நீண்ட நாள்களுக்கு ஒன்றில் உற்சாகத்தைத் தக்கவைப்பது எனக்குச் சவாலான ஒன்றாயிருக்கிறது. சென்னையிலிருந்து கிளம்பி செங்கல்பட்டு தாண்டியதுமே கொடைக்கானல் எப்போ வரும் எனக் கேட்கும் குழந்தை போலாகிவிடுகிறேன். கடந்தாண்டு நூறு நாள்களுக்கு தமிழ்சொல்லும் பொருளும் எழுதிக்கொண்டிருந்ததை பேஸ்புக் நினைவூட்டியது. அதைப் பார்த்ததுமே மீண்டும் அப்படிச் செய்யலாமா எனத் தோன்றியது. அகராதியைத் திறந்து ஏதோ ஒரு பக்கத்தில் தெரியும் சொற்களில் ஒன்றை எழுதியதால் நான் அறிந்திராத பல சொற்களைக் கற்றுக்கொண்டேன். நல்லனுபவம் அது.
இப்போதும் என் மேசையில் அகராதி இருக்கிறது. செய்து கொண்டிருப்பதும் சொல் தொடர்பான வேலைதான். செய்கின்ற வேலையை விட்டுவிட்டுப் பின்னணியை ஆராயத்தூண்டி நேரத்தை விழுங்கும் சொற்களை மனத்தில் குறித்துக்கொள்வதுண்டு. பேஸ்புக் மெமரி காட்டியதும் இந்தக் குறிப்புகளை அன்றாடம் எழுதலாமா என நினைத்தேன். அதையொட்டிய சிந்தனையில் உதித்ததுதான் முதல்வரி.
இதுபோன்ற சமயங்களில் நமக்கு ஏதாவது மனச்சிக்கலா என ஐயம் எழும். அப்போதெல்லாம் இளைய தலைமுறையினர் சொல்லகராதியைப் பார்வையிடுவேன். அனைத்துக்கும் விதவிதமாக மாற்றுக் கோணத்தில் பெயர் வைத்துள்ளனர்.
லாங்டைம் கமிட்மென்டுக்குத் தயாராக இல்லையோ என என் தலைமுறை அஞ்சும் ஒன்றை இன்றைய தலைமுறை ஹஸில் கல்சர் எனப் புறங்கையால் தள்ளிவிடுகிறது. சில மாதங்கள் வேலை பார்த்தாலே பர்ன்அவுட் ஆகிவிட்டேன் என்கிறார்கள். பெயர் அறியாவிட்டாலும் நம்மில் பலர் கொயட் குவிட்டிங் செய்துகொண்டுதானிருந்தோம், இருக்கிறோம். மைக்ரோ ரிட்டயர்மென்ட், சைட் குவெஸ்ட் எல்லாம் நல்ல தீர்வுகள்தான். நான் முன்னர் செய்த நூறு நாள் நூறு சொல் என்பதே சைட் குவெஸ்ட் வகையறாதான். ஆனால் அது லாங்டேர்ம். எனவே இம்முறை குறுகியகாலமாக அடுத்த முப்பது நாள்களுக்கு மட்டும் குறிப்புகள் எழுதுகிறேன்.
சென்-சி அகராதி
Hustle Culture – The lifestyle of working excessively hard with no rest.
Burnout – Extreme physical and mental exhaustion caused by continuous work stress
Quiet Quitting – Doing only the bare minimum required for a job.
Micro-retirement – Taking short career breaks to recharge before returning to work.
Side Quest – A temporary, meaningful project done alongside your main job.
Long-term Commitment – A dedicated promise to stay involved with something for a long duration.
Short-term Commitment – A focused dedication to a task for a brief and defined period.
#30daysTamilwords❤️
*
இகந்த – கடந்த; தாண்டிய
மூலமும் அறனும் முதன்மையின் இகந்த காலமும் விசும்பும் காற்றோடு கனலும் …
முதன்மையைத் தாண்டிய காலமாகத் திருமாலைப் புகழ்கிறது இந்தப் பரிபாடல் வரி. தற்காலப் பயன்பாட்டில் எங்காவது இருக்கிறதா எனத் தேடிப்பார்த்தேன். தமிழ்நாடு பாடத்திட்டத்தில் இயற்கை இகந்த நிகழ்ச்சிகள் என்றுள்ளது. தொன்மத்தில் இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளைக் குறித்தானது இது. நடுநிலை இகந்த, அன்பிகந்த என்றுகூட எடுத்தாளலாம். நேர்மறை, எதிர்மறை என இருவகையிலும் பயன்படுத்தத்தக்க சொல்.
*
அணியிழை – மெல்லிய நகைகளை அணிந்த பெண்
அணி, இழை இரண்டுக்குமே பெண் என்று பொருளில்லை. இரண்டும் இணைந்து இல்லாத வேறு ஒரு பொருளினைக் குறிப்பதை அன்மொழித் தொகை என்கிறது தமிழ் இலக்கணம். நேரிழை, வாங்கிழை, ஒளியிழை எனப் பல சொற்கள் இப்படியுள்ளன.
இழை என்றால் நகை, மெல்லிய கம்பியால் ஆன ஆபரணம். நேர்த்தியான, ஒளிபொருந்திய என முன்னொட்டாக இருக்கும் சொல்லைப்போல் எதோ ஒரு நகையை அணிந்த பெண் என்று பொருள். இதில் ஒளியிழையை அறிவியல் கலைச்சொல்லாக மாற்றிவிட்டோம். ஆப்டிக்கல் ஃபைபர், கண்ணாடியிழை என்கிற பொருளில் பயன்படுத்துகிறோம். (இல்லை, இதைக் கண்டுபிடித்தவர் பெண் இல்லை, அவர் மதுரையைச் சேர்ந்தவரும் இல்லை.)
சரி, ஆண்களுக்கு இப்படி ஏதாவது இருக்கிறதா எனத் தேடினேன். பொற்தார் என்பன போன்ற சொற்கள் உள்ளன. பொன்னாலான மாலையை அணிந்த தலைவன் அல்லது அரசன் என்று பொருள். ஆண்கள் கிலோ கணக்கில் தங்கச்சங்கிலி அணிவது அக்காலத்திலேயே இருந்துள்ளது போலும்.
*
இகல் – பகை; போர்; மாறுபாடு; வலி
குறள்கள் அல்லாது இச்சொல் வரும் பழைய பாடல்களைக் கேட்டேன் ஜெமினியிடம்.
“நிலம் புடைப் பெயர்வது ஆயினும், ஒரு பால் இகல் மீக்கூறாது…”
இதைக் கொடுத்து புறநானூற்றுப் பாடல் என்றது. நிலமே பெயர்ந்தாலும் மக்கள் பகையின்றி வாழ்வது பற்றிய இவ்வரிகளின் பொருள் ஆழமானதெனத் தோன்றியது. ஏஐ அலூசினேஷன் அல்ல என்பதை உறுதி செய்ய, புறநானுற்றுப் பாடல்களை ஆராய்ந்தேன். அங்கே போனால் “நன்றியை மறந்தவர் தப்பிக்கே வழியே இல்லை” என அறங்கூறும் பாடல் அது. வழக்கம்போல இட்டுக்கட்டிச் சொல்லியிருக்கிறது ஜெமினி. தனியாக வேலை செய்யும்போது பேச்சுத் துணைக்கு இருக்கிறதே எனப் பார்த்தால் இல்லாத ஒன்றை இருப்பது மாதிரியே உருவாக்கித் தரும் வள்ளல் குணத்துக்கு அளவில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.
*
ஆகாறு – செல்வம் வரும் வழி
வருவாய், வரும்படி, வரத்து எனச் செல்வம் நமக்கு வந்து சேர்வதைக் குறிக்கும் பலச் சொற்கள் உள்ளன. சம்பாதித்ததல் என்கிற சொல்லைப் பயன்படுத்துவேன் என்றாலும் முயன்று சேர்த்தல், உழைத்துத் தேடுதல் என்பதாகப் பொருள் தரும் ஈட்டுதல் என்ற சொல் என்னை ஈர்க்கும். ஆகாறு என்ற சொல் வரும் குறளில் செல்வம் போகும் வழியைக் குறிக்கும் போகாறு என்கிற சொல்லும் உள்ளது. குறள் சொல்லும் ஆழமான தத்துவத்தை வரவு எட்டணா செலவு பத்தணா என எளிமையாக்குகிறது சொலவடை.
*
எட்பகவு – எள்ளின் பிளவு
எள்ளே சிறியது. அதையும் பிளந்து ஓர் அளவீடாகச் சிந்தித்துள்ளனர். கடுகும் சிறிய அளவைக் குறிக்கப் பயன்படுகிறது. என்னைப் பொறுத்தவரையிலும் கடுகுக்கும் எள்ளுக்குமான போட்டியில் எள்ளின் பிளவளவு வேறுபாட்டில் எள்ளே முந்துகிறது.
*
கிழக்காம் – கிழக்காதல், தலைகீழ்
கீழ் என்பதே கிழக்கின் பொருள். தமிழ்நாட்டின் நில அமைப்பின்பிடி கிழக்கு, கீழ்த்திசை. அதிகாரம், சாதி தொடர்பான சொல்லாடல்களில் திசைச்சொற்களின் பயன்பாட்டை அறிந்தே இருக்கிறேன். எனினும் It is going south என ஆங்கிலத்தில் இயல்பாகச் சொல்வதுபோல நான் கிழக்கினைப் பயன்படுத்துவதில்லை. என் மனத்தில் கிழக்கு என்றதும் ஞாயிறு உதித்து மேலெழும் காட்சியே தோன்றும். பொருள் மட்டுமே நாம் தேர்ந்தெடுக்கும் சொற்களைத் தீர்மானிப்பதில்லை.
*
காழில் – விதையற்ற
காழ் என்ற சொல்லுக்கு மனவுறுதி, மரவயிரம், விதை எனப் பல பொருள்கள் உள்ளன. காழில் எனும் சொல் விதையற்ற என்ற பொருளில் திருக்குறளில்கூட வருகிறது. சீட்லெஸ் கிரேப்ஸுக்கு, காழில் திராட்சை அழகான மாற்று எனச் சிந்திக்கும்போதே திராட்சை தமிழா என மற்றொரு சிந்தனை குறுக்குசால் ஓட்டுகிறது.
*
அங்கீகரி – ஏற்றுக்கொள்; உடன்படு; மதிப்பளி
தொடர் பயன்பாட்டினால் நம்மையறியாமலே வேற்றுமொழிச் சொற்கள் பலவற்றைத் தமிழாகவே கருதி நாம் பயன்படுத்துகிறோம். கிரந்த எழுத்துகளோடு இருந்தால் தமிழல்ல என ஐயமின்றி முடிவெடுத்திடலாம். தமிழ் எழுத்துகளைக் கொண்டே எழுதப்படும் வேற்றுமொழிச் சொற்களை அடையாளம் காண, பேசும்போது இச்சொல்லைப் பயன்படுத்துவோமா என்று எண்ணிப்பார்ப்பேன். அங்கீகரி எனும் சொல்லுக்குப் பேச்சுவழக்கில் மதிப்பில்லை. ஏத்துக்கோ என்று அன்றாட வாழ்வில் பயன்படும் சொல் எப்படியோ வேறொன்றாக உரைநடையில் நுழைந்து அங்கீகாரம் பெற்றுவிடுகிறது. உரைநடையாகப் படித்து உடன்பட்ட பின்னர் பேச்சுவழக்கிலும் பயன்படுத்த நாம் ‘தயார்’ ஆகிவிடுகிறோம்.
*
வயிரம் – உறுதி; திண்மை; வலிமை; மரத்தின் மையப்பகுதி.
வயிரம் பாய்தல் என்பது மரத்தின் மையப்பகுதி, ஆண்டுகள் கூடக் கூடத் திசுக்கள் சுருங்கி உறுதி கூடுவதைக் குறிக்கும். வயது ஏற ஏறத் தன்னை மேலும் மேலும் சுருக்கிக் கொள்ளும் பெண்களைப் பார்த்து வளர்ந்த தலைமுறை என்னுடையது. மாறாகத் தன் விருப்பங்களுக்கான முக்கியத்துவத்தை என் தலைமுறைப் பெண்கள் கூட்டிக்கொண்டே போவதையும் காண்கிறேன். வயிரம் பாய்தல் என்பது வெளிப்புறம் பரவி தனக்கான வெளியைக் கைப்பற்றுதல் என்றும் புதுப்பொருள் எழுதிக்கொள்ளலாம்.
*
கதழ் – விரைவு; சினம்; சீற்றம்
சங்கப்பாடல்களில் கதழ் பல இடங்களில் வருகிறது. வேகத்தின் வாழ்வு குறைவென்பதாலோ என்னவோ இச்சொல் தற்காலம்வரை தாக்குப்பிடிக்கவில்லை. தற்காலத்துக்கு ஏற்ற பரிந்துரைகளை ஜெமினியிடம் கேட்டேன். High speed internet – கதழ் இணயம், Bullet Train – கதழ் வண்டி இவை இரண்டும் எனக்குப் பிடித்திருந்தன.
*
நெல்வால் – நெல்முனை; நெல்முள்
எல் வான் சுடர் மாலை இராவணன்மேல், நெல் வாலும் அறாத, நிறம் பிறழா என்கிறார் கம்பர். இராவணன் அணிந்திருந்த மணிமாலைகளில் நெல்முனையளவும் கீறல் விழவில்லையாம். என்னுடைய சொல்வங்கியில் குறிப்பாகத் தாவரவியல் பகுதி செழித்து வளர்வதுபோலத் தோன்றுகிறது.
*
கூர்ங்கோட்டது – யானை
கூர்மையான தந்தம் கொண்ட யானையை வள்ளுவர் கூர்ங்கோட்டது என்கிறார். கோட்டது, கொம்பு, கோடு என்று ஒன்றைத் தொட்டு மற்றொன்றாக இலங்கை நீதிமன்றம் வந்து சேர்ந்தேன். கோர்ட் ஏறுவது என்பதை கோடு ஏறுவது என பேச்சுவழக்கில் சொல்கிறார்கள் என்றறிந்தேன். கோடு என்ற சொல் கோர்ட் என்ற பொருளில் வரும் சொலவடைகள் பலவற்றை விக்கியிலும் காணமுடிகிறது.
*
கோகிலம் – குயில்
கோகிலம் என்ற சொல்லுக்குப் பல பொருள்கள் உண்டு. இருக்கட்டும். இன்று காலையில் யாப்பின் இன்றியமையாமை பற்றி ஒரு கட்டுரை படித்துக்கொண்டிருந்தேன். கட்டுரையாசிரியரின் வருத்தம் நியாயமாகத் தெரிந்தாலும் சிரிக்காமல் இருக்கமுடியவில்லை.

*
கெளவை – பழிச்சொல்; ஆரவாரம்
கவ்வைக்கடல் கதறிக்கொணர் முத்தங்கரைக் கேற்றக் கொவ்வைத்துவர் வாயார்குடைந்து ஆடும் திருச்சுழியல் …
பேரொலியோடு ஆராவரம் செய்யும் கடல் அலைகள் முத்துகளைக் கரைகொண்டு வந்து சேர்க்கும் திருத்தலம் என்கிறார் சுந்தரர்.
கவ்வைக்கடல் ❤️
*
நல்கூர்தல் – வறுமையடைதல்
நல் எனப் பார்த்ததுமே மனத்தில் தோன்றும் பொருளுக்கு மாறாக நல்கூர் என்றால் எளிமை என்று பொருள். நல்குரவு என்றால் வறுமை என்று பொருள்.
*
கைதூவு – செயலற்றிருக்கை
திருக்குறள், புறநானூறு உள்ளிட்ட பலவற்றில் இதன் எதிர்ச்சொல் வடிவமான கைதூவாள், கைதூவான், கைதூவேன் போன்றவை எடுத்தாளப்பட்டுள்ளன. கை ஓயமாட்டேன், சோர்வடைய மாட்டேன், முயற்சியைக் கைவிடமாட்டேன் எனப் பொருள் கொள்ளலாம்.
*
கொடுகு – குளிராலொடுங்க; வளைந்த
திருமணத்தன்று எழும் ஒலிகளைப் பட்டியலிடுகிறார் வீரமாமுனிவர். இந்தச் சந்த நயத்தை ரசிக்கத் தெரிந்தால் இசை தெரியாதென்பது குறையே அல்ல. உச்சரிக்கும்போதே உள்ளத்தில் பாடலாகக் கேட்கிறது. அழகு ❤️
முடுகு முரசொலி முடுகு முழவொலி
முடுகு முருகொலி முடிவிலாக்
கடுகு பறையொலி கடுகு கலமொலி
கடுகு கடலொலி கனிவெழாத்
தொடுகு குழலொலி கொடுகு குரலொலி
தொடுகு துதியொலி தொடுதலாற்
படுகு முகிலொலி படுகு கடலொலி
படுத லிலமண மாயதே.
*
சகட்டுமேனிக்கு – பாகுபாடின்றி; ஒட்டுமொத்தமாக
நான் வழக்கமாகப் பயன்படுத்தாத சொற்களில் ஒன்று இது. தமிழல்ல என்று பார்த்தவுடனே புரிகிறது. சரி, ஏதாவது பின்னணிக் கதை வைத்திருக்கிருக்குமே என்று ஜெமினியிடம் கேட்டேன். சகடம் என்றால் வண்டி. மேனி என்றால் முழுவதும். வண்டி நிறைய, வண்டி வண்டியாக, அளவுக்கு அதிகமாக எனும் பொருளைக் குறிக்க உருவான சொல் என்கிறது. சகட்டுமேனிக்குப் புளுகுகிறதா என்றறியேன்.
*
முசிதல் – அறுதல்; களைத்தல்; இளைத்தல்; கசங்குதல்
பழங்காலப் பாடல்களில் இச்சொல் இருக்கிறது. ஓய்வெடுப்பதைப் பேச்சுவழக்கில் முசிப்பாறுதல் எனக் குறிப்பிடும் வழக்கம் இன்றும் தென் தமிழகத்தில் உள்ளது. வட தமிழ்நாட்டில் ஏதாவது பேச்சுவழக்குச் சொல்லை ஆராய்ந்தால் அதன் வேர்ச்சொல் இந்தி, உருது, தெலுங்கு, ஆங்கிலம் என எங்காவது கொண்டுபோகும். தென் தமிழ்நாட்டின் பேச்சுவழக்குச் சொற்கள் பலவும் தெள்ளுதமிழ் சொற்களாக இருக்கின்றன.
*
சப்பளி – தட்டையாகு
சப்பாத்தியின் வேர்ச்சொல் சப்பளியா என்றுதான் ஆராய்ந்துகொண்டிருந்தேன். பின்னர் ஆய்வு திசைமாறிவிட்டது. ரொட்டி என்பது பொதுப்பெயர். வட்டாரத்துக்கு ஏற்றபடி, செய்யப்படும் பொருளைக் கொண்டு மக்கி கீ ரொட்டி, ஜோவர் அல்லது ராகி ரொட்டி, மிஸ்ஸி ரொட்டி முதலிய பலவகை உண்டு. சில பகுதிகளில் மொத்த உணவையும் ரொட்டி என்பதுண்டு. சப்பாத்தி என்பது உள்ளங்கைகளில் தட்டி அறைந்து தட்டையாக்கிச் செய்வது. புல்காவை பாதி வேக்காடு தோசைக்கல்லிலும் மீதி வேக்காடு நேரடித் தணலிலும் காட்டவேண்டும். கடாயைக் கவிழ்த்துப் போட்டுச் சுட்டால் ருமானி ரொட்டி. அடுப்புக்குள்ளே வைத்து சுட்டெடுக்கப்படும் மைதா ரொட்டி நான். மாவில் ஈஸ்ட் கலக்காவிட்டால் குல்ச்சா. கோதுமை மாவில் செய்தால் தந்தூரி ரொட்டி. பல அடுக்கு மடிப்புகள் இருந்தால் பராத்தா. எண்ணெய்யில் பொரித்தால் பூரி, பட்டுரா.
*
சளுக்கி – அகந்தைக்காரி
இதுபோன்ற சொற்களைக் கண்டதும் குலவழக்கப்படி இதற்கு இணையான ஆண்பால் சொல் உள்ளதா எனத் தேடுவேன். இடித்துரைப்பதிலும் பாலினச் சமத்துவம் வேண்டுமல்லவா. சொலவடை ஒன்று கிடைத்தது. சளுக்கன் தனக்குச் சத்துரு, சவுளிக்காரனுக்கு மித்துரு. அகங்கார ஆடம்பர குணம் கொண்ட ஆண் தனக்குப் பகைவன், ஆனால் துணிக்கடைக்காரனுக்கு நண்பன் என்பது பொருள்.
*
சவட்டுதல் – அழித்தல்; மெல்லுதல்; மிதித்தல்; மொத்துதல்
ச எழுத்தில் தொடங்கும் சொல்லைப் பார்த்ததுமே தமிழ்தானா எனச் சந்தேகம் வந்துவிடும். ஐயமே வேண்டாம், சட்னி என்பதும் தமிழே என்றொரு விளக்கம் படித்தேன். துவட்டியரைத்தால் துவையல், சவட்டியரைத்தால் சட்னி.
*
சிறக்கணி – கடைக்கண்ணால் பார்த்தல்; கண்ணைச் சுருக்கிப் பார்த்தல்; அலட்சியம் செய்தல்
குறும்பாகக் கண்ணடிப்பதற்கெல்லாம் தமிழில் சொல் இருக்கிறது.
*
சித்திரக்கவி – எழுத்துகளைச் சித்திரமாக அமைத்து எழுதும் செய்யுள்வகை.
சித்திரக்கவியில் இத்தனை வகைகள் உண்டென்பதை இப்போதுதான் அறிந்துகொண்டேன்.

*
சில்கு – சிலவாகு; குறைவுபடு
அண்மைப் பயன்பாட்டில் உள்ளதா எனத் தேடியபோது கணினியியல் கலைச்சொற்களில் minimize, maximize என்பதற்கு சில்கு, பல்கு பயன்படுவதாகச் சொல்லியது செய்யறிவுச் செயலி. பல்வேறு கலைச்சொல் அகராதிகளை ஆராய்ந்தும் என்னால் அவற்றைக் கண்டுபிடிக்க இயலவில்லை. சுருக்கு, பெருக்கு என்பதைவிடச் சில்கு, பல்கு என்பது பொருத்தமாகத்தான் இருக்கிறது. மினிமலிசம் என்பதற்குக் கலைச்சொல் ஆக்கத் தகுந்த அழகான வேர்ச்சொல்.
*
செம்மாப்பு – இறுமாப்பு; ஆணவம்
தலைவியைக் கண்டு குவளை மலர்கள் தலை கவிழ்ந்தன என்கிறது குறள் ஒன்று. அதற்குப் பரிமேலழகர் உரை எழுதுகையில், அழகைக் காணும் திறனும் வெட்கமும் இல்லாது தலை குனியாத மலர்களுக்கும் சேர்த்து விளக்கம் தருகிறார். ‘காட்சியும் நாணும் இன்மையின் செம்மாந்து வானை நோக்கின’ என்கிறார்.
*
சுவறுதல் – வற்றுதல்; காய்தல்; உறிஞ்சப்படுதல்
சுவறு என்கிற சொல் வரும் பழைய பாடல்கள் பல இருந்தாலும் என் கவனத்தைக் கவர்ந்தது பாடல் ஒன்றுக்கு எழுதப்பட்ட உரை.
“அணிகொண்ட குரங்கினங்கள் அலைகடலுக் கப்பாலை, மணலொன்று காணாமல் வரையெடுத்து மயங்கினவே …”
ஒரு மணலைக் கடலில் இட்டாலும் அதன் நீரெல்லாம் சுவறிப்போகும். இத்தகைய மணல் இருப்பது தெரியாமல் இராமாயண காலக் குரங்குகள் கடலை அடைப்பதற்கு மலைகளைத் தூக்கி வருந்தின.
*
தமியர் – திக்கற்றவர்; தனியாக இருப்பவர்
ஆங்கிலத்தில் தனியாக இருப்பவர், தனிமையாய் இருப்பவர் என்பதைக் குறிக்க alone, lonely ஆகிய சொற்களைப் பயன்படுத்துகிறோம். தமியர் வரும் பழைய பாடல்களைப் படிக்கும்போது lonely என்பதற்குப் பொருத்தமான சொல்லாகத் தோன்றுகிறது.
*
நணி – அணிமையான இடம்
அண்மை, நணிமை ஆகிய இரு சொற்களும் நெருக்கத்தில் இருப்பதையே உணர்த்துகின்றன. எனினும், நணிமை என்பது கூடுதல் நெருக்கம். அதாவது மிக அண்மை நிலை.
பழைய பாடல்களில், நம்மை நோக்கி நெருங்கி வரும் ஒன்றைக் குறிக்கும் வகையிலேயே பல இடங்களில் இச்சொல் பயின்று வந்துள்ளது. அப்படியொரு சிறப்புப் பொருள் இல்லையெனினும், படிக்கும்போது அது போன்றதொரு தோற்றத்தைத் தருகிறது.
*
பராவு – வணங்கு; புகழ்; துதி
நூறு தடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன்;
நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்
இது ஆண்டாள் பாசுரம். பாடலைப் பின்தொடர்ந்து சென்றால் அண்ணன் சீர் கதை ஒன்று கிடைக்கும். நூறு அண்டா வெண்ணெய்யும் அக்கார வடிசலும் உள்ள சுவையான கதை.
*
நிறைவுற்றது.
