தடுப்பூசி மருந்து மாஃபியாக்களின் வேலை, நாய்களிடம் இதுவரை கண்டுபிடிக்கப்படாத புதிய வைரஸ் பரவல் இருக்கிறது, வழக்கத்தைவிட மூர்க்கமாகக் கடிக்கும்படி யாரோ எதையோ கொடுத்து நாய்களை மாற்றிவிட்டார்கள்- இவையெல்லாம் சமீபத்திய நாய்க்கடிச் செய்திகளால் சமூக வலைத்தளங்களில் நிறைந்திருக்கும் கான்ஸ்பிரசி தியரிகளில் சில.
நாய்கள் தொந்தரவு நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகவே பிரச்சனைதான். 1770ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் சென்னையில் நடந்த நிர்வாகக் கூட்டத்தில் கோட்டைக்குள் வந்து தொந்தரவு செய்யும் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த இரண்டு யோசனைகள் முன்வைக்கப்பட்டன. இதற்கென நியமிக்கப்பட்ட நபரிடம் சடலமாகக் கொண்டு வந்து காண்பிக்கப்படும் ஒவ்வொரு தெரு நாய்க்கும் இரண்டு பணம் பரிசு என்று அறிவிக்க வேண்டும். நாய்களைச் செல்லப் பிராணிகளாக வளர்ப்போர் அவற்றின் கழுத்தில் பெயர் செதுக்கிய கழுத்துப்பட்டையை அணிவிக்கவேண்டும். அன்றைக்கு நாய்களைத் தொந்தரவாக எண்ணிய மேல்தட்டுச் சமூகம், இன்றைக்கு நாய்களின் பாதுகாவலர் அவதாரம் எடுத்திருக்கிறார்கள். ஒரு வகையில் இன்றையச் சிக்கலின் அடிப்படையாக, சமூகப் பிரிவினையும் உள்ளது.
இந்திய நாயினங்கள் என்ற நூல், நாட்டு நாயின் வகைகள், குணங்கள், சிக்கல்கள் அனைத்தையும் அலசும் ஆவணம். தியோடர் பாஸ்கரன் எழுதிய இந்நூலில் நாய்கள் வீட்டு விலங்காகப் பழக்கப்படுத்தப்பட்ட வரலாறு பதியப்பட்டுள்ளது. மாடு, குதிரைகளுக்கு முன்பே நாய் வீட்டு விலங்காக மாறியதை அஜந்தா ஓவியங்களும் நடுகற்களும் நமக்கு அறிவிக்கின்றன. காஷ்மீர் போன்ற சில மாநிலங்கள் தவிர மற்ற இந்திய நாயினங்கள் குறைந்த முடியுடன் உள்ளவை. விரிந்த மார்புடன் நீண்ட கால்களுடன் ஓடித்திரியத் தோதான உடல்வாகு கொண்டவை.
சைட்ஹவுண்ட், சென்ட்ஹவுண்ட் என இரண்டு வகையான நாய்கள் உள்ளன. கண்களால் பார்த்து துரிதமாக அடையாளம் கண்டு, வேகமாக ஓடும் வகையில் விரிந்த மார்பு கொண்ட ராஜபாளையம் நாய்கள் சைட்ஹவுண்ட் வகையறா. பேயைக்கூட பார்க்கும் என நம்பப்படுவதால் கோஸ்ட்ஹவுண்ட் என்றும் பெயர் இருக்கிறது. சிறப்பான மோப்ப சக்தியுடன் நெடுந்தூரம் ஓடக்கூடியவை சென்ட்ஹவுண்ட். காவல்துறையில் இவ்வகை நாய்கள் பயன்படுத்தப்படுகின்றன.
வேட்டைக்கு உதவுவதும், வீடுகள், மந்தைகளைப் பாதுகாப்பதும் நாயின் பணிகள். உழைக்கும் மக்களுக்கு உதவியாக நாய்கள் இதைச் செய்து கொண்டிருந்தன. வீட்டுக்கு வெளியே இருந்த நாய்கள் பிரிட்டிஷ் காலத்தில்தான் செல்லப் பிராணிகளாக மேல்தட்டுச் சமூகத்தின் வீடுகளின் உள்ளே நுழைந்தன என்கிறார் தியோடர் பாஸ்கரன். வளர்ப்பு நாய்கள் கைவிடப்பட்டு தெருவில் சுற்றித் திரிவதால் உண்டாகும் பாதிப்புகளை உலகச் சுகாதார அமைப்பின் புள்ளிவிவரங்களுடன் தனி அத்தியாயமாகத் தன் நூலில் எழுதியுள்ளார். பலர் இதுகுறித்து அரசை எச்சரித்தனர். வாயால் சொன்னதைக் கேட்காமல் நாயால் கடிபட்டு மக்கள் அவதிகள் தீவிரமாகும்வரை அரசு கண்டுகொள்ளவில்லை.
நாய்களை வளர்ப்பது குழந்தைகள் வளர்ப்பது போலப் பெரிய பொறுப்பு. குழந்தைகளின் அடிப்படை உரிமைகள் பற்றியே அறிந்திராத நாம், நாய்களுக்கு உரிமை இருக்கிறது என்ற கோணத்தைச் சிந்திக்கிறோமா? நாய்களைக் கனமான சங்கிலி அல்லது நீளம் குறைவான சங்கிலியால் பிணைக்கக் கூடாது. தேவைக்குக் குறைவாகவோ அதிகமாகவோ உணவு தரக்கூடாது. குறித்த காலத்தில் தடுப்பூசிகளைச் செலுத்த வேண்டும். அளவில் சிறிய கூண்டில் அடைக்கக் கூடாது. நாள் முழுக்க அடைத்து வைப்பதும் குற்றம். உடற்பயிற்சி கட்டாயம். அதற்காகத் தனியாக வெளியில் சுற்ற அனுமதிக்கக்கூடாது. உடல்நலக் குறைவாலோ, மூப்பினாலோ, காரணம் ஏதுமின்றியோ வளர்ப்பு நாய்களைக் கைவிட்டுத் தெருவில் துரத்திவிடுவதும் குற்றம்.
உரிமையாளர்கள் நாய்களைச் சரியாகப் பராமரிக்காமல் இருப்பதாலும் தெருவில் விடுவதாலும் தெரு நாய்களின் எண்ணிக்கை பெருகுகிறது. தோராயமாக ஒரு நாய்க்கு ஐந்தாயிரம் ரூபாய் மாதப் பராமரிப்புக்குத் தேவை என்பதாலும் சிலரின் நாய் வளர்ப்பு ஆர்வம் விரைவில் குறைந்து விடுகிறது.
நாய்களால் வரும் சிக்கல்களில் முதன்மையானது இரண்டு. ஒன்று- நாய் கடிப்பதால் மனிதர்கள் ரேபிஸ் பரவி இறப்பது. இரண்டாவது- சாலைகளில் அதிகளவில் சுற்றித் திரியும் நாய்களால் நடந்து செல்வோரும் இரு சக்கர வாகனங்களில் செல்வோரும் அச்சுறுத்தலுக்குள்ளாவது. சிறு சிறு காயங்கள் எனினும் தினந்தோறும் சந்திக்கும் பிரச்சனை இது. உரிமையாளர்களைக் கண்காணித்து, தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களைக் கட்டுக்குள் வைக்க வேண்டிய அரசு மெத்தனமாக இருக்கிறது. அரசு இயந்திரங்கள், பிரபலங்களுக்கு பால் பாக்கெட் கொடுக்கும் வேகத்தை சாதாரண மக்கள் ரத்தம் துடைக்கக் காட்டுவதில்லை.
சமூக வலைத்தளங்களில் நடக்கும் வாதப் பிரதிவாதங்களைப் படித்தால் நாய்களின் மேல் இருக்கும் கோபத்தைவிட நாய்களுக்கு உணவிட்டுப் பாதுகாப்போர் மீது கொலைவெறியில் இருப்பதைப் பார்க்க முடிகிறது. கைக்காசைப் போட்டு காரில் வந்து சோறு வைத்துவிட்டுச் சென்றுவிடும் விலங்கு நல ஆர்வலர்களால் காரில் செல்லாதவர் பாதிக்கப்படுகிறார்கள் என்கிற கோபம். ஒரு சிலர் சில நாய்களைப் பிடித்துச் சென்று தடுப்பூசி போடுகிறார்கள். எல்லா நாய்களுக்கும் அவர்கள் தடுப்பூசி போடுவது சாத்தியமில்லை. ஆனால் சோறு போடுவது சாத்தியம். எனவே அதை மட்டும் பலர் செய்கிறார்கள். இப்படி பாதிக் கடமையை மட்டும் செய்வதால் சிக்கல் இன்னும் பெரிதாகிறது.
விலங்குநல ஆர்வலர்களைப் பற்றிப் பேசும்போது பீட்டா அமைப்பைப் பற்றிப் பேசாவிட்டால் தெய்வக் குற்றமாகிவிடும். உணவு, உடை, வேலை, செல்லப்பிராணி என எந்த வகையிலும் விலங்குகளை மனிதன் பயன்படுத்துவது தவறு என்பதே பீட்டாவின் அடிப்படைக் கொள்கை. மனித நாகரீகம் ஆரம்பித்த புதிதில் பீட்டா இருந்திருந்தால் மனிதர்கள் அழிந்து விலங்குகள் மட்டும் பூமியில் நிலைத்திருக்குமோ என்னவோ.
பல நாடுகளில் செயல்படும் பீட்டா அமைப்பு 2000ஆவது ஆண்டில் இந்தியாவிலும் காலடி எடுத்து வைத்தது. விளம்பரப் பிரியர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், மேல்தட்டுச் சமூகத்தின் ஆதரவைப் பெற்று பாலிஸிகளில் மாற்றம் ஏற்படுத்தும் அளவு வல்லமை பெற்றவர்கள். சைவம், ஜீவகாருண்யம் என்ற அடிப்படையிலேயே பீட்டாவுக்கு இந்தியாவில் ஆதரவு அளிக்கிறார்கள் பிரபலங்கள். ஆனால் பீட்டாவின் கொள்கை உணவுக்காக விலங்குகளைக் கொல்லக்கூடாது என்பதுதான். விலங்கைக் கொல்லவே கூடாது என்பதல்ல. இவர்களின் முக்கியமான வேலையே தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களைப் பிடித்துச் சென்று கொல்வதுதான். ஆர்வக் கோளாறில் வளர்ப்பு நாய்களைப் பிடித்துக் கொன்றுவிட்டு தண்டம் கட்டிய வரலாறும் உள்ளது பீட்டாவுக்கு.
அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் உள்ள மொபைல் ஹோம் பார்க் உரிமையாளர் ஒருவர் தன் நிலத்தில் சுற்றிக் கொண்டிருந்த காட்டு நாய்களையும் பூனைகளையும் பிடித்துச் செல்ல பீட்டா அமைப்பின் உதவியை நாடினார். மொபைல் வீடு ஒன்றின் வெளியே இருந்த வளர்ப்பு நாயான மாயாவையும் பிடித்துச் சென்று கொன்றுவிட்டார்கள் பீட்டா அமைப்பினர். ஒன்பது வயதுக் குழந்தையின் வளர்ப்பு நாய் மாயா.
2014-ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்தை முதலில் மறுத்தாலும் பின்னர் தவறாக நிகழ்ந்தது என பீட்டா ஒப்புக்கொண்டது. நியாயமாக ஐந்து நாள் இடைவெளிக்குப் பிறகு யாரும் நாய்க்கு யாரும் உரிமை கோர வரவில்லை என்றால் மட்டுமே கருணைக்காெலை செய்ய பீட்டாவுக்கு அனுமதி இருக்கிறது. பிடித்துவந்த அன்றைய தினமே மாயா கொல்லப்பட்டது பெரும் பிரச்சனையானது. இந்தத் தவறுக்கு தண்டனையாக 500 டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது.
நாயின் சொந்தக்காரர், அறுபது கோடி நஷ்டஈடு கேட்டு அரைக் கோடியில் செட்டிலானார். வளர்ப்புப் பிராணிகள் என்ற அடிப்படையில்தான் ஜல்லிக்கட்டு மாடுகளுக்கு பீட்டாவால் தடை கொண்டுவர முடிந்தது. விலங்குகள் நலன் பற்றி கலாசாரத்துறை முடிவெடுத்த ஒரே நாடு இந்தியாவாகத்தான் இருக்கும். ஒரு பேச்சுக்கு ஜல்லிக்கட்டு மாடுகளை எல்லாம் பீட்டா வசம் ஒப்படைத்திருந்தால் அனைத்தையும் கருணைக்கொலைதான் செய்திருக்கும்.
விலங்குநல ஆர்வலர்கள் தலையிடுவதற்கு முன்பு வரை அரசும் பீட்டாவைப் போல நோயுற்ற நாய்களைக் கருணைக்கொலைதான் செய்தது. 2001ஆவது ஆண்டில் வந்த விலங்குகள் இனப்பெருக்கக் கட்டுப்பாட்டுச் சட்டம், நகராட்சி, முனிசிபாலிட்டியில் நாய்களைக் கொல்வதைத் தடை செய்தது.
அதற்கு முன்பு பயன்பாட்டில் இருந்தது விலங்கு வதைத் தடுப்புச் சட்டம் (1960). விலங்குகளைத் துன்புறுத்துவதை, ஆய்வுக்குப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் இச்சட்டத்தில், அதிகபட்சம் 100 ரூபாய் அபராதமும் மூன்று மாத சிறைத் தண்டையும் உண்டு. கொடூரமான முறையில் கருத்தடை, பால் கறப்பதை அதிகப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு 1000 ரூபாய் அபராதமும் இரண்டு வருடச் சிறைத் தண்டையும் கிடைக்கும். வீட்டில் வளர்க்கப்படும் விலங்குகளுக்கு முறையான விதிகள் இச்சட்டத்தில் உள்ளன. அவற்றைக் கண்காணித்துச் செயல்படுத்தத் தனி அமைப்பு ஏதும் நம்மிடம் இல்லை.
இச்சட்டத்தின்படி பொதுமக்ககள்தான் நாய்களைக் கொல்லக்கூடாது. அரசுக்கு நாய்களைக் கொல்ல உரிமை இருக்கிறது. தெரு நாய்கள் அதிக எண்ணிக்கையில் பெருகுவதைத் தடுக்க முறையான வழியில் அறையில் அடைத்துக் கொலை செய்வதை அனுமதித்தது இச்சட்டம். விலங்குநல ஆர்வலர்களின் எதிர்ப்பால் 2001-ஆம் ஆண்டிலிருந்து, கருத்தடை செய்து திரும்பத் தெருவிலேயே விட்டுவிடும் முறையைக் கையாள ஆரம்பித்தது அரசு. ஓட்டை வாளியில் ஏரித் தண்ணீரை அள்ளிக் கொட்டும் வேலை என்று தியோடர் பாஸ்கரன் இதைக் குறிப்பிடுகிறார்.
சென்னை மாநகராட்சிக் கமிஷனர் ராதாகிருஷ்ணனும் அதையே வேறு வார்த்தைகளில் சொன்னார். 28 பேரை நாய் கடித்த சம்பவத்தைத் தொடர்ந்து நாய்கள் கணக்கெடுப்பை உடனே தொடங்கிவிட்டார்கள். கணக்கெடுத்தாலும் கர்ப்பமாக உள்ள நாய்களுக்கும் குட்டிகளுக்குப் பால் கொடுத்துக் கொண்டிருக்கும் நாய்களுக்கும் ரேபிஸ் தடுப்பூசி போடக்கூடாது. ஒவ்வொரு முறையும் இப்படி சில நாய்கள் விட்டுப்போவதால் அவை ஈனும் குட்டிகளும் அதன் குட்டிகளுமாக எண்ணிக்கை பெருகிவிடுகிறது என்று தெரிவித்தார். கூடவே நாய்ப்பிரியர்கள் நாயைத் தத்தெடுத்துக் கொள்ளாமல் வெறுமனே உணவளித்துக் கடந்து செல்லக் கூடாது என அறிவுறுத்தப்படும் என்றும் தெரிவித்தார். கர்ப்பத்தடை செய்யாமலே நாயின் காதை வெட்டி அனுப்பும் செயலை சிலஅரசு ஊழியர்கள் செய்வதாகச் சொல்லப்படுகிறது. நாக்பூர் போன்ற சில மாநிலங்களில் தெரு நாய்களுக்கு உணவளிப்போருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. டெல்லி மக்கள் தங்களது வளர்ப்பு நாய்களை உடனே பதிவு செய்ய நகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
அரசின் இப்போதைய நடவடிக்கை, ஓட்டை வாளிக்குப் பதில் ரிப்பேர் செய்த வாளியைக் கொண்டு ஏரித் தண்ணீரை இறைக்கும் வேலை. பல ஆயிரம் பேர் உழைத்தாலும் ஏரித் தண்ணீர் முழுதாக காலியாகும் முன்பே மழை வந்து ஏரி நிரம்பத்தான் செய்யும். நாய்களின் இனப்பெருக்க வேகத்துக்கு இணையாக அரசு இயந்திரமும் தன்னார்வலர்களும் செயல்பட முடியுமா..? நாயின் ஆயுள் சுமார் பத்திலிருந்து பதிமூன்று வருடங்கள் வரை. வருடத்துக்கு ஒரு முறை குட்டிகள் ஈனும். ஒவ்வொரு முறையும் ஆறிலிருந்து எட்டு குட்டிகள். கடைசியாக எடுத்த 2018-ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் 58000 தெருநாய்கள் இருந்தன. இப்போது லட்சங்களில் உள்ளன. விலங்கு ஆர்வலர்களுடன் கணக்கு ஆர்வலர்களுக்கும் இத்திட்டத்தில் தேவை இருக்கிறது.
ரேபிஸ் வைரஸ் தடுப்பூசி வருடத்துக்கு ஒரு முறை போட வேண்டியது. லட்சக்கணக்கில் இருக்கும் நாய்களில் சில ஆயிரம் நாய்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதில் அவலம் என்னவென்றால் ஒதுக்கப்படும் தடுப்பூசி எண்ணிக்கையே சில ஆயிரங்கள்தான். அதையும் எந்த நாய்க்குப் போட்டோம், எந்த நாய்க்குப் போடவில்லை என்று உறுதிப்படுத்த முடியாது. கருத்தடை செய்யப் பிடித்து வரப்படும் நாய்க்கெல்லாம் ஊசி போட்டுச் சாயம் ஊற்றி அனுப்பி வைத்தார்கள். நாய் அபிமானிகள் சண்டைக்கு வராமல் இருக்க, கவனமாக காய்கறியில் உருவாக்கப்பட்ட சாயம். கடலில் கலந்த எண்ணையை வாளியில் எடுப்பது, தெர்மாகோல் போட்டு ஆற்று நீரை சேமிப்பது மாதிரி இந்த காய்கறிச் சாயமும் ஓர் அதிநவீன யோசனை. மழை வந்ததும் நாயின் சாயம் வெளுத்துப் போனதில் தோல்வியடைந்தது.
நாய்க்கடியால் ரேபிஸ் பரவலைத் தடுக்க மனிதர்களுக்குத் தேவையான அளவு ரேபிஸ் ஊசிகள் இருக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது. 2021-ஆம் ஆண்டுக்கு முன்புவரை, ரேபிஸ் கண்டறியப்பட்டால் அரசுக்கு அறிவிக்க வேண்டிய நோய்களின் (notifiable disease) பட்டியலில்கூட இல்லை. உலகின் மொத்த ரேபிஸ் பாதிப்புகளில் இந்தியாவின் பங்கு மட்டும் 36 சதமானம். கிடைத்திருக்கும் தகவலின்படி ஒரு வருடத்துக்குத் தோராயமாக 20000 பேர் இந்தியாவில் ரேபிஸால் இறப்பதாக உலகச் சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. இதில் கிட்டத்தட்ட பாதிப் பேர் பதினைந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள்.
ரேபிஸ் பரவலைத் தடுப்பதில் முன்னுதாரணமாக சிக்கிம் அரசு இருக்கிறது. 2005-ஆம் ஆண்டிலிருந்து தொடர் செயல்பாடுகளால் ரேபிஸ் இல்லாத மாநிலமாகியுள்ளது. மாநில விலங்கு நலத்துறையுடன் பிரெஞ்சு, ஆஸ்திரேலிய அரசு சாரா நிறுவனங்களையும் துணைக்கு வைத்துக் கொண்டு போலியோ தடுப்புத் திட்டம் போல ஒரே நேரத்தில் மாநிலத்தில் உள்ள அனைத்து நாய்களுக்கும் தடுப்பூசி போட்டுள்ளார்கள். நான்கு வாரங்களில் எல்லா நகரங்கள் கிராமங்களிலும் உள்ள எல்லா நாய்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. எவ்வளவு முயன்றாலும் நூறு சதவிகிதம் சாத்தியமில்லை. எண்பது சதவிகிதம் நாய்களுக்கு ஊசி போட முடிந்தது. எனினும் தொடர்ந்து வருடா வருடம் செய்ததால் மாநிலம் முழுவதும் ரேபிஸ் இல்லாமல் போயிருக்கிறது.
தமிழ்நாடு இப்படியான மாஸ் மருத்துவத் திட்டங்களை மனிதர்களுக்குப் பல முறை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது. மனிதர்களுக்கான ரேபிஸ் ஊசி ஐந்து டோஸ்களாகப் போட கிட்டதட்ட 2000 செலவாகும். நாய்களுக்கான ரேபிஸ் தடுப்பூசி தோராயமாக 200 ரூபாய். மூன்று லட்சம் நாய்களுக்கு வருடா வருடம் தடுப்பூசி செலுத்த மருந்துக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கும் பல கோடிகள் செலவாகும். ஒரே நேரத்தில் கருத்தடை, தடுப்பூசி என்பதைச் சில ஆண்டுகள் செயல்படுத்தினால் பத்திலிருந்து பதினைந்து ஆண்டுகளில் பலன் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இது நாய்க்கடியால் ஏற்படும் ரேபிஸ் பரவலையும் உயிரிழப்புகளையும் தடுக்குமே ஒழிய, குப்பையைக் கிளறி சாலையில் மலம் கழித்து பல்வேறு விதமான நோய்ப் பரவலுக்கும் காரணமாவது மாறாது. சாலையைப் பயன்படுத்தும் மனிதர்கள் தினந்தோறும் நாய்களால் எதிர்கொள்ளும் சிக்கல்கள் அப்படியே தொடரும்.
ஐரோப்பிய மேற்குலக நாடுகளில் நாய்களின் உரிமையாளர்கள் முறையாக கண்காணிக்கப்பட்டு விதிகளை மீறும்போது அபராதம், சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. பிடித்துச் செல்லப்படும் தெருநாய்களை மக்கள் தத்தெடுக்கிறார்கள். நாய் வேண்டாம் என்று முடிவெடுத்தாலும் மைக்ரோ சிப் இருப்பதால் திரும்ப வந்து காப்பகத்தில் விடுவார்களே அன்றித் தெருவில் விடமாட்டார்கள். கருத்தடை, உரிமையாளர்களுக்குப் பயிற்சி, மைக்ரோசிப் இவற்றுடன் கருணைக்கொலையும் செய்கின்றன இந்நாடுகள். அதிக மக்கள் தொகை இருப்பதால், கண்காணிக்கும் செயல்பாடு இந்தியாவில் பெரும் சவாலான ஒன்று. எண்ணிக்கை வித்தியாசம் நாய்களிலும் எதிரொலிக்கிறது. மெத்தன நடவடிக்கைகளால் அரசின் மீதும் விலங்குநல அமைப்புகள் மீதும் இருக்கும் மக்களின் கோபம் நாய்களின் மீது திரும்புவது இதன் அடுத்த நிலை.
28 பேர் கடிபட்ட சம்பவத்தில் தொடர்புடைய நாய் அன்றே பொதுமக்களால் அடித்துக் கொல்லப்பட்டது. கேரளா சில ஆண்டுகளுக்கு முன்பு இதைச் சந்தித்தது. பல ஆயிரக்கணக்கில் நாய்க்கடியால் அவதிப்பட்டதால் மக்கள் போராட்டம் நடத்தினர். நாய்களைக் கொடுமைப் படுத்திக் கொல்வது, விஷம் வைத்துக் கூட்டமாகக் கொல்வது போன்ற செயல்கள் அதிகமாகி சமூக வலைத்தளங்களில் வைராலாகின. 2015-ஆம் ஆண்டில் கேரளாவில் 1,60,000 நாய்க்கடிகள் பதிவாகின. வி கார்ட் நிறுவனத் தொழிலதிபர் நாய்களைக் கட்டுப்படுத்த ஐந்து லட்சம் பரிசு அறிவித்தது சர்ச்சையானது. நாய்களைக் கொல்லாமல் கோயம்பத்தூரில் இருக்கும் தொண்டு நிறுவனத்திடம் அளிக்கிறோம் என்றார் அவர். அன்புக்கு எல்லை இல்லை என்பதால் தமிழ்நாட்டு நாய்களை விடுத்து எல்லை தாண்டி அன்பு செய்கிறார்கள் போல.
கேரளா, மும்பை போன்ற மாநிலங்கள் சில முறை நீதிமன்றத்தின் மூலம் கருணைக்காெலைக்கு அனுமதிபெற முயன்றும் முடியவில்லை. மனிதர்கள் மட்டுமின்றி தெருநாய்களால் காட்டுயிர்களுக்கும் ஆபத்துள்ளதைச் சுட்டிக்காட்டுகிறார் தியோடர் பாஸ்கரன். மான்கள், நரிகள் எண்ணிக்கை தெருநாய்களால் பெருமளவு குறைந்துள்ளது. 2022-ஆம் ஆண்டு காணமல் போன கேரள சிறுவன் நாய்கள் கடித்து இறந்து பிணமாக மீட்கப்பட்டதைத் தொடர்ந்து கேரளா மீண்டும் நீதிமன்றத்தை நாடியது. விலங்குநல ஆர்வலர்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி கருணைக்கொலைக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்தச் சண்டை முடியும் வரை ஏரித் தண்ணீரை வாளியால் அள்ளுவதைத் தவிர வேறு உருப்படியான உபாயம் இல்லை.
கட்டுரை தொடர்பாகப் பறவையியல் ஆய்வாளர் கிருபாநந்தினியிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் சில கேள்விகளை எழுப்பினார். பறவைகளை வளர்ப்பது நம் நாட்டில் சட்டப்படி குற்றம். அனுமதி பெற்றோ பெறாமலோ வெளிநாட்டுப் பறவைகள் வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. கவனக் குறைவால் தப்பித்துப் போகும் பறவைகள் என்ன செய்யும்? எப்படி உயிர் வாழும்? பிழைத்திருக்கும் பறவைகள் இனப்பெருக்கம் செய்து தெருநாய்களைப் போல அதிகளவில் பெருகினால் என்ன நடக்கும்? அவர் கேள்விகளுக்கு நம் யாரிடமும் பதில் இல்லை. பதிலை விடுங்கள். ஐம்பதாண்டுகள் கழித்து ‘அதிகளவில் சுற்றித் திரியும் பறவைகளால் பரவும் நோய் அபாயம்’ என செய்திகள் வரும்வரை யாருக்கும் அப்படி ஒரு கேள்வி தோன்றக்கூடச் செய்யாது. அதுவரை பறவைகளை வளர்த்துச் செல்லம் கொஞ்சிக் கொண்டிருப்போம். வரலாறு முழுக்க, ஆப்பை அசைத்த குரங்குகளாகவே இருக்கிறார்கள் மனிதர்கள்.
நவம்பர் 8, 2023ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட கட்டுரை.
நன்றி – மெட்ராஸ் பேப்பர்.
