பதிமூன்று நாள்களில் ஒரு புத்தகத்தை எழுதி முடித்து வெற்றிகரமாக இந்த ஆண்டை நிறைவு செய்தேன். நான் எழுதுவதற்கென்றே என் வீட்டில் ஓர் அறையை அபகரித்துள்ளேன். மினிமலிசக் கொள்கையோடு திட்டமிட்ட ஆண்டு என்பதால் வெற்றிப் பட்டியல் நீளம் குறைவுதான், ஆனால் நிறைவானது.
இரண்டு புனைவற்ற புத்தகங்கள் எழுதுவது. நாவல், குறுநாவல், நெடுங்கதை என ஏதோ ஒரு புனைவு எழுத முயற்சி செய்வது. இவைதாம் என் இலக்குகளாக இருந்தன. மெட்ராஸ் பேப்பர் துணை ஆசிரியராகக் கணிசமான நேரம் செலவிடுகையில் நிறைய இலக்குகளை வைத்துக்கொள்ள அஞ்சினேன். ஆனால் உண்மை வேறு. எனக்குச் சொல்லப்படாத வேலைகளிலும் தலையைக் கொடுத்து, தனிப்பட்ட முறையில் நான் எழுதுவதற்குச் சரியாக நேரம் கொடுக்காமல் இருந்தேன். அது எழுத்தின் தரத்தில் பிரதிபலித்ததில் பதற்றமாகி எழுவதையே குறைக்கத் தொடங்கினேன். வேலை பிரச்சனையில்லை வழக்கம்போல நானேதான் பிரச்சனை என்பது புரிந்தது.
முறையாகத் திட்டமிட்டுச் சரி செய்ய முயன்றேன். ஒரு கட்டத்தில் அந்த முயற்சியை நிறுத்தி வேலையைக் கைவிடுவதென முடிவெடுத்தேன். அடுத்த மூன்று மாதங்கள் மட்டுமே வேலை செய்வேன் என்று ஆசிரியருக்கு அறிவித்தேன். அதன் பிறகே நண்பர்களிடம் தெரிவித்தேன். தவறான முடிவென்றே பலரும் கருதினர். துணை ஆசிரியர் பணி, நிறைய கற்றுக்கொள்ளும் வாய்ப்பையும், பல்வேறு விதமான அனுபவங்களையும் கொடுத்தது. அங்கீகாரத்தையும்தான். ஆனாலும் நிறைய யோசித்தே முடிவெடுத்திருந்தேன். துணிந்தபின் எண்ணுவம் என்பது எனக்குப் பழக்கமில்லை.
திட்டமிட்டபடி முதல் புத்தக யோசனையை ஹெர்ஸ்டோரிஸில் தொடராக வாரா வாரம் எழுதினேன். இரண்டாவது புத்தகம் ஒரு நபரைப் பற்றியது. அவர் இந்தியாவுக்கு வந்து அதன் பிறகு எழுதத் தொடங்க அக்டோபர் ஆகிவிடும் எனத் தெரியும். எனவே, வேலை நேரம் போகக் கிடைத்த நேரத்தில் புனைவை எழுதி, எழுதி அழித்துக் கொண்டிருந்தேன். இது தேவைதானா என யோசித்துக் கொண்டிருந்தபோது கடந்த ஆண்டு நான் எழுதிய திருக்குறள் கதைகள் நூலுக்குப் பரிசு அங்கீகாரம் கிடைத்தது. குட்டிக் குட்டிக் கதைகள் என்றாலும் புனைவுதானே. எழுது என்று, இந்தப் பிரபஞ்சம் கொடுத்த சமிஞ்ஞையாக எடுத்துக்கொண்டேன்.
சமூக வலைத்தளத்தில் நாள்தோறும் அகராதியில் இருந்து ஒரு சொல்லையும் அதற்கான பொருளையும் எழுதினேன். தொடர்ந்து பலரும் படித்து வரவேற்பளித்தாலும் அது முடிந்தவுடன் வேறு எதையும் தொடங்கவில்லை. சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்துவதில் இந்த ஆண்டும் ஒழுங்கின்மை தொடர்ந்தது. நான் எழுதுவதைப் படிப்பவர்களும் என்னைப்போலத்தான். நேரிலும் வாட்சாப்பிலும் பாராட்டித் தள்ளுவார்கள். தொலைப்பேசியில் அழைத்து மணிக்கணக்கில் என் எழுத்தைச் சிலாகிப்பார்கள். ஆனால் பொதுவெளியில் எழுத மாட்டார்கள். அவர்களைப் பதிவிடுமாறு ஊக்குவிக்க, முதலில் நான் திருந்தவேண்டும். திட்டமிட்டபடி வாசிப்புக்குச் சிறிது நேரம் ஒதுக்கமுடிந்தது நல்ல விஷயம்.
பெண்கள் தொடர்பான ஆக்கப்பூர்வமான தகவல்களைப் பரவலாக்கும் நோக்கில் தினமும் குறுங்காணொளிகள் பதிவிட ஹெர்ஸ்டோரிஸ் குழுவில் ஐந்தாறு பேர் இணைந்தோம். நூறிலிருந்து முந்நூறு சொற்களுக்குள் எழுதுவதும், சமூகவலைத்தளப் போக்குகளை அறிந்து கொள்வதும் சுவாரஸ்யமான அனுபவம். ஏழெட்டு நிமிடங்கள் வரும்படியாக ஒரு தலைப்பில் நானே பேசி காணொளியும் உருவாக்கினேன். இந்த ஆண்டு நேரம் கிடைத்தால் அதைத் தொடர வேண்டும். இதே சேனலுக்காக முதல் பெண் கல்வெட்டியலாளர் மார்க்சிய காந்தியை ஒன்றரை மணி நேர நேர்காணலும் செய்தேன்.
சிங்கப்பூர் தமிழ் முரசு யூட்யூப் சேனலுக்காக முத்து நெடுமாறனை நேர்காணல் செய்கையில் உரு எழுதிய நீங்கள் சிங்கப்பூர் வருவதை அறிந்து உங்களையும் சேர்த்து நேர்காணல் செய்வதாகத்தான் திட்டமிட்டோம் என்று முன்னறிப்பின்றி என்னையும் நேர்காணல் செய்தனர். திடீரென கேமாரா முன்பு தோன்றுவதில் சிக்கலேதும் இல்லை. ஆங்கிலம் கலக்காமல் பேசவேண்டும் என்கிற நிபந்தனை ஒரு சிக்கல் போலத்தான் தோன்றியது. இயல்பாக ஆங்கிலக் கலப்பின்றி சரளமாகவே பேசி வெற்றிகரமாக நேர்காணலை முடித்தேன்.
ஜெர்மனி மொழிப்பயிற்சி வழங்கும் கோதே இன்ஸ்ட்டியூட்டும் ஹெர்ஸ்டோரிஸும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த தமிழ் எழுத்துப் பயிலரங்கில் அரைநாள் வகுப்பெடுத்தேன். புனைவற்ற எழுத்து, தமிழில் எழுதுவதற்கான கருவிகள், தமிழுக்கு உதவும் தொழில்நுட்பங்கள் போன்ற தலைப்புகளில் இன்னும் சில இடங்களிலும் வகுப்புகளை நடத்தினேன். ஸ்வீடன் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்த ஸூம் வழிக் கலந்துரையாடலில் நான் பேசி முடித்ததும் ஐந்தாவது படிக்கும் சிறுமி ஆரா, என்னுடைய பேச்சு இன்ஸ்பயரிங்காக இருக்கிறது எனச் சொன்னதைப் போல ஒவ்வோர் இடத்திலும் கிடைத்த வரவேற்பு அடுத்த ஆண்டிலும் இதைத் தொடர ஊக்கமளிக்கிறது. அகரம் ஆண்டுவிழா, நண்பர்கள் சந்திப்பு என ஊர் சுற்றுவது, உதவி செய்வது என்று எதற்கு நேரம் செலவிட்டாலும் எழுத்தோடு தொடர்புடைய ஒன்றாகவே வைத்திருந்தேன்.
கடந்த ஆண்டு எழுதிய உரு, இந்த ஆண்டின் மத்தியில் வெளியீடு என்று முடிவானது. முரசு அஞ்சல் நாற்பதாண்டுகள் நிறைவு, செயலியின் மறுஉருவாக்க வெளியீட்டுடன் உரு வெளியீடும் இணைத்துக்கொள்ளலாம் என முத்து நெடுமாறன் சொன்னபோது அதன் பிரம்மாண்டம் எனக்குப் புரியவில்லை. மண்டையை ஆட்டி வைத்தேன்.
நிகழ்ச்சிக்கான தயாரிப்புகளில் அதுபற்றிய தகவல்களைத் தரும் சாட்பாட் உருவாக்கமும் ஒன்று. தகவல்களைத் தமிழில் எழுதும் சிறு உதவியைச் செய்தேன். அச்சிறு செயல், மலேசியா வரைக்கும் சென்று முரசு நிறுவனத்தின் அணியினருடன் நிகழ்ச்சி ஏற்பாடுகளில் இணைந்து செயல்படுவதில் கொண்டுபோய் நிறுத்தியது. பன்னாட்டு நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்த ஒருவர் ஒரு செயலைத் திட்டமிடுவதும் திட்டமிட்டபடியே அதைத் துல்லியமாகச் செயல்படுத்துவதையும் அருகில் இருந்து பார்த்துக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு எனக்கு அமையும் என்று நான் எப்போதும் எண்ணியதில்லை. இதெல்லாம் நமக்குச் சரிவருமா, தமிழ்நாட்டுக்கு ஒத்துவருமா, இந்தியாவில் சாத்தியமா என்றெல்லாம் தயங்காமல் பெரிதாக யோசிக்கும் துணிச்சலை அந்த மூன்று மாத அனுபவங்கள் கொடுத்தன.
உரு கொண்டாடப்பட்ட விதம் ஓர் எழுத்தாளராக மிக்க நிறைவைத் தந்தது. மலேசிய உரு வெளியீடு நிகழ்ச்சிக்கு முந்தின நாள் முரசு அலுவலகத்துக்கு வந்த தொலைப்பேசி அழைப்பை யதேச்சையாக நான் எடுத்துப் பேசினேன். அந்த அழைப்பில் பேசிய பெண், முரசு செயலி பயன்படுத்தாதவரும் நிகழ்ச்சிக்கு வந்து புத்தகத்தை வாங்கிச் செல்ல அனுமதி உண்டா என என்னிடமே கேட்டது நெகிழ்ச்சியாக இருந்தது. சிங்கப்பூரில் எழுத்தாளர் அழகிய பாண்டியன், புத்தகத்தில் ஒரு பத்தியை மேடையில் வாசித்துக் காட்டினார். நா தழுதழுத்து சொற்களை அவர் உச்சரிக்க, அரங்கத்தில் உள்ளோர் தங்கள் கண்களில் வழியும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டிருந்தனர். இத்தகைய அனுபவங்களே ஓர் எழுத்தாளரை தொடர்ந்து எழுதவைக்கின்றன. நான் அறிந்திராத மக்கள் நிறைந்த மேடையில் என்னுடைய நூல் ஏற்புரைக்குக் கிடைத்த வரவேற்பு, உற்சாக போனஸ். காலச்சுவடு பதிப்பகம் உரு நூலைப் பதிப்பித்தது, என்னையும் நூலையும் புதிய தளங்களுக்குக் கொண்டு சென்றது.
உள்ளூரிலும் உரு வெளியீடு அரங்கு நிறைந்த விழாவாக நடந்தது. இத்தனை நண்பர்களைச் சம்பாதித்திருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி. நட்பு, கெரியருக்கு வழிகாட்டியது ஒரு சுவாரஸ்யமான திருப்பம். துணை ஆசிரியர் வேலையின்போது நான் எடிட் செய்தது பிடித்துப்போய், நண்பர் சிவராமன் தன்னுடைய நூல் ஒன்றை எடிட் செய்து தரச் சொல்லிக் கேட்டார். முக்கியமாக எழுத்துப்பிழைகளைக் களைய உதவி கோரினார். என்னைவிடத் தெள்ளிய தமிழறிவு கொண்டவர் என்பதால் அதை அவசியமற்ற ஒன்றாகவே கருதினேன்.
சில ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய பழைய நூலில் இப்போது திருத்தம் மேற்கொள்ளப் பிடிக்கவில்லை என வற்புறுத்தித்தான் தந்தார். வழக்கம்போல கொடுத்த வேலைக்கு மேலே கூடுதலாக என்னுடைய கருத்தையும் சேர்த்து லாஜிக் சந்தேகங்களைப் பட்டியலிட்டுக் கொடுத்தேன். அரசியல் சரித்தன்மை, பாலியல் பாகுபாடின்மையோடு எல்லா கதாபாத்திரங்களும் இருந்தால் கதையை எப்படித்தான் எழுதுவது எனப் பெரும்பாலானவற்றை நிராகரித்தவர், சிலவற்றை ஏற்றுக்கொண்டார். உங்கள் கோணத்தில் இருந்து என் எழுத்தைப் பார்ப்பது எனக்கு உதவியாக இருக்கிறதென புதிதாக எழுதியவற்றையும் ஒருமுறை படித்துப் பாருங்கள் எனக் கொடுத்தார்.
அவர் மட்டுமின்றி மற்ற சில நண்பர்களும் தங்கள் நூலை எடிட் செய்து தரக் கொடுத்தனர். எவ்வளவு நேரம் செலவிடுகிறேன், என்னென்ன வேலைகள் செய்கிறேன் எனக் கவனித்துப் பட்டியலிட்டு ஒவ்வொன்றுக்கும் விலை நிர்ணயித்து புரபஷனலாகவே எடிட் செய்து கொடுத்தேன்.
மெட்ராஸ் பேப்பரில் வாரா வாரம் துண்டுத் துண்டாக பல்வேறு தலைப்புகளில் வாசிப்பதைவிட ஒரே தலைப்பில் முழுதாக ஒரு நூலைப் படிப்பது எனக்கு நிறைய படிப்பினைகளைக் கொடுத்தது. என் எழுத்தும் மெருகேறுவதை உணர முடிந்தது. எனவே தொடர்ந்தேன். இந்த ஆண்டில் மொத்தம் பத்து புத்தகங்கள் எடிட் செய்தேன்.
எனக்கு வசதியான நேரத்தில் மட்டுமே இந்த வேலைகளைச் செய்தேன். நான் சொல்லும் கெடு தேதிக்குச் சம்மதம் என்றால் மட்டுமே வேலையை ஒப்புக்கொண்டேன். ஒருவர் சொல்லி இன்னொருவர் என எடிட் மட்டுமின்றி எழுத்து தொடர்பான இன்னும் சில புராஜக்ட்களும் வந்தன. புதிதாக முயன்று பார்க்கும் வாய்ப்பு, எனக்குச் சுவாரஸ்யம் எனத் தோன்றும் உள்ளடக்கம், என் திறன் பயன்படும் வேலை, கணிசமான பணம் எனப் பல்வேறு விஷயங்களைக் கருத்தில் கொண்டே புராஜக்ட்களைத் தேர்ந்தெடுத்தேன்.
காலையில் என்னுடைய எழுத்து வேலைகள். மாலையில் பணம் சம்பாதிக்கும் வேலைகள் எனப் பிரித்துக்கொண்டேன். இடையில் வீடு சார்ந்த வேலைகள். எனக்கே எனக்கென்று நான் ஒதுக்கும் நேரத்தையும் கணக்கிட்டால் ஒரு நாளை நான்காகப் பிரித்து எல்லாமே சுமுகமாகப் போனது. இத்தனை ஆண்டுகளாக முயன்று பலமுறை தோற்ற நேர்த்தி இது. வாரத்தில் பாதி இதற்கு, பாதி அதற்கு என்று பிரித்து வேலை செய்துள்ளேன். தினமும் ஒரு விதமான வேலை என்றுகூடப் பார்த்ததுண்டு. ஆனால் ஒரு நாளை வெவ்வேறு விஷயங்களுக்குப் பிரித்து வேலைபார்க்க முடிந்ததில்லை. இந்த ஆண்டு அதைச் சாத்தியப்படுத்தியது முக்கியமான முன்னேற்றம்.
ஆண்டிறுதியில் இரண்டாவது புத்தகத்தை எழுத ஆரம்பித்தபோது, வீட்டைப் புதுப்பிக்கும் வேலைகளைத் தொடங்கும்படியானது. இந்த நூலுக்காக ஒன்றேகால் ஆண்டுக்கும் மேலே உழைத்திருக்கிறேன். கோவா, பாண்டிச்சேரி எனப் பல ஊர்களுக்குப் பயணம் செய்து திரட்டிய தகவல்கள். பல மணி நேர நேர்காணல்கள். இவற்றில் இருந்து துண்டு துண்டாக எழுதி வைத்ததே ஐம்பதாயிரம் சொற்களுக்கு மேல் இருந்தது. அதை முப்பதாயிரம் சொற்களுக்குள் வரும் புத்தகமாக எழுத முடியாமல் இன்று, நாளை எனத் தள்ளிக்கொண்டே சென்றேன்.
மூன்று மாதங்கள் வீட்டுக்குள்ளேயே நாடோடி போல ஓர் அறையில் இருந்து இன்னோர் அறைக்குப் பொருள்களை அள்ளிக் கொண்டுபோய் குடித்தனம் நடத்தும் நிலை. எனக்குத் தெரியாத மனிதர்கள் என் வீடு முழுக்க நிறைந்து வேலை செய்துகொண்டிருந்தனர். நான்கைந்து முறை எழுதும் மேசையை இடம் மாற்றவேண்டியிருந்தது. வீடு முழுக்கத் தூசி படர்ந்து, சுத்தம் செய்வதே முழு நேர வேலையாகிப் போனது. கால் வைக்க இடமின்றிப் பொருள்கள் போட்டது போட்டபடி இருந்தன. அதற்கு நடுவில் உட்கார்ந்து எழுதும் மனநிலையை உருவாக்குவது அசாத்தியமான ஒன்றாகத் தோன்றியது.
அதிகாலை இரண்டு மணியிலிருந்து எழுதும் கொலைவெறித் திட்டம் ஒன்றை என் ஆசிரியர் பரிந்துரைத்தார். முயன்றேன். விடாது முயன்றேன் என்பது சாலப்பொருத்தம். இருக்கும் இடர்கள் போதாதென்று இயற்கைச் சீற்றமும் சேர்ந்துகொண்டது. புயல். மழை. குளிர். மின்வெட்டு. எதாலும் என்னைத் தடுக்க இயலவில்லை. எண்ணியாங்கு எய்தும் பிடிவாதக்காரி நான்.
பத்து நாள்களில் 30000 சொற்கள் என்று திட்டமிட்டுத் தொடங்கினேன். பதிமூன்று நாள்களில் 26000 சொற்களுடன் புத்தகம் நிறைவடைந்தது. ஓராண்டுக்கும் மேல் சேர்த்த தகவல்களை வைத்துக்கொண்டு அதுவும் குறிப்புகள் தட்டச்சு செய்து தயாராக இருக்கையில் இப்படிக் குறுகிய காலத்தில் ஒரு நூலை எழுதி முடிப்பது சாத்தியம்தான் என்பது எனக்குத் தெரியும். இன்னின்ன பயிற்சிகள் மேற்கொண்டால் எவரெஸ்ட் சிகரம் ஏறமுடியும் எனச் சொல்வதற்கும் சிகரத்தில் ஏறி நிற்பதற்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா. அந்த வித்தியாசத்தை உணர்ந்தேன். அது கொடுக்கும் தன்னம்பிக்கை வேறு ரகம்.
அந்த நம்பிக்கையுடன், இந்தக் கட்டுரையை எழுதி முடித்து அனுப்பிய கையோடு என்னுடைய புதிய அறைக்குள் நுழைகிறேன்.
*
31/12/2025 அன்று மெட்ராஸ் பேப்பரில் வெளியான ஆண்டறிக்கை.
