தமிழ்ச்சொல்: பேஸ்புக் குறிப்புகள்

நீண்ட நாள்களுக்கு ஒன்றில் உற்சாகத்தைத் தக்கவைப்பது எனக்குச் சவாலான ஒன்றாயிருக்கிறது. சென்னையிலிருந்து கிளம்பி செங்கல்பட்டு தாண்டியதுமே கொடைக்கானல் எப்போ வரும் எனக் கேட்கும் குழந்தை போலாகிவிடுகிறேன். கடந்தாண்டு நூறு நாள்களுக்கு தமிழ்சொல்லும் பொருளும் எழுதிக்கொண்டிருந்ததை பேஸ்புக் நினைவூட்டியது. அதைப் பார்த்ததுமே மீண்டும் அப்படிச் செய்யலாமா எனத் தோன்றியது. அகராதியைத் திறந்து ஏதோ ஒரு பக்கத்தில் தெரியும் சொற்களில் ஒன்றை எழுதியதால் நான் அறிந்திராத பல சொற்களைக் கற்றுக்கொண்டேன். நல்லனுபவம் அது. 

இப்போதும் என் மேசையில் அகராதி இருக்கிறது. செய்து கொண்டிருப்பதும் சொல் தொடர்பான வேலைதான். செய்கின்ற வேலையை விட்டுவிட்டுப் பின்னணியை ஆராயத்தூண்டி நேரத்தை விழுங்கும் சொற்களை மனத்தில் குறித்துக்கொள்வதுண்டு. பேஸ்புக் மெமரி காட்டியதும் இந்தக் குறிப்புகளை அன்றாடம் எழுதலாமா என நினைத்தேன். அதையொட்டிய சிந்தனையில் உதித்ததுதான் முதல்வரி.  

இதுபோன்ற சமயங்களில் நமக்கு ஏதாவது மனச்சிக்கலா என ஐயம் எழும். அப்போதெல்லாம் இளைய தலைமுறையினர் சொல்லகராதியைப் பார்வையிடுவேன். அனைத்துக்கும் விதவிதமாக மாற்றுக் கோணத்தில் பெயர் வைத்துள்ளனர். 

லாங்டைம் கமிட்மென்டுக்குத் தயாராக இல்லையோ என என் தலைமுறை அஞ்சும் ஒன்றை இன்றைய தலைமுறை ஹஸில் கல்சர் எனப் புறங்கையால் தள்ளிவிடுகிறது. சில மாதங்கள் வேலை பார்த்தாலே பர்ன்அவுட் ஆகிவிட்டேன் என்கிறார்கள். பெயர் அறியாவிட்டாலும் நம்மில் பலர் கொயட் குவிட்டிங் செய்துகொண்டுதானிருந்தோம், இருக்கிறோம். மைக்ரோ ரிட்டயர்மென்ட், சைட் குவெஸ்ட் எல்லாம் நல்ல தீர்வுகள்தான். நான் முன்னர் செய்த நூறு நாள் நூறு சொல் என்பதே சைட் குவெஸ்ட் வகையறாதான். ஆனால் அது லாங்டேர்ம். எனவே இம்முறை குறுகியகாலமாக அடுத்த முப்பது நாள்களுக்கு மட்டும் குறிப்புகள் எழுதுகிறேன். 

சென்-சி அகராதி
Hustle Culture – The lifestyle of working excessively hard with no rest.
Burnout – Extreme physical and mental exhaustion caused by continuous work stress
Quiet Quitting – Doing only the bare minimum required for a job.
Micro-retirement – Taking short career breaks to recharge before returning to work.
Side Quest – A temporary, meaningful project done alongside your main job.
Long-term Commitment – A dedicated promise to stay involved with something for a long duration.
Short-term Commitment – A focused dedication to a task for a brief and defined period.

#30daysTamilwords❤️

*

இகந்த – கடந்த; தாண்டிய

மூலமும் அறனும் முதன்மையின் இகந்த காலமும் விசும்பும் காற்றோடு கனலும் … 

முதன்மையைத் தாண்டிய காலமாகத் திருமாலைப் புகழ்கிறது இந்தப் பரிபாடல் வரி. தற்காலப் பயன்பாட்டில் எங்காவது இருக்கிறதா எனத் தேடிப்பார்த்தேன். தமிழ்நாடு பாடத்திட்டத்தில் இயற்கை இகந்த நிகழ்ச்சிகள் என்றுள்ளது. தொன்மத்தில் இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளைக் குறித்தானது இது. நடுநிலை இகந்த, அன்பிகந்த என்றுகூட எடுத்தாளலாம். நேர்மறை, எதிர்மறை என இருவகையிலும் பயன்படுத்தத்தக்க சொல்.

*
அணியிழை – மெல்லிய நகைகளை அணிந்த பெண் 

அணி, இழை இரண்டுக்குமே பெண் என்று பொருளில்லை. இரண்டும் இணைந்து இல்லாத வேறு ஒரு பொருளினைக் குறிப்பதை அன்மொழித் தொகை என்கிறது தமிழ் இலக்கணம். நேரிழை, வாங்கிழை, ஒளியிழை எனப் பல சொற்கள் இப்படியுள்ளன. 

இழை என்றால் நகை, மெல்லிய கம்பியால் ஆன ஆபரணம். நேர்த்தியான, ஒளிபொருந்திய என முன்னொட்டாக இருக்கும் சொல்லைப்போல் எதோ ஒரு நகையை அணிந்த பெண் என்று பொருள். இதில் ஒளியிழையை அறிவியல் கலைச்சொல்லாக மாற்றிவிட்டோம். ஆப்டிக்கல் ஃபைபர், கண்ணாடியிழை என்கிற பொருளில் பயன்படுத்துகிறோம். (இல்லை, இதைக் கண்டுபிடித்தவர் பெண் இல்லை, அவர் மதுரையைச் சேர்ந்தவரும் இல்லை.)

சரி, ஆண்களுக்கு இப்படி ஏதாவது இருக்கிறதா எனத் தேடினேன். பொற்தார் என்பன போன்ற சொற்கள் உள்ளன. பொன்னாலான மாலையை அணிந்த தலைவன் அல்லது அரசன் என்று பொருள். ஆண்கள் கிலோ கணக்கில் தங்கச்சங்கிலி அணிவது அக்காலத்திலேயே இருந்துள்ளது போலும். 

Day2 #30daysTamilwords❤️

*
இகல் – பகை; போர்; மாறுபாடு; வலி 

குறள்கள் அல்லாது இச்சொல் வரும் பழைய பாடல்களைக் கேட்டேன் ஜெமினியிடம்.

“நிலம் புடைப் பெயர்வது ஆயினும், ஒரு பால் இகல் மீக்கூறாது…”

இதைக் கொடுத்து புறநானூற்றுப் பாடல் என்றது. நிலமே பெயர்ந்தாலும் மக்கள் பகையின்றி வாழ்வது பற்றிய இவ்வரிகளின் பொருள் ஆழமானதெனத் தோன்றியது. ஏஐ அலூசினேஷன் அல்ல என்பதை உறுதி செய்ய, புறநானுற்றுப் பாடல்களை ஆராய்ந்தேன். அங்கே போனால் “நன்றியை மறந்தவர் தப்பிக்கே வழியே இல்லை” என அறங்கூறும் பாடல் அது. வழக்கம்போல இட்டுக்கட்டிச் சொல்லியிருக்கிறது ஜெமினி. தனியாக வேலை செய்யும்போது பேச்சுத் துணைக்கு இருக்கிறதே எனப் பார்த்தால் இல்லாத ஒன்றை இருப்பது மாதிரியே உருவாக்கித் தரும் வள்ளல் குணத்துக்கு அளவில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.  

Day3 #30daysTamilwords❤️

*
ஆகாறு – செல்வம் வரும் வழி 

வருவாய், வரும்படி, வரத்து எனச் செல்வம் நமக்கு வந்து சேர்வதைக் குறிக்கும் பலச் சொற்கள் உள்ளன. சம்பாதித்ததல் என்கிற சொல்லைப் பயன்படுத்துவேன் என்றாலும் முயன்று சேர்த்தல், உழைத்துத் தேடுதல் என்பதாகப் பொருள் தரும் ஈட்டுதல் என்ற சொல் என்னை ஈர்க்கும். ஆகாறு என்ற சொல் வரும் குறளில் செல்வம் போகும் வழியைக் குறிக்கும் போகாறு என்கிற சொல்லும் உள்ளது. குறள் சொல்லும் ஆழமான தத்துவத்தை வரவு எட்டணா செலவு பத்தணா என எளிமையாக்குகிறது சொலவடை.

Day4 #30daysTamilwords❤️

*
எட்பகவு – எள்ளின் பிளவு

எள்ளே சிறியது. அதையும் பிளந்து ஓர் அளவீடாகச் சிந்தித்துள்ளனர். கடுகும் சிறிய அளவைக் குறிக்கப் பயன்படுகிறது. என்னைப் பொறுத்தவரையிலும் கடுகுக்கும் எள்ளுக்குமான  போட்டியில் எள்ளின் பிளவளவு வேறுபாட்டில் எள்ளே முந்துகிறது. 

Day5 #30daysTamilwords❤️

*
கிழக்காம் – கிழக்காதல், தலைகீழ் 

கீழ் என்பதே கிழக்கின் பொருள். தமிழ்நாட்டின் நில அமைப்பின்பிடி கிழக்கு, கீழ்த்திசை. அதிகாரம், சாதி தொடர்பான சொல்லாடல்களில் திசைச்சொற்களின் பயன்பாட்டை அறிந்தே இருக்கிறேன். எனினும் It is going south என ஆங்கிலத்தில் இயல்பாகச் சொல்வதுபோல நான் கிழக்கினைப் பயன்படுத்துவதில்லை. என் மனத்தில் கிழக்கு என்றதும் ஞாயிறு உதித்து மேலெழும் காட்சியே தோன்றும். பொருள் மட்டுமே நாம் தேர்ந்தெடுக்கும் சொற்களைத் தீர்மானிப்பதில்லை. 

Day6 #30daysTamilwords❤️

*
காழில் – விதையற்ற 

காழ் என்ற சொல்லுக்கு மனவுறுதி, மரவயிரம், விதை எனப் பல பொருள்கள் உள்ளன. காழில் எனும் சொல் விதையற்ற என்ற பொருளில் திருக்குறளில்கூட வருகிறது. சீட்லெஸ் கிரேப்ஸுக்கு, காழில் திராட்சை அழகான மாற்று எனச் சிந்திக்கும்போதே திராட்சை தமிழா என மற்றொரு சிந்தனை குறுக்குசால் ஓட்டுகிறது. 

Day7 #30daysTamilwords❤️

*
அங்கீகரி – ஏற்றுக்கொள்; உடன்படு; மதிப்பளி

தொடர் பயன்பாட்டினால் நம்மையறியாமலே வேற்றுமொழிச் சொற்கள் பலவற்றைத் தமிழாகவே கருதி நாம் பயன்படுத்துகிறோம். கிரந்த எழுத்துகளோடு இருந்தால் தமிழல்ல என ஐயமின்றி முடிவெடுத்திடலாம். தமிழ் எழுத்துகளைக் கொண்டே எழுதப்படும் வேற்றுமொழிச் சொற்களை அடையாளம் காண, பேசும்போது இச்சொல்லைப் பயன்படுத்துவோமா என்று எண்ணிப்பார்ப்பேன். அங்கீகரி எனும் சொல்லுக்குப் பேச்சுவழக்கில் மதிப்பில்லை. ஏத்துக்கோ என்று அன்றாட வாழ்வில் பயன்படும் சொல் எப்படியோ வேறொன்றாக உரைநடையில் நுழைந்து அங்கீகாரம் பெற்றுவிடுகிறது. உரைநடையாகப் படித்து உடன்பட்ட பின்னர் பேச்சுவழக்கிலும் பயன்படுத்த நாம் ‘தயார்’ ஆகிவிடுகிறோம். 

Day8 #30daysTamilwords❤️