பிரண்டைத் துவையல்

பேச்சின் வேகத்தை ஒட்டிக் காயத்ரி, கார் ஓட்டும் வேகமும் கூடுவது போல இருந்தது பிரபுவுக்கு. செங்கல்பட்டிலிருந்து பிரியும் சாலையில் திரும்பிக் காப்புக் காடு வழியாக மேடவாக்கம் சென்று கொண்டிருந்தனர். வழியில், திரெளபதி அம்மன் கோவில் திருவிழாவுக்காகச் சில கிலோ மீட்டர்கள் சாலையெங்கும் டியூப் லைட் கட்டி வழக்கம் போலன்றி, வெளிச்சமாக இருந்தது. தூரம் அதிகம், காட்டு வழி என்றாலும் சுங்கச்சாவடியும் நெரிசலும் தவிர்க்க எப்போதும் வரும் பாதைதான். ஆனால் ஏதேனும் சிக்கல் என்றால் உதவிக்கு வண்டி வரக்கூட அரை மணி நேரத்துக்கு மேலாகும். காயத்ரி வண்டியோட்டும் வேகத்தில் எங்காவது போய் முட்டிக் கொண்டால் என்னாவது என்று நினைத்தான் பிரபு. மேற்கொண்டு வாதம் செய்யாமல் தணிந்து போவதற்கு அந்தக் காரணமே போதுமாக இருந்தது.

“நான் ஒன்னும் பொண்ணுங்க படிச்சி வேலைக்குப் போகக்கூடாதுனு சொல்லல. யாராச்சும் ஒருத்தர் வீட்ல இருந்து பாத்துகிட்டா குடும்ப அமைப்பு நல்லா இருக்கும், விவாகரத்து குறையும்னுதான் சொன்னேன். வீட்ல இருக்கறது ஆம்பளையா கூட இருக்கலாம்.” என்றான்.

காரின் வேகத்தையும் பேச்சின் வேகத்தையும் குறைத்து, நிதானமான குரலில் அவளும் பதிலளித்தாள். “தனிப்பட்ட ரெண்டு பேரு பேசி முடிவெடுத்து ஒருத்தர் வீட்ல இருக்கறதுல எந்தத் தப்பும் இல்ல. பொதுவா ஆண், பெண் ரெண்டு பேரும் அடிப்படையான எல்லா வேலையும் கத்துகிடனும். அப்புறம் அவங்கவங்க வசதிக்கு ஏத்த மாதிரி முடிவெடுக்கலாம்னுதான் நான் சொல்றேன்”

“பெரும்பாலும் ஊரு உலகத்துல அப்டி இருக்கறதில்லயே”

“நாள் முழுக்க லேப்டாப் மவுஸ உருட்டிட்டு உக்காந்திருக்க. எப்பவாச்சும் பேஸ்புக் பாக்குற. உன்னோட சமூக அனுபவம் அவ்ளோதான். நான் என்னோட ரிசர்ச்காக கிராமம் கிராமமா போறேன். அங்க பெரும்பான்மை மக்கள் ஆண், பெண் வேறுபாடில்லாம சமைக்கிறத பாக்குறேன். கொஞ்சம் படிச்ச, வசதியான வீடுகள்லதான் இது ஒது கெளரவப் பிரச்சனையா இருக்கு. நல்லா படிச்சு தெளிவான சமூகப் புரிதல் இருக்குறவங்களும் சமைக்கிறாங்க. எங்க வீட்ல எங்க அப்பா மட்டுமில்ல, மாமா, சித்தப்பா, அண்ணன் எல்லாருக்குமே சமைக்கத் தெரியும். நீ பாத்த நாலு பேர வச்சி அதுதான் பெரும்பாலும்னு முடிவு பண்ணாத”

“எங்க அப்பா அம்மாலாம் அப்டி கெடையாது…”

காயத்ரிக்குக் கோபம் தலைக்கேறியது. “திரும்பத் திரும்ப உங்கப்பன் ஆத்தாவ மட்டும் வச்சி பேசாத…” சொல்லிக் கொண்டிருக்கும் போதே பிரபு கை முஷ்டியை ஓங்கி, “அந்த மாதிரிலாம் பேசுன….” என்று கோபத்தில் கண் சிவந்தான்.

காரின் ஆக்ஸிலேட்டரை வேகமாக அழுத்திய காயத்ரி சாலையோர மரத்தில் மோதுவது போலச் சென்று திடீர் என பிரேக் அழுத்தி நிறுத்தினாள். எதிர்பாராத அந்தக் குலுங்கலில் முஷ்டியை உயர்த்தியிருந்த பிரபுவின் கை, கார் டேஷபோர்டில் மோதியது. காயம் ஏதுமில்லை. முட்டியில் இடித்துக் கொண்டதால் வலி தாங்காமல் கத்தினான் பிரபு.

காயத்ரி நிதானமாக, “கடுப்பேத்தாத… மரத்துல முட்டிட்டு டியூப் லைட் வெளிச்சத்துல கண் கூசி ஆக்சிடெண்ட்னு சொல்லிடுவேன். இந்த வண்டியில டிரைவர் சீட்ல மட்டும்தான் ஏர்பேக் இருக்கு. மறந்துடாத. கெட் அவுட் ஆஃப் மை கார். கொஞ்ச தூரம் நடந்து போ. வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்” என்றாள்.

மறுபேச்சின்றி காரில் இருந்து இறங்கினான் பிரபு. கதவை மூடப்போனவன் மீண்டும் வண்டியில் ஏற்றாமல் போய்விட்டால் என்ன செய்வதென்று யோசித்து கதவைத் திறந்து டேஷ்போர்டில் இருந்த பர்ஸை எடுத்துக் கொண்டான். நடக்க ஆரம்பித்தான். இருபதடி தூரத்தில் சாலைத் திருப்பத்தில் கோவில் இருந்தது. வாசலில் எப்போதும் இருக்கும் காய்கறிக் கடைகள் இருந்தன. முருங்கைக்கீரை இளசாக இருந்தால் காயத்ரி தவறாமல் வாங்கிக் கொள்வாள். அவளுக்குப் பிடிக்கும். கடைசியாகக் கடை விரித்திருந்த பாட்டியிடம் கீரைக் கட்டுகள் அடுக்கியிருந்ததைப் பார்த்தான்.

அருகில் சென்று ஒரு கட்டுக் கீரை கேட்டு வாங்கினான். பணத்தை எடுக்கும் போதும் வைக்கும் போதும் முட்டி வலியால் முனகினான். அதைப் பார்த்த பாட்டி, “பிரண்டை வாங்கிக்கோ தம்பி. எலும்பு வலுவாவும். முட்டி வலிக்கு நல்லது. தொவையல் அரைச்சு வச்சா ஒரு வாரம் ஆனா கூட கெடாது” என்றார்.

காயத்ரி தன் ஆய்வுப் பணிக்காக சாலை வசதிகள் இல்லாத பகுதிகளுக்கும் அதிகம் நடந்து பயணிப்பவள். கால் வலிக்கிறது என்று எந்நேரமும் தைலம் தேய்த்து வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்துக் கொள்வாள். அவளுக்காக வாங்கலாம் என்று நினைத்தான். துவையல் எப்படிச் செய்வதென்று அவனுக்குத் தெரியாது. காயத்ரியும் துவையல் செய்து கொடுத்ததாக நினைவில் இல்லை. 

“எப்படி சுத்தம் செய்யனும் எப்படி துவையல் செய்யனும்னு தெரியாதே”

“பக்கவாட்ல இருக்க நரம்ப எடுத்துட்டு எண்ணெய்ல போட்டு காஞ்ச மொளகா, புளி, இஞ்சி, கருவேப்பிலை சேத்து வதக்கி அரைச்சா தொவையல் ரெடி.” என்று ரத்தினச் சுருக்கமாக முடித்துவிட்டார். எளிய வேலை போலத்தான் தோன்றியது. பாட்டிக்கு அருகில் முதுகு காட்டி உட்கார்ந்திருந்த தாத்தா வாங்கலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தவனைத் திரும்பிப் பார்த்தார். என்ன நினைத்தாரோ, அவர் சுத்தம் செய்து கொண்டிருந்த பிரண்டையை அப்படியே எடுத்துக் கொடுத்து “இதை எடுத்துட்டு போங்க” என்றார்.

“நல்லெண்ணல செஞ்சா நாக்குல நமச்சல் இருக்காது” என்று கூடுதலாக ஒரு தகவலும் கொடுத்தார்.

“நன்றிங்க. இதுக்கு எவ்வளவு எக்ஸ்ட்ரா?”

“ஒரு கட்டுக் காசு மட்டும் குடுப்பா. எங்க வீட்டுக்கு எடுத்துட்டு போக வச்சிருந்தது. நான் இன்னொரு கட்டு எடுத்து சுத்தம் பண்ணிக்குவேன். எனக்கு அஞ்சி நிமிஷ வேலை” என்றார் பெரியவர்.

“வியாபாரம் முடிச்சிட்டுப் போய்த்தான் சமைக்கனுமா?” 

மணி எட்டரை ஆகியிருந்தது. இவர்கள் இதற்குமேல் எப்போது போய் சமைத்துச் சாப்பிடுவார்கள் என்ற கரிசனத்தில் கேட்டான் பிரபு.

“எங்க வூட்டுக்காரம்மாதான் வியாபாரம் பாக்குறாங்க. கடை விரிக்கும்போது மூட்டையெல்லாம் தூக்கிக் குடுக்க ஒத்தாசைக்கு வருவேன். இப்ப கிளம்பிடுவேன். இவங்க இன்னும் ஒரு மணி நேரங் கழிச்சி ஏரகட்டிகினு வருவாங்க. நான் வூட்ல சமையல் பண்ணி வச்சா சூடா சாப்பிட ரெடியா இருக்கும்”

பெரியவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது அவர் மனைவி கிண்ணத்தில் இருந்த பிரண்டைத் துண்டுகளைப் பிளாஸ்டிக் கவரில் போட்டுக் கொடுத்தார். காசை வாங்கிக் கொண்டு சில்லறை கொடுத்துவிட்டு அடுத்த ஆளை கவனிக்க ஆரம்பித்துவிட்டார். 

காரை மெதுவாகச் செலுத்தி பிரபுவைத் தேடிக் கொண்டு வந்த காயத்ரி, அவனை அடையாளம் கண்டு வண்டியை நிறுத்தி ஹார்ன் அடித்தாள். பெரியவருக்கு, மீண்டும் ஒருமுறை நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பினான் பிரபு. 

காரில் ஏறிக் கொண்ட பிரபுவின் கையில் இருந்த பிரண்டையைப் பார்த்தாள் காயத்ரி. “ஓடி விளையாடுற பிள்ளை பிரண்டை சாப்புட்டா கை, கால் மூட்டு பலமா இருக்கும்” என்று சொல்லி துவையல் அரைத்துக் கொடுத்த அப்பாவின் நினைவு வந்தது. அவள் முகத்தில் புன்னகையொன்று தோன்றியது.

***

சிறுகதை மஞ்சரி ஐப்பசி 2024 இதழில் பதிப்பிக்கப்பட்ட கதை.