நினைவுகளின் கண்காட்சி 

கண்காட்சியின் வாயிலில் இருந்தே ‘நான் சின்ன வயசுல இருந்தப்ப…’ என ஆரம்பித்துவிட்டனர் பெற்றோர். நுழைவாயிலின் ஒரு பக்கம் பழைய தொலைக்காட்சி, வானொலிப் பெட்டிகளும் மறுபக்கம் டால்டா டின், மைலோ டப்பாக்களும் அடுக்கியிருந்தன. சிறுவர்கள், தங்கள் பெற்றோரின் குழந்தைப் பருவத்துக்குள் நுழையும் வாயில் அது. பெரியவர்களோ குழந்தைகளாகவே மாறியிருந்தனர். ‘இந்த ஹார்லிக்ஸ் டப்பா பக்கத்துல நான் நிக்கிற மாதிரி ஒரு படம் எடுத்துக்குடு’ என ஆங்காங்கே நின்று படமெடுத்துத் தங்கள் திறன்பேசிகளில் நினைவுகளைச் சேகரித்துக்கொண்டிருந்தனர்.  எழும்பூர் அருங்காட்சியகத்தில் ஜூன் 19 முதல் 21 வரை நடந்த ஹாபிஸ் திருவிழாவில்தான் இந்தக் காட்சிகள். 

விருப்பமான பொருள்களைச் சேகரிக்கும் பழக்கம் சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரைக்கும்கூட நிறைய பேரிடம் இருந்தது. ‘உங்க ஹாபி என்ன?’ என்ற கேள்விக்கு, தபால் தலைகள், அரிதான நாணயங்கள் சேகரிப்பு என்பன போன்ற பதில்கள் வரும். இப்போது அந்தக் கேள்வியே அரிதாகிவிட்டது என்கிறார் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த எம்.எல்.ராஜேஷ். 

யாருக்குமே நேரம் இருப்பதில்லை. கைப்பேசி, கணினித் திரையிலோ தொலைக்காட்சித் திரையிலோ நம் நேரத்தைச் செலவிடுகிறோம். திரைகள் ஆக்கிரமிக்காத காலக்கட்டத்தில் தம் சேகரிப்புகளைத் தொடங்கியவர்கள் தாங்கள் சேகரித்ததை அன்று அங்கே காட்சிப்படுத்தியிருந்தனர்.

கவிழ்த்து வைத்த முக்கோணக் கம்பியின் மீது அமர்ந்திருக்கும் கோழிகள் மாறி மாறி தட்டில் உள்ளதைக் கொத்தித் தின்னும் பொம்மை. குரங்கின் கையில் காசு வைத்து முதுகில் உள்ள பொத்தானை அழுத்தினால் குரங்கின் வாய்க்குள் போய் விழும் உண்டியல் பொம்மை. குழந்தை, கார், பேருந்து, கப்பல் பொம்மைகள் முதலிய பல பொம்மைகளைக் காணமுடிந்தது. 

உலகப்போர் காலத்தில் செய்யப்பட்ட மடக்கும் மிதிவண்டிகள், மரத்தினாலான தமிழ் அச்செழுத்துகள், கல்மரம் உள்ளிட்ட அரிய கற்கள், பழைய பத்திரங்கள், ரூபாய் நோட்டுகள், இசைக்கருவிகள், ரயில்வே கால அட்டவணைகள், பூட்டுகள், ரயில் பொம்மைகள். தெரிந்த, தெரியாத பொருள்கள் எனக் கண்காட்சி அரங்கம் நிறைந்திருந்தது. தங்களுக்குத் தெரிந்தவற்றைக் காட்டிப் பிள்ளைகளுக்கு விளக்கிக் கொண்டிருந்தனர் பெற்றோர். தெரியாதவற்றை அரங்கத்தில் இருந்தோரிடம் விசாரித்துக்கொண்டனர். நோக்கியா பட்டன் போன் கூட கண்காட்சிப் பொருள் ஆகிவிட்டதா என்கிற அதிர்ச்சிக் குரல்களுக்கும் பஞ்சமில்லை. 

குழந்தைகள் இப்படி எதையாவது சேகரிக்க நினைத்தால் நிச்சயம் ஒத்துழைப்பு கொடுப்போம் எனச் சிலப் பெற்றோர்கள் வாக்குறுதி அளித்துக்கொண்டிருந்தனர். எப்படியாவது குழந்தைகளின் திரை நேரத்தைக் குறைக்கும் முயற்சி அது. திருவொற்றியூரிலிருந்து வந்திருந்த ஹரிணி தன் மகனை அழைத்து வந்ததன் காரணம் அதுவே என்றார். கண்காட்சி அரங்கில் இருந்த அனிதா ஜோஸ் போன்ற சிறுவர்கள் அந்த எண்ணத்துக்கு ஊக்கம் அளித்தனர். அனிதா காட்சிப்படுத்தியிருந்தது, ஆட்டின் கழுத்தில் கட்டும் மணி முதல் ஆஸ்திரேலியா மாட்டின் மணி வரை, விதவிதமான மணிகள். கோயில், தேவாலயம், பள்ளிக்கூட மணி என எல்லாமே இருந்தன. ‘எங்க பள்ளிக்கூடத்துல ரயில்வே தண்டவாளத்ததான் மணியா வச்சிருந்தாங்க’ என்றார் வேடிக்கைபார்த்த ஒருவர். விலைக்குக் கேட்டா தருவாங்களா என அடுத்த சேகரிப்புக்கு அடிபோடத் தொடங்கிவிட்டார் அனிதாவின் அம்மா. பள்ளி மாணவரான நித்யா பல்லாங்குழி போன்ற மரபான விளையாட்டுப் பொருள்களை மட்டுமே சேகரிக்கிறார். 

குடந்தை நாணயவியல் கழகத்தில் இருந்து வந்திருந்த செல்வி மரபுப் பொருள்களைச் சேகரிப்பதை ஓர் அமைப்பாகவே நடத்துகிறார். அவர் கணவர் ஆரம்பித்தது. அவர் மறைவுக்குப் பிறகு இவர் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். பழைய பள்ளிக்கூட நூல்கள், சொப்பு விளையாட்டுச் சாமான்கள், மரப்பாச்சி பொம்மைகளால் நிறைந்திருந்தது இவர் அரங்கம். வசதியான பெரிய வீடுகள் இடிக்கப்படும்போது இவர்களுக்குத் தகவல் சொன்னால் போதும். நேரில் வந்து அடுத்த தலைமுறைக்குச் செல்லவேண்டிய பொருள்களைச் சேகரித்துக் கொள்வார்கள். 

முன்னோர் நிச்சயம் ரசனையான வாழ்க்கையைத்தான் வாழ்ந்திருக்கின்றனர். வெற்றிலை வைக்கும் பெட்டிகளில்கூட அத்தனை நுட்பமான கைவேலைப்பாடுகள். தொழில்நுட்பமும் அட்டகாசம். அன்னத்தின் தலையைத் திருகினால் இறக்கை விரிந்து உள்ளே சுண்ணாம்பு, பாக்கு வைக்கும் இடம். அதை நகர்த்தினால் உள்ளே வெற்றிலைக்குத் தனியிடம். கார், ஜீப், மயில் என வெவ்வேறு வடிவங்களில் வெற்றிலைப் பெட்டிகள் இருந்தன ஓர் அரங்கில். பாக்கு வெட்டிகளைப் பார்த்து ரசித்துக்கொண்டே இருக்கலாம். வீடுகளில் காணப்படும் சிறிய அளவிலான பாக்கு வெட்டிகளுடன் தொழிற்கூடங்களில் பயன்படும் பெரிய பாக்குவெட்டிகளும் இருந்தன.

எம்ஜிஆர் தொடர்பான பொருள்களை மட்டுமே காட்சிப்படுத்தியிருந்த அரங்கில் இருந்தவர் சண்முக செல்வராஜ். வீட்ல இன்னும் நிறைய இருக்கு. இங்க இடமில்லன்னு இவ்ளதான் வச்சிருக்கோம் என்றார். அட்டைப் பெட்டிக்குள் இருந்து பழைய பாட்டுப் புத்தகங்களைக் காண்பித்தார். எம்ஜிஆர் சிறு கதாபாத்திரத்தில் நடித்த மீரா முதல் கடைசியாக நடித்த படம் வரைக்கும் எல்லாமே இருந்தன. 

தனிப்பட்ட நபர்களின் ஆர்வத்தின் அடிப்படையிலான சேகரிப்பு மட்டுமின்றி பழைய பொருள் சேகரித்து விற்பனை செய்யும் கடைக்காரர்களும் அரங்கம் அமைத்திருந்தனர். கடிகாரம் விற்பனை அமோகமாக இருந்தது. அதற்கடுத்து நாணயங்களும் தபால் தலைகளுக்கும் நல்ல வரவேற்பு இருந்தது. கலைப்பொருள்கள் அரங்குகளும் விலை விசாரிக்கும் வாடிக்கையாளர்களால் நிரம்பியிருந்தன. தென்காசியில் இருந்து வந்து செப்பு, வெண்கலப் பொருள்களைக் கடைவிரித்திருந்தார் இளைஞர் ஒருவர். எதைப்பற்றிக் கேட்டாலும் விளக்கம் சொல்லியதும், தங்களுடைய இன்ஸ்டா பக்கத்தில் முழு விவரமும் இருக்கிறது என்கிற விளம்பர வாசகத்துடன்தான் முடித்தார். தலைமுடியைச் சிக்கெடுக்கவென்றே ஏகப்பட்ட கம்பிகள் இருந்தன. கைவேலைப்பாடுகள் கொண்ட அழகிய அன்னம் கொண்ட சிக்கெடுக்கும் கம்பி எட்டாயிரம் ரூபாய் என்றார். குத்து விளக்கு, காமாட்சி விளக்கு, காளிங்க நடனமாடும் கண்ணனின் உருவம் பதித்த விளக்கு மாடம், பூஜை மணி போன்ற வழிபாட்டுப் பொருள்கள் நிறைய அவர் அரங்கில் இருந்தன. 

நகை வியாபாரம் செய்யும் சுப்பிரமணியன் அமைத்திருந்த அரங்கில் கலை ரசனையுடன் காது குடையும் பொம்மை ஒன்று இருந்தது. ஒவ்வொரு காலாகப் பிடுங்கினால் உள்ளே ரகசிய அறை ஒன்றிருக்கும் தவளை பொம்மை இருந்தது. அந்தத் தவளையைப் பிரிப்பதும் இணைப்பதும் சிக்கலான புதிர் விளையாட்டு போல இருந்தது. மற்றொரு தவளை பொம்மையின் முதுகில் குச்சி வைத்துத் தேய்த்தால் தவளை போன்றே சத்தமிட்டது. மரத்துண்டைச் செதுக்கிய விதத்தில் அந்த ஒலியை வரவைக்கிறார்கள். சில வெளிநாடுகளில் தவளைக் கறி உண்போர் தவளை வேட்டையாட இதைப் பயன்படுத்துவார்கள் என்றார் சுப்பிரமணியன். தவளை போன்று ஒலி எழுப்பி தவளைகளை அருகில் வரவைக்க உதவுமாம். 

வியப்பிலாழ்த்தும் மோதிரம் ஒன்றைக் காண்பித்தார். இதய வடிவம் உள்ள மோதிரத்தில் கடுகளவு ஓட்டை போன்று உள்ளது. அதில் உற்றுப் பார்த்தால் சிவனுடைய குடும்பப்படம் தெரிகிறது. பாம்பு, உடுக்கை, விநாயகர் உருவின் தும்பிக்கை, அடியில் இருக்கும் பெயர், தேதி உள்பட எல்லாமே அந்தக் கடுகளவு ஓட்டைக்குள் விரிகின்றன. பிரெஞ்சுக்காரர்கள் செய்த 180 ஆண்டுகாலப் பழைய மோதிரம் என்றார். பேப்பர் வெயிட்டுகள், பாக்கு வெட்டிகள் எனப் பலவிதமான பொருள்கள் அவர் அரங்கில் இருந்தன.

எப்போது தொடங்கியது இந்தப் பழக்கம் என்ற கேள்விக்கு, ‘பதினஞ்சு வயசுல தொடங்கிச்சு இந்தக் கிறுக்கு’ என்றார். கிறுக்குப் பிடிக்காமல் இருக்க இதுபோன்ற சேகரிப்பு வழக்கங்களைப் பழகிக்கொள்ளச் சொல்கிறது நவீன அறிவியல். இரண்டு கருத்துகளும் நாணயத்தின் இரு பக்கம் போல.

*

25/06/2026 அன்று இந்து தமிழ்திசை வாழ்வு இனிது பகுதியில் பதிப்பிக்கப்பட்ட கட்டுரை.