இந்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழ்நாட்டு மக்கள் பிரதிநிதிகளைப் பொய்யர்கள், நாகரிகமற்றவர்கள், ஜனநாயகமற்றவர்கள் என நாடாளுமன்றத்திலேயே சொல்லியிருக்கிறார். பேச்சு வேகத்தில் தெரியாமல் வந்த சொற்கள் அல்ல. ஒருமுறை சொன்னதோடு நிறுத்தாமல் மீண்டும் ஒருமுறை அழுத்திச் சொன்னார். எதிர்ப்பு எழுந்தபிறகு, தான் சொன்னதைத் திரும்பப் பெற்றுக்கொண்டார். மன்னிப்பு கேட்கவில்லை.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் தயாராக இருந்தது தமிழ்நாடு அரசு என்கிறார் தர்மேந்திர பிரதான். ஒப்பந்தத்தைப் பற்றிப் பேசி முடிவெடுக்கலாம் என முன்வருவதே புரிந்துணர்வு ஒப்பந்தம். அதில் கையெழுத்திடுவதால் எதையும் ஒப்புக்கொண்டதாக ஆகாது. ஆனால் இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் தமிழ்நாடு அரசு, பேச ஆரம்பிக்கலாம் எனச் சொல்லும் புரிந்துணர்வு ஒப்பந்தத்திலேயே திருத்தங்களை எழுதி அனுப்பிக் கையெழுத்திட மறுத்தது.
தமிழ்நாட்டுப் பிரதிநிதிகள் கையெழுத்துப் போட்டது, நிதியைப் பெற ஆர்வமாக இருக்கிறோம், புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் படித்துப் பார்க்கிறோம் என்றுதான். தான் அனுப்பிய புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாட்டு அதிகாரிகளால் திருத்தப்பட்டதைப் பற்றி ஆர்சர்யப்பட்டு தர்மேந்திர பிரதான் அனுப்பிய கடிதத்தில் அவரே இதைத் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் தவறான தகவலைப் பதிவு செய்தது மட்டுமன்றி, பிரச்சினையை திசைதிருப்பும் விதத்திலும், மரியாதைக் குறைவாகவும் பேசியிருக்கிறார். தான் சொல்வதை அப்படியே ஒப்புக்கொள்ளாமல் அதைத் திருத்துவதா என்கிற கோபமும் எரிச்சலும் மீண்டும் மீண்டும் அவர் பேச்சில் வெளிப்படுகிறது. தூண்டிவிட்டு நம் வாயில் இருந்து வார்த்தைகளைப் பிடுங்கும் விதமாகவே அவர் தொடர்ந்து பேசுகிறார். தமிழ்நாட்டு மக்கள் பிரதிநிதிகள் அவர் பொறுப்புக்கு மரியாதை கொடுத்து கண்ணியம் காக்கின்றார்கள். இந்தியப் பிரதமர் மோடி, தன் அமைச்சரவை உறுப்பினருக்கு அறிவுரை கூறி சரியாக வழிநடத்தாமல் வழக்கம்போல அமைதியாக இருக்கிறார்.
தங்கள் அரசியல் முயற்சிகளுக்கு வீழாத தமிழ்நாட்டு மக்களைப் பாரபட்சத்துடன் நடத்தி பாஜக வஞ்சிக்கிறது என, திமுக குற்றஞ்சாட்டுவதில் தவறொன்றும் இல்லை. தொகுதி மறுவரையறை செய்யும் காலக்கெடு வந்துவிட்ட நிலையில் இதிலும் தமிழ்நாட்டுக்கான அதிகாரம் குறைக்கப்படலாம் என அஞ்சுவதும் நியாயமே. பிராந்திய, மொழி அரசியலை கையிலெடுக்கிறார்கள் எனத் திமுக மீது பழியைப் போடுகிறார்கள்.
தமிழ்நாட்டில், ஆளும் திமுக அரசு மட்டுமன்றி, ஆட்சி நடத்திய, ஆள விரும்பும் கட்சிகளும், தமிழ்நாட்டு மக்களும் ஓர் அணியில்தான் நிற்கிறார்கள். சொல்லப்போனால் மொழி அரசியலை மீண்டும் கையிலெடுக்க இது சரியான சந்தர்ப்பம். இதற்கு முன்பு இருந்த எந்த ஒன்றிய அரசும் இவ்வளவு துணிச்சலுடன் அரசியலமைப்புச் சட்டம் மாநிலங்களுக்கு வழங்கிய உரிமைகளைப் பறித்ததில்லை. பணத்தைத் தர முடியாது என்று மிரட்டியதில்லை. வம்படியாக புதுப்புது விதிகளைத் திணித்ததில்லை.
இந்திய அரசுப் பணிகளுக்கு நடத்தப்படும் தேர்வுகளில் கூட இந்தி பேசாத மாநில மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான முதன்மைத் தேர்வுகள் எல்லா மொழிகளிலும் நடத்தப்படுகின்றன. ஆனால் அந்தத் தேர்வை எழுத ஒரு தேர்வு வைக்கிறார்கள். போட்டி அதிகம் இருக்கும் இடத்தில் வடிகட்டவேண்டியது அவசியம்தான். ஆனால் அப்படி வடிகட்டப்படுவது இந்தி பேசாத மாணவர்கள் மட்டுமே. ஏனெனில் இந்த வடிகட்டும் தேர்வு ஆங்கிலம், இந்தி என்ற இரு மொழிகளில் மட்டுமே இருக்கிறது.
ஆங்கிலத்தில் தேர்வை எழுதும் மாணவராகவே இருந்தாலும் கூட கேள்வியில் ஏதேனும் சந்தேகம் வந்தால் உடனடியாக தாய்மொழியில் இருக்கும் கேள்வியைப் பார்த்து எளிதாகப் புரிந்துகொள்ளமுடியும். ஒரு நொடிகூட வீணாக்க முடியாத அளவுக்குக் கடுமையான கேள்விகள் கொண்ட இந்தத் தேர்வில் இந்தி பேசாத மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தேர்வாவது இன்னும் கடினமாகிறது. அரசு அதிகாரத்தில் இவர்கள் நுழைவதைத் தடுப்பதன் மூலம் மிகப்பெரிய பாகுபாட்டைக் காட்டுகிறது இந்த அரசு.
கட்சி வேறுபாடு இன்றி தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் இதை எதிர்த்துப் போராடி மொழி அரசியலை இன்னும் உரக்கப் பேசவேண்டும். தமிழை ஆட்சிமொழியாக்க, போராட்டங்களை முன்னெடுக்கவேண்டும். சிபிஎஸ்ஈ பள்ளியாகவே இருந்தாலும் தமிழ்நாட்டில் தமிழ் கட்டாயம் என்பதை சட்டமாக்கவேண்டும். சில தினங்களுக்கு முன்பு தமிழ்ப் பாடத்தில் தேர்வாகாத ஒருவருக்கு தமிழ்நாட்டில் வேலை கேட்க உரிமை கிடையாது என்று நீதிபதி தீர்ப்பளித்திருந்தார். அரசாங்க வேலையில் நியமிக்கப்படும் நபர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், தமிழ் கற்றுக்கொள்ள, குறிப்பிட்ட அளவு காலக்கெடுவை தமிழ்நாடு அரசு விதிக்கவேண்டும்.
மொழி அரசியலை மற்ற எல்லா மாநிலங்களும் கையிலெடுக்கத் தொடர்ந்து பரப்புரை செய்வதையும் தமிழ்நாடு அரசு தன் பணிகளில் ஒன்றாகக் கொள்ளவேண்டும். மக்கள் செய்யவேண்டியதும் ஒன்றுள்ளது. அரசியல் கட்சிகளின் ஆதரவு, எதிர்ப்பு நிலைப்பாடுகளைப் பொதுமக்கள் பொருட்படுத்த அவசியமில்லை. யாரும் எப்படி வேண்டுமானாலும் மாறுவார்கள். மக்கள் எந்தச் சார்பும் இன்றிச் சிந்தித்தாலே மொழித் திணிப்பு கூடாதென்ற முடிவுக்கு வர முடியும்.
இந்தித் திணிப்பை ஆதரிக்கும் கட்சிகளைச் சார்ந்தோரை மக்கள் அபாய எச்சரிக்கையாகவே காண வேண்டும்.
*
12/03/2025 அன்று மெட்ராஸ் பேப்பரில் பதிப்பிக்கப்பட்ட கட்டுரை.
