முடிக்க விரும்பாத போர்

இஸ்தான்புல்லில் கூடிய ரஷ்யா உக்ரைன் பிரதிநிதிகள் தலா ஆயிரம் வீரர்களை விடுவித்து அனுப்ப ஒப்பந்தம் செய்துள்ளனர். இறந்து போன ஆறாயிரம் வீரர்களின் எச்ச மிச்சங்களும் நாடு திரும்பும். நாநூறு உக்ரைன் குழந்தைகள் கடத்தப்பட்டதாகச் சொன்னதே உக்ரைன், அவர்களில் பத்து குழந்தைகள் திரும்ப வருகிறார்களாம். போர் நிறுத்தம்? அதெல்லாம் பட்டியலிலேயே இல்லை.

சுமார் மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து ரஷ்யா உக்ரைன் போர் நடந்து வருவதை அறிவோம். முதலாம் ஆண்டு மேற்குலகின் ஆயுத உதவி கிடைத்ததால் உரிமை, விடுதலை என வீர வசனம் பேசிக் கொண்டிருந்தார் உக்ரைன் ​அதிபர். பேச்சு பெரிதாக இருந்தாலும் தொடர் வெற்றிகள் பெற்றதென்னவோ ரஷ்யாதான். பின்னர், உக்ரைன் பெற்றுக் கொண்டிருந்த ஆயுத உதவிகளில் ஏற்பட்ட தொய்வு போரிலும் பிரதிபலித்தது.

உக்ரைன் அதிபர் பிஸியாகவே இருந்தார். ஐரோப்பிய நாடுகளின் உதவியைக் கேட்டுக் கையேந்தினார். ஐநாவிடம் கோரிக்கை வைத்தார். உலக நாடுகளிடம் ஒப்பாரி வைத்தார். அமெரிக்காவுக்குப் போய் புதிய அதிபர் டிரம்பிடம் அவமானப்பட்டுத் திரும்பினார். அடடா, தன் நாட்டு மக்களுக்கு ஒரு விடிவுகாலம் வரவேண்டும் என்று இந்த மனிதர் எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறார் என மக்கள் நினைக்கும்படி சர்வதேச ஊடகங்கள் இவர் பின்னாலேயே சுற்றி செய்தி வெளியிட்டுக் கொண்டிருந்தன.

ரஷ்யாவின் அராஜகத்தை வெளிச்சமிட்டதில் எப்படியும் போர் நிறுத்தம் நோக்கிப் போகும் என்றும் மீட்புப் பணிகளைத் திட்டமிடுவார் எனவும் நினைத்தவர் எண்ணத்தில் ட்ரோனை அனுப்பிக் கலைத்திருக்கிறார் ஜெலன்ஸ்கி. ஒன்றரை ஆண்டுகளாக அவர் போட்ட திட்டம் ரஷ்யா மீது ஆகப்பெரிய தாக்குதல் ஒன்றை நடத்துவதுதான். 

ரஷ்யாவின் நான்கு விமானத் தளங்கள் மீது திட்டமிட்ட துல்லிய ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது உக்ரைன். உயிர்ச் சேதங்கள் இல்லையே தவிர ரஷ்யாவின் நாற்பதுக்கும் மேற்பட்ட முக்கியப் போர் விமானங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இதற்காக, ட்ரோன்களை ரஷ்யாவுக்குள் ரகசியமாகக் கடத்தி பெட்டிகளில் பதுக்கி வைத்துள்ளனர். சரக்குகளைப் போல இவற்றை டிரக்குகளில் ஏற்றி விமானத் தளங்களுக்கு அருகே கொண்டு சென்றுள்ளனர். தாக்குதலுக்கான கட்டளை வந்தவுடன் இந்தப் பெட்டிகளின் தானியங்கி மூடிகள் திறந்து ட்ரோன்கள் வெளியேறி இலக்கை அழித்திருக்கின்றன. 

விறுவிறுப்பான பின்னணிக் கதைகளுடன் இந்த ஆபரேஷன் ஸ்பைடர்ஸ் வெப் பற்றிய தகவல்கள் ஊடகங்களில் உலாவிக் கொண்டுள்ளன. மூன்றாண்டுகள் நடந்த போரே கதைதானோ என்று குழம்பிப் போயிருக்கிறது சர்வதேசச் சமூகம். மக்கள் இறக்கிறார்கள், குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள் என பதற்றத்தோடு உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்தவர்கள் போரைத் தீவிரமாக நடத்தக் காரணம் கொடுக்கும் உக்ரைன் செயலைப் புரிந்துகொள்ள இயலாத நிலை.

தற்காப்பு ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தவரை அனுதாபம் மட்டுமாவது இருந்தது. உக்ரைன் முழுவதுமாகச் சிதைந்துவிட்டதாகச் சொல்லப்படும் நிலையில் இப்படித் தீவிரத் தாக்குதல் நடத்துவது எவ்வகையிலும் அவர்களுக்கு நன்மை சேர்க்கப்போவதில்லை. இத்தாக்குதல் மூலம் பேச்சுவார்த்தையில் ரஷ்யாவை இறங்கி வர வைக்கப் போகிறோம் என்பதே உக்ரைன் தரப்பு விளக்கம். 

போரை நிறுத்த, பேச்சுவார்த்தை மேசையில் முன்னர் வைத்த அதே நிபந்தனைகளையே வைத்தது ரஷ்யா. மார்ஷியல் சட்டத்தைக் கைவிட்டுத் தேர்தல் நடத்த வேண்டும். நேட்டோவில் இணையும் நினைப்பைக் கைவிடவேண்டும். 2022ல் ரஷ்யாவால் பாதி கைப்பற்றப்பட்டு முழுதாக இணைத்துக்கொண்ட பகுதிகளை ஒப்படைக்கவேண்டும். இப்படி வரிக்கு வரி அதே பழைய பல்லவி. உக்ரைனும் தன்னிடம் இதற்கு எதிராக இருந்த மற்றொரு பல்லவியை எசப்பாட்டாகப் பாடியது. மீண்டும் ஜூன் 20, 30 தேதிகளில் பேசும் பரிந்துரையுடன் கலைந்தது போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக் குழு.

அந்தத் தேதியில் பரிமாற்றம் செய்துகொள்ள வீரர்கள் பட்டியலைத் தயார் செய்யப் போய்விட்டார்கள் இரு தரப்பு அதிகாரிகள். என்றைக்குமே வெல்ல முடியாத போர் என்பதை உக்ரைன் அறிந்தேதான் இருக்கிறது. இடையே டிரம்ப் பேசும் பேச்சுகள் வேறு நிலைமை எந்தப் பக்கம் மோசமாகும் என்பதைக் கணிக்க இயலாதவாறு இருக்கிறது. ஜெலன்ஸ்கியோ மீண்டும் மீண்டும் தான் புதினை நேரடியாகச் சந்திக்கத் தயார் என்கிறார். ரஷ்யா இவ்வளவு பெரிய தாக்குதலை எதிர்கொண்ட பிறகு உடனடியாக எதுவும் செய்யாமல் நிதானம் காக்கிறது. 

இக்காரணங்களால்தான் உக்ரைனின் அண்மைத் தாக்குதலானது, வல்லரசு நாடுகள் நடத்தும் பெரிய நாடகத்தின் ஒரு பகுதியைப் போலிருப்பதாகச் சந்தேகம் எழுப்புகிறார்கள் வல்லுநர்கள். நாடகத்தை முடிக்கும் சாத்தியமிருக்கிறதா என்பதும் உறுதியில்லை. மக்கள் மடிவதைப் பற்றி எந்தத் தலைவருக்கும் கவலையில்லை.

*

04/06/2025 அன்று மெட்ராஸ் பேப்பரில் பதிப்பிக்கப்பட்ட கட்டுரை.