பழைய இரும்பு, புதிய இணையதளம்

அண்மையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அகழ்வாய்வு தொடர்பான பல அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் மெய்நிகர் இணையதளம் மூலம் கீழடி அருங்காட்சியகத்தைப் பார்வையிட முடியும் என்பதும் ஒன்று.

நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஆதிச்சநல்லூரில் தொல்லியல் ஆய்வுகளை மேற்கொண்டார். அதன் பிறகு கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரித்தானிய தொல்லியலாளரான அலெக்சான்டர் ரெயா, ஆதிச்சநல்லூரில் பெரியளவில் அகழாய்வு செய்தார். இந்நூற்றாண்டில் இந்திய அரசாங்கமும் இந்நிலத்தை அகழ்ந்தது. ஆய்ந்தது.

இங்கு கிடைத்த முதுமக்கள் தாழிகளில் இருந்த பொன்னும், மணியும் தமிழ்நாட்டின் பண்டைய வளத்தைப் பறைசாற்றின. மெல்லிய ஈம மண்பாண்டங்கள் நுட்பத்திறனை எடுத்துக்காட்டின. மத்திய தரைக்கடல், ஆசுதிரலாய்டு (australoid) பகுதிகளோடு ஒத்துப்போகும் மண்டையோடுகள், பண்டைய பன்னாட்டுத் தொடர்புகளை உறுதிப்படுத்தின. கீறி வைத்த எழுத்துகள், புடைப்பு ஓவியங்கள் என இப்பட்டியல் நீள்கிறது.

பானையில் கீறியதெல்லாம் சான்றாகக் கொள்ள நடைமுறைகள் உள்ளன. ஓரிரண்டு முறை எழுத்தைப் போல ஏதேனும் கிடைத்தால் அதெல்லாம் கணக்கில் வராது. மீண்டும் மீண்டும் தென்பட்டால் மட்டுமே அனைத்துலகச் சமூகம் அதை ஒப்புக்கொள்ளும். அப்படிக் கிடைக்கும் கீறல் எழுத்துகள் பெரும்பான்மையாக சிந்து சமவெளிக் குறியீடுகளுடன் ஒத்துப்போகின்றன. பன்னாட்டு ஆய்வாளர்களை இந்த அம்சம் ஆர்வம் கொள்ளவைக்கிறது.

அதைப்போலவே ஒரு பொருளின் வயதைக் கண்டறியும் சோதனையும் பல்வேறு விதிகளுக்குட்பட்டே செய்யமுடியும். ஒவ்வோர் அடுக்காகக் கீழே இறங்கித் தோண்டும்போதும் ஏகப்பட்ட பாதுகாப்பு நெறிமுறைகள் உள்ளன. தோண்டும் இடத்தின் மேலே நிழற்கூரை வேய்ந்து, வெயில் படாமல் காத்து, மனிதரின் வியர்வையோ மூச்சுக்காற்றோ படாமல் அறுவை சிகிச்சை மருத்துவர் போல கவச உடை அணிந்துதான் அகழாய்வு நடக்கும். விதிகள் பின்பற்றுவதில் தவறு நேர்ந்தால் முடிவுகள் தப்பும்தவறுமாக வரும். ஓர் இடத்தில் மட்டுமல்ல, இந்தியா, அமெரிக்கா எனப் பல்வேறு இடங்களில் ஒரே மாதிரி முடிவு வருவதே இந்த அகழாய்வுகள் விதிகளைப் பின்பற்றிச் சரியாக நடந்ததற்குச் சான்று. 

பொதுவாக செய்தித்தாள் புகைப்படங்களில் இதெல்லாம் வராது. புடவைகட்டிக் கொண்டிருக்கும் கிராமத்து அம்மணி ஒருவர் மண்வெட்டியோ, கத்தியோ வைத்து மண்ணைத் தோண்டுவதும், அரசாங்க அதிகாரி குழிக்குள் இறங்கி எதையோ சுட்டிக்காட்டுவதும்தான் பெரும்பாலும் செய்தித்தாள்களில் வரும். எல்லா விதிகளையும் பின்பற்றி தேவையானதை எடுத்து ஆய்வுக்கு அனுப்பியபிறகே செய்தியாளர்கள் இப்படிப் படங்கள் எடுக்கமுடியும். நிறையபேர் பார்வையிடத் திறந்துவிட்ட (exposed) பிறகு அங்கே எது கிடைத்தாலும் ஆய்வுக்குத் தகுதியாகாது. 

கீழடி, சிவகளை, கொடுமணல், கீழ்நமண்டி எனத் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்திய ஆய்வு மூலம் மனித இனம் பற்றிய பல புதுத் தகவல்களை நாம் அறிந்துகொள்ளமுடிகிறது. இதன் அடிப்படையில்தான் ஐயாயிரம் ஆண்டுக்கு முந்தைய இரும்புக்காலம் தமிழ்நாட்டில் இருந்ததை நிரூபித்துள்ளனர். மனித இனம் நாகரிகம் அடைந்த வரலாற்றில் இது அண்மைத்தகவலாக இணைந்துள்ளது.

தமிழ்நாட்டில் நடைபெற்ற அகழாய்வு தொடர்பான தகவல்கள் பல இணையதளங்களில் உள்ளன. கீழடிக்கென்றே தனியாக ஒரு வலைத்தளமும் இருக்கிறது. இருபத்துநான்கு மொழிகளில் ஆய்வறிக்கைகளைப் படிக்கக் கொடுத்திருக்கிறது இத்தளம். செயலியும் உண்டு.

ஐயாயிரம் ஆண்டுத் தொன்மை கொண்ட தமிழர் வாழ்வுக்கு ஆதாரம் வெளியிட்ட நாளில் தமிழ்நாட்டு முதல்வர் தனித்துவமான மெய்நிகர் இணையத்தளம் ஒன்றையும் அறிமுகப்படுத்தினார். இதன்மூலம் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் கீழடி அருங்காட்சியகத்தைப் பார்க்கலாம். மெய்நிகர் அனுபவத்தில் குழந்தைகளுக்கு வரலாற்றைச் சொல்லிக்கொடுக்க நல்ல உத்தி இது. வரலாற்றுப் பெருமையை நவீன தொழில்நுட்பம் நம் கைகளுக்குக் கொண்டுவருகிறது.

தமிழ்நாட்டின் தொன்மையை சங்கப்பாடல்கள் உணர்த்துகின்றன. ஆனால் அதை அனைவரும் ஒப்புக்கொள்வதில்லை. வாய்க்கு வந்ததைப் பாடி வைத்திருப்பார்கள் எனச் சந்தேகித்தால் அது நியாயம்தான். வேதநூல்களில் உள்ள சொற்களை ஆய்வு செய்து அதன் காலம் தோராயமாகச் சொல்லப்பட்டதென்றாலும் யாரும் இப்படிச் சந்தேகம் எழுப்புவதில்லை. அவர்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என ஒப்புக்கொள்கிறோம். இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாக இருந்த பாலகிருஷ்ணன் சங்ககாலப் பாடல்களில் இம்மாதிரி சொல் ஆய்வுகளை மேற்கொள்கிறார். அதோடு, ஊர் பெயர்களை ஆராய்ந்து சிந்து நாகரிகத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் உள்ள தொடர்புகளை முன்வைக்கிறார். சில டிஎன்ஏ முடிவுகள், இவர் கூற்றை வலுப்படுத்துவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஆனால் வேத நூல்கள் காலத்தை ஒப்பக் கொள்ளுவோர் இத்தரவுகளை வெறுமனே கருதுகோள்கள் என்கின்றனர். அதிகாரம் இருப்பவர் சொல்தான் அம்பலம் ஏறும். 

ஆதிச்சநல்லூரில் கண்டெடுத்தது என்ன என்கிற அகழாய்வு அறிக்கையை ஒன்றிய அரசு அப்போதே வெளியிடவில்லை. நீதிமன்றம் சென்று போராடி கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்குப் பிறகே அறிக்கையை வாங்கமுடிந்தது. கீழடி ஆய்வுகள் கைவிடப்பட்ட பிறகே ஒன்றிய அரசுக்கு இதில் ஆர்வமில்லை என்பது பரவலாக வெளிச்சம் பெற்றது. தமிழ்நாட்டின் தொன்மை இந்திய ஒன்றியத்துக்கும் பெருமைதான். சரியாகச் சொல்வதென்றால் இதில் தமிழ்நாடு, இந்தியா எனக் குறுகிய நோக்கம் இன்றி மனித நாகரிக வரலாறு என்ற பரந்துபட்ட பார்வையே தேவை. இந்நிலையில்தான் தொன்மை உண்மைதான் என்பதற்கு ஆதாரத்தைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டு உலகளாவிய அகழாய்வு வல்லுநர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

சரி, தமிழ்நாடு தொன்மையானது என உரக்கப் பேசுவதால் உப்பு, புளி, அரிசி விலை குறையப்போவதில்லை. ஆனால், ஆதாரம் இல்லாதவற்றைப் பேசிப் பேசி வரலாறு என்று சிலரை நம்பவைத்து, அதனை அனைவர் மீதும் திணிக்கும் முயற்சி இந்தியாவில் நடக்கிறது. அதில் தமிழ்நாடு தொடர்ந்து பாதிக்கப்படுகிறது. பன்மைத்துவம் அழிந்தால் பெரும்பாலான இந்திய மாநிலங்களுக்கும்தான் ஆபத்து. எனினும், விழிப்புணர்வும் எதிர்ப்புணர்வும் அதிகம் இருப்பதென்னவோ தமிழ்நாட்டில்தான். எனவேதான் இந்நிலத்தின் மூத்தகுடி நாங்கள்தான் எனும் அரசியலை தமிழ்நாடு முன்வைக்கிறது. ஆம். முழுக்க முழுக்க இது அரசியல்தான்.

கீழடி அருங்காட்சியக இணையதளம்
https://keeladimuseum.tn.gov.in

மெய்நிகர் வடிவில் கீழடி அருங்காட்சியகத்தைக் காண உதவும் இணையதளம்
https://my.matterport.com/show/?m=tcQQkmPGKzZ