நடுவில் சிலகாலம் குடும்பஸ்தனாக மாறிய நண்பர் பாண்டியராஜன் திருந்த முயற்சி எடுத்தபோது உதவினேன். குத்துவிளக்காக இருந்த காயத்ரியை, உன் கனவுதான் முக்கியம், குடும்பம் குழந்தை குட்டி எல்லாம் அடுத்தது என்று குழப்பிவிட்டேன். இந்த சமூக சேவை கொடுத்த திருப்தி மட்டுமின்றி, எழுத்தொழுக்கத்தின் முதல் படியில் ஏறியதால் நான் அடைந்த பலன்களை அனுபவித்து மகிழ்ந்த ஆண்டு இது.
எழுதுவது மட்டுமே எழுத்தாளரின் பணி என்பது கடந்தகாலம். அதை வாசகரிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பும் எழுத்தாளருக்கே என்பது தற்போதைய புதிய உலக ஒழுங்கு. உலரா உதிரம் நூலின் தலைப்பு மட்டுமின்றி உள்ளடக்கமும் ரத்தவாடை நிறைந்திருக்கும். அந்நூல் விழிப்புணர்வு உண்டாக்க என்பதைத் தாண்டி விளம்பரம் என்ற யோசனைக்கே நான் செல்லவில்லை. தவறில்லை. மற்ற நூல்களையேனும் வாசகர்களிடம் கொண்டு செல்ல தொடர்ந்து ஏதேனும் செய்தேனா என்றால் அதுவும் இல்லை.
நான் அறியாமல் செய்யும் தவறுகள் அரிது. பெரும்பாலும் தெரிந்தே செய்வனதாம். முழுச் சோம்பேறியாகிய நான் செய்யும் தவறுகளை, வளர்ப்பு, தயக்கம், பாலினம், நியாயம் என்று விதவிதமாகப் பெயர்வைத்துப் பாதியை அவற்றின் மேல் ஏற்றிவிடுவேன். ஐந்து நூல்கள் எழுதிய பிறகு அவற்றைப் பற்றிப் பேசாமல் இருந்ததும் அப்படியான ஒன்றே. அடுத்த ஆண்டு இதை மாற்றுவேன் என்றெல்லாம் சபதம் எடுக்கப்போவதில்லை. இந்த ஆண்டு இறுதிக்குள்ளே அதைத் திருத்திக் கொள்ளும் முயற்சி தொடங்கிவிட்டது.
எழுத்தாளர் கோகிலா இந்த ஆண்டு எழுதியிருக்கும் நூல், பங்களாதேஷ் என்ற தகவலை ரகசியமாக வைத்திருக்கவில்லை. பதிவுகள், படங்கள் மூலம் அறிவிக்கிறேன். பதிப்பக அரங்கில் அமர்ந்து வாசகருடன் உரையாடுகிறேன். புத்தகக் காட்சிக்குப் பிறகு பேஸ்புக்கிலும் இதைத் தொடர்வேன்.
என் தவறை என் எழுத்து ஓரளவுக்குச் சமன் செய்தது எனலாம். போதுமான விளம்பரம் இன்றியும் நூல்கள் பலரைச் சென்றடைந்தன. ஆண்டு மத்தியில் என் அண்ணன் எங்கள் ஊர் நூலகத்துக்குக் கொடுக்க ஜீரோ டிகிரியில் ஆர்டர் செய்த போது அனைத்தும் விற்பனையாகிவிட்டதாகச் சொல்லி புதிய பதிப்பு வந்த பிறகு அனுப்பி வைத்தனர். ஹெர் ஸ்டோரிஸ் பதிப்பில் வந்த தொழில்நுட்பக் கட்டுரைகள் தொகுப்பைப் படித்துவிட்டு தொலைப்பேசி எண்ணைத் தேடிப்பிடித்து வந்தன வாசகர் பாராட்டுகள். தடை அதை உதை நூல் இன்னும் ஒரு படி மேலே சென்று தினமலர் செய்தித்தாளில் என்னுடைய நேர்காணல் வரக் காரணமானது. தினமணி, தினகரன் உள்ளிட்ட மற்ற செய்தித்தாள்களிலும் இந்நூலைப் பாராட்டி எழுதியிருந்தனர்.
என் எழுத்தே அடுத்தடுத்த கதவுகளையும் திறந்துவிட்டது. கணித்தமிழ்24 மாநாடு சிறப்பிதழுக்கு கட்டுரைகள் எழுத என்னை அனுப்பி வைத்தார் ஆசிரியர். உரு தொடர் உருப்பெற்றது. ஆசிரியர் பாரா நேரில் வந்து முத்து நெடுமாறனைச் சந்தித்துப் பேசி நான் எழுதுவதை உறுதி செய்தார். முத்து நெடுமாறனின் வாழ்க்கையை தமிழ்கணிமை வரலாற்றோடு சேர்த்து பதிவு செய்யக் கிடைத்த வாய்ப்பு மறக்க இயலாத தருணம். உரு தொடர் பாராட்டுகளை மட்டுமின்றி என் முதல் வெளிநாட்டுப் பயண வாய்ப்பையும் பெற்றுக் கொடுத்தது. குடும்பத்தில் ஒருவராக மாறுவதென்பதெல்லாம் அடிக்கடி நடக்கும் விஷயமல்ல. நடந்தது. மகிழ்ச்சி.
இப்படி ஓர் ஆளுமையைப் பற்றி எழுதி முடிக்கும் போது அவர் குணங்களில் கொஞ்சம் சேர்ந்து நீ வேறொத்தியாகி இருப்பாய் என்றார் ஆசிரியர். அதுவும் நடந்தது. முத்துவுடன் வேலை செய்வதென்பது உற்சாகமான அனுபவம். உரு தொடர் சரியாக வரவேண்டும் என தேவைக்கு அதிகமாகவே நேரம் கொடுத்திருந்தார் ஆசிரியர். ஐந்தாறு மாதங்கள் குதூகலமாகக் கழிந்தன.
இந்த ஆண்டு ஓர் உருப்படியான புத்தகம் எழுதினால் போதும் என்பது மட்டுமே என் இலக்காக இருந்தது. உரு அடுத்த ஆண்டு பதிப்பிக்கலாம் என்று முடிவெடுத்தாலும் இந்த ஆண்டு எழுத்துக் கணக்குக்கு அதுவே போதும் என்றிருந்தேன். புனைவெழுத்தை முயன்று பார்க்க எண்ணினேன். மெட்ராஸ் பேப்பர் வாட்ஸ்ஆப் அரட்டைக் குழுவில் விளையாட்டாக நான் எழுதிய கதை மஞ்சரி இதழில் வெளிவந்தது.
ஹெர் ஸ்டோரிஸ், சிறுவர் நூல்களை எழுதும் குழுவில் ஒரு கை குறைகிறது… வா என இழுத்துப் போட்டனர். புனைவற்ற தகவல்களைக் கொண்டு ஓர் ஆளுமையின் வாழ்வை கதை போல சொல்ல நினைத்து எழுதத் தொடங்கினேன். பலமுறை முயன்றும் சரியாக வரவில்லை. அதைக் கைவிட்டு முழுக்கப் புனைவாகவே பத்து கதைகள் எழுதினேன். திருக்குறளை அடிப்படையாக வைத்து எழுதிய தற்காலத்திற்கு ஏற்ற கதைகள். நூலுக்கு வந்த பாராட்டுகள், வரும் ஆண்டில் மேலும் புனைவில் முயற்சி செய்யும் நம்பிக்கையைக் கொடுத்தன.
எழுதும் தலைப்புக்குத் தொடர்பில்லாத எதையும் படிப்பதில்லை என்ற குறையை கடந்தாண்டு குறிப்பிட்டிருந்தேன். இல்லவே இல்லை என்பதை மாற்றி இரண்டு குறுநாவல்களாவது முடித்தேன் என்பது மகிழ்ச்சியே. விகடன் தீபாவளி மலரில் என் கட்டுரை வந்ததும் இந்தாண்டில் நடந்தவற்றுள் முக்கியமானது.
ஆண்டு முழுக்க வெற்றிக் கதைகளேவா என்று கண் வைக்க வேண்டாம். அதற்குத்தான் ஆசிரியராக ஒருவரை வைத்திருக்கிறேன். மெட்ராஸ் பேப்பரில் என்ன கட்டுரை எழுதலாம் எனப் பரிந்துரைப்பதில் தொடங்கி ஏகப்பட்ட வேலைகள் உள்ளன. நான் பரிந்துரைத்தது, அவர் பரிந்துரைத்தது என நிறைய கட்டுரைகள் எழுதினேன். கடந்தாண்டு மார்ச் இதழுக்காக மட்டுமே ஐந்து கட்டுரைகள் எழுதினேன். இந்தாண்டு சிறப்பாசிரியர் எனப் பொறுப்பு கொடுத்து மகளிர் தினச் சிறப்பிதழைச் செய்ய வைத்தார். கட்டுரைகள் தேர்வு செய்வதில் இருந்து குழுவை வழி நடத்தி பதிப்பிக்கும் வரைக்கும் எல்லா வேலைகளும் என்னுடையவை.
அதுபோக பாரா சொல்லும் விதவிதமான சில்லறை வேலைகளையும் செய்தேன். எனக்குள் இருந்த சோம்பேறி அவ்வப்போது, கொஞ்சம் அதிகம் வேலை பார்க்கிறோமோ என்று குரல் கொடுப்பதுண்டு. எனினும் ஒருபோதும் தட்டாமல் செய்து கொடுப்பேன். துணை ஆசிரியராக எடிட்டோரியல் குழுவில் இணைந்து கொள் என்றார் திடீரென.
தெனாலி படத்தில், டொக்டர் இதுவும் ட்ரீட்மென்டே என்று வியக்கும் கமல் மாதிரி இத்தனை மாதங்களாக இவர் எனக்குக் கொடுத்த வேலைகள் எல்லாமே பயிற்சிதானா என்று யோசித்தேன். என்னைப் பற்றி என்னிடம் இல்லாத எதிர்காலத் திட்டம் எல்லாம் என் ஆசிரியரிடம் இருக்கும். பங்களாதேஷ் எழுதச் சொன்னதும் அப்படித்தான். ஆண்டு தொடங்கும்போதே இரு நாடுகளைக் குறிப்பிட்டு செய்திகளைக் குறிப்பெடுக்கவும் வரலாற்றைப் படிக்கவும் சொல்லியிருந்தார். ஹஸினா பதவி போன பிறகு இதையே எழுதிவிடு என்றார்.
நாடாக மாறியது புதிதென்றாலும் சிக்கலான சரித்திரம்தான் அது. இதற்கு முன்பு நான் எழுதிய நூல்கள் அனைத்தும் ஒரு விதத்தில் ஒரே தலைப்பின் கீழ் உள்ள இருபது, முப்பது கட்டுரைகளின் தொகுப்பே. இதுவோ கதைபோல சொல்லப்படவேண்டிய முழுமையான வரலாறு. தகவல்களும் ஆவணங்களும் ஏராளம் இருந்தன. எதைச் சேர்ப்பது எதை விடுப்பது என்கிற குழப்பம் தொடங்கி எப்படிக் கட்டமைப்பது என்பதிலும் தெளிவில்லை.
என் பலமாக நான் நம்புவது, கட்டுரையோ நூலோ அதை நான் கட்டமைக்கும் விதத்தைத்தான். எது எங்கே உட்கார வேண்டும் என்பது என் மண்டைக்குள் இருக்கும். அதுவே தெளிவில்லை எனும்போது திணறித்தான் போனேன். உரு கடைசி அத்தியாயங்கள் வேறு எழுதிக்கொண்டிருந்தேன். துணை ஆசிரியர் பணி கொடுத்த அழுத்தம் வேறு.
எனக்கு வேலைப்பளு அதிகம், நீ எடிட் செய்து கொடுக்கும் மற்றவர்களின் கட்டுரைகளை நான் படிக்காமல் அப்படியே பதிவேற்றுவேன் என்றார் ஆசிரியர். அப்படிச் செய்யமாட்டார். புளுகு என்று தெரியும். ஆனால் அவர் சொன்னதின் பொருள் அந்த அளவுக்குப் பிழையின்றி வேலை பார் என்பதுதான்.
பொய்தான் எனத் தெரிந்தும் உண்மையாக இருந்தால் எவ்வளவு நேர்மையாகச் செய்வேனோ அப்படியே செய்தேன். நானும் அணியினரும் என்னை உதவி ஆசிரியராக ஏற்றுக் கொள்ளும் முன்பே அதை ஏற்றுக் கொண்டது பாரா. அவர் எழுதியதையும் எனக்கு அனுப்பி சரிபார்த்துப் பதிவேற்றச் சொல்வார். எந்தப் பிழையும் இருக்காதெனினும் வாரம் தவறாமல் அதை நான் ஒவ்வொரு சொல்லாகச் சரிபார்ப்பேன். என் வேலையில் எது சரி, எது தவறென்று சொல்லவும் கேட்கவும் நேரம் இன்றி இருவரும் ஓடிக்கொண்டிருந்தோம்.
நாற்பதாண்டுகளுக்கு மேல் சோம்பேறியாக வாழ்ந்த என்னால் இவ்வளவு வேலைகளைச் செய்யவே முடியவில்லை. அக்டோபர் நவம்பரில் நீங்கள் என்னிடம் பேசியிருந்தால் நிச்சயம் உங்களிடம் என் ஆசிரியர் பாராவைத் திட்டிப் பேசியிருப்பேன். என்ன வெயிலா இருக்கு என்று யாராவது சொன்னால் கூட பாரா செய்த வேலைதான் என்று அவரைத் திட்டிக் கொண்டிருந்தேன்.
அவரும் சளைத்தவரல்ல. கை வீங்கிப் போய்விட்டது என்று தகவல் சொன்னால் பேச்சுக்குக் கூட கரிசனமாக எதுவும் சொல்லமாட்டார். வேற கை வாங்கி மாட்டியாவது எழுது, ஒரு நாள் இடைவெளி விட்டா கூட எழுத வராது, புக்கு முடியாது என்று பயமுறுத்தி அழுத்தம் கூட்டினார்.
ஒரு நாள் ஜெயரூபலிங்கம் ஏதோ ஒன்றைப் பற்றிச் சொல்லும் போது, புகார் படிக்கிற நோக்கத்தில் இதைச் சொல்லவில்லை என்றார். கொதிக்கும் உலையில் சுற்றிச் சுழன்று வெந்து கொண்டிருக்கும் அரிசி பக்குவமாக வெந்தவுடன் அமைதியாகி சோற்றுப் பானையின் மேல் மலர்ந்து நிற்கும். அந்தச் சொற்கள் அப்படித்தான் என் மனக் குழப்பத்தைப் பக்குவமாக்கி அறிவை மலரச் செய்தன.
புகார் சொல்வது என் இயல்பல்ல. சிக்கல் என்ன? தீர்வு என்ன? அப்படி எளிமையாக யோசிப்பதே என் இயல்பு. இரண்டு மாதங்களாகத் தொலைந்து போன அந்த இயல்பை மீட்டேன். மகளிடம் உதவி கேட்டேன். எங்கள் அணியில் திறன்பேசி மூலம் தட்டச்சு செய்வோரின் அலைன்மென்ட் பிழைகளை நொடியில் நீக்கிக் கொடுக்கும் குட்டி மென்பொருள் ஒன்றைச் செய்து கொடுத்தாள். பல மணி நேர வேலையை மிச்சமாக்கியது. நேர மேலாண்மையில் அனுபவம் வாய்ந்த முத்துவிடம் அறிவுரை கேட்டுச் சிலவற்றைச் செயல்படுத்தினேன். ஆசிரியர் பாராவிடம் பேசியதில் கட்டுரைகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துவது என முடிவெடுத்து அறிவித்தார்.
எடிட் வேலையால் நான் வாசிக்கும் வேகம் கூடியுள்ளது. என் எழுத்தில் நான் செய்யும் பிழைகள் குறைந்துள்ளன. குறை கண்டுபிடிப்பது எனக்கு ஜாலியான வேலைதான். எடிட் வேலையோடு எப்படிக் குழப்பாமல் புத்தகம் எழுதும் வேலையைப் பிரிப்பது என ‘அன்பொழுக’ மினி வகுப்பும் எடுத்தார் பாரா. சும்மா சொல்லக்கூடாது. அவரை ஆசிரியராக வைத்துக் கொண்டு நான் படும் பாட்டைப் போலத்தான் அவரும் என்னை மாணவராக வைத்துக் கொண்டு படுகிறார்.
ஒவ்வொன்றாக ஒழுங்குபடுத்தி நவம்பர் இறுதிக்குள் சரிசெய்தேன். முத்து நடத்திய எழுத்துலாவில் பங்கேற்று எனக்கு நானே இன்னும் கொஞ்சம் வேலையைக் கூட்டிக் கொண்டேன் என்றால் பாருங்கள். இமாலயக் குகையில் ஏசி போட்டு தியானம் இருக்கும் ஜி மாதிரி என்னுடைய இயல்பான சொகுசு மனநிலைக்குத் திரும்பிவிட்டேன். டிசம்பர் கடைசியில் மீண்டும் ஒருமுறை நிலைமை கலவரமான போதும் வாரக் கணக்கில் இழுக்காமல் சட்டெனச் சரிசெய்துகொண்டேன்.
அடுத்தாண்டு இன்னும் அதிகம் ஆசிரியரைத் திட்டும்படியாக அமையட்டும். போதும்.
2024ஆம் ஆண்டு ஆண்டறிக்கை இது. கடந்த ஆண்டு எழுதியதையும் வாசிக்கலாம்.
