குளிருக்கு இதமான கதகதப்பு. டீக்கடையில் செய்தித்தாள் வாங்கி, நின்றபடியே படித்துக் கொண்டிருக்கும் அம்மாவின் காலை இன்னும் இறுக்கமாகக் கட்டிக்கொள்கிறேன். நான் அணிந்து கொண்டிருந்த ஸ்கர்ட்டில் இருந்து பிங்க் நட்சத்திரங்கள் பறக்கின்றன. செய்தித்தாளுக்கான பணத்தை டீக்கடைப் பெண்ணிடம் நீட்டுகிறாள் அம்மா. அந்தப் பெண்ணின் நெற்றியில் இருக்கும் பெரிய பொட்டில் பாய்கிறது துப்பாக்கித் தோட்டா ஒன்று. சரிந்து கீழே விழுந்தாள் அவள். இல்லை விழுந்தது அம்மா. என் மீது விழுந்து கிடக்கிறாள். மூச்சு முட்டுகிறது. அம்மாவின் கதகதப்பு சுட்டெரிக்கும் சூடாகிறது. அம்மா கொழுந்துவிட்டு எரிகிறாள். நெருப்பில் பிங்க் நட்சத்திரங்கள். பலங்கொண்ட மட்டும் அம்மாவைத் தள்ளிவிட்டு நகர்ந்தேன்.
அம்மாவுக்கு பதில் கட்டை எரிந்து கொண்டிருந்தது. என்னைச் சுற்றிலும் நெருப்பு. தரையில் கிடக்கும் மண்ணை அள்ளிப் போட்டு நெருப்பை அணைக்க முயல்கிறேன். அருகில் இருப்பவர்கள் எனக்கு உதவுகிறார்கள். நெற்றியில் காவிப்பட்டை. கையில் கடப்பாறை. தரையைத் தோண்டி மண்ணை அள்ளிப் போடுகிறார்கள். அய்யோ… இதென்ன? நெருப்பின் மீது போடாமல் என்னைக் குழியில் தள்ளி என் மீது போடுகிறார்களே. உயிருடன் என்னைப் புதைக்காதீர்கள். நிறுத்துங்கள். கத்திக் கொண்டே இன்னும் நகர்ந்து செல்கிறேன். எங்கிருந்தோ அமிலம் நிரப்பிய பாட்டில் வந்து என் மீது விழுகிறது. முகம் எரிகிறது. கத்துகிறேன். கதறுகிறேன். இல்லை முகத்தில் எரிச்சல் இல்லை. சில்லென்று இருக்கிறது. மூச்சு விட முடிகிறது. எல்லாம் கனவாகத்தான் இருக்கவேண்டும். கண்களை முழுதாகத் திறந்தால் எல்லாம் சரியாகிவிடும்.
பிரயத்தனப்பட்டுக் கண்களைத் திறக்கிறேன். மழை பெய்து கொண்டிருக்கிறது. இங்கும் அங்குமாக ஒரு சிலர் மழையில் நனைந்து கொண்டிருக்கிறார்கள். அசைவில்லை. ஆம் பிணங்கள்தான். நானும் செத்துப் போய்விட்டேனா? வலது கை தோள்பட்டைக்குக் கீழே வெட்டுப் பட்ட இடத்தில் வழியும் ரத்தமும் வலியும் நான் உயிருடன் இருக்கிறேன் என்பதைச் சொன்னது. எங்கே இருக்கிறோம் என்பதை நினைவுபடுத்த முயல்கிறேன்.
என்னைச் சுற்றிலும் ஆங்காங்கே எரிந்து கொண்டிருக்கும் நெருப்பு, மழைக்குத் தன்னை ஒப்புக் கொடுத்து அடங்கிப் போகிறது. எழுந்து உட்கார்ந்து முகத்தில் இருந்த மண்ணைக் கழுவி அன்னாந்து வாயைப் பிளந்து மழைநீரைக் குடித்தேன். வானில் இருநூறு அடி உயரத்தில் நிற்கும் யோகி ஏக்நாத் தெரிகிறார். செய்தி சேகரிக்க வந்தது நினைவுக்கு வந்தது. கலவரம் உண்டாகித் தப்பி ஓடியதில் அடிபட்டு நினைவிழந்திருக்க வேண்டும். பாதி எரிந்து கொண்டிருந்த தூணும் கிழிந்து தொங்கிக் கொண்டிருந்த மணல் மூட்டையும் கனவில் தோன்றிய காட்சிகளுக்கு காரணத்தை விளக்கின.
அந்தக் காட்சிகள் வெறும் கனவல்ல. என் நினைவடுக்கின் ஆழத்தில் இருந்து வந்தவை. என் பாட்டி இளம் நிருபராக இதே ஊரில் செய்தி சேகரிக்க வந்தபோது நடந்தவை. ஷாஜியா மோமின், தன் அடையாளம் மாற்றி சுஜாதா மேனனாக வந்தார். ரப்பர் ட்யூபை உண்டி வில் போலாக்கி அரை கிலோ மீட்டர் தூரம் தாண்டி எறியப் பட்ட ஆசிட் பாட்டில்களில் இருந்து தப்பினார். முன்கூட்டியே கொல்லரிடம் ஆர்டர் கொடுத்துத் தயாராக செய்து வைத்திருந்த பல்லாயிரம் கத்திகள், வாள்களிடம் இருந்து தப்பினார். குழந்தைகள் உயிரோடு புதைக்கப்பட்டதற்கு ஊமை சாட்சியானார். முதல் நாள் டீ ஊற்றிக் கொடுத்த பெண்ணை மறுநாள் போலிஸ் சுட்டுக் கொன்ற வழக்கில் நீதிமன்ற சாட்சியானார். பைக்கில் வந்த அடையாளம் தெரியாத மூவர் எங்கள் வீட்டு வாசலில் வைத்து பாட்டியைச் சுட்டுக் கொன்றதற்கு நாங்கள் சாட்சியானாோம்.
முப்பது வருடம் கழித்து அதே ஊரில் கோலாகலமாக கும்பாபிஷேகம் நடந்த போது என் அம்மா இந்த அனுபவங்களைக் கதையாக எழுதினார். பிங்க் நிறப் பாவாடை அணிந்து கொண்டு அம்மாவுடன் சென்று டீக்கடையில் தொங்கிக் கொண்டிருந்த கதை வெளியான வார இதழை வாங்கி வரும்போது, உங்களை மாதிரி கதை எழுத மாட்டேன், பாட்டி மாதிரி ரிப்போர்ட்டர் ஆவேன் என்று நான் சொன்னது நேற்று போல இருக்கிறது.
அம்மாவும் அல்பாயுசில் போய்ச் சேர்ந்த பிறகு கல்லூரி வரை படிப்பதே பெரும்பாடாக இருந்தது. பெண்கள் எல்லாம் படித்து வீட்டையும் குழந்தைகளையும் பார்த்துக் கொள்ளவே ஆர்வம் காட்டினார்கள். வேலைக்குப் போனாலும் டீச்சர் வேலை மட்டும்தான் ஏற்றது என்று நினைத்தார்கள். என்னைப் போல ஓரிரண்டு பேர் மட்டும் ஆர்வம் காட்டியதால் பெண்கள் கல்லூரியில் ஜர்னலிசம் படிப்பை நிறுத்திவிட்டார்கள். ஒழுக்கமாக ஆடை அணிந்து நம் கலாசாரத்தைப் பின்பற்றியிருந்தால் இப்படிப் பெண்கள் கல்லூரி ஆண்கள் கல்லூரி என்று பிரிக்க வேண்டியே இருந்திருக்காது.
என்னைப் போன்றவர்களுக்கு டீச்சர் படிப்பும் எட்டாக்கனிதான். இந்தி மொழியில் பட்டப்படிப்பு படிக்க அரசே உதவி செய்தது. அதைத்தான் படித்தேன். ஜர்னலிசத்துக்கு மூடு விழா நடத்திய கடைசி வருடத்தில் முதுகலைப் படிப்பில் சிறப்புக் கோட்டாவில் இடம் இருக்கிறது என்றதும் யோசிக்காமல் மிரா பேகமாகிய நான் மீரா கண்ணாஹ் ஆகிவிட்டேன். என் கனவை நிஜமாக்கியது யோகி ஏக்நாத்தின் கர் வாபஸி திட்டம்.
என் பாட்டி போல இடிக்கப்படும் மசூதிகள் பற்றி எழுத முடியாமல் போனது. காலம் மாறிவிட்டது. அதன் பிறகு மசூதிகள் இடிக்கப்படவே இல்லை. கிருஷ்ணனை ஏற்றுக் கொண்டவர்களுக்கு எல்லாம் நல்ல வழி காட்டியது ஜெய் கிருஷ்ணா இயக்கம். மக்கள், கூட்டம் கூட்டமாகத் தாய் மதத்துக்குத் திரும்பினர். ஊரில் ஒரு சில முஸ்லிம்களே எஞ்சியிருந்ததால் வீட்டிலேயே வழிபட்டுக் கொள்கிறோம் என்றனர். எலக்ட்ரிக் வாகனங்கள் சார்ஜ் செய்யும் பங்க்குகள் அமைக்கத் தானே முன்வந்து மசூதிகளைக் கொடுத்தனர் முஸ்லிம்கள். ஆனால் பயன்பாடு இன்றி புதர் மண்டிக் கிடக்கிறது.
பாரதம் முன்னேறுவதைச் சகிக்க முடியாத மேற்கு நாடுகள் செய்த சதிகளில் எலக்ட்ரிக் கார் தொழிற்சாலைகள் உருவாகாமல் போனது. பெண்கள் காரோட்டத் தெரியாமல் ஓட்டி நிறைய விபத்து ஏற்படுத்துவதால் அவர்களுக்கு லைசன்ஸ் கொடுப்பதில்லை. ஆண்கள் நடப்பதே உடலுக்கு நல்லது என்கிறார்கள். கார்களின் தேவை குறைந்துவிட்டது. ஐநூறு ரூபாய் சகாய விலைக்கே ஒரு லிட்டர் பெட்ரோல் கிடைக்கும் போது எலக்ட்ரிக் கார் அநாவசியம் என்றாகிவிட்டது.
இதையெல்லாம் பொய்யும் புரட்டும் கலந்து எழுதிய பத்திரிகைகள் மீது தானே முன்வந்து சட்டப் பூர்வமான நடவடிக்கை எடுத்தது நீதிமன்றம். அதனால் நிறைய பத்திரிகை நிறுவனங்கள் காணாமல் போனது. சில பத்திரிகை முதலாளிகளே காணாமல் போனார்கள். கடன் தொல்லை என்று பேச்சு. தென்னிந்தியாவில்தான் ஒரு சில பத்திரிகைகள் இன்னும் இயங்கிக் கொண்டிருந்தன. ஆறு மாதம் மழை, வெள்ளம், சேறு, சகதி. ஆறு மாதம் பாலைவன வெய்யில். ஊரா இது? வேறு விதியில்லாமல்தான் சென்னையில் வேலை பார்க்க வேண்டியதாகிவிட்டது. இந்தி தெரியாத எடிட்டரிடம் வேலை பார்ப்பதைவிடக் கொடுமை வேறில்லை.
எழுத்தை விடக் காட்சி ஊடகம்தான் எல்லோருக்கும் பிடிக்கிறது. பூஜைகளின் எல்லாக் காட்சிகளையும் நேரலை செய்தேன். நேரலை நேரம் முடிந்த பிறகும் படம்பிடித்தேன். வீடியோ கேமராவை போலிஸ் வாங்கிக் கொண்டு தணிக்கை முடிந்த பிறகு பெற்றுக்கொள்ளச் சொல்லியது. பத்திரிகையாளர் நேரம் முடிந்தது என்று தங்கும் அறைகளுக்கு அனுப்பியது. வழியில் ஒரு கூடாரத்தில் சுவாமி பிரேமபதா உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார்.
அனுமதியில்லாத இடத்தில் பதுங்கி நுழைந்தேன். என் கண்ணாடி மூலம் வீடியோ பதிவு செய்து அப்படியே கிளவுடில் சேமித்தேன். கூட்ட நெரிசலில் சிக்கி கண்ணாடியை எங்கோ தவற விட்டிருக்கிறேன். என் கையில் இருக்கும் ஆல் இன் ஒன் டிஜிட்டல் வாட்ச் மூலம் க்ளவுட் ஆக்சிஸ் செய்து பதிவு செய்ததை அனுப்பி வைத்தால் எக்ஸ்க்ளூசிவ் ஒளிபரப்பு செய்வார்கள். வாட்ச் எடிட்டர் கொடுத்தது. பாதி நேரம் வேலை செய்யாது. தட்டி தட்டிப் பார்த்தால் சில நேரம் வேலை செய்யும்.
இங்கே வருவதற்கு பிளைட் டிக்கட் கூட புக் செய்ய முடியாத உதவாக்கரைப் பத்திரிகை கம்பெனி. அண்ணாமலையாரிடம் சிபாரிசு பெற்று ஜெய் கிருஷ்ண இயக்கத்தின் மூலம்தான் நானே இங்கு வந்தேன். மாநில முதல்வர் பதவியை ஒழித்து கவர்னரே போதும் என்று பேருந்தில் நடைப்பயணம் சென்றதை கல்லூரி புராஜக்ட் ஆவணப்படமாக எடுத்தேன் என்று என் மீது தனிப்பிரியம் அவருக்கு. ஒரே நாடு ஒரே மதம் என்பதைச் சாதித்த யோகி ஏத்நாத் மீதான அபிமானத்தில் கட்சிக்குள் கோஷ்டி மாறியதால் டேமேஜ் ஆன இமேஜ், நிர்மலா அம்மையாரின் பேரனை கவர்னராக்க உதவியும் மாறவில்லை. என்னுடைய கிங் மேக்கர் ஆவணப்படம் அண்ணாமலையாரின் அரசியல் இரண்டாவது சீசனுக்கு வாய்ப்பளித்தது. பல வருடங்கள் சிறு குறு பத்திரிகைகளில் வேலை பார்த்து சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டபோது எனக்கு சுமாரான சம்பளம் கொடுக்கும் இந்த பத்திரிகையில் வேலை வாங்கிக்கொடுத்தார்.
பசிக்கிறது. ஒரு சில கடைகளாவது திறந்திருக்குமா என்று யோசித்துக் கொண்டே மீண்டும் சில முறை வாட்சைத் தட்டினேன். எந்தப் பத்திரிகையும் உள்ளே வராத இடத்தில் நுழைந்து நான் பதிவு செய்திருந்த சுவாமி பிரேமபதாவின் எழுச்சி மிக்க உரையின் கடைசிப் பகுதி.
“பகவான் கிருஷ்ணர் அன்பை மட்டும் போதிக்கவில்லை. எதிரிகளை அழிக்கவும் சொல்லி இருக்கிறார். அவர்கள் உறவினர்களாக இருந்தாலும் சரி. அர்ஜுனன், என் சகோதரர்களான கெளரவர்களை எதிர்த்து எப்படி நான் போர் செய்வேன் கண்ணா என்று கதறிய போது நல்ல புத்தி சொல்லியவன் கிருஷ்ணன். கீழே வீசிய வில்லை எடுத்துப் போர் புரிந்து கெளரவர்கள் மொத்த பேரையும் கொன்று குவிக்க வைத்தவன் கிருஷ்ணன். இருபத்தாறு தகுதிகள் கொண்டவர்களே கிருஷ்ண பக்தர்கள். போரிடும் குணமும் அதில் ஒன்று. அர்ஜுனனைப் போல நமக்கும் துணை நிற்பான் பகவான் கிருஷ்ணன். ஜெய் கிருஷ்ணா … ஜெய் கிருஷ்ணா … “ அவருடைய போர் முழக்கத்தை எதிரொலித்து, ஜெய் கிருஷ்ணா கோஷத்துடன் ராம் லல்லா கோவில் எதிரில் அணிவகுத்து நிற்கும் புல்டோசர்களை நோக்கிச் செல்கிறது கூட்டம். அந்த நெரிசலில் என் கண்ணாடி தவறி விழுந்து உடையும் வரை பதிவாகி இருந்தது.
***
ராமர் கோயில் திறப்புவிழாவை நம் மக்கள் இயல்பாகக் கடந்து போன அதிர்ச்சியில் இருந்தபோது மெட்ராஸ்பேப்பர் கதை எழுத அழைப்பு விடுத்தது. கதை மாதிரி எழுதுவதும் கதை எழுதுவதும் ஒன்றல்ல. எழுதித்தான் பார்க்கலாம் என்று முயன்றேன். பரவாயில்லையே எனப் பாராட்டி மீண்டும் ஒரு முறை லாஜிக் குறைகள் நீக்கி எழுதச் சொன்னார் பாரா. படித்தவுடன் போனில் அழைத்துப் பேசினார் சிவராமன். சென்ற ஆண்டு, மெட்ராஸ் பேப்பரில் வந்த கதை இது.
