தேவை சிறிது நிதானம்

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. அவற்றில் முதன்மையானது, இந்தியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் வெளிநாட்டினரை வெளியேற்றுவது. 

மாநில அரசுகள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில், அடையாள அட்டை இல்லாதவர்களைத் தீவிரமாகத் தேடுகிறார்கள். பங்களாதேஷிகள் எல்லை கடந்து இந்தியா வந்து வேலை செய்வது வாடிக்கையாக நடப்பதுதான். அதைத் தடுப்பதற்கென்றே இரு தரப்பிலும் பாதுகாப்புப் படையை வைத்திருக்கிறார்கள். எனினும் நீண்ட நெடிய சிக்கலான எல்லைப் பகுதி என்பதால் ஊடுறுவுவது எளிது. 

இம்மக்கள் உத்திரப்பிரதேசம், குஜராத், டெல்லி எனப் பல இந்திய மாநிலங்களில் பரவி இருக்கிறார்கள். பலரிடம் இந்திய ​அடையாள அட்டைகூட இருக்கிறது. அடையாளம் காண்பதும் வெளி​​யேற்றுவதும் எளிதான செயல் அல்ல. இந்தியாவின் பாதுகாப்பு கருதி ஒன்றிய அரசு தற்போது வெளியே தள்ளும் செயல்பாட்டில் முனைப்பாக இருக்கிறது.

இந்திய அடையாள அட்டை மட்டுமன்றி, இந்தியா, பங்களாதேஷ் என இரு நாட்டு அடையாள அட்டையுடன், ரோஹிங்யா அடையாள அட்டையுடன் எனப் பல விதங்களில் மக்களைப் பிடிக்கின்றன மாநில அரசுகள். தடுப்புக் காவலில் வைப்பதே வழக்கமான நடைமுறை. உரிய நாடுகளுடன் பேசி அவர்களைத் திருப்பி அனுப்ப ஏற்பாடு செய்வார்கள். இதற்கு அதிகக் காலம் எடுத்துக்கொள்ளும். பாஜக அரசு எதிலும் மாறுபட்ட போக்கினைக் கடைப்பிடிக்கும் வழக்கம் கொண்டுள்ளது. இதுவும் விதிவிலக்கல்ல.

பிடிபடும் நபர்களை இந்திய விமானப்படை விமானத்தில் ஏற்றி பங்களாதேஷில் இறக்கிவிடுகிறது. மே, 25ஆம் தேதியன்று உத்திரப்பிரதேச மாநிலத்தின் காஸியாபாத்தில் இருந்து பங்களாதேஷின் அகர்தாலாவுக்கு 160 பேரை அனுப்பிவைத்தது. மே 17ஆம் தேதியன்று ராஜஸ்தானிலிருந்து 140 பேரை அனுப்பியது. மே 4ஆம் தேதி 300க்கும் மேற்பட்டோர் சென்றனர். அதில் 200க்கும் அதிகமானோர் பெண்களும் குழந்தைகளும். 

ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காம் தாக்குதல் நடந்ததும் மறுநாளே 80 பேரை டெல்லியில் இருந்து ரயில் மூலம் கொல்கத்தா அனுப்பி வைத்தனர். கொல்கத்தா போலிஸ் இவர்களை பங்களாதேஷ் எல்லையில் கொண்டுவிடவேண்டும் என வெளியுறவுத் துறையிடம் இருந்து உத்தரவும் வந்தது. இந்தியப் பகுதிக்குள் பங்களாதேஷ் நிலம் கொண்ட என்கிளேவ் எனப்படும் பகுதிகளில் விட்டு ‘வெளியே தள்ளுதல்’ நடைமுறையில் எளிதும்கூட.

முறையான பேச்சுவார்த்தைகள் இன்றி இந்தியா முடிவெடுத்து இப்படிச் செய்வதைக் கடுமையாக எதிர்க்கிறது பங்களாதேஷ். இந்தியா தங்களுக்கு வேண்டாதவர்களை அண்டை நாட்டின் ‘உள்ளே தள்ளுதல்’ சர்வதேச விதிகளுக்கு எதிரானது என்பது பங்களாதேஷின் வாதம். இந்தியா, தங்கள் நாட்டின் உள்ளே தள்ளி விட்டவர்களில் ரோஹிங்யா முஸ்லிம் அடையாள அட்டையுடன் இருந்தவர்கள் உள்பட தங்கள் குடிமக்கள் அல்லாத பலர் இருக்கின்றனர் என்கிறது. அதோடு நோயுற்றவர், முதியவர், பெண்கள், குழந்தைகள் எனப் பலரை என்கிளேவ் பகுதிகளில் வெளியே தள்ளி இந்தியா மனிதாபிமானமற்ற முறையில் நடக்கிறது என்பதும் பங்களாதேஷின் குற்றச்சாட்டு.

இந்திய வெளியுறவுத் துறை, மே 22ஆம் தேதியன்று இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பங்களாதேஷிகளின் அடையாளத்தைச் சரிபார்க்கக் கோரி பங்களாதேஷிடம் கேட்டிருந்தது. சட்டப்படி பங்களாதேஷில் இருந்து உள்ளே வந்திருப்பவர்களை நாங்கள் எதுவும் செய்யவில்லை, இவர்கள் சட்டவிரோதமாக உள்ளே நுழைந்தவர்கள் என்பதால் இந்த நடவடிக்கை என்கிறது இந்தியா. 

அடையாளம் சரிபார்ப்பு என்பது சமயங்களில் ஆண்டுக்கணக்கில் நீளும் விவகாரம். பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா விரைந்து நடவடிக்கை எடுப்பதைக் குறை கூறுவதற்கில்லை. எனினும் இரண்டு விஷயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும்.

முதலாவது, சட்டவிரோதமாக உள்ளே வந்தவர்கள் என்றாலும் மனிதாபிமானத்துடன் நடத்தியாக வேண்டியது நமது கடமை. முஸ்லிம்களை மட்டும் ​வெளியேற்றும் மறைமுக அஜென்டாக்கள் இன்றி இந்தியப் பாதுகாப்பு நடவடிக்கையாக மட்டுமே இருப்பதை உறுதி செய்தல் வேண்டும்.

இரண்டாவது விஷயம் ராஜாங்க ரீதியான தீர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது. சீனாவுக்கும் இந்தியாவுக்கும் நல்ல உறவு இல்லை. பஹல்காம் தாக்குதலால் இந்திய மக்களேகூட பாகிஸ்தான் மீது கோபத்தில் இருக்கிறார்கள். அரசைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். போர் தவிர்க்கப்பட்டதே பெரிய விஷயம். இந்நிலையில் பங்களாதேஷ் உடன் இருக்கும் உறவை இன்னும் பக்குவமாகக் கையாளுதல் அவசியமல்லவா.

பங்களாதேஷில் தற்போது இருக்கும் முஹமது யூனுஸ் இடைக்கால அரசுடன் இந்தியாவுக்குச் சாதகமான உறவு இல்லை. அங்கே ராணுவத்துக்கும் அரசுக்கும் இடையில் பூசல் என்றும் செய்தி வந்தது. கடந்த வாரம் ரோஹிங்யா முஸ்லிம்களுக்காக ராகினி மாநிலத்தை ஒதுக்கிக் கொடுத்திடலாம் என்பது போல ஒரு கருத்தாக்கம் யூனுஸ் தரப்பில் இருந்து வந்தது. ராணுவம் அ​தைக் காட்டமாக நிராகரித்தது. அரசுக்கும் ராணுவத்துக்கும் ஒத்த கருத்தில்லை என்பது சர்வதேசச் செய்தியானது.

பின்னர் ராணுவம் அதை மறுத்து செய்தி வெளியிட்டது. தேர்தல் நடக்கும் முன்பு பிரதானக் கட்சியான ஷேக் ஹஸினாவின் அவாமி லீக்கை தடை செய்துவிட்டார்கள். கட்சியைக் கலைத்தாலும் தொண்டர்கள் அங்கேதான் இருக்கிறார்கள். எந்நேரம் என்னாகுமோ என்கிற நிலையில் இருக்கும் பங்களாதேஷில் இந்தியாவின் உள்ளே தள்ளும் நடவடிக்​கை என்ன விளைவுகளையும் ஏற்படுத்தும். இப்போதே ராணுவத்தை எல்லையில் நிறுத்துவோம் என்கிறார்கள். 

எடுத்தேன் கவிழ்த்தேன் எனச் ​செய்துவிட்டுப் பின்னர் அமெரிக்க அதிபர் பஞ்சாயத்து செய்து நல்ல பெயர் வாங்குவதில் போய் முடிவது சர்வதேச அரங்கில் இந்தியாவின் நன்மதிப்புக்கு அழகல்ல. சர்வதேச அரங்கில் இந்தியத் தரப்பு நியாயங்களை எடுத்து வைக்க ஒரு குழுவை அனுப்பியுள்ளது இந்திய அரசு. ஆதாரங்களோடு குற்றச்சாட்டுகளை அடுக்குவதும் இந்தியாவுக்கு பலம் சேர்க்கும். இம்மாதிரி ராஜாங்க நடவடிக்கைகள் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட உதவும்.

*

28/05/2025 அன்று மெட்ராஸ் பேப்பரில் பதிப்பிக்கப்பட்ட கட்டுரை.