ஏரிகளுக்கும் படகு வீடுகளுக்கும் புகழ்பெற்ற காஷ்மீர் பள்ளத்தாக்கு வறட்சியை எதிர்கொள்கிறது. ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா, அரசின் நீர் மேலாண்மைத் துறையான ஜல் ஷக்தி எடுக்கும் நடவடிக்கைகள் போதாது என்றும் மக்களும் இணைந்து செயல்படவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
திடீரென நீர் நெருக்கடியை எதிர்கொள்ளவில்லை காஷ்மீர். பத்தாண்டுகளாகவே சூழலியலாளர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக மழையும் பனிப்பொழிவும் படிப்படியாகக் குறைந்துகொண்டே வருகின்றன. இந்த ஆண்டு குளிர்காலத்தில் எண்பது சதவிகிதம் மழை குறைந்துள்ளது. பிப்ரவரி 22ஆம் தேதி நடக்க இருந்த கேல் இந்தியா எனப்படும் பனி விளையாட்டுகள் நிகழ்ச்சி பனி இல்லாத காரணத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வெயில் காலம் முன்னதாகவே வந்துவிட்டது போல் இருப்பதாகச் சொல்கிறார்கள் உள்ளூர்வாசிகள். வழக்கத்தைவிடச் சுமார் எட்டு டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்ந்துள்ளது.
குளிர்ச்சியாக இருக்கும் மலைகளில் நீர்ப் பற்றாக்குறை இருக்காது என நம்மில் பலர் நினைக்கக்கூடும். லாஜிக்கலாக யோசித்தால் புவியீர்ப்பு விசையால் கீழே போகும் நீரை மலைகளில் சேமித்துவைப்பது எளிதல்ல என்று புரியும். படிகளைப்போல பாத்திகட்டி விவசாயம் செய்வதே இப்பகுதிகளில் சாவாலான விஷயம். ஆங்காங்கே இருக்கும் சமவெளி, பள்ளத்தாக்கு போன்ற வாய்ப்புள்ள இடங்களில் உள்ள ஏரிகளும், நீர்ச்சுனைகளும் தவிர காஷ்மீர் நீர்த் தேவையைப் பெரிதும் பூர்த்தி செய்வன ஆறுகள்தாம்.
குளிர்காலத்தில் உறையும் பனி, வெயில் காலத்தில் உருகி ஓடி ஆற்றில் கலக்கும். வழியில் உள்ள மக்களின் பயன்பாட்டுக்கு உதவும். பனிப்பாறைகள் ஒவ்வோர் ஆண்டும் குறைகின்றன. இதைப் பற்றி விழிப்புணர்வு உண்டாக்கும் லடாக் சுற்றுச்சூழல் போராளி சோனம் வாங்சுக் நமக்கு நன்கு அறிமுகமானவர். சில மாதங்களுக்கு முன்பு ஒன்றிய அரசின் கவனம் ஈர்க்க நடைப்பயணம் சென்று அதற்கு அனுமதியின்றி உண்ணாநோன்பு இருந்தார். கொசக்ஸி பசப்புகழ் என நண்பன் திரைப்படத்தில் இவர் இன்ஸ்பிரேஷனில் உருவான கதாபாத்திரம் போலவே இவர் உள்ளூர் தீர்வுகளைப் பரிந்துரைக்கிறார்.
செயற்கையாக பனிப்பாறைகளை உருவாக்கும் முயற்சியை லடாக் மக்களுடன் இணைந்து செயல்படுத்தியிருக்கிறார். மின்சாரம் தேவைப்படாத வகையில் புவியீர்ப்பு சக்தியை வைத்தே நீர்ச்சுனையில் இருந்து குழாய்கள் வழியாக நீரை எடுத்துவந்து இப்பனிப்பாறைகளை உருவாக்குகிறார்கள். செங்குத்தாக உயர்ந்து நிற்கும் கட்டமைப்பில் குழாய்களில் வரும் நீர் கொஞ்சம் கொஞ்சமாக வழிந்தும் பீய்ச்சியடித்தும் பனியாக உறைகிறது. குளிர்காலம் முழுக்க இப்படி நிதானமாக உருவாகும் பனிப்பாறை வெயிலின் போது உருகி நீரைக் கொடுக்கும். ஆனால் இது நிரந்தரத் தீர்வல்ல.
கிணற்றில் தண்ணீர் இல்லையெனில் வெடிவைத்துத் தகர்த்து இன்னும் ஆழம் போகிறோம். எத்தனை ஆழம் போனாலும் நிலத்தில் நீர் இருந்தால்தானே கிணற்றில் ஊறும். அதைப்போலத்தான் இதுவும். நீரூற்றில் நீர் வந்தால்தான் செயற்கை பனிப்பாறை உருவாக்க முடியும். அதோடு, பனிப்பொழிவு குறைந்து குளிர்காலமே குறுகுவதால் நீண்ட காலத்துக்கு இதெல்லாம் பயன்தராது.
காலநிலை மாறுபாடுகளுக்கு அதிகம் பங்களிப்பது மும்பை, டெல்லி, பெய்ஜிங், நியூயார்க் போன்று உலகெங்கும் உள்ள பெருநகரங்கள்தாம். எனினும் பாதிக்கப்படுவது மலைகளில் உள்ள நாங்கள், என்பது சோனம் வாங்சுக்கின் கருத்து. அதிலும் இமயமலைக்கு அருகில் இருக்கும் உத்திரப்பிரதேசம், பிகார், பஞ்சாப், ராஜஸ்தான் பகுதிகளில் இருந்து வெளியேறும் மாசு அதிகத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்கிறார். கரியாக வெள்ளைப்பனிமலையில் படிந்து சூரிய ஒளியை அதிகம் கிரகித்து விரைவில் பனி உருகும் அபாயத்தை ஏற்படுத்துகிறதாம்.
நாங்கள் வாழ்வதற்கு நீங்கள் கொஞ்சம் எளிமையாக வாழ்வது அவசியமாகிறது என்பதே இவருடைய முழக்கம். அண்மையில் பாகிஸ்தானில் தான் கலந்துகொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் பருவகால மாற்ற மாநாட்டிலும் இதே கருத்தையே முன்வைத்துள்ளார். ஜம்மு, காஷ்மீர் சந்திக்கும் எந்த வகையான நீர் நெருக்கடியும் பாகிஸ்தானை நேரடியாக பாதிக்கும்.
ஜம்மு காஷ்மீரின் நீர்த்தேவையைப் பூர்த்தி செய்வதில் முக்கியமான நதி ஜீலம். சிந்து நதியின் துணை நதியான ஜீலம், காஷ்மீர் பள்ளத்தாக்கின் பிர் பஞ்சல் மலையடிவாரத்தில் உள்ள அனந்தநாக்கின் வெரினாங் நீரூற்றில் இருந்து தொடங்குகிறது. ஸ்ரீநகர் வழியாகப் பாய்ந்து வுலர் ஏரியை நிரப்பிப் பின்னர் பாகிஸ்தானில் நுழைகிறது. சுமார் நூற்றெழுபது கிலோமீட்டர்கள் இந்திய பாகிஸ்தான் எல்லைப்பகுதியிலேயே சென்றாலும், சிந்து நதிப் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் முசாபர்நகருக்குப் பிறகு ஜீலம் நதி பாகிஸ்தானின் கட்டுப்பாட்டுக்குள் போய்விடுகிறது. ஜீலம் தொடங்கிப் பாயும் இடங்களில் ஆற்றில் மிதந்து கொண்டிருந்த படகு வீடுகள் எல்லாம் தரையில் நிற்க வேண்டிய நிலைக்கு வறட்சி உள்ளது. நீரூற்றுகளே வற்றிப்போயுள்ளன.
ஜீலத்துடன் சேனப், ரவி, பீஸ், சட்லஜ் ஆகிய ஐந்து ஆறுகள் இணைந்தே சிந்து நதியை வற்றாத ஜீவ நதியாக்குகின்றன. ஜம்மு காஷ்மீரில் முழுக்க இன்னும் பல சிற்றாறுகளும் ஓடைகளும் நீரூற்றுகளும் இந்த ஆறுகளில் கலக்கின்றன. கயிலாய மலையில் தொடங்கும் சிந்து நதியானது இவை அனைத்தும் இணைந்து பிரம்மாண்டமாகப் பாகிஸ்தானில் ஓடுகிறது. பாகிஸ்தானின் மொத்த நீர்ப்பாசனத் தேவையில் முக்கால் பாகம் சிந்து நதியைச் சார்ந்தே உள்ளது. கிட்டத்தட்ட தொண்ணூறு சதவிகிதம் விவசாயம் சிந்து நதி நீரின் மூலம்தான் நடக்கிறது.
ஜம்மு காஷ்மீர் முழுக்க ஒன்பது அணைகள் உள்ளன. ஓரிரண்டைத் தவிர அனைத்துமே இந்திய பாகிஸ்தான் எல்லைக்கு அருகிலேயே உள்ளன. எல்லை தாண்டும் முன்பு அணைகட்டித் தடுத்து கொஞ்சம் நீர் சேமிக்கப்படுகிறது. இந்த ஆண்டு அதுவுமே பெரிதாகக் கைகொடுக்காது என்கிறார்கள். பல்லாண்டுகளாகச் சில முணுமுணுப்புகள் தாண்டி பெரிதாக எந்தச் சிக்கலும் இன்றிதான் இந்தியா, பாகிஸ்தான் நீர்ப்பங்கீடு இருந்தது. கடந்த சில ஆண்டுகளாக அது மாறிவருகிறது. இந்தியா கட்டும் அணைகளால் தங்களுக்கு நீர் கிடைப்பதில்லை என அனைத்துலக அரங்கில் பாகிஸ்தான் புகார் படிக்கிறது. அவ்வப்போது உலகளாவிய அமைப்புகள் பஞ்சாயத்து செய்து முடித்துவைக்கிறார்கள். இரு தரப்பு உறவில் புதிய சிக்கல் உண்டாக்கும் அளவுக்கு நிலைமை எந்நேரமும் மோசமாகலாம். ஏற்கெனவே எது கிடைக்கும் போருக்குப் போகலாம் என்றுதான் காத்திருக்கிறார்கள்.
தற்போதைய வறட்சி பற்றி, சில மாதங்களாகவே சூழலியலாளர்கள் கூடுதலாகக் குரல் எழுப்பினாலும் அரசு, அதெல்லாம் வழக்கமானதுதான் எனச் சொல்லிக்கொண்டிருந்தது. தேர்தலுக்குப் பிறகு பொறுப்பேற்றுள்ள ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா அப்படிப் புறங்கையால் இதைத் தள்ளிவிடவில்லை என்பதே ஆறுதல் அளிக்கும் செய்திதான். அரசும், நீர் மேலாண்மை அமைப்புகளும் செயல்படுத்தும் பணிகளோடு பொதுமக்களின் ஒத்துழைப்பையும் கோருகிறார் ஓமர். நமக்கெல்லாம் நீர் நெருக்கடி வராது என்கிற அலட்சிய மனப்பான்மையுடன் நாம் இருக்கக்கூடாது என்கிறார். விழிப்புணர்வை ஏற்படுத்தி நீர்நிலைகளைப் பாதுகாக்கும் பணியில் அனைவரையும் இணைக்க முயல்கிறார். உள்ளூர் மக்களிடம் விழிப்புணர்வும் அதிகாரமும் இருந்தால் பேரிடராக மாறாமல் கட்டுக்குள் வைப்பது சாத்தியம்.
பெருநகரங்களில் வசிப்போரின் அதீத நுகர்வும் காலநிலை மாற்றச் சிக்கல்களுக்குப் பெரிய காரணம். அரசாங்கங்கள் செய்ய வேண்டிய வேலைகளை வலியுறுத்துவது எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்குத் தனிமனிதர்கள் பொறுப்புடன் நடந்துகொள்வதும் அவசியமாகிறது. சோனம் வாங்சுக் கோரிக்கை வைப்பதுபோல, பெருநகரங்களில் வசிப்போர் எளிமையான வாழ்வைப் பழகிக்கொள்ளவேண்டும்.
*
25/02/2025 அன்று மெட்ராஸ் பேப்பரில் பதிப்பிக்கப்பட்ட கட்டுரை.
