நான் எழுதத் தொடங்கிய முதல் ஆண்டின் அனுபவங்கள் மெட்ராஸ் பேப்பரில் கட்டுரையாக வந்தது. 2022ஆம் ஆண்டு இறுதியில் எங்கள் ஆசிரியர் பா.ராகவன் நடத்திய எழுத்துப் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டபோது குறிப்பிட்ட நோக்கம் ஏதுமில்லை. ஆர்வம் இருந்தது. அந்தப் பயிற்சியில் ஆர்வம் கூடி அடுத்த வாரம் ஹெர் ஸ்டோரிஸ் நடத்திய பயிற்சிப் பட்டறையிலும் கலந்து கொண்டேன். அடுத்தடுத்து வாய்ப்புகள் வர எழுதுவது தொடர்ந்தது.
2023 டிசம்பரில் மெட்ராஸ்பேப்பரில் எழுதிய ஆண்டறிக்கைக் கட்டுரையைக் கீழே கொடுத்துள்ளேன்.
*
இந்த வருடத்தைத் திரும்பிப் பார்த்தால் பெரிய சாதனையாகத் தெரிவது, எழுத்தொழுக்கத்தின் முதல் படியில் என் காலை எடுத்து வைத்திருப்பதுதான். என் வீட்டைப் பார்க்கத்தான் கண்றாவியாக இருக்கிறது. கிடக்கிறது கழுதை. இந்த மல்ட்டி டாஸ்கிங் எல்லாம் எனக்கு எப்போதுமே ஒத்து வருவதில்லை.
வீடு என்பது சுவரும் சுத்தமும் அல்ல. குடும்ப உறுப்பினர்கள்தான். நிபந்தனையற்ற ஆதரவு கொடுக்கும் தம்பதிகள் என்பதால் என் கணவரால் எப்போதுமே சிக்கலில்லை. என் உதவி தேவைப்படாத, சரியாகச் சொல்வதென்றால் என் விஷயத்தில் நீ தலையிடாதே என்று சொல்லக்கூடிய வயதில் இருக்கும் மகள்கள். எழுத்தால் எழுந்த புதிய இடைவெளி நான் அஞ்சியது போலில்லை. ஒருவருக்கொருவர் உதவி, வளர்ப்பும் வளர்ந்ததும் நன்றே என்பதை உறுதி செய்தன.
யோசித்துப் பார்த்தால் சரியான வாய்ப்பு சரியான காலத்தில் அமைந்தது என்றுதான் தோன்றுகிறது. வெளியில் இருந்து பார்ப்போருக்கு வீடு ஒழுங்கின்றித் தெரிந்தாலும், மற்றவர் கண்ணுக்குப் புலப்படாத எனக்கே எனக்கான எழுத்து ஒழுங்கொன்றை வருட இறுதிக்குள் கண்டடைந்துவிட்டேன். ஆசிரியரைப் போல ஒரு நாளைப் பலவகை எழுத்துக்கு உடைத்துப் பிரிக்க எனக்கு ஓர் ஆயுள் தேவைப்படலாம். ஆனால் ஒரு வாரத்தை உடைத்து வகை பிரித்துத் தொய்வின்றி எழுத முடிகிறது. விட்டுவிடாமல் தொடர்ந்தால் மட்டும் போதும்.
கட்டுரைகளாக எழுதியது மட்டும் நூறுக்கு அருகில். முக்கால்வாசி மெட்ராஸ்பேப்பரில் வெளிவந்தது. ஹர் ஸ்டோரீஸ், இந்து தமிழ்திசை, விஞ்ஞானத் துளிர் என்று சிலதில் மிச்சக் கட்டுரைகள். வருடம் ஆரம்பித்தபோது எதை எழுத வேண்டும் என்பது பற்றி ஒன்றும் திட்டமில்லை. ஆசிரியருக்கும் என்னைப் பற்றி யூகிக்க முடியாமல்தான் ஆரம்பத்தில் வகைக்கொன்று என எழுதப் பணித்தார். ஓரிரண்டு முறை ஆசிரியரை நேரில் சந்தித்தது என்னை இலக்குடன் எழுத்துப் பயணத்தைத் தொடர உந்தியது.
மார்ச் மாதத்திற்குள்ளாகவே நம்ம ஏரியா அரசியல்தான் என்று ஆசிரியரும் நானும் செட்டிலாகிவிட்டோம். அதைத் தவிர குற்றப் பின்னணிக் கட்டுரை என்றால் ‘கூப்பிடு கோகிலாவை’ என்கிற அளவுக்கு ஆகிவிட்டது. அவ்வப்போது வரலாறு, அறிவியல், டெக் என்று சிலதைப் பற்றி எழுதி இருந்தாலும் பிரதானமாக அரசியலும் குற்றமும் இருந்தன. பாராட்டு தெரிவித்தோரும் ஜக்கி, அதானி, ருஜா, சோப்ராஜ், பிரிஜ் பூஷன், மீ டூ, கலாஷேத்ரா, தில்லை நடராஜர் கோயில் போன்ற கட்டுரைகள் பற்றியே அதிகம் குறிப்பிட்டனர்.
கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு மூன்று கட்டுரைகளில் கோபமான சொற்களைப் பயன்படுத்தியதற்காக ‘பொங்கல் வைக்கிறேன்’ என்று மூன்றாயிரம் முறை சொன்னார் ஆசிரியர். அவர் வாயில் விழாமல் இருக்க வேண்டுமே என்று கவனம் எடுத்து நிதானமாக எழுத ஆரம்பித்தேன். மீ டூ கட்டுரைகளில் கோபத்துக்கு விதிவிலக்கு கிடைத்தது. காஸா போர்க் குறிப்புகளிலும் சுட்டிக் காட்டினாரே தவிர வெட்டி வீசவில்லை. அப்படியே அவ்வார்த்தைகள் புத்தகமும் ஆயின. உண்மைகளை உரைக்கும் பத்திரிகைக் கட்டுரை வாசிப்பவரின் மனத்தில் எழுப்பும் அறச்சீற்றத்துக்கும், கோபத்துடன் ஒரு தரப்பைப் பேசும் பேஸ்புக் பதிவுக்கும் இடையிலான வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது. பொங்காமல் கிருஷ்ணனைத் தேரில் ஏற்றி இந்த வருடத்தை முடித்து வைத்தேன்.
கேரளா ஸ்டோரி, பி.டி.ஆர். டீப் ஃபேக் ஆடியோ, உரிமைத் தொகை, நாய்க்கடி போன்ற சில கட்டுரைகளும் கவனம் பெற்றன. ஆசிரியர், ‘எழுத்து ரவுடி’ பட்டம் கொடுத்துப் பாராட்டியதையும் மறக்க இயலாது. முதல் நூலாக ஒரு மனிதன் ஒரு நகரம் நூல் பதிப்பிக்கப்பட்ட வருடம் என்பதால் நிச்சயம் என் வாழ்வில் முக்கியமான வருடமாக 2023 இருக்கும்.
நாற்பது வயதோ, கோவிட் தொற்றோ… ஏதோ ஒன்று என் உடல் நிலையைப் புரட்டிப் போட்டது. வருடம் ஆரம்பிக்கும் போது முந்தைய ஆண்டின் வலியும் சோர்வும் கூடி மன அழுத்தத்தில்தான் இருந்தேன். தொடர்ந்து எழுத ஆரம்பித்த பிறகு, சமாளிக்க முடியாத அளவு வலியில் கழிந்தன நாள்கள். மேசை, நாற்காலி, ஒயர்லஸ் கீபோர்ட், கையுறை, காலுறை, எளிய உடற்பயிற்சிகள், உணவு மாற்றம் எல்லாம் ஒவ்வொன்றாக முயன்று, திருத்தி வருட மத்தியில் ஒரு மாதிரி என் உடலை என் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டேன். இந்த வருடம் நான் என்னைப் பற்றிப் பெருமிதமாக எண்ணும் விஷயங்களில் இதுவும் ஒன்று.
ஹெர் ஸ்டோரிஸ் தொடர்பான நிகழ்வுகளை நேரிலும் நேரலையும் ஒருங்கிணைத்ததின் வாயிலாக நிறைய அனுபவங்களும் அறிமுகங்களும் கிடைத்தன. எழுதிய கட்டுரைகள் சிலவற்றை வருட மத்தியில் கிண்டில் புத்தமாக்கியதும் புரமோஷன் செய்ததும் அச்சு நூல்களுக்குப் பயிற்சியாக இருந்தன.
கடந்த சில வருடங்களாக வாசிப்பதில் தொய்வு ஏற்பட்டு ஓடிடி வெப் சீரிஸ்களும், திரைப்படங்களும் அந்த நேரத்தை ஆக்கிரமித்திருந்தன. இந்த வருடம் அது மாறியுள்ளது. நல்லது. வெள்ளம் வடிந்த வேளச்சேரி ஏரியா குப்பைகள் போல வாசித்தவற்றின் எண்ணிக்கை அதிகம் இருந்தாலும், எல்லாமே வேலை தொடர்பாகத்தான் என்பதை வரும் வருடத்திலாவது திருத்திக் கொள்ள வேண்டும்.
கட்டுரைகள் தவிர புத்தகங்களுக்காக மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் சொற்களை எழுதியுள்ளேன். ஐந்து நூல்கள். எல்லாமே 2024 புத்தகக் காட்சிக்குள் வெளிவருமா எனத் தெரியாது. ஆனால் எழுதி முடித்து அனுப்பிவிட்டேன். அது போதும்.
*
கட்டுரையை மெட்ராஸ் பேப்பர் தளத்திலும் வாசிக்கலாம்.
நான் மெட்ராஸ் பேப்பரில் எழுதும் கட்டுரைகளின் தொகுப்பு இந்தச் சுட்டியில் உள்ளது.
2024ஆம் ஆண்டு ஆண்டறிக்கையையும் விரைவில் பதிவிடுகிறேன்.
