ஊதியத்துக்கு ஏற்ற உழைப்பு

மார்ச் பதினெட்டாம் தேதி முதல் தொடர் போராட்டங்களில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு அரசு மருத்துவர் சட்ட ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது. மருத்துவர்களுக்கும், முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கும் சம்பள உயர்வு, நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர் எண்ணிக்கை அதிகரிக்க எனச் சில காரணங்கள் சொல்லப்பட்டுள்ளன. கடந்த வாரம் ஆசிரியர் சங்கம் விடுமுறைப் போராட்டம் என்று அறிவித்திருந்தது.

இம்மாதிரி அரசு ஊழியர்கள் அறிவிக்கும் போராட்டங்கள், பொதுமக்கள் ஆதரவினைப் பெற்றதாக என்றுமே செய்தி வெளியானதில்லை. அரசு மக்களுக்குச் செய்யும் நன்மைகள் அனைத்துமே அரசு ஊழியர்களின் வழியாகத்தான் மக்களுக்குச் செல்கின்றன. மக்களுடன் நேரடித் தொடர்பில் இருந்து சேவையாற்றி அவர்கள் நன்மதிப்பைப் பெறும் வாய்ப்பு அரசியல்வாதிகளைவிட அரசு அதிகாரிகளுக்கே அதிகம். 

ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை வந்து போகும் அரசியல்வாதி போலன்றி, பல ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றும் அரசு அதிகாரி மக்களில் ஒருவராக மாறிவிட வாய்ப்புகள் அதிகம். மக்கள் பிரச்சினைக்காகக் குரல் கொடுக்கும், தீர்வு காணும் நபராக இருந்தால் நிச்சயம் மக்கள் அவரைக் கொண்டாடுவார்கள்.  ஆனால் அப்படிப்பட்ட அரசுப் பணியாளர்கள் அரிதானவர்களே. 

மக்கள் பார்வையில் அரசு ஊழியர் என்பவர் கடமையைச் செய்யாமல் காலங்கடத்துபவர். தாமதமாகவேனும் கடமையாற்றக் கையூட்டு பெறுபவர். அலைக்கழித்து மன உளைச்சலுக்கு உள்ளாக்குபவர். கல்வி, மருத்துவம், காவல், பத்திரப்பதிவு என எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் ஒழுங்காகத் தன் பணியைச் செய்யாத அதிகாரிகளால், மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். அதனால்தான் அவர்கள் ஊதிய உயர்வு கேட்கும்போது மக்கள் அதிருப்தியடைகிறார்கள்.

ஓர் அலுவலகத்தில் பத்து பேர் பணியாற்றினால், நிச்சயமாக ஒரு சிலர் தம் பணியைச் சரியாகச் செய்யமாட்டார்கள். திறமையான, உதவும் குணம் கொண்ட ஓரிருவர் தலையில் அதிகச் சுமையை ஏற்றிவிட்டு மற்றவர்கள் வேலை செய்யாமல் சம்பளம் வாங்குவார்கள். தனியார் நிறுவனமானாலும், அரசு நிறுவனமானாலும் இதில் வேறுபாடில்லை. ஆனால் தனியார் நிறுவனத்தில் வேலை செய்யாதவரை எளிதில் பணி நீக்கம் செய்யமுடியும். அரசுப் பணியாளரைப் பணியைவிட்டு நீக்குவது அப்படி அல்ல. போக்குவரத்து சிக்னலில் உச்சி வெயிலில் நின்று கொண்டிருக்கும் காவலரும், தொடர்ந்து முப்பத்தாறு மணி நேரத்துக்கு மேலே நோயாளிகளை கவனிக்கும் மருத்துவரும் இருக்கும் அதே இடத்தில்தான் தங்கள் வேலையைச் செய்யாமல் ஏமாற்றும் அரசு ஊழியர்களும் இருக்கிறார்கள்.

வேலைக்குத் தேர்ந்தெடுப்பவரை திடீரெனப் பணியைவிட்டு அனுப்புவதைச் சரியென்று வாதிட முடியாது. ஆனால், அரசு கொடுக்கும் கணிசமான ஊதியத்துக்கு ஏற்ற பணியை எதிர்பார்ப்பது நியாயம்தானே. அதே அளவு சம்பளம் பெற தனியார் பணியில் இருப்போர் எத்தனை அதிகம் உழைக்கிறார்கள் என்று அறிவோம்தானே. அரசு வேலை பார்க்கும் போது ஊதியத்துடன் கிடைக்கும் இன்னபிற பலன்களுடன் பணி ஓய்வுக்குப் பிறகு இறக்கும்வரை ஓய்வூதியமும் உண்டு. இறந்தபின்பும் வாரிசுக்கு மாதாமாதம் பணம் கொடுக்கிறது அரசு.

இத்தனை அனுகூலங்கள் இருக்கும் அரசு வேலையில் சேரக் கடுமையாக உழைப்போர் வேலையில் சேர்ந்தவுடனே ஓய்வு பெற்றவர் போல நடந்துகொள்கிறார்கள். அரசு தாம் வேலைக்கு எடுத்த நபர்கள் மக்கள் பணியாற்றுவதை உறுதி செய்ய என்ன உத்திகளை வைத்திருக்கிறது? திறன் வளர்ப்புப் பயிற்சிகள், தேர்வுகள், மதிப்பீடுகள் என்று தொடர்ந்து செயலாற்றி, கொடுக்கும் சம்பளத்துக்கு அனைவருமே வேலை செய்வதை உறுதிப்படுத்த வேண்டாமா?

அரசு ஊழியர்கள் ஓட்டும் ஒத்துழைப்பும் அரசுக்குத் தேவை என்பதாலேயே அரசு அஞ்சுவதாக ஒரு தோற்றம் இருந்தது. புதிய ஓய்வூதியக் கொள்கையை மத்திய அரசு அறிவித்தபோது காங்கிரஸ், மாநிலத் தேர்தல் வாக்குறுதிகளில் பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டுவருவோம் என்பதை மறக்காமல் சேர்த்தது. பாரதிய ஜனதா கட்சியும் கொஞ்சம் பின்வாங்கி ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் என்று பெயர் வைத்து ஆணையம் அமைத்து சிலவற்றை மாற்ற முன்வந்தது. தொடர்ந்து தோல்வியைத் தழுவிய காங்கிரஸ் கடந்தாண்டு தன் வாக்குறுதிப் பட்டியலில் இருந்தே பழைய ஓய்வூதியத்தைத் தூக்கிவிட்டது.

தமிழ்நாடு அரசும் ஆணையத்தின் அறிக்கையை வைத்தே மத்திய ஓய்வூதியத் திட்டத்தை பின்பற்றலாமா வேண்டாமா என்று முடிவெடுக்கவுள்ளது. சரியாகப் பணியாற்றாத அரசு ஊழியர்கள் சிக்கலைச் சரிசெய்வதன் மூலம் அதிகச் சுமையோடு பணியாற்றும் நல்ல அரசு ஊழியர்கள் திறமை சரியான பாதையில் செல்லும். மக்களும் பலன் பெறுவார்கள். 

*

05/03/2025 அன்று மெட்ராஸ் பேப்பரில் பதிப்பிக்கப்பட்ட கட்டுரை.