‘பேட்டர்ன்’ மாறுமா?

2026ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பங்களாதேஷில் தேர்தல் நடப்பது உறுதியாகிவிட்டது. தேதியை இரண்டு மாதம் முன்னர் தேர்தல் ஆணையம் அறிவிக்கும். பங்களாதேஷ் உருவாகவும் அதன் பிறகும் எத்தனையோ புரட்சிகள் அந்நாட்டில் நடந்தன. பல ஆட்சிகள் கவிழ்ந்தன. தேர்தல்களும் நடந்தன. ஆனால் ஷேக் ஹஸினா ஆட்சி கவிழ்ந்த பிறகு நடக்கும் இத்தேர்தலில் தலைகீழ் மாற்றம் ஒன்று இருக்கிறது. பங்களாதேஷ் தனி நாடாகப் போராடிய அவாமி லீக் கட்சி தடை செய்யப்பட்டிருக்க, அதற்கு எதிராக இருந்த ஜமாத் இ இஸ்லாமி, தேர்தல் களத்தில் இருக்கிறது.

ஷேக் ஹஸினா பதவியைப் பறித்து அவரை நாட்டைவிட்டு வெளியேறி, ஓர் ஆண்டு முடிந்துவிட்டது. ஓராண்டில் என்ன மாற்றம் நடந்திருக்கிறது என்பது முக்கியமான கேள்வி. இடைக்கால அரசின் ஆலோசகராகப் பதவியேற்றுக்கொண்ட முஹம்மது யூனுஸ் சீர்திருத்தங்களை மேற்கொள்ள ஆணையம் அமைத்தார். அரசியலமைப்பு, தேர்தல் முறை, நீதித்துறை, காவல்துறை, ஊழல் தடுப்பு ஆணையம், பொது நிர்வாகம் ஆகிய ஆறு முக்கியமான துறைகளில் மாற்றங்களை பரிந்துரைக்கும் பணியை இந்த கமிஷன்கள் மேற்கொண்டன.

முப்பதுக்கும் மேற்பட்ட கட்சிகளின் கருத்துகளை இந்த ஆணையம் பெற்றுக்கொண்டது. நாற்பதுக்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடத்தப்பட்டு விவாதம் நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு துறையிலும் தேவைப்படும் சீர்திருத்தங்களுக்கான பரிந்துரைகள் எழுதப்பட்டன. அரசியலமைப்பில் 70, தேர்தல் நடைமுறைகளில் 27, நீதித்துறையில் 23, பொது நிர்வாகத்தில் 26, ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளில் 27 சீர்திருத்தங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகளுக்கு இவை அனைத்தும் விரிவான அறிக்கையாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. காவல்துறை சீர்திருத்தங்கள் என்னவென்று வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. இவற்றில் சில ஏற்கெனவே செயல்பாட்டுக்கு வரத் தொடங்கியாயிற்று. முக்கியமான 166 சீர்திருத்தப் பரிந்துரைகள் அனைத்து அரசியல் கட்சிகளின் ஒப்புதலுக்குப் பிறகே அமலுக்கு வரும்.

ஜூலை சாசனம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சீர்திருத்தங்கள் அனைத்தும் நடைமுறைக்கு வருவதை உறுதி செய்வோம் என்று நேஷனல் சிட்டிசன் பார்ட்டி கூறியுள்ளது. 2024ஆம் ஆண்டு ஹஸினா ஆட்சியைக் கவிழ்த்த ஜூலைப் புரட்சியை மேற்கொண்ட மாணவர்கள் உருவாக்கியுள்ள புதிய கட்சி இது. அப்போது நடந்த படுகொலைகளுக்கு நீதி வழங்கவேண்டும் என்பது இவர்கள் வலியுறுத்தும் விஷயங்களில் முக்கியமானது. 

ஜூலைப் புரட்சியை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்து ஜூலைப் பிரகடனம் ஒன்றும் வெளியிடப்பட்டது. ஓர் ஆண்டு நிறைவடைந்ததை ஒட்டி வெளியான இந்த ஆவணம், அப்போதைய அவாமி லீக் கீழ் இருந்த அரசியல் கட்டமைப்பை முற்றிலும் நிராகரிக்கிறது. சீர்திருத்தம் தேவை என்பதை உறுதி செய்து அதைப் பதிவு செய்கிறது இந்த ஆவணம். பங்களாதேஷ் தேசிய கட்சி, ஜமாத் இ இஸ்லாமி முதலிய பல கட்சிகள் இதை வரவேற்று ஆதரித்துள்ளன. 

அதே நேரத்தில் ஜூலை சாசனம் பரிந்துரைக்கும் சீர்திருத்தங்களுக்கு இப்படி ஒருமித்த கருத்துடன் வரவேற்பு இல்லை. அரசியல் கட்களின் அனைவரின் கருத்துகளுக்கும் முன்னுரிமை அளித்து அனைவரும் ஒப்புக்கொள்ளும்படியான சீர்திருத்தம் பரிந்துரைக்கப்பட்டால் ஒழிய இந்த முயற்சிக்கு அர்த்தமே இல்லை எனத் தெரிவித்துள்ளது ஜமாத் இ இஸ்லாமி. இந்தியாவில் இருக்கும் ஷேக் ஹஸினா, இதற்கெல்லாம் இடைக்கால அரசுக்கு அதிகாரம் கிடையாது என்று முற்றிலுமாக ஜூலை சாசனத்தை நிராகரித்துள்ளார்.

இந்நிலையில்தான் பிப்ரவரியில் தேர்தல் என்று அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த ஓர் ஆண்டு காலத்தில் பொருளாதாரச் சிக்கல்களில் பெரிதாக எந்த நல்லதும் நடக்கவில்லை. பங்களாதேஷின் முக்கியமான வருவாய் ஜவுளித் துறை ஏற்றுமதியால் வருகிறது. டிரம்ப் விதித்திருக்கும் வரியால் அந்தத் துறை மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளது. வேலையில்லாத் திண்டாட்டம் அப்படியேதான் இருக்கிறது. தன்னுடைய கிராமீன் வங்கி சார்ந்த நிறுவனங்களுக்குச் சாதகமாக யூனுஸ் நடந்துகொள்வதாகவும் சில குற்றச்சாட்டுகள் உள்ளன.

சட்டம் ஒழுங்குப் பிரச்சினை இன்னமும்கூட தீர்ந்தபாடில்லை. ஏதாவது பேரணி நடப்பதும் அங்கே கலவரம் மூள்வதும் வாடிக்கையாகிவிட்டது. ஹஸினா வெளியேறி ஓராண்டு நிறைவு பெற்றதைக் கொண்டாடும் பேரணியில் அவர் தொகுதி, சொந்த ஊர் போன்று அவர் ஆதரவு அதிகம் இருக்கும் இடங்களில் பலத்த எதிர்ப்பு எழுந்து காவல்துறை வந்து துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதுமட்டுமின்றி தொழிலதிபர்கள் படுகொலை செய்யப்படுவது தினசரிகளில் அவ்வப்போது செய்தியாக வருகிறது. 

சிறுபான்மையினரான இந்துக்கள் மீது மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தாக்குதல் நிகழ்வுகள் நடந்ததாக இந்தியா தெரிவித்துள்ளது. முன்பெல்லாம் இப்படிச் செய்திகள் வருகையில் எங்கள் நாட்டில் சிறுபான்மையினர் எந்தத் தொந்தரவும் இன்றி வாழ்கிறார்கள் என்று சில குரல்கள் வலுவாக பங்களாதேஷில் இருந்து எழும். இப்போதெல்லாம் நிலைமை வேறு. வங்க மொழி பேசும் இந்திய முஸ்லிம்களின் அடையாள அட்டையில் எழுத்துப்பிழை இருந்தால்கூட பங்களாதேஷி என அடையாளப்படுத்தும் நீங்கள் எங்கள் நாட்டைப் பற்றிப் பேசாதீர்கள் எனச் சீறுகிறார்கள். லால்மோனிர்ஹாட் விமானப்படைத் தளத்தை இராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தமாட்டோம் என டாக்கா உறுதியளித்ததாக இந்திய மக்களவையில் தெரிவிக்கப்பட்டது ஓர் ஆறுதல் செய்தி. பங்களாதேஷின் இந்த விமானப்படைத் தளம் சீனாவால் உருவாக்கப்பட்டது. 

இந்தியாவில் அடைக்கலமாகியிருக்கும் ஷேக் ஹஸினா அவ்வப்போது எதையாவது பேசி வைக்கும்போது இரு நாடுகளுக்கு இடையேயான உறவு அபாயகரமான எல்லைக்குச் சென்று திரும்பிவருகிறது. அவர் மீதான நீதித்துறை நடவடிக்கைகளை யூனுஸ் அரசு முடுக்கிவிட்டுள்ளது. டெவில் ஹன்ட் எனும் சிறப்புப் பெயருடன் ஒரு படை அமைக்கப்பட்டு வன்முறைச் செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அவாமி லீக் கட்சியினரைக் குறிவைத்தே இப்படை செயல்படுவதாகச் சொல்கிறார்கள் அக்கட்சியினர்.

காவல்துறையில் உயரதிகாரிகள் அரசுக்குச் சாதகமானவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் கடைநிலைப் பணிகளில் இருப்போர் ஹஸினாவுக்கு ஆதரவானவர்கள். இதனால் ஒருவிதமான ஒத்துழையாமைச் சூழல் இருப்பதாகச் சொல்கிறார்கள். காவல்துறை சீர்திருத்தங்கள் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டதும் எந்த மாதிரியான வரவேற்பு இருக்கும் என்பதை இப்போது சொல்வதற்கில்லை.

இச்சூழலில் பங்களாதேஷ் எதிர்கொள்ளப்போகும் தேர்தல் அதிமுக்கியத்துவம் பெறுகிறது. இடதுசாரி கருத்துகளில் சார்புள்ள அவாமி லீக் தேர்தலில் போட்டியிட முடியாது. புதிதாகத் தொடங்கப்பட்ட மாணவர்கள் அமைப்பான நேஷனல் சிட்டிசன் பார்ட்டி இடதுசாரிக் கொள்கைகள் கொண்டதாகத்தான் தெரிகிறது. ஆனால் இவர்கள் தீவிரமாக எதிர்க்கும் அவாமி லீக் கட்சியினரின் ஓட்டுகள் இவர்களுக்கு வர வாய்ப்பில்லை. நடுநிலை அல்லது மிகக் குறைந்த அளவிலான இடதுசாரி கருத்தாக்கம் கொண்டது பங்களாதேஷ் தேசிய கட்சிக் கூட்டணி. ஓரிரண்டு அடிப்படைவாத அமைப்புகளுடன் இவர்களுக்கு சகவாசம் உண்டு. இம்முறை, அடிப்படைவாத அமைப்பான ஜமாத் இ இஸ்லாமியுடன் இருந்து தங்களை தள்ளி வைத்து தேர்தலைச் சந்திக்கப்போகிறார்கள். பல்லாண்டு இடைவெளிக்குப் பிறகு ஜெய் (JeI) பங்களாதேஷ் என புதுத் தெம்புடன் தேர்தல் களத்துக்கு வருகிறது ஜமாத் இ இஸ்லாமி. 

ஒற்றுமையாக இணைந்து புரட்சி செய்து ஆட்சியைக் கவிழ்ப்பது. பின்னர் தங்களுக்குள் உள்ள வேறுபாடுகளை முன்வைத்துச் சண்டையிட்டுக்கொள்வது. ஆட்சிக்கு வருவது எந்தக் கட்சியாக இருந்தாலும் முந்தைய ஆட்சியைவிட மோசமாக ஜனநாயகத்தைக் கையாள்வது. பின்னர் அக்கட்சிக்கு எதிராக எல்லாரும் ஓரணியில் திரள்வது. ரிப்பீட்டு. பல காலமாக பங்களாதேஷ் வைத்திருக்கும் பேட்டர்ன் இது. அதில் இம்முறையாவது மாற்றம் வருமா எனக் காத்திருக்கிறார்கள் பங்களாதேஷிகள்.

*

12/08/2025  அன்று மெட்ராஸ் பேப்பரில் பதிப்பிக்கப்பட்ட கட்டுரை.