பெண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றுள்ளது இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணி. வாழ்த்துகள்.
வெற்றிக் கொண்டாட்டத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான மித்தாலி ராஜ், ஜூலன் கோஸ்வாமி உள்ளிட்ட பலரையும் காணமுடிந்தது. உலகக் கோப்பையைக் கையில் வாங்கித் தலைக்கு மேல் உயர்த்திப் பிடித்த மித்தாலி, பேச முடியாத அளவுக்கு மகிழ்ச்சியில் இருந்தார். நன்றி என்பதைத் தவிர வேறெதுவும் சொல்லவில்லை. மற்ற சீனியர் வீரர்களுமே உணர்ச்சிகரமான மனநிலையில்தான் இருந்தனர். உண்மையில் நன்றிக்கு உரியவர்கள் அவர்கள் அனைவரும்தாம்.
மித்தாலி ராஜ் கேப்டனாக இருந்து வழிநடத்திய அணி, 2005ஆம் ஆண்டு பெண்கள் உலகக் கோப்பையில் ரன்னர் அப் ஆக வந்தது. அந்தப் போட்டிக்கு அவர்கள் பெற்ற தொகை மேட்ச் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய். அதுகூட அந்தப் போட்டித் தொடருக்கு மட்டும்தான். மற்ற ஆட்டங்களுக்கு அந்த ஆயிரம் ரூபாய்கூடக் கிடையாது.
ஆண்கள் கிரிக்கெட்டுக்குக் கிடைத்த வெளிச்சம் பெண்கள் கிரிக்கெட்டுக்குக் கிடைக்கவில்லை. பெண் கிரிக்கெட்டர்கள் போட்டிகளுக்காகச் செல்கையில் சாதாரண ரயிலில் பயணம் செய்தனர். அடிப்படை வசதிகள் அற்ற இடங்களில் தங்கி விளையாடினர். போதுமான உபகரணங்கள் இல்லாமலும் பயிற்சி எடுத்தனர். பல ஆண்டுகாலமாக மன உறுதியுடன் விடாமல் போராடியிருக்கின்றனர்.
2022ஆம் ஆண்டில் இந்தியக் கிரிக்கெட் வாரியம் பாலினப் பாகுபாடுகள் இன்றி அனைவருக்கும் ஒரே மாதிரி ஊதியம் வழங்கப்படும் என அறிவித்தது. பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த அறிவிப்பு போட்டிகளுக்கான ஊதியத்துக்கு மட்டும்தான். வீரர்களைத் தரம்பிரித்து வழங்கப்படும் ஊதியம், போட்டி எண்ணிக்கை, ஆண்டு ரீதியான ஒப்பந்தம் எனப் பல்வேறு விஷயங்களில் பாகுபாடு நீடிக்கத்தான் செய்கிறது.
தற்போதைய உலகக்கோப்பை வெற்றிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், இந்தியப் பெண்கள் அணிக்குக் கொடுக்கும் பரிசுப் பணம் சுமார் நாற்பது கோடி. இந்திய கிரிக்கெட் வாரியம் ஐம்பத்தொரு கோடி ரூபாய் பரிசு அறிவித்துள்ளது. பெரிய நிறுவனங்களும் பிராண்டுகளும் விளம்பர ஒப்பந்தங்களோடு வரிசையில் நிற்கின்றன. ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிரிதி மந்தனா, ஜெர்மியா, தீப்தி, ஷபாலி போன்ற இந்திய அணி வீரர்களின் மதிப்பு இருபத்தைந்து முதல் நூறு சதவிகிதம் வரைக்கும் அதிரடியாக உயர்ந்திருக்கிறது.
சில புள்ளி விவரங்கள் முந்நூறு சதவிகிதம் வரைக்கும் வருமானம் உயரும் எனத் தெரிவிக்கின்றன. இவ்வளவுக்குப் பிறகும் இந்தியாவில் கிரிக்கெட் விளையாடும் ஆண்களுக்கு நிகராக வராது பெண்களின் வருமானம். இடைவெளி கணிசமான அளவில் குறைந்துள்ளது எனலாம். இந்த முன்னேற்றத்தை அடைய பாதை அமைத்தவர்கள் சீனியர் பெண் கிரிக்கெட்டர்கள். கேப்டன் ஹர்மன்பிரீத் பேசும் போது, அஞ்சும் சோப்ரா, ஜூலன் போன்றோர் ஆதரவளித்து வழிகாட்டியதைக் குறிப்பிட்டார்.
இந்தப் பணப்பரிசுகள் தனிப்பட்ட சில பெண் கிரிக்கெட் வீரர்களை மட்டும் பணக்காரர்கள் ஆக்கும் என்றால் அதனால் எந்தப் பலனும் இல்லை. தற்போதைய பெண் கிரிக்கெட்டர்களும் முன்னாள் வீரர்களும் இணைந்து உழைத்தது, இந்தியாவின் ஏதோ ஒரு கிராமத்தில் உறுதியாக கிரிக்கெட் மட்டையைப் பிடித்துக் கொண்டு பிடிவாதமாகக் கனவு காணும் பெண்ணுக்காகவும்தான். இந்தியா முழுவதிலும் பயிற்சிக்கான வாய்ப்புகளை மேம்படுத்துவது, லீக் போட்டிகளைச் சிறப்பாக நடத்துவது போன்ற பல்வேறு வசதிகளைச் செய்வதில் இந்தியக் கிரிக்கெட் வாரியம் கவனம் செலுத்தவேண்டும். ஊடக வெளிச்சம் கிடைக்கும் கிரிக்கெட்டுக்கே இந்த நிலை என்றால் மற்ற விளையாட்டுகள் பற்றிச் சொல்லவே வேண்டாம்.
ஆணுக்கும் பெண்ணுக்குமான பாகுபாடு அதிகம் இருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆண் பெண் சமத்துவக் குறியீட்டில் 131ஆவது இடத்தில் இருக்கிறது இந்தியா. பாகுபாடு இருந்தாலும் கல்வி, வேலை போன்ற விஷயங்களில் அனுமதிக்கே போரட வேண்டியிருப்பதில்லை. ஆனால் விளையாட்டுக்கு அத்தகைய சலுகை கிடையாது. இந்த நாட்டில் விளையாட்டுத் துறையில் சாதிக்க நினைக்கும் பெண்கள் பல்வேறு தடைகளைத் தாண்டித்தான் களத்துக்கே வரவேண்டியிருக்கிறது.
நன்றாக விளையாடி வெற்றி பெற்ற இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணியினர் மட்டுமின்றி, கண்ணகி நகர் கார்த்திகா முதல் மித்தாலி ராஜ் வரை ஒவ்வொரு பெண் விளையாட்டு வீரர்களுக்கும் இத்தருணத்தில் நன்றியுரித்தாகுக.
*
05/11/2025 அன்று மெட்ராஸ் பேப்பரில் பதிப்பிக்கப்பட்ட கட்டுரை.
