நீண்டது அந்தத் தொலைப்பேசி உரையாடல். நன்றாக எழுதியிருக்கிறோம் என்பதற்காக சொல்லவந்த விஷயத்துக்குத் தொடர்பில்லாத வரிகளை அந்தக் கட்டுரையில் வைத்திருப்பது தவறென்பதைச் சுட்டிக்காட்டி போனிலேயே மினி வகுப்பெடுத்தார். கட்டுரையின் முதல் பத்தியை மாற்றி எழுதி இடையில் சில பத்திகளை வெட்டியிருப்பதாகச் சொன்னவர், படிக்கும்போது உங்களுக்கே ஏன் எனப் புரியும் என்றார். 

கட்டுரை வெளியானபிறகு அக்கட்டுரை பற்றி அவருக்கு வந்த கருத்துகளை எனக்கு ஃபார்வார்டு செய்தார். எனக்குமே பலரிடம் இருந்தும் செய்திகள் வந்தன. இன்றும்கூட யாராவது இக்கட்டுரையை நினைவுபடுத்திப் பேசுவார்கள். எடிட் செய்யும் கலையைப் பற்றி எனக்குப் புரிய வைத்த கட்டுரை என்பதாலும் என்னைப் பொறுத்தவரை இது மிக முக்கியமான கட்டுரை.

இக்காலகட்டத்தில் வெளியான இன்னும் சில கட்டுரைகள் நாடும் ஒரு நாட்டியப் பேரொளியும் என்ற தலைப்பில் கின்டில் நூலாகக் கிடைக்கிறது.