குற்றமும் தண்டனையும்

பொள்ளாச்சியில், பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய ஒன்பது குற்றவாளிகள் சாகும்வரை ஆயுள் தண்டனை பெற்றுள்ளனர். ஆளும் கட்சியும் முன்னர் ஆண்ட கட்சியும் நீதி நிலைநாட்டப்படத் தாங்களே காரணம் என அறிக்கைப் போர் நடத்துகிறார்கள். இவ்வழக்கை முடக்குவதற்கு நடந்த அத்தனை முயற்சிகளையும் எதிர்கொண்டு புகார் அளித்த பெண்களும், அவர்களுக்குத் துணையாகத் திரண்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளும் பொதுமக்களும் போராடிப் பெற்ற நீதி இது.

பத்தொன்பது வயதுப் பெண் ஒருவர், தனக்கு அறிமுகமான ஆண் நண்பர் சபரி ராஜன், தொலைபேசியில் அழைத்ததையடுத்து அவரைச் சந்திக்கச் சென்றார். முக்கியமான விஷயம் பேச வேண்டும் எனச் சொன்னதை நம்பி காரில் ஏறினார். காரை ஓட்டியது திருநாவுக்கரசு. வேறு சில ஆண்களும் ஏறியதைத் தொடர்ந்து கத்திக் கூப்பாடு போட ஆரம்பித்தார். அப்பெண்ணின் ஆடைகளைக் களைந்து வீடியோ எடுத்து அத்துமீறலில் ஈடுபட்டு அவரைப் பாதி வழியில் இறக்கிவிட்டனர்.

வீடியோவை வெளியிடுவோம் எனச் சொல்லித் தொடர்ந்து மிரட்டித் தங்கள் பாலியல் இச்சைகளுக்கு உடன்பட வலியுறுத்தினர். ஒரு கட்டத்தில் அப்பெண் தன் வீட்டில் தெரிவிக்க, சம்பந்தப்பட்ட நபர்களைத் தேடிக் கண்டுபிடித்து அடித்து உதைத்தார் அப்பெண்ணின் அண்ணன். செல்போன்களையும் கைப்பற்றினார். அதில் மேலும் பல வீடியோக்கள் இருந்ததையடுத்துக் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

2019ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி அளிக்கப்பட்ட புகார் மீது உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. முதல் தகவல் அறிக்கை பதியப்பட்ட நாள் பிப்ரவரி 24. அடுத்த நாளே புகார் கொடுத்தவரை அதிமுகவைச் சேர்ந்த ஒருவர் அடித்து, மிரட்டினார். இவ்வளவுக்கும் பிறகே விவகாரம் வெளியில் வந்தது. இருநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், பலர் முன்வந்து புகார் அளிக்க உந்துதல் தரும் வகையில் காவல்துறை செயல்பட்டிருக்க வேண்டும்.

நடந்தது முற்றிலும் வேறு. மார்ச் 1ஆம் தேதி எஸ்பி. ஆர். பாண்டியராஜன் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரைக் குறிப்பிட்டுத் தொலைக்காட்சியில் பேசினார். ஆளும் கட்சியில் பலம் பொருந்திய நபர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால் காவல்துறை வேண்டுமென்றே இப்படிச் செய்வதாகப் புகார்கள் எழுந்தன. இப்படிப் பெயரைக் குறிப்பிடுவது சட்டவிரோதம். எதிர்ப்பு எழுந்த பிறகும் மார்ச் 6ஆம் தேதி காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், கல்லூரி, வாழிடம் உள்ளிட்ட எல்லாத் தகவல்களும் சட்டவிரோதமாக இடம்பெற்றிருந்தன.

அண்ணா, பெல்ட்டால அடிக்காதீங்க அண்ணா எனக் கதறும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியூட்டியது. பொதுமக்கள் களத்தில் இறங்கிப் போராடத் தொடங்கிய பிறகே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதிமுக கட்சிப் பதவியில் இருந்த குற்றவாளிகளும் அவர்களுக்குத் துணையிருந்தவர்களும் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டனர். எஸ்பி ஆர் பாண்டியராஜனும் சில காவல்துறை அதிகாரிகளும் பணிமாறுதல் செய்யப்பட்டனர். தமிழ்நாடு முழுக்க மகளிர் அமைப்புகள் போராட்டங்களை நடத்தினர். பல கல்லூரி மாணவர்கள் நீதி கேட்டுப் போராடினர். குண்டர் சட்டம் பாய்ந்தது. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்பட எதிர்க்கட்சிக்காரர்களும் தீவிரமாகத் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். தேர்தல் நேரம் என்பதும் விவகாரம் உடனடியாக நீர்த்துப்போகாமல் இருக்க உதவியது.

இத்தனைக்கும் பிறகே இவ்வழக்கு சிபிஐ வசம் சென்றது. விசாரணையின்போது கைப்பற்றப்பட்ட மின்னணு சாதனங்களில் இருந்த நூற்றுக்கணக்கான வீடியோக்கள் குற்றத்தை நிரூபிக்க உதவின. அழிக்கப்பட்ட பிறகும் தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் இவை மீட்கப்பட்டுச் சாட்சிகளாகின. நாற்பதுக்கும் மேற்பட்டோர் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர். அனைவருமே பிறழ்சாட்கள் ஆகாமல் நீதி கிடைக்க ஒத்துழைத்தனர். பாதிக்கப்பட்ட பெண்கள் நூற்றுக்கணக்கில் இருந்தும் 8 பேர் மட்டுமே புகாரளித்து சாட்சியளிக்க முன்வந்தனர்.

மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கில் உறுதியான தீர்ப்பை வழங்க அதுவே போதுமானதாக இருந்தது. அனைவருமே குற்றவாளிகள் எனத் தீர்ப்பாகியுள்ளது. திருநாவுக்கரசு, மணிவண்ணன், இருவருக்கும் தலா ஐந்து ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சபரி ராஜன் நான்கு ஆயுள் தண்டனையும், சதீஷ், ஹெரோன் பால் தலா மூன்று ஆயுள் தண்டனையும் வசந்தகுமார் இரண்டு ஆயுள்தண்டனையும் பெற்றுள்ளனர். பாபு, அருளானந்தம், அருண்குமார் ஆகியோர் ஒரு ஆயுள் தண்டனை பெற்றனர். வழக்கை நீர்த்துப் போகச் செய்யப் பார்த்த  காவலர்கள் வேறோர் இடத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கும் உரிய தண்டனை கிடைப்பதை உறுதி செய்யவேண்டும்.

இக்குற்றம் பல ஆண்டுகளாக நடந்துவந்திருக்கிறது. தங்களுக்கு இழைக்கப்படும் அநீதியைத் தம் பெற்றோரிடம்கூட சொல்லத் தயங்கும் அளவில்தான் நாம் இன்னமும் பெண்களை வைத்திருக்கிறோம். அதைப் பற்றிய குற்ற உணர்ச்சி யாருக்கும் இருப்பதில்லை. சாலை விபத்தொன்றில் பாதிக்கப்படும் பெண்ணைப் பற்றிய தகவல்களை மூடி மறைத்து நீதிமன்றப் படியேறாமல் இருக்கிறோமா? ஆனால் பாலியல் துன்புறத்தலை வெளியே சொல்லத் தயங்குகிறோம். இது அவலமல்லவா? அபத்தமல்லவா?

இத்தகைய சம்பவங்களின்போதும், தீர்ப்புகளின்போதும் தவறாமல் ஒன்றை நாம் சொல்கிறோம் – ‘தண்டனை போதாது. குற்றவாளிகளைத் தூக்கில் போடுங்கள்.’

சற்று சிந்திக்கலாம். பதினைந்து வயதுக்கு மேற்பட்ட திருமணமான பெண்ணைக் கணவன் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினால் அது வல்லுறவல்ல என்கிறது ஒன்றிய அரசு தாக்கல் செய்த பிரமாணப்பத்திரம். பெண்ணைத் துன்புறுத்துவது யாரோ என்றால் மரண தண்டனை;  கணவன் என்றால் தவறே இல்லை!

இத்தகைய முரண்பாடான நிலைபாட்டை எடுக்கக் காரணம் பெண் உடல் சார்ந்த முற்றிலும் தவறான புரிதல் மட்டுமே.  பெண்ணின் உடலில் எந்தப் புனிதமும் இல்லை. அதை ஒப்புக்கொள்ளாதவரை இந்த இழிச்செயல்கள் குறையாது. கடுமையான விதிகள் அல்ல, விழிப்புணர்வே நீடித்த, நிரந்தரத் தீர்வுக்கு வழிவகுக்கும்.

*

14/05/2025 அன்று மெட்ராஸ் பேப்பரில் பதிப்பிக்கப்பட்ட கட்டுரை.