தமிழ் பிழைக்கட்டும் 

பிழையின்றி எழுதுவதில் கவனம் குவித்தால் இலக்கியம் படைக்க முடியாதெனும் நம்பிக்கை தமிழ்ச்சூழலில் உண்டு. இலக்கியம் படைக்காதவர்கள் மட்டுமாவது பிழையின்றி எழுத முயலலாம். இன்றைய சூழலில் தமிழில் பிழையின்றி எழுதுவது எளிதானதுதான். எனக்குத் தெரிந்த இரண்டு வழிகளை இங்கே குறிப்பிடுகிறேன். ஒன்று என்னைப் போன்றவர்களுக்கானது. மற்றொன்று நான் என் பணி அனுபவத்தில் அதிகம் எதிர்கொள்பவர்களுக்கானது. 

நாம் எந்த நிலையில் இருக்கிறோம், நம் தேவை என்ன என்பதைப் பொறுத்தே தீர்வுகளைத் தேடவேண்டும். 

நூறு விழுக்காடு பிழையே இன்றி எழுதும் நபரல்ல நான். ஆனால், இயல்பாகவே அரிதாகத்தான் என் எழுத்தில் பிழைகள் வரும். தமிழில் படித்து வளர்ந்தது என் பலம். எந்தத் தமிழ்ச் சொல்லுக்கு இணையாகவும் வேறு பல சொற்களை என்னால் எழுதமுடியும். எதையாவது எழுதும்போது சரிதானா என ஐயம் வந்தாலே வேறு சொல்லை மாற்றிடுவேன். அதற்கும் மிஞ்சி, நான் எழுத்துப்பிழையோடு ஒன்றை எழுதி யாராவது திருத்தினால் அதை அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ளமாட்டேன். 

வேர்ச்சொல் என்ன, என் நினைவில் அது எப்படித் தவறாகப் பதிவானது, இதற்கு முன்னர் இதே பிழையுடன் எழுதியுள்ளேனா என்றெல்லாம் ஆராய்வேன். செய்கின்ற பணியைத் திருத்தமாகச் செய்வதில் உள்ள ஆர்வம்தான் காரணம். ஏனோதானோவென்று எதையும் செய்வது எனக்குப் பிடிப்பதில்லை. இதனால் ஓர் எழுத்துப்பிழைக்குச் சில நிமிடங்களோ அல்லது மணிநேரங்களோகூட செலவிட்டிருக்கிறேன். இந்தச் செலவு மிகப் பயனுள்ளது. எது சரி என்பதோடு ஏன் சரி என்றும் அறிந்துகொள்வதால் மீண்டும் மீண்டும் அப்பிழையைச் செய்யாமல் தவிர்க்கமுடிகிறது. இதுவன்றியும் சில பிழைகள் வரும். வேகமாகத் தட்டும்போது விரல் இடறி வேறு எழுத்தைத் தொடுவதால் உண்டாகும் பிழைகள் அவை. தொழில்நுட்பக் கருவிகளின் உதவியை நாடுவதே இதற்குச் சிறந்த தீர்வு.

ஆங்கிலம் போன்று தமிழுக்கும் பிழை திருத்திகள் உள்ளன. தானாகவே யோசித்துத் தப்புத் தப்பாக உளரும் செயற்கை நுண்ணறிவுக் கருவிகளை நான் நம்புவதில்லை. பழங்கால முறைப்படி கணினி நிரல் எழுதி உருவாக்கப்பட்டுள்ள வாணி பிழைதிருத்தி, நான் பயன்படுத்தியவற்றில் சிறந்தது. எழுத்துப்பிழைகளைச் சுட்டுவதோடு ஆங்கிலச் சொற்கள், வடமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொல்லையும் பரிந்துரைக்கிறது. ஒற்றுப்பிழைகளையும்கூடக் காட்டுகிறது. 

நான் தனித்தமிழ் ஆர்வலரோ, அதிதீவிர ஒற்றுப்பிரியரோ அல்ல. படிக்கும்போது நாக்கு குழறாமல் இருக்கிறதா என்பதுதான் எனக்கு முக்கியம்.  எனவே வாணி தரும் பரிந்துரைகளைப் பெரும்பாலும் ‘வேண்டாம் போ’ எனத் தவிர்த்துவிடுவேன். ஆனாலும் எதை எழுதினாலும் ஒரு முறை வாணியில் போட்டுப் பார்க்கிறேன். வாணியில் உள்ள முக்கியமான சிக்கல், அது தமிழ் தெரிந்தவர்களுக்கானது என்பதுதான். 

என் பணியில் என்னிடம் வரும் எழுத்துப்படிகளில் பலவும் தமிழ் தெரியாதவர்களிடமிருந்தே வருகின்றன. அவர்களுக்கு வாணி பயன்படுவதில்லை. சில காலம் முன்பு நண்பர் பாண்டியராஜன் ‘கடற்கரையில் ஆறு மணிக்கு மேல் குழைய அனுமதியில்லை’ எனத் தான் கண்ட பதாகை வரியைப் பதிவிட்டிருந்தார். நுழைய அனுமதியில்லை என்பதைப் பிழையோடு எழுதியிருக்கலாம். அல்லது ஆறு மணிக்கு முன்னர் மட்டுமே குழைய அனுமதியுண்டு என்றும் பொருள் கொள்ளலாம். கலாசாரக் காவலர்கள் வேண்டுமானால் காதலர்கள் கடற்கரையில் குழைந்து பேசுவதைத் தவறெனலாமே தவிர, வாணி இதைத் தவறெனச் சொல்லாது. 

நம்மவர்கள் ல, ள, ழ அனைத்தையும் ஒன்றுபோலவே உச்சரிப்பதால் மனம்போனபோக்கில் எதையோ தட்டெழுதிவிடுகிறார்கள். தமிழில் ஒரே ஒலிப்பில் வெவ்வேறு பொருளுள்ள பல சொற்கள் உள்ளன. புதிதாகச் சொற்களை ஆக்குவதற்கான தெளிவான இலக்கண விதிகளுடன் இருப்பது தமிழ் மொழியின் சிறப்பு. இதன் காரணமாக எந்தச் சொல்லும் பொருளுள்ள சொல்லாக இருக்கும் வாய்ப்பு அதிகம். நமக்குத் தமிழ் தெரிந்தால்தான் அது நாம் நினைக்கும் பொருளா என நம்மால் அறிய முடியும். 

அன்றாட வாழ்வில் தமிழைப் புழங்காத பலருக்கும் இதுவோர் இடர்ப்பாடுதான். அவர்களுக்கு நான் பரிந்துரைப்பது முரசு அஞ்சல். தட்டெழுதும்போதே சொற்களைப் பரிந்துரைக்கிறது. அதுமட்டுமில்லை. Manam என்று தட்டும்போதே மனம் என்றால் உள்ளம், மணம் என்றால் வாசனை எனப் பொருள் விளக்கத்தோடு பரிந்துரைகள் வருகின்றன. அகராதி, விக்கிப்பீடியா எல்லாம் இணைந்திருப்பதால் மேலதிக விளக்கம் வேண்டும் என்றாலும் தட்டச்சு செய்யும் செயலியை விட்டு வெளியேறாமலே பார்க்கலாம். 

எனக்கு இதில் பிடித்த மற்றொரு வசதி, தவறான சொல்லைத் தவிர்க்கமுடியும் என்பதுதான். செயற்கை நுண்ணறிவுச் செயலிகள்கூட முயற்சிக்கிறேன் என்கின்றன. முயன்றேன் எனும் சொல்லை மீட்கும் முயற்சியில் வெற்றி கிட்டப்போவதில்லையோ எனத் தோன்றுகிறது. இதுபோன்ற சொற்களை முரசு அஞ்சலில் பட்டியலாகத் தந்து என் உரையில் வரவே கூடாது எனத் தடுத்திட இயலும். என்னைப்போல மனவேகத்தில் தட்டெழுதுபவர்களுக்கு இப்பரிந்துரைகள் தொந்தரவுதான். எப்படி வேலை செய்கிறது என ஆய்வுக்காக முயன்றதைத் தவிர நான் இப்பரிந்துரை வசதியைப் பயன்படுத்துவதில்லை. எனக்கு, வாணி பயன்பாடே கிட்டத்தட்ட ஒரு சடங்கு மாதிரிதான். 

இவ்விரண்டைத்தவிர, அவரவர் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு வழிகள் இன்றைக்குச் சாத்தியம். ஆனால் பிழையின்றி எழுதுவது பற்றிய ஆர்வத்தைவிட அலட்சியமே நம்மிடம் மேலோங்கியுள்ளது. அதுதான் உண்மையான சிக்கல். பிழைகளைக் கண்டதும் சிரித்துவிட்டுக் கடந்து போவதை நம் இயல்புகளில் ஒன்றாக வைத்திருக்கிறோம். பிழையற்ற தமிழின் தேவை முன்னெப்போதையும்விட இந்தச் செயற்கை நுண்ணறிவுக் காலக்கட்டத்தில் அவசியமாகிறது. 

நூவு என்றால் எள். நூவு என்ற வினைச்சொல்லுக்கு நீர் பாய்ச்சுதல் என்றும் பொருள் உண்டு. திருமந்திரத்தில் இடாக் கொண்டு நூவி எனத் தொடங்கும் பாடல் இருக்கிறது. இதைக் கணினியில் தட்டெழுதும்போது தூவி என்று யாரோ மாற்றியுள்ளனர். இணையத்தில் பல தளங்களில் இச்சொல் தவறாகவே பதிவாகியுள்ளது. அச்சுப்பதிப்பில் பார்த்தால் நூவி என்றே உள்ளது. ஆனால் இனிமேல் இது அச்சில் வந்தால் புதிதாகத் தட்டச்சு செய்வதற்குப் பதிலாக இணையத்தில் உள்ளதையே எடுத்துக்கொள்வர். அதில் உள்ள தூவி என்ற சொல்லே நிலைத்துவிடும். 

“குநழ்யும்” என கூகுளில் தேடிப் பாருங்கள். நூற்றுக்கணக்கான வலைப்பக்கங்களில், நோக்கக் குநழ்யும் விருந்து என்று பிழையோடுதான் பதிவாகியுள்ளது. சொல்வளம் செயலிக்கான பணிகளில் இதுபோன்ற பல சொற்களை அடையாளம் காணமுடிகிறது. ஒருமை, எழுமை, பொறையுடைமை போன்ற பல்வேறு ஐகாரச் சொற்களும் பிழைகளோடு உள்ளன. பிழையுள்ள தரவுகளைக் கொண்டு செயற்கை நுண்ணறிவு மொழிமாதிரிகள் உருவாக்கும் உள்ளடக்கங்கள் மேலும் அதிகப் பிழைகளோடுதான் இருக்கும். நாம் செய்வது வெறுமனே எழுத்துப்பிழை அல்ல, தரத்தைக் குறைக்கிறோம். தரவுகளின் தரத்தை, தமிழின் தரத்தை, நம்முடைய தரத்தையும்கூட.

பயிற்சி யாதொன்றையும் செம்மையாக்கும். ஆனால், பிழையாகவே பயிற்சி செய்தால் தவறாக ஒன்றைச் செய்வதில் திறமையாளர் ஆவோம். நம் தரம் என்னவென்பதை நாம்தான் முடிவு செய்கிறோம். எழுதும் ஆர்வம் கொண்டோர் பிழையின்றி எழுதுவதை இலக்காக வைத்து முயன்றால் முடியும். தவறாகப் ‘பயிற்சிக்காமல்’ இருந்தால் தமிழ் பிழைக்கும்.