பொங்குக!

அறுவடை நாள் கொண்டாட்டம் என்பது உலகம் முழுவதும் இருக்கும் பண்டிகைதான். உலகெங்கிலும் எப்படி எப்போது இந்நாளைக் கொண்டாடுகிறார்கள் எனத் தெரிந்துகொள்வோம்.

பிப்ரவரி மாதத்தில் திராட்சைப் பழங்களை ஒருவர் மேல் ஒருவர் வீசி விளையாடும் விழாவாக அறுவடையைக் கொண்டாடுகிறது அர்ஜென்டைனா. அழகிப்போட்டியும் உண்டு. வீதி முழக்க மக்கள் குவிந்து திராட்சைப் பழத்தில் குளித்து மகிழும் இந்த விழா ஸ்பெயின் நாட்டிலும் செப்டம்பர் மாதத்தில் நடைபெறுகிறது. ஸ்பெயினின் புனோல் நகரத்தில் தக்காளியை வீசிக் கொண்டாடும் ல டொமாட்டினா விழாவும் மிகப் பிரபலம். 

பூர்வகுடிகளின் அறுவடை நாள் திருவிழாவே தற்போது, அமெரிக்காவிலும் கனடாவிலும் நவம்பர் மாதத்தில், தேங்ஸ் கிவ்விங் எனப்படும், நன்றி தெரிவிக்கும் நாளாக மாறியிருக்கிறது. 

உழவர்கள் பழங்காலத்தில் வயலில் தங்கி இருந்ததின் நினைவாக சுக்கா எனும் குடிலில் ஏழு நாள்கள் தங்கி நிலத்துக்கு நன்றி தெரிவிப்பது யூதர்களின் சுக்கோட் பண்டிகை. அக்டோபர் மாத வாக்கில் வரும் இந்த பண்டிகை நாள்களில் வேலை செய்வது தடைசெய்யப்பட்ட ஒன்றாகும். 

இந்தோனேஷியாவின் அரிசி அறுவடைத் திருவிழா, தாய்லாந்தின் சந்தபுரி பழத்திருவிழா, பல நூற்றாண்டுகளாக கொண்டாடப்படும் வரலாறு கொண்டவை. இத்தாலியின் ஆலிவாகன்டோ, ஆங்கிலேயர்களின் லம்மாஸ் என உலகம் முழுக்க அறுவடைத் திருநாளை வெவ்வேறு பெயர்களில் கொண்டாடுகிறார்கள். 

இந்தியாவை நாடு என அழைத்தாலும், அது ஒரு துணைக்கண்டம். ஒவ்வொரு மாநிலமும் தங்களுக்கென தனித்த பண்பாட்டு அடையாளங்களையும் மரபுகளையும் கொண்டுள்ளன. மாநிலங்களின் தட்பவெப்ப நிலையின் படி அறுவடைக்காலம் சற்றே மாறலாம். ஆங்கில நாட்காட்டியின்படி ஜனவரி, ஏப்ரல், ஆகஸ்ட் மாதங்களில் இந்தியாவின் ஏதோ ஒரு மாநிலத்தில் அறுவடை நாளைக் கொண்டாடுகிறோம். 

தமிழ்நாட்டில் பொங்கல் பொங்கும் போது, பெரும்பாலான மாநிலங்கள் வேறு பெயர்களில் இந்நாளைக் கொண்டாடுகின்றன. ஆந்திராவிலும், கர்நாடகாவிலும் பெரும்பாலும் மகரசங்ராந்தி என்றே அழைக்கிறார்கள். தமிழர்களைப் போல் பொங்கலிடும் நாளை பெரும்பண்டிகை எனும் பொருளில் பெத்த பண்டிகா என ஆந்திராவில் அழைப்பதுண்டு. கர்நாடக விவசாயிகள் சுக்கி ஹப்பா என்பார்கள். தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் வழக்கத்தில் இருக்கும், இளம்பெண்களின் சிறுவீட்டுப்பொங்கல் போல இங்கே எல்லு பிரோது வழக்கத்தில் இருக்கிறது. அஸ்ஸாம் மாநிலத்தின் பிஹு திருவிழாவும் நம்மைப்போல் ஜனவரியில்தான். 

தென்னக மாநிலமாக இருந்தாலும் கேரளாவில் இந்நாள் மகர விளக்குக்கானது. அறுவடை நாளை ஆகஸ்ட் மாதத்தில்தான் ஓணம் எனக் கொண்டாடுகிறார்கள். கோவாவின் கொன்சாஷம், ஒடிஸாவின் நுவாகாய்கூட, ஆகஸ்ட் மாத வாக்கில்தான். இந்த காலத்தில் தமிழ்நாட்டில் ஆடிப் பட்டம் தேடி, விதைக்கத் தொடங்கியிருப்போம். 

நாம் பொங்கல் கொண்டாடும் நாளில் பல வட மாநிலங்களில் சூரிய பெயர்ச்சியை மகர சங்ராந்தி என இனிப்புகளைப் பறிமாறி கொண்டாடுகிறார்கள். குஜராத்திகள் இந்த நாளை உத்ராயன் எனப் பெயரிட்டு பட்டங்களைப் பறக்கவிடுகிறார்கள். பஞ்சாபில் லொஹ்ரி என்ற பெயரில் குளிர்காலத்தை வழியனுப்பி வைக்கிறார்கள். 

பஞ்சாப், ஹரியானா மாநிலங்கள் அறுவடையைக் கொண்டாடுவது ஏப்ரல் மாதத்தில். பைஷாகி அல்லது வைஷாகித் திருவிழா. அந்த சமயத்தில் நாம் சித்திரைத் திருநாளைக் கொண்டாடுவோம். 

தமிழகத்திலும் ஆந்திராவிலும் பழையதை எரித்து புதியதை வரவேற்கும் நாள் போகி என்பது நம்பிக்கை. பஞ்சாபில் குளிருக்காக எரித்துக் கொண்டாடும் நாளை லொஹ்ரி என்கிறார்கள். மாராத்தியர்கள் புது ஆண்டின் தொடக்கமாக கருதுகிறார்கள். 

இந்திய மாநிலங்களின் தட்பவெப்ப நிலையைப் ஒட்டி வருடத்தின் வெவ்வேறு மாதங்களில் அறுவடைத்திருநாள் கொண்டாடப்பட்டாலும் எல்லா மாநிலங்களிலுமே வேறு பெயரில் வேறு காரணத்துக்காக அந்த கொண்டாட்டங்களில் நாம் அனைவருமே, இணைந்திருக்கிறோம். 

தமிழ்நாட்டில், தைப்பொங்கலின் வரலாறு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது. இதைப் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கிய காலத்தில் இருந்தே காணக்கிடைக்கின்றன. கலித்தொகை பாடல் ஒன்றில் தையில் நீராடிய தவம் என்ற வரி வருகிறது. நற்றிணை, புறநானுறு, ஐங்குறுநூறு என பல நூல்களில் தைத்திங்களின் சிறப்பு பாடப்பட்டிருக்கிறது. 

கலித்தொகையில் முல்லைக்கலியில், ஏறுதழுவுதல் பற்றியும் இருக்கிறது. காளையின் கொம்புக்கு அஞ்சுபவனை ஆயமகள் அடுத்த பிறவியிலும் விரும்ப மாட்டாள் என்கிறது ஒரு பாடல். இன்னும் நிறைய பாடல்கள் ஏறுதழுவுதலைப் பற்றி பாடுகின்றன. முல்லை நிலம் கால்நடைகள் வளர்க்கும், இடையர் இடைச்சியர் நிலம் என்பது தமிழ்த் திணை வரையறை. 

சங்க காலத்துக்குப் பிறகு எழுதப்பட்ட, சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் இந்திர விழா பற்றிய பாடல்கள் உள்ளன. விழா அறை காதையில் இந்திரனுக்கு விழா எடுப்பதால் நகருக்கு ஏற்படும் நன்மைகளும், தேவர்கள் வருகை பற்றியும், நகரம் அலங்கரிக்கப்படும் விதம் குறித்தும் எழுதப்பட்டிருக்கிறது. விழா நடக்காமல் போனால், நாளாங்காடிப் பூதமும் சதுக்கப்பூதமும் சும்மா விடாது என எச்சரிக்கையும் இருக்கிறது. இந்த இரட்டைக் காப்பியங்களின் காலம் இரண்டாம் நூற்றாண்டு என கணிக்கப்படுகிறது. இந்திரன் விவசாய நிலமான மருதநிலத் திணையின் தெய்வம். 

ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆண்டாள் இயற்றிய திருப்பாவை, மார்கழி நோன்பு பற்றிப் பாடுகிறது. ஆண்டாள் மதி நிறைந்த நன்னாள் எனக் குறிப்பிடுவதால் பாவை நோன்பு மார்கழி முழுநிலவில் தொடங்கி முப்பது நாள்களுக்குப் பிறகு தை மாத முழுநிலவில் முடிந்தது என்றும் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். வைணவம் மட்டுமல்ல, பாண்டியனை சைவம் தழுவச் செய்த ஞானசம்பந்தரும் தைப்பூசத்தின் பெருமையை அவரது பாடலில் குறிப்பிடுகிறார். 

எந்தப் பாடலிலும் தைப்பொங்கல் என்ற வார்த்தை இல்லை. அது பின்னாளில் வந்ததுதான். இந்த சான்றுகள் எல்லாம் தை மாதம் சிறப்பு வாய்ந்ததாகவும், தைநீராடல், பாவை நோன்பு ஆகிய வழக்கம் தொன்று தொட்டு வருவதையும்தான் காட்டுகின்றன. 

இப்போதும் தென் மாவட்டங்களில் பெண் குழந்தைகள் ஒன்று கூடி தை மாதத்தில் சிறுவீட்டுப் பொங்கல் கொண்டாடும் சடங்கு தைநீராடலையும், பாவை நோன்பையும் நினைவூட்டுகின்றன. 

பேரரசுகள் தமிழ்நாட்டை ஆளத்தொடங்கிய பிறகு சூரியக் கடவுள், தேவர்கள் எனச் சேர்த்து புராண கதைகள் ஏற்படுத்தப் பட்டிருக்கலாம். பெருமதங்கள் பூர்வகுடிகளின் கொண்டாட்டங்களைத் தமதாக்கிக் கொள்வது உலகம் முழுவதும் நடப்பதுதான். மெழுகுவர்த்தி, பரிசுகள், மரத்தை அலங்கரிப்பது, விருந்து, மலர் வளையம் ஆகிய சேடர்னாலியா பண்டிகையின் நிகழ்வுகள்தான் இயேசுவின் பிறப்புக் கொண்டாட்டமாக, கிறிஸ்துமஸ் ஆக மாறியது என ஒரு கருத்து உள்ளது. 

மனிதர்களிடையே உயர்வு தாழ்வு வேறுபாடுகள் மதத்தின் பெயராலேயே நடக்கின்றன. இதைக் களைய கடவுள், புராண இதிகாச கதைகள், பண்டிகைகள், நம்பிக்கைகள் பற்றிய கட்டுக்கதைகளை கட்டுடைத்தார் பெரியார் ஈ.வெ.ரா. இப்படி எல்லா பண்டிகையையும் குறைசொல்லிக்கொண்டே போனால் மக்கள் எதைக் கொண்டாடுவார்கள் என்ற கேள்விக்கு பதிலானதுதான் தைப்பொங்கல். நெய்ப்பொங்கலில் அரசியல் கலந்தது அப்போதிருந்துதான். 

நெல்லை மாவட்டத்தில் இறப்பு நிகழ்ந்தாலும் விரைவாக சடங்குகளை முடித்துவிட்டு, வீட்டை பூசி மெழுகி பொங்கல் கொண்டாடும் வழக்கம் இருக்கிறது. தீட்டு அணுகாத விழாவாக பொங்கல் இருக்கிறது. பெருந்தெய்வங்கள் படையலில் மண்ணுக்கு கீழே விளையும் காய்கறிகள் சேர்க்கப்படுவதில்லை. ஆனால் பொங்கல் பண்டிகையில் மண்ணுக்கு அடியில் விளையும் கிழங்குகள் படையிலிடப் படுகின்றன. இவற்றைச் சுட்டிக்காட்டி பொங்கல் எளிய மக்களின் கொண்டாட்டம் எனக் கூறியுள்ளார் ஆய்வாளர் தொ.பரமசிவன். 

தமிழ் ஆர்வலர்களும், அரசியல்வாதிகளும், மதச்சார்பற்ற கொண்டாட்டமாக பொங்கல் திருநாளை முன்னிறுத்தினார்கள். ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடை, உணர்வு ரீதியாக மக்களை ஒருங்கிணைத்தது. ஸ்பெயின் போன்ற நாடுகளில் காளைச் சண்டையின் முடிவில் காளைகளைக் கொன்று விடுவார்கள். எண்ணிக்கையோ ஆயிரக்கணக்கில். இங்கே, ஏறுதழுவுதல் என்பதே பழங்கால வழக்கம். ஜல்லிக்கட்டு எனும் சல்லியை மாட்டின் கொம்பில் கட்டி அதைப் பறித்து மாட்டை வீழ்த்துவது பிற்கால நடைமுறைதான். 

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து பொதுமக்கள் மெரினாவில் போராடியதால், வாதப் பிரதி வாதங்கள், நீதிமன்றம், அரசாங்க மசோதாக்கள் என காட்சிகள் விறுவிறுப்பாக அரங்கேறின. கடைசியில், மாடு, மனிதன் இருவருமே பாதுகாப்புடன் இருக்கும்படியாக விதிகள் உருவாக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டது. இதற்காக நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் தந்த உலகளாவிய வெளிச்சம் பொங்கல் பண்டிகையை தமிழர்களின் தனித்த அடையாளமாக உயர்த்தியிருக்கிறது. படிப்படியாக உணர்வு ரீதியான கொண்டாட்டமாக தைப்பொங்கல் மாறியிருக்கிறது. 

வீடுகளில் பொங்கல் என்பதைத் தாண்டி, பல ஊர்களில் மக்கள் ஒன்றாக இணைந்து சமத்துவப் பொங்கல் கொண்டாடுகிறார்கள். திமுக ஆட்சியில் இருந்தால் சென்னை சங்கமம் நடைபெறுவது வழக்கம். இதில் மண்ணின் மைந்தர்களின் கலைகளான கரகாட்டம், ஒயிலாட்டம் எல்லாம் நகரத்து வீதிகளில் நடத்தப்படுகின்றன. பல நாடுகளில் உள்ள தமிழர்கள் தங்கள் வேர்களை நினைவுகூர்ந்து இந்நாளில் பொங்கலிட்டு நன்றி கூறுகிறார்கள். உலகத் தலைவர்கள் பலரும் கூட இதில் பங்கெடுத்து வாழ்த்துகளை தெரிவிக்கிறார்கள். 

தனித்துவம், பண்பாடு என்றெல்லாம் உணர்வைத் தூண்டிவிட்டு ஆதாயம் தேடுபவர்களைப் புறந்தள்ளி, மக்கள் சமூக நல்லிணக்கத்துடன் கொண்டாடும் பண்டிகையாகவே பொங்கல் என்றென்றும் இருக்க வேண்டும். நிலத்துக்கும், கால்நடைகளுக்கும் நன்றி கூறி பசியற்ற சமூகம் உருவாக பாடுபடவேண்டும். அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

10/01/2023 அன்று மெட்ராஸ் பேப்பரில் பதிப்பிக்கப்பட்ட கட்டுரை.