அறிவிக்கப்படாத தாக்குதல்களும் அறிவிக்கப்பட்ட அபாயங்களும்

பாகிஸ்தான் அரசு ஏப்ரல் 23ஆம் தேதி அன்றே பஹல்காம் படுகொலை குறித்துக் கவலை தெரிவித்தது. கண்டனம் தெரிவித்தது. எனினும் தன் அறிக்கையில், பஹல்காமை சட்டவிரோத ஜம்மு காஷ்மீரில் இருக்கும் பகுதியாகக் குறிப்பிட்டிருந்தது.

இந்தியாவின் நடவடிக்கைகளுக்கான பதில் அறிவிப்புகளை ஏப்ரல் 24ஆம் தேதி வெளியிட்டது. சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தாகும் அறிவிப்பைக் கடுமையாக நிராகரிக்கிறோம் என்றது பாகிஸ்தான். ஆதாரமின்றித் தங்கள் மீது குற்றஞ்சாட்டக்கூடாது, விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறோம் என்றது.

சிந்து நதி நீரைத் தடுக்கும் நடவடிக்கைகளை போர் என்றே கருத வேண்டி வரும் என எச்சரித்தனர். இந்தியாவைப் போலவே விசா ரத்து, அதிகாரிகள் திரும்ப அழைத்தல் அறிவிப்பு எல்லாம் இருந்தது. கூடவே, 1972ஆம் ஆண்டு போடப்பட்ட சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்தது பாகிஸ்தான். 1971ஆம் ஆண்டு நடந்த இந்தியா பாகிஸ்தான் போருக்குப் பின்னர் ஏற்பட்ட சமாதான உடன்படிக்கை இது. பங்களாதேஷ் உருவாகக் காரணமான இப்போரில் இந்தியா 13000 சதுர கிலோமீட்டருக்கு மேல் முன்னேறித் தன் பிடிக்குள் வைத்திருந்த பாகிஸ்தான் நிலத்தை நல்லெண்ண அடிப்படையில் திரும்பக் கொடுத்தது. காஷ்மீர் சிக்கலை மூன்றாவது நபர் தலையீடு இல்லாமல் நாமே பேசித் தீர்க்கலாம் என்கிறது ஒப்பந்தம். குறிப்பாக லைன் ஆஃப் கன்ட்ரோல் உறுதி செய்யப்பட்டு வன்முறையால் இதை மீற வேண்டாமென ஒப்புக்கொண்டோம். இதைத்தான் ரத்து செய்துள்ளனர்.

பாகிஸ்தான் நாடாளுமன்றம் 25ஆம் தேதி கூடியபோது இந்தியாவின் ஆதாரமற்ற குற்றச்சாட்டைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றினர். அரசியல் ஆதாயங்களுக்காகத் தீவிரவாதத்தை இந்தியா பயன்படுத்துகிறது என்றனர்.

பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆஸிப், முன்னர் நாடாளுமன்றத்தில் பேசிய வீடியோ ஒன்று வைரலானது. பல பத்தாண்டுகளாக பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவளித்து பாகிஸ்தானைச் சீரழித்தது எனப் பேசியிருந்தார் அவர். பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு ஸ்கை டிவிக்கு அளித்த நேர்காணலில் இதைப் பற்றிய கேள்வி எழும்பியது. அமெரிக்கா, மேற்கு நாடுகளின் கைப்பாவையாகச் செயல்பட்டு அவர்களுக்காகவே பயங்கரவாதத்தை ஊக்குவித்தது பாகிஸ்தான் என்று வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டார். எனினும் பஹல்காம் தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை, இந்தியாதான் காரணம் எனக் குற்றம் சுமத்தினார். எத்தகைய தாக்குதலுக்கும் பதிலடி தரத் தயார் என்றார். 

பாதுகாப்பு அமைச்சரும், பாகிஸ்தான் பிரதமர் ஷெப்பாஸ் ஷரிப்பும் உள்விசாரணைக்கும் உத்தரவிட்டனர். பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் விரிவான வெளிப்படையான நடுநிலையான விசாரணை வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

பஹல்காம் தாக்குதலில் மூன்று தரப்பில் இந்து, முஸ்லிம் பேச்சுகள் தலைதூக்கின. தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள். பிஜேபி அரசியல்வாதிகள், ஆதரவாளர்கள். மூன்றாவது, பாகிஸ்தானின் ராணுவத் தலைமை அதிகாரி அஸிம் முனிரும் சில பாகிஸ்தான் அரசியல்வாதிகளும். இந்துக்களும் முஸ்லிம்களும் வெவ்வேறானவர்கள், எம் முன்னோர்கள் ரத்தம் சிந்தி உருவாக்கிய பாகிஸ்தானை உயிரைக் கொடுத்துக் காப்போம் எனப் பேசினார். தாக்குதல் நடப்பதற்கு ஒரு வாரம் முன்பும் இதே போல இந்து, முஸ்லிம் பற்றிக் குறிப்பிட்டுப் பேசினார். காஷ்மீர் எங்கள் ஜகுலர் வெயின் என்றார். கழுத்து வழியாக மூளைக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் குரல்வளை நாளத்தைக் குறிக்கும் சொல் இது. பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, சில பாகிஸ்தான் அரசியல்வாதிகளும் பல்வேறு விதமான பதிவுகளை சமூகவலைத்தளத்தில் இத்தாக்குதலைக் கொண்டாடும் வகையில் வெளியிட்டனர். இதற்கு மாறாக பாகிஸ்தான் மக்கள், அஸிம் பதவி விலகவும் ராணுவத்தைக் கட்டுப்படுத்தவும் கோரி ஹாஷ்டாக் பதிவுகள் வெளியிட்டு டிரென்ட் செய்தனர்.

மிக மோசமான பொருளாதார சீரழிவில் இருக்கிறது பாகிஸ்தான். நிதி உதவிகளில் மட்டுமே நாடு இயங்குகிறது. அதிலும் பெருமளவு பணம் வன்முறை அமைப்புகளை வளர்க்கவே செலவாகிறது. இது பாகிஸ்தானுக்கே வினையாகித் திரும்ப வரவும் செய்கிறது. என்றாலும் இந்தியாவை எதிரியாக்கி அரசியல் செய்வது என்கிற குறுகிய வட்டத்தை விட்டு அவர்கள் வெளியே வரவேயில்லை. முஷாரப் போன்ற சில தலைவர்கள் காலத்தில் ஒரு சில முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் நாட்டின் மோசமான நிலையைக் கருத்தில் கொண்டு அமைதியைத் தேர்ந்தெடுத்தார்களேயன்றி இந்திய வெறுப்பைக் கைவிட்ட தலைவர்கள் கிடையாது. அது ஒன்றே மக்களைத் திசை திருப்பும் ஆயுதமாக முக்கால் நூற்றாண்டுக்கும் மேல் இருக்கிறது.

அறிவிக்கப்படாத தாக்குதல்களை எல்ஓசியில் ஏற்கெனவே தொடங்கிவிட்டது பாகிஸ்தான். இந்தியாவும் பதிலுக்குத் தாக்குதல் நடத்துகிறது. இப்போதைக்குச் சிறிய அளவில்தான் இது நடக்கிறது. இந்திய அரசு, ராணுவ நடவடிக்கைகளைத் தொடர்ந்து ஒளிபரப்ப வேண்டாம் என இந்திய ஊடகங்களுக்கு வலியுறுத்தியுள்ளது. பெரிய தாக்குதல் நடக்கப்போவதை இது உணர்த்துகிறது. வெளிப்படையாகச் சவால் விடுத்துள்ளதால் மோடி இதோடு நிறுத்தமாட்டார் வலுவான தாக்குதல் ஒன்றை நடத்துவார் என்று பாகிஸ்தானும் எதிர்பார்க்கிறது.

தற்போதைய பொருளாதார நெருக்கடி, பலுசிஸ்தான் சிக்கல் எல்லாவற்றையும் சமாளிக்க இன்னுமோர் இந்தியப் போர் கைகொடுக்குமா எனப் பார்க்கிறது பாகிஸ்தான். உலக நாடுகள் அனைத்துமே வருத்தம் தெரிவித்தாலும் வழக்கம்போல இந்தியா அமைதி காக்கவே வலியுறுத்தினர். அமெரிக்கா அதிபர், இரண்டுமே நட்பு நாடுகள்தான் என்று கருத்துச்சொல்லிவிட்டார். ஏப்ரல் 27ல், ரஷ்யாவும் சீனாவும் காஷ்மீர் விவகாரத்தில் தலையிட அழைப்பு விடுத்தது பாகிஸ்தான். அமெரிக்க வரிவிதிப்புகளால் சீனாவின் பொருள்களை விற்க இந்தியச் சந்தை சீனாவுக்கும் அவசியமாகிறது. ரஷ்யா இன்னும் உக்ரைன் போரையே முடித்தபாடில்லை. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று யாருமே செயல்பட இயலாத நிலையில்தான் உலக நிலவரம் இருக்கிறது.

ஒரு விதத்தில் பாகிஸ்தான் நடவடிக்கைகள் இந்தியாவுக்குச் சாதகமாக இருக்கின்றன எனலாம். சிம்லா ஒப்பந்தத்தை இந்தியா எப்போதும் மீறியதில்லை. பாகிஸ்தான் நேரடியாக இல்லையென்றாலும் மறைமுகமாக மீறியுள்ளது. இந்த ஒப்பந்தத்தை மீறி அவ்வப்போது சர்வதேச அரங்கில் யாரையாவது காஷ்மீர் விவகாரத்தில் தலையிட வைக்க முயன்றுள்ளது. பயங்கரவாதிகளை ஆதரிப்பதன் மூலம் வன்முறையைத் தூண்டியுள்ளது. தற்போது அதிகாரப் பூர்வமாக ரத்து செய்வதன் மூலம் பெரிய பயன் ஏதும் இல்லை. 

ஆனால், ஆயுத பலத்தைப் பயன்படுத்தி இந்தியா முழுமூச்சுடன் தாக்க இந்த ரத்து வழிகோலியுள்ளது. பிடித்துவைத்த நிலம் அப்படியே ஸ்டேடஸ் குவோ நிலையில் இருக்கவேண்டியதில்லை எனில் இந்தியா முன்னேறித் தாக்குதல் நடத்தி இத்தனை காலமாகத் தன்னுடையது எனச் சொல்லும் இடத்தைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரலாம். எனினும் இந்நேரம் வரைக்கும் இந்தியா அலுவல்ரீதியாக இதற்கு எந்த மறுமொழியும் கொடுக்கவில்லை. இப்போதைக்குச் செய்தித் தளங்கள் லைவ் ரிலே, அரை மணி நேரத்துக்கு ஒரு முறை அப்டேட் செய்யும் டைம்லைன் பக்கங்களை மூடியுள்ளன. மீண்டும் பரபரப்பாகச் செய்திகள் வெளியிட நீண்ட காலமாகாது என்பதே தற்போதைய நிலை.

*

29/04/2025  அன்று மெட்ராஸ் பேப்பரில் பதிப்பிக்கப்பட்ட கட்டுரை.