ஈழ அகதிகளும் ஓட்டை வாளி உதவிகளும்

பொழுது நள்ளிரவைத் தாண்டி இருந்தது.  கடற்கரை ஓரத்தில் அச்சத்துடன் காத்திருந்தது அனிதாவின் குடும்பம். அவளுக்கு வயது அப்போது ஏழு. உடன், அண்ணனும் அக்காவும், தம்பியும், தங்கையும் இருந்தார்கள். அனிதாவின் அம்மாவுக்கு தம் பிள்ளைகளும் மற்ற பிள்ளைகளைப் போல இயக்கத்தில் சேர்ந்து விடுவார்களோ என்ற அச்சம் இருந்தது. அனிதாவின் மாமா, இயக்கத் தொடர்பு இருக்கலாம் என்று இலங்கை ராணுவத்தால் சந்தேகிக்கப்பட்டவர். இவர்கள் குடும்பத்துடன் தங்கியிருந்தவர். அவர், கையில் குண்டுக் காயத்துடன் வீடு திரும்பிய நாளில்தான் அனிதாவின் அம்மா குழந்தைகளின் பாதுகாப்புக் கருதி இந்தியாவுக்குத் தப்பிச் செல்லும் முடிவை எடுத்தார். 

பணம், நகையோடு, கையில் சிக்கிய ஆவணங்களையும் அள்ளிப் போட்டு மூட்டை கட்டிக்கொண்டு மாட்டு வண்டியில் கடற்கரையை அடைந்தனர். கையில் இருந்த பணத்துக்குச் சிறிய மீன்பிடிப் படகுப் பயணம்தான் வாய்த்தது. சிலமணி நேரக் காத்திருப்புக்குப் பின் படகில் ஏறினர். அந்தச் சிறிய படகு நடுக்கடலில் நின்றுபோனது. கரை சேர்வோமா அல்லது குடும்பத்தோடு கடலில் மூழ்குவோமா எனத் தெரியாமல் கடந்தன சில மணி நேரங்கள். நல்வாய்ப்பாகப் பெரிய படகு ஒன்று வந்து அவர்களை இந்தியக் கரையில் சேர்த்தது. சிறிது நேரத்தில் விடிந்துவிடும், எல்லாப் பிரச்சனையும் முடிந்துவிடும் என்றுதான் அனிதா அன்று நினைத்திருந்தார். முப்பதாண்டுகளைக் கடந்த பிறகும் அந்த விடியல் இன்னும் வரவேயில்லை. 

திரிகோணமலை, நிலாவெளியில் இருந்து வந்தவர் புனிதமலர். இலங்கையில் இருந்து தப்பித்து வந்த நாள்கள் இன்றும் அவர் நினைவில் பதிந்திருக்கிறது. மூன்று அண்ணன்கள், ஒரு அக்காவுடன், புனிதமலரையும் கூட்டிக்கொண்டு அவர்கள் குடும்பம் கடற்கரை நோக்கிச் சென்றது. அவர் வாழ்வின் நெடிய பயணம் அது. பகலில் நடப்பது ஆபத்தென்பதால், கோவில், பள்ளிவாசல் எனக் கிடைத்த இடங்களில் தங்கினார். எந்த நேரத்திலும் கட்டிடத்தின் மேல் குண்டு விழலாம் என்ற அச்சத்தில் கழிந்தன பகல்கள். இரவுக்கிரவாகப் பதுங்கி கடற்கரை நோக்கி நடந்தனர். நீரோ, உணவோ கிடையாது. தூக்கத்திலும் பசி மயக்கத்திலும் கண்ணை மூடிக்கொள்ளும் புனிதாவை பாதிநேரம், அண்ணன்கள்தான் தூக்கிச் சுமந்து வந்தார்கள். நினைவு வந்து கண்விழிக்கும் போதெல்லாம் அவர் பார்த்தது பிணங்களைத்தான். எத்தனை நாள்கள், எந்த வழியில் வந்தோம் என்பதெல்லாம் ஏழு வயதுப் புனிதமலரின் நினைவில் இல்லை. கடந்து வந்த பிணங்களின் காட்சி மட்டும் நினைவடுக்கில் அழிக்க இயலாமல் தங்கிவிட்டது. 

இராமேஸ்வரக் கடலில் கழுத்தளவு நீரில் நடந்து வந்து கரையேறியது புனிதாவின் குடும்பம். மண்டபம், தஞ்சாவூர், மதுரை எனப் பல முகாம்களில் இரண்டாண்டு காலம் இருந்தார். 1992-ம் ஆண்டிலிருந்து மதுரை அத்தியந்தல் முகாமில் வசிக்கிறார். தனக்கு முன் பிறந்தவர்கள் படிப்பைக் கைவிட்டு வேலைக்குச் சென்றுவிட, இவர் வேதியியலில் பட்டப்படிப்பை முடித்திருக்கிறார். கட்டுப்பாடுகள், குறைந்த சம்பளம் காரணமாக படிப்புக்கேற்ற வேலையைச் செய்யாமல் அழகுக்கலையும் பயின்று சிறிய அளவில் சுயதொழில் செய்கிறார். முகாம் மக்களின் நலனுக்காகத் தன்னாலான உதவிகளையும் செய்கிறார் புனிதமலர். 

நளினியின் அம்மாச்சி, குடும்பத்துடன் கடவுச்சீட்டு ஆவணம் எடுக்க எண்ணித்தான் பயணத்தை ஆரம்பித்தார். தங்களுக்கு முன்னால் சென்ற பேருந்து முழுக்க இருந்த மக்களை வெட்டிக் கொன்றதைக் கேள்விப்பட்டு பாதிவழியில் பயணத் திட்டத்தை மாற்றி கள்ளத்தோணி ஏறிவிட்டார். திருச்சி முகாம் முகவரியானது. இவர்கள் இப்படி நாடற்றவர்கள் ஆன காரணம் விளங்க, இலங்கையின் வரலாறு கொஞ்சமாவது தெரிய வேண்டும். 

இலங்கையின் பண்டைய வரலாற்றைச் சொல்லும் மகாவம்சம் புத்த சாதுக்களால் தொகுத்தெழுதப்பட்டது. இதன்படி இந்தியாவில் இருந்து சிங்க வம்சத்தைச் சேர்ந்த சிங்களர்கள் வருவதற்கு முன்பே, தீவில் நாகர்கள் எனும் பூர்வகுடிகள் இருந்திருக்கிறார்கள். இவர்கள் தமிழர்கள் எனும் கருத்து இருக்கிறது. மகாவம்சம், தமிழ்ச் சங்க இலக்கியப் பாடல்கள், கதைகள் இவற்றின் மூலம் வரலாறுதோறும் இலங்கையில் தமிழ் மற்றும் சிங்கள அரசுகள் மாறி மாறி அரசாண்டதை அறிந்து கொள்ளலாம். அரசர்களுக்குள் போர் மூண்டாலும் மக்கள் சுமூகமான வாழ்க்கையே வாழ்ந்தார்கள். அரசர்கள் கூட இரு தரப்பிலும் அவ்வப்போது திருமண உறவுகளை ஏற்படுத்தியுள்ளனர். எனவே தமிழ், சிங்கள இனங்கள் கலப்பு இனங்களாகவே இருந்திருக்கிறது. நவீன அறிவியலின் டிஎன்ஏ ஆய்வுகளும் இந்த இனக்கலப்பை உறுதி செய்கின்றன. சச்சரவுகள் உண்டு, ஆனால் கலவரம் இல்லை என்னும் இந்த நிலை பிரித்தானிய அரசு ஆட்சிவரை நீடித்தது. ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்றபின் காட்சி மாறியது. 

மன்னர்கள் காலத்தில் நடந்த இடப்பெயர்வு மட்டுமின்றி, ஆங்கிலேயர் ஆட்சியிலும் பெருமளவு தமிழர்கள் இலங்கைக்கு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களாக வந்திருந்தனர். பஞ்சம், வேலைவாய்ப்பு, அடிமையாக அழைத்து வரப்படுதல் எனப் பல காரணங்கள். சுதந்திர இலங்கையில் இருந்த ஆட்சியாளர்கள் தங்கள் ஆட்சி அதிகாரத்தில் தமிழர்களின் ஓட்டுரிமை செல்வாக்குச் செலுத்துவதை விரும்பவில்லை. சிங்கள தேசியவாதிகள் இவர்கள் அனைவரையும் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பச் சொல்லி வலியுறுத்தினர். இலங்கைக் குடியுரிமைச் சட்டம் 1948ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இலட்சக்கணக்கானாேர் இலங்கைக் குடியுரிமையை இழந்தனர். 

இலங்கையில் வாழும் மக்களை வலுக்கட்டாயமாகத் திருப்பி அனுப்புவதை இந்தியா எதிர்த்தது. அனைவரையும் திரும்ப ஏற்றுக் கொள்ள மறுத்தது. நேரு – கொட்டேவாவல ஒப்பந்தம், விருப்பமுள்ளவர்களை மட்டும் இந்தியா ஏற்றுக் கொள்ளும் என்றும், மற்றவர்களுக்கு இலங்கையே குடியுரிமை வழங்க வேண்டும் என்றும் கையெழுத்தானது. இந்தியக் குடியுரிமை கேட்டு அவர்களும் அலைமோதவில்லை இந்தியாவும் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. இலங்கைக் குடியுரிமை கேட்டு விண்ணப்பித்தவர்கள் இந்தியக் குடியுரிமை கேட்க முடியாது எனச் சில முட்டுக் கட்டைகளையும் போட்டது இந்தியா. 1954இல் செய்துகொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம் நடைமுறை வெற்றியைப் பெறவில்லை. 

நேருவின் இறப்புக்குப் பிறகு இந்தியப் பிரதமரானர் லால்பகதூர் சாஸ்திரி. இந்தப் பிரச்சனையில் இவர் அணுகுமுறை முற்றிலும் வேறாக இருந்தது. திடீர் நாடற்றவர்களான இந்த மக்களை இந்தியாவுக்கு 5 லட்சத்து 25 ஆயிரம் பேர் என்றும் இலங்கைக்கு 3 லட்சம் பேர் என்றும் பங்கு பிரித்துக் கொண்டார்கள். அந்தக் காலகட்டத்தில் 9 லட்சத்து 75 ஆயிரமாக இருந்த இந்த மக்கள் எண்ணிக்கையில் பிரித்த எண்ணிக்கை போக ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் எந்தக் கணக்கிலும் வராமல் இருந்தார்கள். பதினைந்து ஆண்டுகளில் பிரித்துக்கொண்ட மக்களுக்குக் குடியுரிமை அளித்த பிறகு மீதம் உள்ள இந்த ஒன்றரை லட்சம் பேர் குறித்து முடிவு செய்து கொள்ளலாம் என விட்டுவிட்டார்கள்.

மாட்டுச் சந்தையில் துண்டைப் போட்டு வியாபாரம் பேசுவது போன்று 1964-ம் ஆண்டு கையெழுத்தானது சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம். மக்களின் விருப்பம் குறித்தோ, உரிமைகள் குறித்தோ யாரும் கவலை கொள்ளவில்லை. எந்த வகையில் இந்தத் தேர்ந்தெடுத்தல் நிகழும் என்றும் வரையறை இல்லை. சர்வதேசச் சமூகத்தின் கருத்துகள் எதுவும் கணக்கில் கொள்ளப்படவில்லை. அடுத்து 1974-ல் வந்த சிறிமா – இந்திரா காந்தி ஒப்பந்தம், மீதமிருந்த ஒன்றரை லட்சம் பேரையும் சமமாகப் பங்கிட்டுக் கொண்டது. 

இலங்கை சுதந்திரம் பெற்றதில் இருந்து எழுபதுகளின் பிற்பகுதி வரை தமிழர்களை ஒடுக்குவதில் பல உத்திகளைக் கையாண்டது இலங்கை அரசு. இலங்கைக் குடியுரிமைச் சட்டம் பல தமிழர்களை நாடற்றவர்களாக்கியது. ‘சிங்களம் மட்டும்’ சட்டம் இலங்கையில் சிங்களத்தை மட்டும் அலுவல் மொழியாக்கியது. ‘கல்விச் சீர்படுத்துதல்’ சட்டம் தமிழர்கள் மேற்கல்வி கற்பதைக் கனவாக்கியது. தமிழர் அதிகம் வாழும் இடங்களில் திட்டமிட்டு சிங்களவர்களைக் குடியேற்றியது அரசு. சட்டப்படி இலங்கைக் குடியுரிமை வைத்திருந்த தமிழர்கள்கூட இரண்டாம்தரக் குடிமக்களாகவே வாழ வேண்டியிருந்தது. தமிழர்கள், சிங்களவர்கள் இடையே பிளவு அதிகரித்துக் கொண்டே சென்றது. இவை எழுபதுகளின் இறுதியில் தமிழர்களின் ஆயுதப் போராட்டமாக மாறியது. 

விடுதலைப் புலிகள் அமைப்பும், வன்முறை பதிலடிகளுமாக பரிணாம வளர்ச்சியடைந்தது. எண்பதுகளின் ஆரம்பத்தில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. இருதரப்பிலும் சேதங்கள் என்ற நிலையை அரச பயங்கரவாதம் மாற்றி எழுதியது. 1983இல் தமிழர்கள் மீது நடந்தப்பட்ட வன்முறை வெறியாட்டம் கறுப்பு ஜூலையாகப் பதிவானது. இதன் பிறகும் இந்திய அரசின் தலையீடும் ஒப்பந்தங்களும் தொடர்ந்தன. இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி இந்திய அமைதி காக்கும் படையினை இலங்கைக்கு அனுப்பினார். இந்தப் படை சிங்களவர், தமிழர் இருதரப்பிலும் அதிருப்தியைச் சம்பாதித்தது. இதனால் 1990களில் மற்றோர் அலை அகதிகள் தமிழ்நாட்டில் கரையேறினார்கள். கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக நடந்த உள்நாட்டுப்போர் 2009இல் முடிவடைந்தது. 

இரண்டு நாடுகளின் ஒப்பந்தங்களின் படி எத்தனை பேர் வந்தார்கள், எத்தனை பேருக்குக் குடியுரிமை வழங்கப்பட்டது போன்ற தகவல்கள் வெளிப்படையாக இல்லை. ஒப்பந்தத்தின் படி சட்டப்பூர்வமாக வருவதும், அவ்வப்போது நிகழும் கலவரங்களால் சட்டவிரோதமாகக் கள்ளத்தோணியில் தமிழ்நாடு வருவதும் தொடர்கதையாகிப் போனது. எண்பதுகளுக்குப் பிறகு யார் எந்த வரையறைக்குள் வருகிறார்கள் என்ற கணக்கை விடுத்து எல்லாரும் ஒரே வகையான முகாமில் அடைத்து வைக்கப்படடனர். 

இந்தியாவுக்குப் புகலிடம் தேடி வந்த இவர்களின் நிலை, பச்சை மிளகாய் கடித்த காரம் தணிய வெந்நீர் குடித்த கதையாகிப் போனது. இவர்கள் தங்க வைக்கப்பட்ட முகாம், தொகுப்பு வீடுகளால் ஆனது. வீடு என்றால், சமையலறை, படுக்கையறை, குளியல் அறை எனச் சில அறைகளைக் கொண்டதல்ல. அடுத்தடுத்த சுவர்களால் தடுக்கப்பட்ட சிறிய ஒற்றை அறை மட்டுமே. குடும்பத்துடன் தங்குவதால் வீடு எனக் குறிப்பிடப்படுகிறது. வரிசையாக நிற்கவைக்கப்பட்ட கார்களைப் போல இவை அடுத்தடுத்து இருக்கும். சமைக்க, சமையல் பாத்திரங்கள் வைக்க, துணிகளை வைக்க, பாடப் புத்தகங்கள் வைக்க, வீட்டு உபயோகப் பொருள்கள் வைக்க, சாப்பிட, படுத்துறங்க என மொத்த குடும்பமும் புழங்கவேண்டியது அந்த அறைக்குள்தான். காதல், கலவி, ஊடல், உரத்த சண்டை, பிள்ளைகளை நல்வழியில் வளர்க்க என பார்வைக்குப் புலப்படாத வாழ்க்கைக்கும் அந்த ஓர் அறைதான். 

முகாமுக்கு என பொதுவாகச் சில கழிவறைகள் இருக்கும். ஐந்தாறு குடும்பங்களுக்கு ஒரு கழிவறை என பிரித்துக் கொள்கிறார்கள். ஆண்கள் முகாம்களுக்கு வெளியே உள்ள பொதுக் கழிவறைகளையோ வெட்டவெளியையோ உபயோகிக்கிறார்கள். நகர்ப்புறம் அல்லாது உள்ளடங்கிய சில கிராமப்புற முகாம்களில், பெண்களும் வெட்டவெளியைக் கழிவறையாக உபயோகிக்கும் அவலம் இருக்கிறது. இந்த தினசரிப் பிரச்சனை அல்லாது பெண்களுக்கென்றே பிரத்யேகமாக மாதாந்திர பிரச்சனையும் இருக்கிறது. மாதவிடாய்க் காலங்களில் பொதுக் கழிவறைப் பயன்பாடு வார்த்தைகளில் சொல்ல இயலாத துயரம். உலகம் முழுக்கவே அகதி முகாம்கள் இத்தகைய சுகாதாரக் குறைவான அவல நிலையில்தான் இருக்கின்றன. அகதிகளைச் சோதனை முடிந்து நாட்டுக்குள் அனுமதிப்பதா, சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புவதா, சிறையில் அடைப்பதா என முடிவெடுக்க சில காலம் ஆகும். அதுவரை தற்காலிக முகாம்கள் எல்லா நாடுகளிலும் உள்ள நடைமுறை. தமிழ்நாட்டில் அந்த தற்காலிகக் காலம் முப்பதாண்டுகளைக் கடந்துவிட்டது. 

டெல்லி அரசியல்வாதிகள் பார்வை அரசியல் காரணங்களுடன் இருந்தாலும் தமிழ்நாட்டளவில், இவர்களை தமிழர்களாகவே கருதி ஆதரவளித்தனர். இந்தியப் பிரதமர் தமிழ்நாட்டில் படுகொலை செய்யப்பட்டபின் இலங்கைத் தமிழர்கள் மீதான பார்வை தலைகீழானது. புலம் பெயர்ந்தவர்கள் உரிமை பற்றிப் பேசுவது தீவிரவாத ஆதரவாகக் கருதப்பட்டது. இவர்களின் குடியுரிமை பற்றிய பேச்சுகள் மெல்ல அனைவருடைய நினைவில் இருந்தும் அழிந்தது. இலங்கை உள்நாட்டுப் போர், அதில் இந்தியாவின் ஆதரவு- எதிர்ப்பு நிலைகள், போர்க்குற்றம், இலங்கையின் மனித உரிமை மீறல்கள் என எந்தச் செய்திகள் வந்தாலும் இங்கிருக்கும் அகதிகளின் குடியுரிமை பற்றிப் பேச்சு எழவில்லை. 

இந்தியப் பூர்வகுடிகளான, அகதிகளான தங்கள் இந்தியக் குடியுரிமைக் கோரிக்கை அரசின் நிர்வாக காரணங்களாலோ, அரசியல் காரணங்களாலோ தாமதமாகிறது என எண்ணியிருந்த இவர்கள் அகதிகளே அல்ல, சட்டவிரோதக் குடியேறிகள் என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது இந்திய அரசு. இந்தியக் குடியுரிமைச் சட்டம் 1955ன் பிரிவு 5 (1) ல் உள்ள முதல் விதியே, குடியுரிமை கோரும் ஒருவர் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தவராக இருக்கக்கூடாது என்பதுதான். சட்டப்பூர்வ கடவுச்சீட்டும், பயண ஆவணங்களும் இல்லாமல் இந்தியாவில் நுழைந்த அனைவரும் சட்டவிரோதக் குடியேறிகள் என்கிறது இந்தியச் சட்டம். இதன்படி இவர்கள், குடியுரிமை கேட்கத் தகுதி அற்றவர்கள் எனவும் ஒருவேளை மனுதாரர்கள் சட்டப்பூர்வ உரிமை உள்ளவர்களாக இருந்தாலும் அவர்கள் குடியுரிமை பற்றி முடிவெடுக்கவும் காரணம் கூறாமல் குடியுரிமையை மறுக்கவும் இந்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது எனவும் இந்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

அண்டை நாடுகளில் இருந்து சட்டவிரோதமாகப் புகலிடம் தேடி வந்தவர்களுக்கு, இந்துக்கள் எனும் அடிப்படையில் குடியுரிமை வழங்கும் இந்திய அரசின் குடியுரிமைச் சட்டத் திருத்தத்தில் (CAA) கூட இலங்கை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. இலங்கைக் குடிமக்கள், இந்தியப் பூர்வகுடிகள், சட்டவிரோதமாகக் குடியேறிய இந்துக்கள் என எந்த வரையறையிலும் வராத ஒரு மாய யதார்த்த வாழ்வு இவர்களுக்கு வாய்த்துவிட்டது. இப்படி எந்தப் பக்கமும் சேர்த்துக் கொள்ளப்படாத இம்மக்களின் நிலையைப் புராணங்களில் வரும் திரிசங்கு சொர்க்கத்துடன் ஒப்பிட்டுத் தனது தீர்ப்பொன்றில் குறிப்பிட்டார் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன். முகாம்களின் நிலையை நோக்கினால் சொர்க்கம் என்ற வார்த்தையின் பொருத்தமின்மையை இடித்துரைக்கத் தவறவில்லை இவர். 

65 மனுதாரர்கள் இணைந்து தாங்கள் இந்திய வம்சாவழித் தமிழர்கள் என்பதால் தங்களுக்குக் குடியுரிமை வழங்கிடக் கோரிய வழக்கில் இவர் அளித்த தீர்ப்பு முக்கியமான ஒன்று. 2019 ஜூலை மாதம் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பல விஷயங்களைச் சுட்டிக்காட்டி இத்தீர்ப்பாணையை வழங்கியுள்ளார். 

“இவர்கள் தங்கள் உயிருக்கு அஞ்சித் தப்பித்து ஓடி வந்தவர்கள் என்பதை இந்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். இவர்கள் இந்தியாவிடம் தஞ்சம் கோரி வந்தவர்கள். உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடுபவர் கடவுச்சீட்டுக்காக காத்திருக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியாது. சட்டத்தின் தொழில்நுட்ப விதிகளின் கண்ணாடி கொண்டு இவர்களைப் பார்ப்பது மனிதாபிமானமுள்ள அணுகுமுறையாக இல்லை.”

“சட்டவிரோதமாக உள்ளே நுழைந்து மக்களுடன் இரகசியமாகக் குடியேறி வாழ்ந்து கொண்டிருப்பவர் வேண்டுமானால் உரிமை கோர முடியாது எனலாம். ஆனால் இவர்கள் அரசினால் அமைக்கப்பட்ட முகாமில் தங்கியுள்ளவர்கள். பரம்பரையாக இந்த மண்ணில் வேரூன்றியவர்கள், நம் மொழியைப் பேசுபவர்கள் மற்றும் நமது கலாசாரத்தைச் சேர்ந்தவர்கள்.”

“ஐபிஎஸ் அதிகாரிகள் தவறிழைத்தால் தண்டனையாக கொடுக்கப்படுவதுதான் மண்டபம் அகதிகள் முகாம் பணி. காலப்போக்கில் அங்கிருந்து அவர்கள் கிளம்பி விடுவார்கள். ஆனால் முகாம் உள்ளே இருக்கும் மக்களுக்கு அதற்கான வாய்ப்பில்லை. அது ஒரு முடிவில்லாத இருண்மை. முப்பத்தைந்து ஆண்டுகளாக அவர்கள் முகாமில் இருக்கிறார்கள். அவர்களைக் கண்காணிப்பதும், கட்டுப்பாடுகளுக்குள் வைப்பதும், நீண்ட காலமாக நாடற்றவர்களாக அவர்களை வைத்திருப்பதும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 21க்கு எதிரானது.”

“ஒருவரின் இதயம் கல்லால் ஆனதாகவே இருந்தாலும் உண்மையின் அனல் அந்தக் கல்லையும் கரைக்கும்” என்றெல்லாம் குறிப்பிட்டு மனுதாரர்கள் குடியுரிமை கேட்கும் விண்ணப்பத்தை அதிகாரிகள் முறையாக இந்திய அரசுக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளார். 

“என் மனத்தில் மனுதாரர்களுக்காகக் குருதி கசிந்தாலும் நான் என் அதிகாரத்தைத் தாண்டி உத்தரவிட முடியாது. குடியுரிமை இந்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது. நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை.” எனத் தன் நிலையைக் குறிப்பிட்டு, “இந்திய அரசு ஏற்கனவே இவர்கள் வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள் என நீதிமன்றத்தில் உறுதிமொழி அளித்துள்ளது. இந்தத் தனித்துவமான நிலையை கவனத்தில் கொண்டு இந்திய அரசு இவர்களின் குடியுரிமையைப் பரிசீலனை செய்ய வேண்டும்.” என்று தீர்ப்பளித்துள்ளார். இந்திய அரசு இதை எதிர்த்து மேல் முறையீடு செய்துள்ளது. 

குடியுரிமை தவிர்த்த மற்ற எல்லா விஷயங்களிலும் தமிழ்நாடு அரசு சாத்தியமுள்ள அனைத்து உதவிகளையும் செய்கிறது. தங்குமிடம், பெரியவர்கள், குழந்தைகள் என எண்ணிக்கைக்கு ஏற்பப் பண உதவி செய்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் அனைத்துச் சலுகைகளும் இவர்களுக்கும் இருக்கிறது. கட்டணமின்றிக் கல்வி, மருத்துவம், ரேஷன் பொருள்கள், நிவாரண உதவிகள் அனைத்தும் கிடைக்கின்றன. 

ஆரம்பக்கால முகாம்கள் போல் இல்லாமல் பின்னர் உருவாக்கப்பட்ட முகாம்கள் அளவில் சற்றே பெரிய அறையாக உள்ளன. இத்தனை ஆண்டுகளில் இங்கே வேலை செய்து சம்பாதித்த பணத்தைக் கொண்டு முகாம்வாசிகள் முன்புறம் உள்ள இடத்தைத் தாங்களே தடுத்து கூடுதல் அறைகளாகவும் மாற்றியுள்ளனர். இடநெருக்கடி இல்லாத பல முகாம்களில் இப்படியான கட்டுமானங்களை அரசு தடுக்கவில்லை. மக்கள் பெருக்கத்துக்கு ஏற்பக் கழிவறைகளும் அவ்வப்போது புதிதாகக் கட்டப்படுகின்றன. புதிதாகக் கட்டப்படும் முகாம் வீடுகள் தனியறை, கழிவறை வசதிகள் உடையதாகத் திட்டமிடப்பட்டுள்ளன. 

முகாம்களுக்கு உள்ளேயே சிறிய கடைகள், சிறுதொழில்கள் எனத் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்த முயல்கிறார்கள் இவர்கள். தனியார் தொண்டு நிறுவன உதவியுடன் திருச்சியில் ஓலைப்புட்டு என்ற பெயரில் இலங்கை உணவுகள் விற்பனை செய்யும் உணவகம் ஒன்றைக்கூட இங்குள்ள பெண்கள் நடத்துகிறார்கள். மக்களவை உறுப்பினர் கனிமொழி இதற்கு உதவியுள்ளார். ஓட்டுநர் உரிமம் பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. நூறு நாள் வேலைத் திட்டத்தில் குடியுரிமை இல்லாதவர்களும் இணையலாம் என்ற இளம்பகவத் ஐஏஎஸ் யோசனையில் பலர் பயன் அடைந்துள்ளனர். 

தமிழ்நாடு அரசு ‘அகதி முகாம்’ என்பதை ‘மறுவாழ்வு முகாம்’ எனப் பெயர் மாற்றியுள்ளது. உதவித்தொகையை ஏற்றியும், மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை எண்ணிக்கையை அதிகரித்தும், திறன் வளர்ப்புப் பயிற்சிகள் அளித்தும் இவர்கள் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்த முனைகிறது. சுய உதவிக் குழுக்கள், சமையல் எரிவாயு உருளைகள், அடுப்புகள் எனப் பல கோடிகளைச் செலவு செய்கிறது. 

இவ்வளவு வசதிகள் செய்து கொடுத்தும் குடியுரிமை ஏன் அவசியமாகிறது? அசையும் சொத்துக்கள், அசையாச் சொத்துகளை குடியுரிமையின்றி இவர்கள் வாங்க முடியாது. கல்விக்காகவோ, வேலைக்காகவோ வெளிநாடு செல்ல முடியாது. அரசு வேலைகளைப் பெற முடியாது. இராணுவத்தில் சேர முடியாது. இந்தியா சார்பாகக் கலந்துகொண்டு விளையாட்டில் சாதிக்க முடியாது. நீட் தேர்வுக்கு முன்பு மருத்துவப் படிப்பு கூட சாத்தியம். இப்போது அதுவும் கிடையாது. கல்வியின் மூலமோ உழைப்பின் மூலமோ நல்ல நிலையை அடையும் கனவைக் காண முடியாது. படித்தாலும் உழைத்தாலும் இதுதான் நிலை என்றால் யார்தான் உத்வேகம் பெறுவார்கள்? இந்தக் கையறுநிலை பல சமூகச் சிக்கல்களை உருவாக்கியுள்ளது. 

கல்வி இடைநிற்றல், இளவயதுத் திருமணம், இளவயதில் பெற்றோர் ஆதல், ஊட்டச்சத்து குறைவான குழந்தைகள், உடல்நலக் கோளாறுகள், பாலியல் ஒழுக்கம் சார்ந்த பிரச்சனைகள், மணமுறிவு, ஒற்றைப் பெற்றோர் எண்ணிக்கை கூடுவது, மன அழுத்தம், போதைப்பழக்கம், தற்கொலைகள் என இம்மக்கள் வாழ்வது பிரச்சனைகளின் முகாமில்தான். அதிலும் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்களே. இவ்வளவு உதவிகள் செய்யும் அரசு இந்த மனிதவளத்தைப் பயன்படுத்தும் வகையில் முகாமின் உள்ளேயே சிறிய தொழிற்கூடங்களை தொடங்கலாம் என்னும் கோரிக்கையும் இவர்களிடம் இருக்கிறது. 

என்ன படித்தாலும், எவ்வளவு உழைத்தாலும் முகாமும், முகாமைச் சுற்றியுமேதான் இவர்கள் வாழ்வு. முகாமை விட்டு அதிக தூரத்தில் வேலை செய்வது கடினமான நடைமுறை. முகாம் பட்டியலில் குறிப்பிட்ட இடைவெளியில் கையெழுத்திடத் தவறினால் பெயர் விடுபட்டுப் போகலாம். விடுபட்ட தன் அப்பாவின் பெயரை மறுபதிவு செய்ய, ஆவணங்கள் நகலைக் கையில் கொடுத்து பேருந்தில் ஏற்றிவிட்ட சரவணன், கடைசியாக அவரை உயிருடன் பார்த்த தருணம் அதுதான். ஒற்றைப் பெற்றோரான தன் அப்பாவால் வளர்க்கப்பட்டு படித்து வெளியூரில் தங்கி வேலை செய்யும் இவரும் தவறாமல் முகாம் சென்று கையெழுத்திடுகிறார். தேர்தல் அறிக்கையில் குடியுரிமைக் கோரிக்கையை சேர்க்கச் சொல்லி எல்லா தமிழக அரசியல் கட்சிகளையும் சந்தித்த குழுவிலும் இருந்தவர் சரவணன். முகாமை நோக்கிச் செல்லும் பேருந்தில் இவர் அப்பாவின் இதயம் எதையெல்லாம் சிந்தனை செய்ததோ தெரியாது. ஊர் சென்று சேரும் முன்பே துடிப்பதை நிறுத்தி விட்டது. 

பெண்கள் இப்படி வெளியூரில் வேலை செய்வது அரிது. தங்கள் முகாமில் இப்படி வெளியில் தங்கி வேலை பார்க்கும் 23 பேரில், செல்வகுமாரி, ஒற்றைப் பெண். சென்னையில் தங்கி வேலை செய்யும் செல்வகுமாரி, அதை உறுதி செய்யும் போனஃபைடு சான்றிதழை, தான் பணிபுரியும் நிறுவனத்தில் இருந்து வாங்கி முகாமில் கொடுத்து இருக்கிறார். சில மாதங்களுக்கு ஒருமுறை வந்து கையெழுத்திட்டு இதைப் போல ஒவ்வொரு முறையும் போனஃபைடு சான்றிதழ் கொடுக்க வேண்டும். எல்லா தனியார் நிறுவனங்களும் இப்படி அடிக்கடி போனஃபைட் சான்றிதழ் கொடுக்கத் தயாராக இருப்பார்கள் எனச் சொல்ல முடியாது. 

கணினி அறிவியல் படித்து ப்ராஜக்ட் மேனேஜ்மெண்ட் எக்ஸிக்யூட்டிவ் ஆக இருக்கும் செல்வகுமாரியிடம், முகாமில் அவர் வயதுப் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்ற கேள்வியை முன்வைத்த போது, “என் அம்மா இறந்துவிட்டதால் என் அம்மம்மாதான் என்னை வளர்த்தார்கள். இலங்கையில் இருக்கும் என் தாத்தாவும் மாமாவும் கொஞ்சம் உதவி செய்தார்கள். அப்பா என்னை நன்றாகத்தான் கவனித்துக் கொள்வார். என்றாலும் பொருளாதார ரீதியில் தாத்தா பாட்டிதான் உதவினார்கள். தனியார் பள்ளியில்தான் படித்தேன். ஒன்பதாவதுக்குப் பிறகு ஹாஸ்டலில் தங்கிப் படித்தேன். கல்லூரிப் படிப்புக்கும் வேலை கிடைக்கவும் அகரம் அமைப்பு உதவியது. அரசுசாரா அமைப்புகள் உதவத் தயாராக இருந்தாலும் பலருக்கு அணுகத் தெரியாது. இப்படி உதவிக்கு உறவினர்கள் இல்லாதவர்கள், ஒரே ஒரு பாடத்தில் பெயிலானால் கூடப் பலர் படிப்பை பாதியிலேயே கைவிட்டு வேலைக்குப் போய்விடுவார்கள். இளவயதிலேயே பலருக்குத் திருமணம் நடந்துவிடும். உதவிகள் இல்லாமலும் நான் நல்ல நிலமையை அடைந்திருப்பேன் என என்னால் உறுதியாகச் சொல்ல முடியாது.” எனக் கூறுகிறார். 

இத்தனை ஆண்டுகளில் சிலர், இலங்கைக்கே திரும்பச் சென்று அங்கு சில காலம் முகாம்களில் அடைபட்டுப் பின்னர் புது வாழ்வைத் தொடங்கினர். சிலர் அங்கிருந்து வேறு ஏதேனும் வெளிநாடு சென்றனர். சிலர் இலங்கைக் குடியுரிமை பெற்ற பின்னர் ‘ஓவர்சீஸ் சிட்டிசன் ஆஃப் இந்தியா’ அட்டையை வாங்கி இந்தியாவுக்கு சட்டப்படி வந்தும் தங்கியிருக்கிறார்கள். இந்தியாவில் இருந்தும் சிலர் கடல்வழியாகச் சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயல்வதுண்டு. இவை அனைத்துக்கும் ஏதோ விதத்தில் பணம் அல்லது உறவினர்கள் உதவி தேவை. இப்படிச் சென்றவர்கள் போக இப்போது முகாமில் மீதம் இருப்பவர்கள் ஒரு லட்சத்துக்கும் குறைவான மக்களே. தமிழ்நாடு முழுக்க நூற்றி எட்டு முகாம்களில் கிட்டத்தட்ட பத்தொன்பதாயிரம் குடும்பங்கள் வசிக்கின்றன. முகாமுக்கு வெளியேயும் பதிமூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இலங்கைக்கு திரும்பச் செல்வோர் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. 2016-லிருந்து 2020 வரை ஆயிரத்துக்கும் குறைவான நபர்களே இலங்கைக்குத் திரும்ப சென்றுள்ளனர். கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு இது முற்றிலும் நின்றுவிட்டது. 

திருச்சி முகாமில் 1986இல் இலங்கைப் பெற்றோருக்கு மகளாக இந்தியாவில் பிறந்த நளினி, கடவுச்சீட்டு வழங்கக் கோரி வழக்கு தொடர்ந்தார். இந்திய குடியுரிமைச் சட்டம் 1955, பிரிவு 3 (1) (a) ன் படி 1987-க்கு முன் இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்தியக் குடிமக்களே எனக் கூறி நளினிக்கு கடவுச்சீட்டு வழங்க ஆணை பிறப்பித்தார் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன். இவருடைய அம்மா வழித் தாத்தா சுதந்திரப் போராட்ட வீரர் என்பதும் குறிப்பிடத் தக்கது. 2022இல் கிடைத்த இந்த தீர்ப்பைத் தொடர்ந்து, கடவுச்சீட்டை கையில் வாங்கி பல முகாம்வாசிகள் மனத்தில் நம்பிக்கை வெளிச்சத்தை விதைத்திருக்கிறார் நளினி. 

இந்திய அரசு 2019-ல் நிறைவேற்றிய குடியுரிமைச் சட்டத் திருத்தத்தில் பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து மதக் காரணங்களால் 2014-ம் ஆண்டுக்கு முன்னர், இந்தியாவுக்கு புலம் பெயர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பெளத்தர்கள், பார்சிக்கள் மற்றும் கிறித்துவர்களுக்கு குடியுரிமை வழங்குகிறது. இந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை குறிப்பிடப்படவில்லை. இதை எதிர்த்து நாடளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. தி.மு.க. சார்பில் இந்திய அரசு இலங்கைத் தமிழர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது என வழக்கும் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. 

திருச்சி முகாமைச் சேர்ந்த அபிராமி வழக்கில், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், சிஏஏவில் குறிப்பிடவில்லை என்றாலும் விதிகள் பொருந்துகிறது எனச் சாதகமான தீர்ப்பளித்துள்ளார். 1993ஆம் ஆண்டு திருச்சியில் பிறந்த அபிராமியின் பெற்றோர் இலங்கையில் இருந்து வந்ததன் காரணம் அவர்கள் தமிழ் இந்துக்கள் என்பதே. மதச் சிறுபான்மையினராக இருந்து பாதிக்கப்பட்டு அண்டை நாட்டில் இருந்து அடைக்கலம் தேடி இந்தியா வந்தவர்களுக்குக் குடியுரிமை வழங்கலாம் என்கிறது சிஏஏ. இலங்கை அந்த நாடுகளின் பட்டியலில் இல்லை என்றாலும் அண்டைநாடு, மதச்சிறுபான்மை, இந்து எனும் எல்லா விதிகளுக்கும் பொருந்தி வருவதால் அபிராமிக்குக் குடியுரிமை வழங்கலாம் என உத்தரவிட்டுள்ளார். குடியுரிமை கொடுக்கும் முடிவை இந்திய அரசுதான் எடுக்கலாம் என்றாலும் மறுப்பதற்கான காரணங்கள் எதுவும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார். 

மேலே குறிப்பிட்டுள்ள தீர்ப்புகளின் அடிப்படையில் இந்த விதிகளுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பங்களை அனுப்பியுள்ளார்கள். இந்திய அரசு மனிதாபிமானத்துடன் அணுகினால் ஒற்றை அரசாணையில் தீர்க்கக்கூடிய பிரச்சனைதான் இது. குடியுரிமை கொடுக்காமல் செய்யப்படும் மற்ற எல்லா உதவிகளும் ஓட்டை வாளியை நிரப்புவதைப் போன்றதே.

*

15/03/2023 அன்று மெட்ராஸ் பேப்பரில் பதிப்பிக்கப்பட்ட கட்டுரை.