ரணகளமாக்கும் ரசிக மனநிலை

கல்வியில் சிறந்த தமிழ்நாடு முழக்கம் தேசியளவில் கவனம் ஈர்த்தபோதுதான் கரூர் நெரிசல் மரணங்கள் நிகழ்ந்தன. நெரிசல் மேலாண்மையைவிட அதிகம் விவாதிக்கப்பட்டது தற்குறி மனநிலை. உற்சாகமும் மகிழ்ச்சியும் பொங்க “செமயா இருந்திச்சி” என நால்வர் மயங்கி விழுந்து தங்கச் சங்கிலியும் வெள்ளி மெட்டியும் பறிபோனதை விவரிக்கும் இளைஞர்களைப் பார்த்து மனம் நொந்தது அறிவுச்சமூகம். வரலாறும் அறிவியலும் இது ஒன்றும் புதிதல்ல என்கின்றன.

கலை, பரப்புரைக் கருவியாக இருப்பதை வரலாற்றின் எல்லாப்பக்கங்களிலும் காணலாம். இந்திய விடுதலைக்கு முன்பும் அதற்குப் பிறகும் இசை, நாடக, திரைத்துறைப் பிரபலங்கள் அரசியல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்திய அரசியலில் பிரபலங்கள் அதிகாரப்பூர்வமாக கால்பதிக்கத் தொடங்கியது 1950களில். இந்தி நடிகர் ராஜ் கபூரின் அப்பா பிரித்திவிராஜ் கபூர் ராஜ்ய சபா உறுப்பினரானது 1952ஆம் ஆண்டு. இக்காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் எம்ஜிஆர் தீவிர அரசியலுக்கு வந்து திமுகவில் இணைந்து பின்னர் அதிமுகவைத் தொடங்கி முதல்வர் ஆன கதை நாம் அறிந்ததே. கருணாநிதியும் அவருடைய வாரிசுகளும் சினிமாத் துறையோடு தொடர்புடையவர்களே. ஜெயலலிதாவுக்குப் பிறகு சினிமாவில் இருந்து வந்து வெற்றிகரமான அரசியல்வாதியாகச் சுட்டிக்காட்ட நிறைய பெயர்கள் இல்லை. 

ஆனால் சினிமா நடிகர்களைக் கொண்டு கூட்டம் கூட்டாத அரசியல் கட்சியே இந்தியாவில் கிடையாது. அரசியல் மட்டுமின்றி வணிக நோக்கத்துக்காவும் சினிமா புகழ் பயன்படுகிறது. 2017ஆம் ஆண்டு கேரளாவில் கடைதிறப்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்தார் சன்னி லியோன். பாலியல் படங்களில் தொடங்கி பாலிவுட் நடிகராக மக்கள் மனம் கவர்ந்தவர். படித்தவர்கள் அதிகம் இருப்பதாக அறியப்படும் மாநிலத்தில் மக்கள் வெள்ளத்தின் நடுவில் சன்னியின் கார் நீந்த முடியாமல் மிதந்துகொண்டிருந்த புகைப்படம் நினைவிருக்கிறதல்லவா. 

பெரும் நிலப்பகுதியை ஆண்ட அரசர்களாகிய ராமனையும் கிருஷ்ணனையும் கடவுளாக்கியவர்கள் இந்தியர்கள். குறுநில மன்னன், குக்கிராமத்தை நிர்வகித்த தலைவர், காவல் காத்தவர், குடும்பத்தின் முன்னோர்கள் என எல்லாரையும் தெய்வமாக்கும் வழக்கம் நம் டிஎன்ஏவிலேயே இருக்கிறது எனச் சொல்லிவிட முடியாது. உலகம் முழுக்க இந்தக் குணம் இருக்கிறது. 

வடகொரியாவின் கிம் மக்களைச் சந்திக்கும் வீடியோ காட்சிகளைக் கண்டிருக்கிறீர்களா? கடவுளை நேரில் கண்டால் அடையும் பரவசத்தை மக்களின் முகங்களில் பார்க்கமுடியும். மக்கள் அவரைப் பார்த்ததும் கண்ணீர் சிந்துவதும், பரவசத்தில் மயங்கிவிழுவதும்கூட சகஜம். 

படிக்காத பாமரர்கள் அறிவின்மையால் மற்றொரு மனிதனைத் தொழும் நிலையிலிருக்கிறார்கள் என்றெண்ணினால் அதுவும் தவறு. கல்வியோ வயதோ ஒரு பொருட்டில்லை. விஜய்க்கு இருக்கும் ரசிகர்களைப் போல முதல்வர் ஸ்டாலினுக்கும் அதிதீவிர முட்டுக்கொடுக்கும் ரசிகர்கள் இருப்பதைப் பார்க்கமுடிகிறது. கல்வி பரவலாக அனைவருக்கும் கிடைக்க ஆரம்பித்த பிறகே இப்போக்கு அதிகரித்ததாக அறிவியல் ஆய்வுகள் சொல்கின்றன. 

செத்துப்போனவர்களைக் கொண்டாடுவதே பன்னெடுங்கால வழக்கம். பதினெட்டாம் நூற்றாண்டில்தான் உயிரோடு இருப்பவர்களை உச்சத்தில் வைக்கும் பழக்கம் தோன்றியதாக ஆய்வுகள் சொல்கின்றன. செலிபிரிட்டி, ஸ்டார் போன்ற பதங்கள் அதிகம் புழங்கியது அப்போதிருந்துதான். காதல் கவிதைகளை எழுதிய கவிஞர் பைரன் நவீன கால செலிபிரிட்டிகளில் முதன்மையானவர். இவர் புகழ், பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே கண்டம் விட்டுக் கண்டம் தாண்டிப் பரவியது.

பைரன் வாழ்க்கையைப் படித்தால், அப்படியொன்றும் நல்லவரில்லையே எனத் தோன்றும். ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில் ரசிகர்கள், குறிப்பாக காதல் கடிதம் எழுதிய பெண்கள் அதை எல்லாம் கண்டுகொள்ளவில்லை. பைரனின் மனைவி அனபெல்லா இந்தப் போக்கிற்கு, பைரமேனியா எனப் பெயரிட்டார்.  மகள் அடா லவ்லேஸ் இதிலிருந்து விலகி கல்வியில் சிறந்தவராக வரவேண்டும் எனத் திட்டமிட்டு வளர்த்ததும் அவர் கணினித்துறை முன்னோடியாக அறியப்படுவதும் தனிக்கதை. பைரன், புகழை வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல் அரசியலிலும் ஆர்வம் காட்டியவர். கிரீஸ் தேசிய நாயகனாக கொண்டாடப்பட்டார். பல்வேறு குற்றச்சாட்டுகளுக்குப் பிறகும்கூட இன்றும் அவர் புகழ் ஓங்கியே இருக்கிறது. 

அச்சு ஊடகம் வளரத் தொடங்கியபோது எழுத்துத் திறன் படைத்தோர் புகழ்பெற்றனர். அத்துறை இன்னும் வளர்ந்து படங்களை அச்சிடத் தொடங்கியபோது வேறு பரிமாணம் கொண்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரெஞ்சு சமையற்கலை நிபுணர் அலெக்ஸிஸ் சாயர், தன்னுடைய தயாரிப்புகளில் எல்லாம் தன் முகத்தை அச்சிட்டு விற்பனை செய்தார். 

பிரபலம் + விளம்பரம் + ஊடகம். இவை இணைந்து தயாரித்த புதுவகை ரெசிபி ஒன்று உருக்கொண்டது. திரைக்கலைஞர்கள் இதில் கோலோச்சினர். 1829ஆம் ஆண்டு இரண்டு நடிகர்கள், மக்களே… என விளித்து லண்டன் செய்தித்தாளில் அறிக்கை கொடுத்துள்ளனர். தங்களைத் தவறாகச் சித்தரிப்பதாகச் சொல்லி ரசிகர்களிடம் நியாயம் கேட்டு ஆதரவு திரட்டியுள்ளனர். இன்று, நடிகர்கள் நேரடியாக ரசிகர்களை நோக்கி கேமரா பார்த்துப் பேசுவது இதன் தொடர்ச்சிதான்.

மக்கள் இத்தகைய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் செய்தி ஊடகங்கள் இவற்றைப் பிரசுரம் செய்கின்றனவா? அல்லது செய்தி ஊடகங்கள் தொடர்ந்து இதைச் செய்வதால் மக்கள் வேறு வழியின்றி இதை ஏற்கிறார்களா? முட்டையா கோழியா எது முதலில் வந்தது என்பதற்கு ஒப்பான கேள்வி இது. அண்மையில் நடந்த கரூர் விவகாரத்திலும் இதைக் கண்டோம். 

விஜய் பல்லு விளக்கினார், பாத்ரூம் போனார், பஸ் ஏறினார் என நொடிக்கொரு அப்டேட் வந்தது. இறப்பு எண்ணிக்கையைப் பார்த்தபிறகு, நாமெல்லாமே ஒரு வகையில் காரணம் என விளக்கமும் வந்தது. வீட்டில் கத்தரிக்காய் குழம்பு வைத்துக்கொண்டு டிவி பார்த்த, அலுவலக இடைவேளையில் யூட்யூபில் செய்தி பார்த்த அனைவரையும் குற்றவாளியாக்கிவிட்டனர் ஊடகவியலாளர்கள். லாபம் வந்தால் நிறுவனத்துக்கு, பழி வந்தால் மக்களுக்கும் பங்குண்டு.

சமூக வலைத்தளங்கள் ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் இக்காலத்தில் சாதாரண மனிதர்களும் புகழ் வெளிச்சம் பெறுகின்றனர். ஆனால் அவர்கள் கனவு சின்னத்திரை அல்லது வெள்ளித்திரையை எதிர்நோக்கியே இருக்கிறது. நாளடைவில் அவர்கள் சினிமா நட்சத்திரத்தின் துணைக்கோள்களாகவே மாறுகின்றனர். நெடிய மரபு கொண்ட செய்தி ஊடகங்கள் பின்னுக்குத் தள்ளப்படுவதைத் தவிர்க்க அவர்களும் சமூகவலைத்தள நீரோட்டத்தில் இணைகின்றனர். இன்னமும் தொலைக்காட்சி முக்கியமான சாதனமாக இருப்பதால் சினிமா நாயகர்களின் கவர்ச்சி பல ஆண்டுகளுக்குத் தொடரத்தான் செய்யும். 

தானும் கவரப்படுகிறோமா இல்லையா என்பதைக்கூட யோசிக்காமல் நாம் தனித்துவிடப்படுவோம் என்ற அச்சத்தில் கூட்டத்தோடு சேர்வது மானுடத்தின் தலையாய பண்புகளில் ஒன்று. (Fear of Missing Out – FOMO) அறிவியல், மானுடவியல், மனோதத்துவக் கோட்பாடுகள் பலவும் இதைப் பற்றிப் பேசுகின்றன. 

சாலமன் அஷ் பரிசோதனைகள் (Solomon Asch – Conformity Experiments 1951) மந்தை மனநிலை ஆய்வுகளில் முக்கியமானது. வெவ்வேறு அளவுள்ள கோடுகளைக் காண்பித்து குறைந்த நீளம் உள்ள கோடு எது என்கிற எளிய கேள்வி கேட்கப்படும். குழுவில் ஒருவர் மட்டும்தான் அப்பாவி. மற்றவர்களுக்குத் தவறான பதிலைத் தேர்ந்தெடுக்க அறிவுறுத்தப்பட்டிருக்கும். அதை அறியாத அப்பாவியின் கண்களுக்கு எது நீண்ட கோடு எனத் தெளிவாகத் தெரிந்தாலும் மற்றவர்களோடு ஒத்துப் போக எண்ணி அதைக் குறைந்த நீளம் கொண்ட கோடு என்று ஒப்புக்கொள்வார். இந்த ஆய்வில் மூன்றில் ஒரு பங்கு மக்கள், ஊரோடு ஒன்றி வாழ, தயக்கமின்றிப் பொய் சொன்னார்கள். முதலில் சரியான பதிலைச் சொன்னவர்கள் கூட மீண்டும் சிலமுறை கேட்டால் மாற்றிச் சொன்னார்கள். தன் முடிவின் மீது சந்தேகப்பட்டோ அல்லது யோசித்துப் பொய் சொல்லியோ கூட்டத்தோடு இணைந்தவர் 75 சதவிகிதம் பேர். 

பங்குச்சந்தையில் திடீர் விலைச் சரிவும் விலையேற்றமும் இந்த மனநிலையின் எதிரொலிதான். பொருளாதாரத்திலும் சமூகத்திலும் இந்த மனநிலை முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு அப்படியே எதிராக சும்மா இருக்கும் (Bystander effect) கூட்டமும் இருக்கிறது. கொலையே நடந்தாலும் எல்லாரும் வேடிக்கை பார்த்தால் நாமும் வேடிக்கை பார்ப்போம் என நிற்பார்கள். 

பழங்காலத்தில் பேண்ட்வேகன் எபெக்ட். இப்போது டிஜிட்டர் கன்பர்மிட்டி ( bandwagon effect, digital conformity). விதவிதமாகப் பெயர்கள் மாறுகின்றனவே ஒழிய விஷயம் ஒன்றுதான். கரூர் மரணங்கள் உணர்த்துவதும் அதைத்தான். அவரவர் வீட்டில் உரையாடல் நிகழ்வதும் அரசு விதிகளை வகுக்கப் பரிசீலிப்பதும் கரூர் நெரிசலின் நேர்மறை விளைவுகளில் சிலவாகும். 

எழுத்தாளனைக் கொண்டாடினால் பரவாயில்லை, கூத்தாடியைக் கொண்டாடக்கூடாது என்று ஒரு வாதம் வைக்கப்படுகிறது. கொண்டாடுவதற்கு அவரவர் சொந்த வாழ்க்கையிலேயே ஆயிரம் விஷயங்கள் உள்ளன. சுய மதிப்பையறிந்த ஒருவர் சக மனிதரையும் மதிக்கக் கற்றுக்கொள்கிறார். அடுத்த தலைமுறைக்குக் கற்றுக்கொடுக்கிறார். மனித இனமல்லாத சக உயிர்களையும் நேசிப்பது அடுத்த படி. உயிரற்றவற்றின் உரிமைகளை உணர்வது உச்ச நிலை. 

*

07/10/2025  அன்று மெட்ராஸ் பேப்பரில் பதிப்பிக்கப்பட்ட கட்டுரை.